Pages

Tuesday, December 22, 2015

சிம்ம சொப்பனமான பாடலும், சிம்புவும்...!


எவ்வளவோ திறமைகள் தன்னிடம் இருந்தும், திடமான குடும்பப் பின்னணி இருந்தும் விளையாட்டுத்தனத்தால் சரியான சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் சிம்புவைப் பார்த்தால் பாவமாய்த்தானிருக்கிறது. தெருவில் நடந்து சென்றால் வீதிக்கு நாலு பேரின் வாயிலிருந்தாவது சிம்பு பிரயோகம் செய்த வார்த்தை வந்து வெளியே விழும்தான்,, என்னதான் மேல் தட்டு வர்க்கமென்றும், நடுத்தர வர்க்கமென்றும் எக்ஸ்ட்ரா டீசண்ட்டாய் பொதுவெளியில் வெள்ளைச் சட்டை போட்டு திரியும் மனிதர்களும் கூட கோபம் கொப்பளித்தால் உடனே உச்சரிக்க கூடிய வார்த்தைதான் என்றாலும்...

ஒரு திரைப்படக் கலைஞராய் பொதுவெளியில் எல்லோரும் அறிந்தவராய் இருக்கும் சிம்பு விளையாட்டாய் பாடி வீட்டுக்குள் பத்திரமாய் வைத்திருந்த பாடலை காக்கா தூக்கிக் கொண்டு வந்து இணையத்தில் போட்டு விட்டது என்று சொல்லும் கதை கேட்பதற்கு நன்றாய்த்தானிருக்கிறது.  விளையாட்டுத்தனமாய் பாடியது வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் இந்த விபரீத வினை அவருக்கு வந்திருக்கவே வந்திருக்காதுதான் என்பதோடு மட்டுமில்லாமல் அவர் வீட்டுக்குல்ளேயே அந்தப் பாடல் இருந்திருந்தால் அதைப்பற்றி பேச என்ன இருக்கிறது மக்களுக்கு...? சிம்புவின் பாட்டாச்சு அவர் வீடாச்சு அதைக் கேட்கும் அவரது உறவுகளாச்சு என்று வழக்கப்படி தன் தொடர் வேலைகளைப் பார்க்க ஓடிக் கொண்டிருந்திருப்பார்கள்  மக்களும். 

அவர்களுக்கா வேலை வெட்டி இல்லை...?

நேரமிருந்தால் சமூக இணைவு தளங்களுக்குள் எப்போதாவது எட்டிப் பாருங்கள் இணையம் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் எவ்வளவு அவசரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்   என்று? தினம் தினம் எதோ ஒன்று நிகழ்ந்து விடுகிறது. தெருவில் யாரோ இருவர் அடித்துக் கொள்ள நம் மண்டையா அதில் உடையப்போகிறது? எவன் மண்டையோ எங்கோ உடைந்தால் சரிதான் என்ற சமூக பக்குவத்தோடு வெகு சிரத்தையான பாதுகாப்புணர்வோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு எம்பி, எம்பி இவர்கள் கம்பு சுற்றும் லாவகத்தை பார்க்கவேண்டும் நீங்கள். அன்றாட இணைய உலாவிகள் சராசரியாய் தங்களுக்கு எத்தனை லைக்குகள் எட்டிப்பார்க்கின்றன என்ற தொடுபதத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் சமூகப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞையையே தொழிலாய் செய்து கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரர்களுக்கும்,     சாருக்களுக்கும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...

அள்ள அள்ளக் குறையாத வைரம் போல நித்தம் நித்தம் நிகழும் சமூக நிகழ்வுகள்தான் இவர்களுக்கு தீனியே. எது நடந்தாலும் அதில் தன் கருத்தை சொல்லியே தீர்வது என்ற தீர்மானத்தோடுதான் இவர்களெல்லாம் பிறந்திருப்பார்கள் போலும்...? அடித்துப் பெய்த மழையில் ஆதரவாய் நின்ற மனிதர்களைப் பற்றி சொல்லிச் சிலாகித்துக் கொண்டிருந்த எல்லோரும் சடாரென்று தாவிக்குதித்து சிம்புவின் சொம்பு பாட்டை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு ஆலமரமாய் பார்த்து தேடி அமர்ந்து ஆளுக்கொரு கவுலி வெற்றிலையை வாங்கிப் போட்டு குதப்பியபடி நாட்டாமையாய் நர்த்தனம் ஆடத் தொடங்கிய பொழுதில் வெளுக்க ஆரம்பித்திருந்தது சென்னையின் வானம். 

சிம்புவைப் பற்றி வந்த நிறைய விமர்சனங்களையும் கண்டனக்கட்டுரைகளையும் படித்து கடந்து கொண்டிருந்த நான் களுக்கென்று சிரித்தே விட்டேன் நவீன புத்தபிரான் சாருநிவேதாவின் வெருண்ட கோபக்கட்டுரையைக் கண்டு. அவர் வயது வந்தவர்களுக்காக மட்டும் ஆபாசங்களை எழுதித்தள்ளுவாராம் அதனால் சமூகத்தில் ஒரு பாதிப்பும் வராதாம், அவர் வயது வந்தவர்களைப் பார்த்து ஆபாச விமர்சனங்களை வைப்பாராம் அதனால் சமூகம் இன்னும் நன்றாய் வளர்ந்து மேலேறி வருமாம்.... அய்யோ பாவம் அவரால் சிம்புவின் பாடலைக் கேட்டுவிட்டு தாங்க முடியவில்லையாம், அவருக்கு கோபம் கோபமாய் வந்ததெல்லாம் சரிதான் என்றாலும் அவர் வீசிய கல்லில் பாவம் டன் கணக்கில் இருந்ததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சிம்புவாகட்டும், சாருவாகட்டும் தத்தமது வெளி என்று ஏதேதோ ஒன்றை தாங்களாகவே வரையறை செய்து வைத்துக் கொண்டு நீதிகளை தங்கள் வீட்டு முற்றத்தில் கட்டும் நாயைப் போல பாவிக்கும் பாங்கினை நினைத்தால் உவ்வ்வ்வே என்று குமட்டிக் கொண்டுதான் வருகிறதெனக்கு. சிம்பு விவகாரத்தில் சிம்புவை விட நான் நினைத்துப் பரிதாபப்படுவது அவரது அப்பா டி.ஆரைத்தான். பாவம் மனுஷன் தனி மனிதனாய் நின்று பெரிய பெரிய  ஜாம்பவான்களை எல்லாம் எதிர்த்து நின்று இசையமைத்து, பாட்டெழுதி, கதையெழுதி அதில் கண்ணியமாய் நடித்து, இயக்கி அப்ப்பப்பா....இன்றைக்கு வளர்ந்து நிற்கும் தலை, தளபதி ரசிகர்களின் காலத்தில் அவர் காமெடியனாய் பார்க்கப்பட்டாலும்...

உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது....

என்றெல்லாம் பாடி எழுதி கண்ணியமாய் நேற்று வரை மகன் செய்த தவறுக்கு தாய்க்குலங்களிடம் மன்னிப்பு கேட்டு காணொளியில் கண் கலங்குகிறார் அவர். தகப்பனின் உழைப்பால் கிடைத்த புகழையும், அவரால் கிடைத்த மரியாதையையும், கற்றறிந்த  கலையையும் எந்த அளவுக்கு தவறாக கையாண்டிருகிறோம் என்பதை சிம்பு உணரவேண்டும். பெண்களைப் பற்றி விமர்சித்து எப்போதும் தன்னை ஒரு ப்ளேபாய் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொள்ளும் சிம்புவின் தாறுமாறான எண்ணங்களுக்கும் தான் தோன்றித்தனத்திற்கும் காலம் சரியான கடிவாளத்தைப் போட்டிருக்கிறதுதானென்றாலும்....

இதையெல்லாம் கடந்து வந்த பின்னர் தெளிவான மனிதராய் தன் தந்தையை போல தான் உண்டு தன் வேலை உண்டு என்று சிம்பு இருந்தால் சரிதான்...!தேவா சுப்பையா...

Tuesday, December 15, 2015

அது அங்கேதானிருக்கிறது...!


எழுதுவதென்பது எதுவுமில்லை. அது தன்னைத் தானே வெறுமையாக்கிக் கொள்ளல். கருத்துக்களை விட்டு வெளியே வரும் ஒரு யுத்தி. யாருமற்ற பெருவெளியில் தன் காலடி ஓசையை மட்டும் கேட்டபடி நடக்கும் பிரக்ஞை நிலை. கோட்பாடுகளில்லா ஒரு தவம். இதுதான் இன்னதுதானென்று ஒரு நாளும் வரையறுத்துக் கொள்ள முடியாத வரையறுத்து சொல்ல முடியாத சூன்யம்.

இருத்தல் மட்டுமே சத்தியமென்பதை உணர்ந்தபடி ஒன்றுமில்லாததை எழுதிக் கொண்டிருக்கிறேனே இப்போது, அதை வாசித்துக் கொண்டிருக்கிறீர்களே, இல்லாமல் இருக்கும் காலத்தைப் போன்று அசைவற்றுப் போய் அதை
தான் எழுத்து அதிகபட்சமாய் செய்ய முயலும் அல்லது முடியும்.

ஏதோ ஒன்றை சொல்ல முயலும் எல்லா முயற்சிகளையும் அறுத்தெறிந்து விட்டு ஒரு முற்று புள்ளியோடு முடிந்து போகும் எழுத்துக்கள் எல்லாம் நிஜத்தில் அதோடு முடிந்து போய்விட்டதென்றுதானா நீங்கள் கருதுகிறீர்கள்...?

எங்கிருந்ததோ அது...
அது அங்கேதான் இருக்கிறது இன்னும்
எப்போதுமிருந்தது போலவே
அது இங்கும்தானிருக்கிறது
என்றறியும் போது பிறக்கும்
தெளிவினைத்தான் காலம் காலமாக
சித்தார்த்தர்களுக்கு
எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன
போதிமரங்கள்...,
போதும் போதுமெனுமளவிற்கு
கனவுகளை உங்கள் பைகளில் நிரப்பிக் கொள்ளுங்கள்
வழிநெடுகிலும்...
அது மட்டும்தான் உங்களுக்குத்
துணையாயிருக்கப் போகிறது...!
தேவா சுப்பையா...Saturday, December 12, 2015

மெலுகா - சிவா த வாரியர் 0.1


காட்டெருமைகளின் எலும்பில் பக்குவமான சிறு குழல்களை எடுத்துதான் இந்த புகைக்கும் குழல்களை உருவாக்குகிறார்கள். புகையிலை நிரப்பப்பட்ட குழலை எடுத்து மெல்ல உறிஞ்சினேன். ஆழமாக நுரையீரலைத் தொட்டுப் பரவி இரத்த் திசுக்களில் பரவிய அந்த சிறு போதை மூளைக்குள் சென்று மனதை மெல்ல மெல்ல அடக்கியது. இதமான காற்றில்  நடனமாடிக் கொண்டிருந்த மானசோரவர் ஏரியை பார்த்துக் கொண்டிருந்தேன். கவலைகள் ஏதுமின்றி பிராயத்தில் நடக்க ஆரம்பித்திருந்த சிறு பிள்ளை நீரைக் கண்டவுடன் கால் பதித்து ஆடும் நர்த்தனத்தைப் போல அது மிதந்து ஆடிக் கொண்டிருந்தது. இன்னதுதானென்று தெரியாத ஒரு சோர்வும் கவலையும் என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் இப்போது நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேனே என் பால்யப் பிராயம் அதைத்தான் மீட்டெடுத்துக் கொண்டு வந்து மீண்டும் உற்சாகத்தை எனக்குள் உயிர்ப்பித்துக் கொள்வேன்....

மாலைச் சூரியன் வேறொரு திசையில் உந்தி எழுவதற்காக மெல்ல மெல்ல என் தேசத்தின் பனிப்பிரதேசத்து மலைகளுக்குள் விழுந்து கொண்டிருந்தான். செஞ்சிவப்பான வானம் மானசோரவரில் விழுந்து கிடந்ததைப் பார்த்த பொழுது யாரோ தாம்பூலத்தை மென்று துப்பியிருந்தது போலவே எனக்குத் தோன்றியது. மஞ்சள் சூரியன் தூரத்தில்  நிதர்சனமின்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி உனக்கென்ன தெரியும் என்பது போல என்னை பார்த்து புன்னகைத்தபடியே மெல்ல மெல்ல விடைபெற்றுக் கொண்டிருந்தான்.

பால்யம்தான் எவ்வளவு அழகானது? சிறு பிள்ளையாய் இருந்த போது இந்த மானசரோவர் கரையில் கற்களை விட்டெறிந்து யார் எறிந்த கல்லினால் அதிக அலைகள் உருவாகின்றன என்றெல்லாம் விளையாடிச் சிரித்திருக்கிறோம். என் உடம்பு முழுதும் போரில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் இருந்தன. அந்தத் தழும்புகளை சூரியனின் செங்கதிர்கள் தொட்டு தடவ, மெலிதாய் வீசிய தென்றல் காற்று என்னையும் அந்த பிராந்தியம் முழுதையும் குளிர வைத்துக் கொண்டிருந்தது.

நான் ஷிவா...என்னை ருத்ரன் என்றும் என் மக்கள் அழைப்பதுண்டு. என் மக்களை இந்த காட்டுமிராண்டித்தனமான பாக்கிரதி கூட்டத்திடம் இருந்து காப்பதற்கே என் நேரம் எல்லாம் சரியாய்ப் போய் விடுகிறது, பிறகெப்படி இந்த வாழ்க்கையின் ஆழத்திற்குள் நான் சென்று விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலைப் பெறுவது...?

சற்று தூரத்தில் இருந்த எம் கூடாரத்தின் நுழை வாயிலில் பத்ரா பாதுகாவலனாய் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த இரண்டு காவலர்கள் ஏதோ கனவில் உறங்கிக் கொண்டிருக்க நான் பத்ராவை  பார்த்து புருவம் உயர்த்தினேன். பத்ரா என் முகமாற்றத்தைப் புரிந்தவனாய் அவனுக்கு பின்னால் திரும்பிப்பார்த்து உறங்கிக் கொண்டிருந்த காவலர்களை எட்டி உதைத்து அவர்களை கவனமாயிருக்க சொன்னான்.

நான் மீண்டும் மானசரோவர் ஏரியை நோக்கி முகம் திருப்பிக் கொண்டேன்.

இந்தக் ஏரிக்கரையில்தான்  என் வாழ்க்கை துவங்கியது. யாதென்றும் இன்னதென்றும், விளங்கிக் கொள்ள முடியாத புதிரோடு நகரும் இந்த வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கேள்விகள் என்னுள் எழுந்ததும் இந்த ஏரியின் கரையில்தான். புற்றீசல்கள் போல மனிதர்கள் பிறப்பதும் பின் மறைவதுமென தொடர்ச்சியாய் நிகழ்ந்து கொண்டிருக்க அசையாமல் நிற்கும் இந்த காலத்தை எப்படி நான் வெல்வது...? உண்ணவும், உடுக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் என்று மனிதர்கள் எல்லோரும் ஏதேதோ ஒரு அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்க எனக்கும் இந்த காலத்திற்கும் இருக்கும் தொடர்பின் முதல் முடிச்சை எப்போது தொட்டவிழ்ப்பது நான். இடைவிடாத போர்கள், போர்கள், உயிர்காத்துக் கொள்ள உயிர்களை கொல்ல திட்டங்கள் என்று எங்கே சென்று கொண்டிருக்கிறது என் வாழ்க்கை...?

யோசித்தபடியே எனது இடது பக்கம் திரும்பினேன்.  அங்கிருக்கும் கூடாரத்தில்தான் அன்னிய தேசத்தவர் இருவரயும்  தங்க வைத்திருக்கிறேன். இருபது காவலர்கள் அந்த கூடாரத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். பாகிரிதிகளாலும் இன்ன பிற மலைவாழ் இனக்குழுக்களாலும் எப்போதும் உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் ஏன் இந்த மலைகளுக்கு அப்பால் பெருஞ்சமவளிப் பகுதியிலிருக்கும் மெலுகாவிற்கு வரக்கூடாது என்று அவர்கள் என்னிடம் கேட்டதில் ஒரு நியாயம் இருப்பதாய்த்தான் எனக்கு தோன்றுகிறது...

மீண்டும் ஆழமாய் புகைத்தபடியே.....யோசிக்க ஆரம்பித்தேன்...


...will continue....தேவா சுப்பையா...


Monday, November 23, 2015

காதல் நர்த்தனம்...!


காதல் கவிதையென்று
அவள் எழுதிக் கொடுத்த காகிதத்திலிருந்து
ஒவ்வொரு சொல்லாய்
பெயர்த்தெடுத்து உடைத்துப் பார்க்கிறேன்
அது கண்ணீராலும் வலியாலும்
நிரம்பிக் கிடக்கிறது..
காதல் கவிதையென்று சொன்னாயே...
என்றவளிடம் கேட்டதற்கு
கண்ணீரும் வலியும் இல்லாமல்
காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது
உனக்கு காதல்...என்று
கோபமாய் முகம் திருப்பிக் கொண்ட
அந்தக் கணதில்
காகிதத்திலிருந்து எழுந்து...
நர்த்தனமாடத் தொடங்கி இருந்தது
காதல்..!தேவா சுப்பையா...

கனவுகள் வாங்குவன்...!


கனவுகள் நன்றாயிருக்கின்றன
நிஜத்தினை விட என்றெண்ணிதான்
கனவுகளை சீசாக்களில் பிடித்து
வளர்க்கத் தொடங்கினேன்...
முந்தா நாள் கண்ட அந்த கனவினையும்
சேர்த்து ஆயிற்று மொத்தம்
லட்சத்து நாற்பதாயிரம்
எதார்த்தங்கள் கோரப்பற்களால்
உயிர் குடிக்க முற்படும்போதும்
நிகழ்காலம் துரோகக் கத்தியை
கூர் தீட்டி வன்மம் கொள்ளும் போதும்
யோசித்துபார்க்கவே முடியாத
அபத்தங்கள் மூச்சைப் பிடித்து
கழுத்தை நெரிக்கும் போதும்
ஒவ்வொரு சீசாக்களாய் திறந்து
என் கனவுகள் விடுவித்து
அவை சொல்லும் கதைகளை
கேட்டுக்  கேட்டு என்னை
மீட்டெடுத்துக் கொள்வதுமுண்டு...
நாளையும்  எனக்கு வேறொரு
கனவு வரும்....
என்ற கனவோடுதான்
நித்தம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்
இந்த நிதர்சனமற்ற
அரக்க வாழ்க்கையொடு...!தேவா சுப்பையா...

மழை என்னவோ மழைதான்...


மழை பெய்த நாளின்
அடுத்த நாளில் ஓய்ந்து கிடக்கும்
வானம் தெருவெங்கும்
தேங்கிக் கிடக்கும் நீரில் விழுந்து கிடக்கிறது
முட்டிக்கால் வரை தூக்கிச் சுருட்டிய
உடைகளோடு வானத்தின் மீதேறி மிதித்து
நடந்து செல்கிறார்கள் மனிதர்கள்
மழையை சபித்தபடி...,
வீட்டுக்கூரையையும் தெருவையும்
நனைத்தவிட்டு கணுக்கால் வரை
தேங்கிக் கிடக்கும் மழையிடம்
யாதொரு பிணக்குமில்லை அவர்களுக்கு,
மழைக்கும் தெரிவதில்லை
தான் வாசல் வரை மட்டும்
வந்து செல்லக் கூடிய விருந்தாளி என்று,
இது புரியாமலேயே
விரும்புகிறார்கள் மனிதர்களென்று
வீட்டு அடுக்களை வரை எட்டிப்பார்த்துவிட்டு
மனிதர்களின் சலிப்பினையும் வெறுப்பினையும்
பரிசாய் வாங்கிக் கொண்டு
கோடையில் கொளுத்தும் வெயிலில்
மீண்டும் என்னைத் தேடுவீர்கள்தானே...
அப்போது பார்த்துக் கொள்கிறேன்
கடிந்தபடியே
உறிஞ்சும் வரை மெளனமாய்
படுத்துக் கிடக்கிறது பூமி மீது...
அடித்துப் பெய்தாலும் அழித்துக் கொன்றாலும்
மழை என்னவோ மழைதான்...
அதற்கென்ன மனதா இருக்கிறது...
ஆனால் மனிதர்கள்தான்....
தேவா சுப்பையா...

Saturday, November 21, 2015

துளசி...!


துளசியும் நானும் காதலித்தோம்
திருமணம் செய்து கொண்டோம்
எங்களுக்குப் பிள்ளைகள் பிறந்தன
ஒரு நாள் எதிர்பாராமல்
வழியில் சந்தித்தும் கொண்டோம்
அவள் கணவனுக்கு என்னை அறிமுகம்
செய்தது போலே
நானும் என் மனைவியை அவளுக்கு
அறிமுகம் செய்து வைத்தேன்...
பின் விடைபெற்றுக் கொண்ட
அந்த நாளின் மதியத்தில்
துளசி என்னிடம் தொலைபேசியில்
இன்னும்தான் உன்னை காதலிக்கிறேன் என்றாள்...
நானும்தான் காதலிக்கிறேன்
என்று சொல்லாமல் அலைபேசியை வைத்தது
என்னமோ இன்னமும் வலித்துத் தொலைக்கிறது...!தேவா சுப்பையா..


Thursday, November 19, 2015

சப்தத்தின் மெளனம்...!


மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு அற்புதமான காம்போ அது. வருங்காலங்களில் யாரும் அலுவலகம் சென்று வேலை செய்யும் ஒரு செக்கு மாட்டு வாழ்வு இருக்காது என்று யோசிதுக் கொண்டிருந்த போதே 

மேசை மீதிருந்த காபியில் ஆவி பறந்து  என்னை எடுத்து குடிக்கிறாயா என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்தது. சிறு சாரல் மழையும், சூடான காபியும் என்னை சொடக்குப் போட்டு இந்த பூமி விட்டு வேறு கிரகம் நாம் செல்ல வேண்டாமா என்று கேள்வி கேட்க.... பார்த்திக் கொண்டிருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு... லேப் டாப்பை மூடி வைத்தேன்....

ஏண்டா மழை பெய்ற மாதிரி இருக்கு இப்போ வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்ட பத்தாக் குறைக்கு கேமரா வேற எடுத்துட்டுப் போற....?

வாசலில் நின்று அன்பைக் கண்டிப்பாய் மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்துப் புன்னகைத்தபடியே...மழை பெய்யப் போகுதும்மா அதான் கிளம்புறேன் என்று நான் சொன்னதைக் கேட்டு தலையிலடித்தபடியே சரி போறதுதான் போற  தலையை கவர் பண்ணிக்கபா என்று சொன்னபடியே அம்மா உள்ளே சென்று விட்டாள்...

நான் கவனமாய் கேமராவை பாலித்தின் கவரில் சுற்றி பத்திரப்படுத்திக் கொண்டேன், தலைக்குத்தான் ஹெல்மெட் இருக்கிறதே...

குளிர்ந்த காற்றோடு சேர்ந்து சில்லென்ன மழைத்துளிகளை முகத்தில் தெளித்துக் கொண்டிருந்தது வானம். மப்பும் மந்தாரமுமாய் அலைந்த மேகங்களை கலைத்து கலைத்து விளையாடிக் கொண்டிருந்த காற்று இஷ்டத்திற்கு என் முடியை கலைக்க முடியாமல் பொய்யாய் கோபித்துக் கொள்ளும் காதலியைப் போல பட்டும் பாடாமலும் ஹெல்மட்டுக்கு நடுவே கொஞ்சமாய் தெரிந்த என் முகத்தை தடவிச் சென்று கொண்டிருந்தது. கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன். நகரத்தின் நெரிசல் மெல்ல வழுக்கிப் பின் சென்று விட போக்கு வரத்து நெரிசலில்லாத சென்னையின் ஒரு புறநகர்ப்பகுதியில் உறுமியபடி விரைந்து கொண்டிருந்தது என் இருசக்கர வாகனம். 

தூரத்தில் ஆள் அரவமில்லாத கிட்டத்தட்ட கைவிடப்பட நிலையில் இருந்த அந்த பேருந்து நிலையம் என்னை என்னவோ செய்தது தெரிந்து தன்னிச்சையாய் என் வாகனம் அந்த பேருந்து நிலையம் நோக்கி வழுக்க ஆரம்பித்தது. புதியாய் கட்டியும் கட்டப்படாமலும் ஓ..வென்று திறந்த வெளியில் பரந்து கிடந்த அந்த பேருந்து நிலையத்திற்குள் அவ்வப்போது புறநகர் பேருந்துகள் வந்து சென்ற தடம் தெரிந்தது. அமானுஷ்யமாய் தெரிந்த அந்த கட்டிடத்தின் ஒரு ஓரமாய் யாரோ ஒருவர் லுங்கி உடுத்தியபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார். ஏதாவது அவரிடம் சென்று பேசலமா என்று யோசித்தபடியே வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டேன்.

அவர் ஏன் அங்கே அமர்ந்திருக்கிறார்? பயணியைப் போலவும் தெரியவில்லை அந்த ஏரியாவாசியாகவும் தெரியவில்லை. ஒருவேளை என்னைப் போலவே மழைச் சூழலை அனுபவிக்க அமர்ந்திர்க்கும் இன்னொரு ஏகாந்த வாசியா? மெல்ல அவரிடம் சென்றேன் காலை மடக்கி கொண்டு யாரடா நீ கற்பனைக் கிரகத்துக்குள் வந்த வேற்றுக் கிரகவாசி என்பது போல பார்த்தார்....எனக்கு அந்த தனிமையும் சூழலும் உள்ளுக்குள் ஏதோ செய்ய, மெல்ல என் கேமராவை எடுத்து பிரிக்க ஆரம்பித்தேன். ஆளில்லாத இந்த பேருந்து நிலையத்திற்குள் அதிரடியாய் வந்து ஏதோ ஒன்றை எடுக்கிறானே என்ற மில்லியன் டாலர் கேள்வி அவர் முகத்தில் கேள்வியாய் மாறி நெற்றிச் சுருக்கமாய் விழுந்தது....

கேமராவை பார்த்தவுடன் பளீச் சென்று கரை படித்த பற்கள் மூலம் தன் வெள்ளந்தியான மனதை மெல்ல மெல்லத் திறந்தார் அந்த நடுத்தரவயது மனிதர். தன்னைத் தானே புகைப்படத்தில், கண்ணாடியில் பார்த்துக் கொள்வது மனிதர்களுக்கு அத்தனை ப்ரியமான விசயம். எங்கோ யாரோ ஏதோ ஒரு கூட்டத்தில் புகைப்படம் எடுத்தாலும் மீண்டும் அந்த புகைப்படத்தை நாம் பார்ப்போமா இல்லையா என்பது உறுதியாய் தெரியாவிட்டாலும் கூட தங்களை சரி செய்து கொண்டு ஆர்வமாய் கேமராவைப் பார்ப்பதெப்படி? எப்படி நிகழ்கிறது இந்த ஆச்சர்யம் என்று நான் பலமுறை யோசித்ததுண்டு...

கொஞ்சம் உங்களை போட்டோ எடுத்துக்கலாமா என்ற என்  மிக மிருதுவான அறிமுகத்தை மலர்ச்சியாய் ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்த அவரை க்ளிக்கி விட்டு டிஜிட்டல் இமேஜை அவரிடம் காட்டிய போது சந்தோஷமாய் அதைப் பார்த்து சிரித்தார். மழைக்கு ஒதுங்க வந்தவன் யாரென்றே அறியாத மனிதனைப் புகைப்படம் பிடிக்கிறானே என்று யோசித்திருக்காலாம் இல்லையேல் திருத்தமாய் தன்னை முதன் முதலாய் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கலாம் இது இரண்டுமே இல்லையென்றாலும் கூட சட்டென்று தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ஏற்று மகிழ்ந்திருக்கலாம். மனித மனம் ஏங்குவதெல்லாம் இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுதான், அதுதான் எல்லா மனிதத்தேவைகளின் அடிப்படையாயும் இருக்கிறது. அன்பு, அனுசரனை இந்த இரண்டையும் தேடித்தான் மனிதன் தனக்குத் தெரிந்த எல்லா வழிகளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறான். முழுமையான அன்பும் அனுசரனையும் கிடைத்தவனுக்குத் தெரியும் இந்த உலகில் வேறொன்றும் முக்கியமில்லை என்று....

நன்றி சொல்லி விட்டு மழைச்சாரலை வாங்கியபடியே என் பைக்கில் வந்து அமர்ந்தேன்.

என் முன் நெற்றியில் விழு மழையே...
கன்னத்தி தவழ்ந்து....
என் உதடுகளை முத்தமிடு....
கண்ணீரை மட்டுமே உற்பத்தி செய்யும்
என் விழிகளுக்குள்
சந்தோஷத்தின் திரவமாய் நீ இறங்கு
என் கண்ணீரினைச் சுத்தம் செய்...
கன்னம் கழுத்து வழியே சென்று
உடலைத் தழுவு...
என் ஆருயிர் மழையே
இவ்வுலகிலகின் பேருயிர் மழையே..
வா....கரைந்து போக நான் தயார்...
என்னை காதல் செய்ய நீ தயாரா...?

ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தேன். ஹெல்மெட் இல்லாத என் தலையை பொய்க்கோபம் கலைந்த காதலியாய் தொட்டு நனைக்க... வானிலிருந்து விழுந்து கொண்டிருந்தன கோடி மழைத்துளிகள்.

அப்போதுதான் கவனித்தேன் யாரோ ஒருவர் கவனத்தோடோ அல்லது கவனமில்லாமலோ கொட்டிச் சென்றிருந்த சோற்றுக் குவியலை. யாருமில்லாத இந்த பேருந்து நிலையத்தில் சிதறிக்கிடக்கும் இந்த சோற்றுப் பருக்கைகளை யார் படைத்தது..? யாருக்கு படைத்தது....? என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உனக்கான ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்ற திருக்குரானின் ஆயத்தொன்று என் நெஞ்சிலிருந்து எழும்பி செவியோரம் கிசுகிசுத்தபடியே காற்றில் சென்று கரைந்து கொண்டிருந்தது.

இந்தச் சோற்றுப் பருக்கையில் யார் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று யோசித்தபடியே கன்னத்திற்கு கையைக் கொடுத்து தாங்கிப் பிடித்தப்படி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பட்டும் படாமல் தூர நின்று பார்ப்பதுதான் வேடிக்கை. வேடிக்கப் பார்ப்பது என்பது ஈடுபடுதல் கிடையாது. அதே நேரத்தில் தொடர்பறுத்துக் கொள்ளுதலும் கிடையாது. ஈடுபட்டுக் கொண்டே வெறுமனே இருத்தல். எங்கிருந்தோ சாரையாய் ஏற்கெனவே மொய்த்துக் கொண்டிருந்த அந்த எறும்புகளின் பெயர்தான் இந்த சோற்றில் எழுதபட்டிருக்கிறதோ, அவற்றின் பெயர் எழுதி இருப்பதால்தான் யாரோ ஒருவர் கொண்டு வந்து இங்கே இறைத்துச் சென்றிருக்க வெண்டுமோ என்று என் ஆன்மீக புத்தி வேகமாய் உள்நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே....

எங்கிருந்தோ வந்த ஒரு தெரு நாய் ஒன்று வேக வேகமாய் அந்த எறும்புகளைப் பற்றிய எந்த கவனமுமின்றி அந்த் சோற்றினை உண்ண ஆரம்பித்தது. பசிதான் இந்த பிரபஞ்சத்தில் பிரதானம். பசித்திருக்கும் போது எந்த ரசனையும் மனித மூளையில் ஏறாது....அப்படித்தானே விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் இருக்கும். உயிர்களின் அடிப்படை தேவை உயிர்வாழ்தல். இந்த நாயின் பேரும் பல பருக்கைகளில் எழுதப்பட்டிருக்குமோ என்ற யோசனையோடு வேகமாய் உணவருந்தும் அந்த நாயை என் கேமராவிற்குள் கொண்டு வர முயற்சி செய்தேன். நாயை எடுக்கிறேன் பேர்வழி என்று நான் எடுக்க முயன்றதெல்லாம் அந்த ஜீவராசியின் பசியை, திடீரென்று கிடைத்த உணவு எந்த நிமிடமும் பறிபோகலாம் என்று அதற்குள் இருந்த பதட்டத்தை, சந்தோஷத்தை, பயத்தை.....இப்படியாய் ஒரு புகைப்படமென்பது எனக்கு வெறுமனே ஏதேதோ பிம்பங்களை மட்டும் பதிவு செய்து கொள்ளும் ஒரு யுத்தியே அல்ல....

நான் புகைப்படங்கள் மூலமாய் என்னைச் சுற்றி நிகழும் வாழ்க்கையை, உணர்வுகளை, விவரிக்க முடியாத கனவுகளை பதிவு செய்யவே முயன்று கொண்டிருக்கிறேன். எனக்குள் நானே பேசிக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றது அந்த நாய்க்கு தொந்தரவாய் இருந்திருக்க கூடுமென்று நினைக்கிறேன் அதன் உணவருந்தும் வேகம் தடைப்பட பட்டென்று பதறி கொஞ்சம் தூரமாய் சென்றமர்ந்து அதைத் தொந்திரவு செய்யாத படிக்கு அமர்ந்து கொண்டு கிளிக்கிக் கொண்டிருந்த போது....

சலனமில்லாத குளத்தில் தூக்கி எறியப்பட்ட கல்லாய், பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும் போதே நறுக்கென்று கையில் குத்தும் முள்ளாய், சாந்தமான பின்னிரவின் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது உறக்கம் கலைக்கும் பெரும் அலறலாய் வந்தான் ஒருவன் கையில் இருந்த பாலித்தின் பாக்கெட்டிலிருந்து எதையொ எடுத்து கொறித்தபடியே... அந்த நாயின் அருகே வந்து ச்ச்ச்சூ....ச்ச்ச்சுச்ச்சூ என்று அதட்டி அந்த நாயை விரட்டினான் அந்த மனிதன்...

பயத்தோடு வாலை சுருட்டியபடி பின்வாங்கிக் கொண்டிருந்த அந்த நாயைப் பார்க்க எனக்கு என்னவொ போல இருந்தது....

இந்த பூமி எல்லா ஜீவராசிகளுகும் பொது என்று மனிதன் ஒரு பொதும் நினைப்பதில்லை. தான் வாழ மட்டுமே இந்த பூமி என்ற மனோபாவத்தில் அவன் செய்யும் அடாவடியும் அட்டூழியங்களும் மீண்டும் முரண்பட்ட வாழ்க்கையாய் அவன் மீதே வந்து படிகிறது. மரத்தை வெட்டினான், மழை முரண்டு பிடித்தது, இயற்கை வாழ்க்கைக்கு எதிராய் திரும்பினான் நோய்கள் அவனைச் சூழ்ந்து கொண்டது....

கால்மேல் கால் போட்டு தான் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனியை எந்தக் கவலையுமின்றி அவன் தின்று கொண்டிருக்க...

என்னைப் போலவே கொஞ்சம் தூரத்தில் போய் அமர்ந்து கொண்ட நாயும் என்னோடு சேர்ந்து அவனை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது...

எப்போது போவான் என்று நானும் நாயும் வேடிக்கப்பார்த்துக் கொண்டிருந்த போதே.... அடித்துப் பெய்ய ஆரம்பித்திருந்த மழையில் கரையத் தொடங்கி  இருந்தன அந்த சோற்று பருக்கைகள்...

கேமராவை பாலித்தின் கவருக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பினேன் நான்.....ஆக்ஸிலேட்டரை முறுக்கி கொஞ்ச தூரம் நகர்ந்து திரும்பிப் பார்த்தேன்...

அந்த மனிதனையும் காணவில்லை, நாயையும் காணவில்லை, அங்கே சிதறிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளையும் மழை மண்ணோடு கரைத்துவிட்டிருந்தது.....


நான் விடு திரும்பிக் கொண்டிருந்தேன்...
தேவா சுப்பையா...Photo Courtesy: Bala PhotographySaturday, November 14, 2015

அஜித் என்னும் வேதாளம்...!செம்ம ஹாட்டான மட்டன் தம் பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்டுக்கிட்டு இருக்கும் போதே இது சாம்பார் சாதம் மாதிரி இல்லை, ரசம் போட்டு கை நொறுங்க அள்ளித் திங்கற மாதிரி இல்லையேன்னு யோசிச்சா அது எப்டி அபத்தமோ அப்டியான அபத்தம்தான் வேதாளம் பார்க்க போய் உக்காந்துக்கிட்டு அதுல லாஜிக் பத்தி எல்லாம் யோசிக்கிறது.

தமிழ் சினிமா மரபுல ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹீரோக்களா தங்கள மாத்திக்கதான் எப்பவுமே முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க. சூப்பர் ஹீரோவா ரசிகர்களோட மனசுல உக்காந்துட்டா போதும் அதுக்கப்புறம் அவுங்க என்னா செஞ்சாலும் அதை மக்கள் ஏத்துகிடத்தான் செய்வாங்கன்றது உண்மைனாலும் ஒரு ஹீரோ தன்னை சூப்பர் ஹீரோவா பரிணமிச்சு திரையில தன்னை மிகப்பெரிய ஆளுமையா காட்டி அதை அப்டியே ஆடியன்ஸ ஏத்துக்க வைக்கிறதுங்கறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலை. இந்த ட்ரான்ஸ்மிஷன மிகத்துல்லியமா செஞ்சுட்டா காலத்துக்கும் அவுங்கள எல்லாத்  தரப்பு ரசிகர்களும் விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.

எம்.ஜி.ஆர்க்கு நடந்த அந்த ட்ரான்ஸ்மிஷன் ரஜினிக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாடி நடந்து இன்னிக்கு தேதி வரைக்கும் திரையில ரஜினி வந்தாலே பார்த்துக்கிட்டு இருக்க ரசிகனுக்குள்ள வேதியல் மாற்றங்கள் எல்லாம் நடந்து உணர்சிப் பிழம்பா திரையப் பாத்து தலைவாவாவாவாவா....ன்னு கத்த ஆரம்பிச்சுடுவான்றது நம்ம எல்லோருக்குமே தெரிஞ்ச உண்மை.

இந்த மெகா ட்ரான்ஷ்மிஷன இயக்குனர் சிவாவோட உதவியோடு ஜஸ்ட் லைக் தட் அஜித் கிராஸ் பண்ணி தன்னை நிஜமான ஒரு சூப்பர் ஹீரோ இமேஜ்குள்ள அட்டகாசமா பொருத்திக்கிட்டார்ன்னுதான் சொல்லணும். அஜித் நடிக்காம வேற யார் நடிச்சு இருந்தாலும் மண்னைக் கவ்வுற திரைப்படம்தான் வேதாளம் என்பதற்கு நிறைய விசயங்கள் எடுத்துக்காட்டா படத்துல இருந்தாலும். அஜித் என்னும் ராட்சசன் அத்தனை மைனஸ் பாயிண்ட்களையும், லாஜிக் இல்லாத சீன்களையும் ஒரு வேதாளமாவே மாறி தூக்கி சாப்டுட்டு இந்தப்படத்தை சூப்பர் டூப்பர் வெற்றிப்பட்டமா மாத்தி இருக்கார். அஜித்தோட பழைய படங்கள்ல நிறைய நல்லபடங்கள் இருந்தாலும் இனி வரப்போற படங்கள்ல இன்னும் நிறையபடங்கள் வந்தாலும்....

வேதாளம் அஜித்தோட கேரியர்ல ஒரு மைல் கல்லுன்னுதான் சொல்லணும்.

இப்டி...இப்டி ஒரு அஜித்த பார்க்கத்தான் அவரோட ரசிகர்கள் எல்லோரும் காலமா கத்துக் கிடந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ப்ரேம் பை ப்ரேம் எல்லா காட்சிகள்ளயுமே அஜித் ஆக்ரோஷமா திரைய ஆக்கிரமிச்சு இருக்கத பாத்தப்ப ஒரு ரஜினி ரசிகனான எனக்கு ரஜினி படம் பார்த்த அதே  பீல் கிடைச்சது நிஜமான உண்மை. அஜித் தங்கையோட கல்கத்தா வர்றார். அஜித் டாக்ஸி ஓட்டுறார், அஜித் வில்லன்களை பழிவாங்குறார், படத்துல வர்ற ப்ளாஷ் பேக்குல வேதாளம் கணேஷ்ன்ற ரவுடியா மவுசு காட்டுறார், பின் கடைசி வில்லனையும் பழி வாங்கிட்டு படத்தை ஒரு சூப்பர் இன்னிங்சை பினிஷ் பண்ற டோனி சார் மாதிரி முடிச்சுட்டு கிளம்பிட்டே இருக்கார்.

அஜித்...அஜித் அஜித்....படம் முழுக்க அஜித். அஜித் வர்ற ஒவ்வொரு சீனுமே தெறி மாஸ்ன்றதுதான் படத்துல இருக்க மிகப்பெரிய ப்ளஸ். இயக்குனர் சிவா ஸ்கெட்ச் போட்டு திரைக்கதையை அமைச்சு  தலயோட முழுப்பரிமாணத்தையும் வேதாளத்துல ரொம்ப ஜாலியா புட்டுப் புட்டு வைச்சிறுக்கறத கண்டிப்பா பாராட்டியே ஆகணும். எல்லா தமிழ்ப்படத்துலயுமே ஹீரோ அடி வாங்கிட்டு அப்பாவியா இருந்துட்டு மறுபடி வில்லன போட்டு புரட்டி எடுக்குற மாதிரி சீன்ஸ் நிறையவே வந்திருக்கு. இந்த முடிச்சோட ஒரு விரிவாக்கம்தான் பாட்சா அதே மாதிரி அதே முடிச்சோட இன்னொரு விதமான விரிவாக்கம்தான் வேதாளமே தவிர எல்லோரும் சொல்ற மாதிரி வேதாளம் எந்தப் படத்தோட ரீமேக்கோ அல்லது காப்பியோ கிடையாதுன்றதுதான் உண்மை.


முதல் காட்சியில இருந்து ஆரம்பிக்கிற விறுவிறுப்பு கடைசிவரை குறையாமா ச்ச்சும்மா ஜிவ்வுன்னு ரோலர் கோஸ்டர்ல சுத்த விட்ட மாதிரி துறு துறுன்னு எகிறிப்பாய்சுட்டு இருக்கும் போது பின்னணி இசை அப்போ அப்போ வந்து நம்ம காதை பஞ்சர் ஆக்கிட்டும் போகுது. பாட்டுல கவனம் செலுத்தின அனிருத் இன்னும் கொஞ்சம் மிரட்டுற தொனியில பின்னணி இசை அமைச்சிருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமேன்னு எனக்குத் தோணின மாதிரி நிறைய பேருக்கு தோணி இருந்திருக்கலாம். ஆக்ரோஷமா அஜித் உறுமும் போதெல்லாம்  ஸ்கிரீன்ல நெருப்பு பொறி பறக்குது அதுவும் முதல் வில்லன ஷிப்ல வச்சுப் போட்டுத் தள்ளும் போது மியூசிக்க போட்டு விட்டுட்டு தலை கித்தார் வாசிக்கிற மாதிரி ஆடிக்கிட்டே எதிரிங்கள போட்டுத் தள்ற இடம்...நிஜமாகவே அதிர்கிறது.

சிம்கார்டை வச்சி தல இருக்கிற இடத்தை லொக்கேட் பண்ணி அவர பிடிக்க அந்த இடத்துக்கு போறதுக்கு முன்னாலேயே அஜித் வில்லன் இருக்க இடத்துக்கு நேரடியா அவரே வர்றார். அதெப்படி அவர் வர்றார் அவருக்கு எப்டி அந்த இடம் தெரியும்னு ஞானக் கேள்வி கேக்குற ஐடியா எல்லாம் வரத்தான் செய்யுதுன்னாலும் தலை எப்டியாச்சும் கண்டு பிடிச்சு இருப்பார்னு அதைப்பத்தி உனக்கென்னன்னு மனசு நம்மள அதட்டி நம்ப வச்சு படத்துக்குள்ள போட்டு அமுக்கிடுது. அதான் தல, இதைத்தான் நான் மேஜிக்னு மேல சொன்னேன், இதைத்தான் அந்த சூப்பர் ஹீரோ ட்ராஸ்மிஷன்னும் சொன்னேன். படம் முழுக்க இந்த மாதிரி தெறிகள் நிறைய இருக்கத்தான் செய்யுது, இந்த மாதிரி சீன்ல எல்லாம் ஆக்ரோஷமா அஜித் சீறிப்பாய்ந்து நிஜமாவே ச்ச்சும்மா தெறிக்க விடுறார்.

காசுக்காக என்ன வேணா செய்ற ஒரு ரவுடி வாழ்க்கையின் இடையில வற்ற ஒரு பெண் அவளோட குடும்பம் சூழல் எல்லாம் சேந்து பாசம்னா என்னனு ரவுடி அஜித்துக்கு ஒரு பாடத்தைக் கத்துக்கொடுக்குது அவர் நல்ல மனுஷனா மாறி சாந்தமா போய்டாம அதே ஸ்பீட்ல காசுக்காக என்ன வேணா செஞ்சுட்டு இருந்த அவரோட அதர்மமான மனசு குறுகுறுக்க பாசத்துக்காக ஒரு ரவுடித்தனத்தை செஞ்சு முடிக்கிறார். இதான் கதையோட மொத்த சாராம்சம். வேதாளம் கணேஷா அஜித் அறிமுகமாகிற இடத்துல இருந்து அவர் ப்ளஷ் பேக் சொல்லி முடிக்கிற வரைக்கும்  ரவுடி அஜித் கலக்கி எடுக்கிறார். அதுவும் லட்சுமி மேனனை சந்திக்கும் அந்த டீக்கடை சீன்ல...

தன்னை சுத்தி உக்காந்து டீக்குடிக்கிற மாதிரி தன்னை போட்டுத் தள்ள சமயம் பார்க்கும் எதிரிகளை கவனிச்சுட்டு....அஜித் எழுந்து ஒண்ணு டீயக் குடி இல்ல என்னை அடி என்று தலையைத் தடவிக் கொண்டு ரவுடிகளை துவம்சம் பண்ணுமிடம் எல்லாம் செம்ம தூள் +ஸ்டைல் + மாஸ். தம்பி ராமையாவும் அவரது மனைவியாய் நடிப்பவரும் கண் தெரியாதவர்களாய்  அப்பாவித்தனமாய் தங்கள் பாசத்தை ரவுடிகளிடமும், ரவுடி சார், ரவுடி சார் என்று அஜித்திடம் அன்பு காட்டுவதும் படத்தின் ஜீவனை இன்னும் தூக்கிப் பிடித்து படம் பார்க்கும் நம்மை நெகிழ வைக்கிறது. தம்பி ராமையாவின் நடிப்பு இந்தப் படத்தில் எஸ்ட்ராடினரி அதுவும்  இறக்கும் போது சண்டாளி என்னை விட்டுப் போய்ட்டாளா என்று தன் மனைவி இறந்த பின்பு அஜித் மடியில் படுத்துக் கொண்டு கதறுவதும், அடப்பாவி நீ காசு கொடுக்காம வேலை செய்ய மாட்டியேய்யா என்று கையில் கிடக்கும் மோதிரத்தை அவிழ்த்து அதோடு தன் பாக்கெட்டில் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் எடுத்து ரத்தத்தோடு அஜித் கையில் வைத்து விட்டு செத்துப் போகுமிடம் நிஜமாகவே கண்ணீர் வரவைக்கிறது. குற்ற உணர்ச்சியோடு அஜித் அந்தக் காசை உதறிவிட்டு லட்சுமி மேனனை காப்பற்றுமிடமும், பின் பழசை மறந்து போகிற லட்சுமிமேனனின் கையைப் பிடித்தபடி தவிர்க்க முடியமால அவரது அண்ணனாய் மாறுமிடத்திலும் அஜித்தின் நடிப்பு ஜொலிக்கிறது.

எல்லாம் மறந்து போன லட்சுமி மேனனுக்கு அஜித்தை மட்டுமே பாசமிகு அண்ணனாய் நியாபகம் இருக்கிறது.  தங்கைக்கு தன்னுடைய அதிரடியான தனது  இன்னொரு பக்கம் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் அஜித் க்ளைமாக்ஸில் லட்சுமி மேனன் துப்பாக்கியைத் தூக்கிப் போட்டு நீ சுடுண்ணா.. சுடுண்ணா என்று கதறும் போது தனக்கு துப்பாக்கிப் பிடிக்கவே தெரியாது என்று அழுது நடித்தபடியே லட்சுமி மேனன் கண் மூடிக் கொள்ளும் அந்தக் கணத்தில் கொடூரமாய் வில்லனைப் பார்த்து சிரித்தபடியே துப்பாக்கியைச் சுற்றியபடியே போட்டுத் தள்ளுவதோடு படம் முடிகிறது.


அழுது, சிரித்து அப்பாவியாய், முகத்தை அஷ்டகோணலாய் அஜித் சில காட்சிகளில் முகத்தை மாற்றிக் கொள்ளும் அதே வேகத்தில் பக்கா வில்லத்தனமாய் முகத்தை மாற்றிக் கொண்டு கர்ஜித்தபடியே எதிரிகளைப் பந்தாடும் போதெல்லாம் நம்மை மறந்து கைதட்டித்தான் ஆகவேண்டும். அஜித்துக்கென்று பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட இந்தப் படத்தில் " நீயும் நானும் என்ன தேசத்தலைவர்களா சொன்னத சொன்னபடி செய்ய....நீ கெட்டவன்னா... நான் கேடு கெட்டவன்" என்று அஜித் உறுமும் போதெல்லாம் நிஜமாய் ஒரு ட்ரன்ஸ்மிஷன் நமக்குள்ளும் நிகந்தேறி விடுகிறது.

ஸ்ருதிஹாசனையும், அவர் பாடும் ஒரு பாடலையும் பின்னணி இசை நச்சரிப்பையும் தலயின் ஆக்ரோஷமான சீற்றம் மட்டுப்படுத்தி மறைத்து விட...ஆளுமா டோலுமாவையும், வீர விநாயக பாடலையும் கொண்டாடியபடியே...

சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த சிவா & டீமிற்கு மிகப்பெரிய பாராட்டினை தெரிவித்தபடியே, தலைன்னா மாஸ்டா, தலைன்னா தெறிடா, தலன  அதிரடிடா என்று...

அஜித் ரசிகர்கள் அஜித்தின் இந்த சூப்பர் ட்ரீட்டினை பார்த்து ரசித்து கம்பீரமாய் தல ரசிகன் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்...!
தேவா சுப்பையா...
Saturday, November 7, 2015

நீர்க்குமிழி..!

ஒரு மழை விட்டும் விடாத
மாலைப் பொழுதில்
நான் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன்
குளிரும் சிறு தூறலும் என்னை
ஏதோ செய்யத் தொடங்கிய
அந்தக் கணத்தில்தான்
தூரத்தில் நடந்து வருவது
நீயாய் இருக்குமோ என்று
யோசித்துக் கொண்டிருக்கையிலேயே
என்னை நெருங்கி விட்டாய் நீ
சடக்கென்று தலைகுனிந்து கொண்டேன்
உன்னை நேருக்கு நேர் எப்படி
நான் யாரோவாய் பார்த்து செல்வது...?
ஒரு கணம் என்னருகில் வந்து நீ
நிற்பது போலத்தெரிகிறது
இருந்தாலும் நான் நடந்து கொண்டிருக்கிறேன்
உன்னைக் கடந்து சென்று விட்டேன்
நி நின்று கொண்டிருக்கலாம்
சென்றிருக்கலாம் அல்லது
என்னோடு நடந்து கூட பின்னாலேயே
வந்து கொண்டிருக்கலாம்
நம்மை யாரோவாக்கி விட்டிருந்த
இந்தக் காலம்தான்
முன்பொரு நாள் நம்மை சேர்த்தும் வைத்திருந்தது...
மழை அடித்துப் பெய்யத் தொடங்கி இருந்தது
நடப்பதை நிறுத்தி விட்டு திரும்பிப் பார்க்கிறேன்
யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடந்த
அந்தத் தெருவின் எதோ ஒரு வீட்டிலிருந்து
மல்லிகை மொட்டுக்கள் சட் சட்டென்று
தங்களைத் திறந்து கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்
மழை வாசமும் மல்லிகை வாசமும்
மனதை நிறைக்கத் தொடங்கியிருக்க
தொப்பல் தொப்பலாய் நான் நனைந்தபடி
நடந்து கொண்டிருக்கிறேன் நான்...
யார் யாரோ கடந்து
சென்று கொண்டிருக்கிறார்கள் என்னை...
தேவா சுப்பையா...

Saturday, October 10, 2015

யுத்தம்..!


சிறு ஓய்வுக்குப் பிறகெழுந்து
உடை தரித்தாயிற்று
தலைக்கவசத்தை
மனைவி எடுத்துத் தருகிறாள்
வாசல் வரை சென்று
மீண்டும் வந்து பிள்ளைக்கு
முத்தமிடுகையில் மறந்து போன
உடைவாளினை எடுத்து
இடுப்பில் தரித்துக் கொள்கிறேன்
காலையிலிருந்து
கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருக்கும்
என் புரவி கனைத்து
என்னை அழைக்கிறது...
அதன் கழுத்து தடவி
வயிற்றில் கால் உதைத்து
கடிவாளம் சொடுக்கி முறுக்குகையில்
திமிறி எழுந்து களம் நோக்கி...
விரைகிறதென் புரவி,
அடுத்தென்ன
நிகழுமென்றறியா அதிரகசிய
வாழ்க்கையொன்றைப் பருகியபடி
சலனமற்று நகருமென் வாழ்வில்
நித்தம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது
முடிவில்லா யுத்தம்...!தேவா சுப்பையா...


Saturday, September 26, 2015

யாகத் தீ...!


நான் எழுதிய கவிதைகளை எல்லாம் நீ இப்போது வாசிக்கிறாயா? ஒரு வெறுப்போடுதான் கேட்டேன். அவள் பதிலேதும் சொல்லாமல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே நானும் அலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சப்தமில்லாத அந்த நிமிடங்களை சடக்.. சடக்...சடக் என்று மென்று விழுங்கிய படியே காலம் ஓடிக் கொண்டிருந்ததை பற்றிய பிரக்ஞை எனக்கு அறவே இல்லாதிருந்தது போலத்தான் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும்...

சடாரென்று என்னைப் பார்த்தாள்...கலைந்த கேசத்தைப் பற்றிய யாதொரு அக்கறையுமின்றி என்னை அவள் அப்படி ஊடுருவிப் பார்த்தது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது...

நீ ஏன் எதுவுமே எழுதுவது இல்லை இப்போதெல்லாம் என்று அவள் கேட்டது, சடலத்திடம் போய்  ஏன் இறந்து கிடக்கிறாய் என்று கேட்பதைப் போலவே தோன்றியது எனக்கு. நான் எழுதுவதில்லைதான் ஆனால் அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை...

ஒவ்வொரு இறகாக பிய்த்துப் போட்டு விட்டது காலம். நான் முன்பு போல தோகை விரிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று எனக்குத்  தெரியவில்லை. அகங்காரத்துக்காக எந்த மயிலும் தோகை விரிப்பதில்லை அது அழகியலின் வெளிப்பாடு. இருந்தாலும் அது சிலரால் அகங்காரமாய்த்தான் பார்க்கப்படுகிறது. கவிதைக் கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்க முடியாது என்று முன்பொரு நாள் நான் உன்னிடம் சொன்னேன் அல்லவா...?

அவளைப் பார்த்து கேட்டபடியே தொடர்ந்தேன்....

என் காதலும், கவிதைகளும், ஏகாந்த எண்ணங்களும் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவிலிருக்கிறது, பிழைக்கலாம் இல்லையேல் அப்படியே மரித்துக் கூட போகலாம். என் கனவுகளில் கூட என்னால் கவிதைகள் பற்றி எண்ண முடிவதில்லை... கோமாவில் இருப்பவனுக்கு எப்படி வார்த்தைகள் வேர்ப்பிடிக்கும், வெற்று ஓட்டைகளைக் கொண்ட மூங்கில் குச்சியா ஜீவனுள்ள இசையைப் பிறப்பிக்கிறது....?

புல்லாங்குழல் மட்டுமல்ல எந்த வாத்தியக்கருவியுமே இசையைப் பிறப்பிப்பதில்லை. இசை, எழுத்து, ஓவியம், இன்ன பிற படைப்புகள் யாவுமே யாரோ ஒரு கலைஞனின் காலம் கடந்த எண்ணங்களின் பிரதிபலிப்புதான். 

அவள் எதுவும் பேசாமல் மீண்டும் கடலை வெறிக்கத் தொடங்கி இருந்தாள்....பின் சற்று நெருக்கமாக என்னருகே வந்து அமர்ந்தாள், என் தலையை அவள் தோளில் சாய்த்துக் கொண்டாள், ஆதரவாய் கரங்களைப் பற்றிக் கொண்டு.... எனக்கு உன் வாழ்க்கை என்னவென்று தெரியாது ஆனால் நீதான் என் வாழ்க்கை என்பது மட்டும் தெரியுமென்றாள்....

உள்ளுக்குள் துளிர்த்துக் கொண்ட ஏதோ ஒன்று என் விழிகளில் கண்ணீராய் எட்டிப் பார்க்க, அவள் கரங்களால் என் கண்ணீரைத் துடைத்தெறிந்தாள்.....

மீண்டும் அவள் கைகளை இறுக்கிக் கொள்ள...

வாழும் வரை காதலை எழுத வேண்டிய நிர்ப்பந்தமொன்று என் முன் கடலாய் விரிந்து கிடப்பதாய் எனக்குத் தோன்றியது....

காற்றில் பறந்த
அவளின் தலை கோதி
கன்னங்களை கைகளில் ஏந்தி
என் உயிருக்குள் ஏறிக் கொள் 
தேவதையே... என்றேன் மெளனமாய்!

அவள் விழிகளால் என் விழிகளைத்
தொட்டு தொட்டு
அவள் தீட்சைக் கொடுக்க....
முன்பொரு நாள்
அவள் பாதங்களில் நான்
தூவிய என் எழுத்துப்பூக்கள்
மோட்சமைடைந்தோம் 
உன் தேவதையின் பாதம் தொட்டு
என்று கண் சிமிட்டிக் கிசு கிசுப்பாய்
சொன்னதெல்லாம் உறக்கம் கலைந்து
தூளி எட்டிப்பார்க்கும் குழந்தையாய்
என் நினைவுகளிலிருந்து எட்டிப்பார்க்க
காதலாய் அவளைப் பார்த்தேன்...

அவளின் இடையில் பதிய முயன்ற
என் விழிகள் ஆயிரத்தோராவது முறையாய்
வழுக்கி விழுந்து
மீண்டும் ஒரு கிணற்றுத் தவளையாய்
அவளின் இடுப்பேற முயன்று கொண்டிருக்க...
ஒரு சிறு மழையொன்று
செல்லமாய் அவள் முன் நெற்றி விழுந்து
என்னை நகர்ந்து போ 
என்று மிரட்ட....

கற்பனைகளை எல்லாம் குவித்து
எனக்குள்ளிருக்கும்
அவளுக்கான கவிதைகளை
தரையிறக்க
இதோ எனக்குள் மூண்டு கொண்டது
மீண்டுமொரு யாகத்தீ...!
தேவா சுப்பையா...Thursday, September 17, 2015

மீளல்...!


மீளல் என்பது எப்போதும் கடினம்தான்
அது காலத்தை தின்று விடுகிறது
சுற்றியிருப்பவர்களுக்கு புரிதலின்மையைக் கொடுக்கிறது
வலியோடு நகர வைக்கிறது
வார்த்தைகளைக் கொன்று விடுகிறது;

பதுங்கித் திரியும் அடிபட்ட புலியின்
கொடூரத்தோடு பாய்வதற்கான தருணத்தை
அது எதிர்பார்த்து காத்திருக்கிறது;

மீளல் ஒரு வேள்விதான்
அது எலும்புகளைத் துளையிட்டு
ரத்தத்தை உறிஞ்சி 
நரம்புகளை அறுத்தெறிந்து 
தடாலென்று கீழ் தள்ளி விடும் போதுதான்
விழுந்த இடத்திலிருந்து நாம் 
எழுந்து விஸ்வரூபமெடுக்க வேண்டியிருக்கிறது
மீட்சி அல்லது மீளலென்பது
காலம் கையளிக்கும் இடைநிலைச் சூழல்தானென்றாலும்
மீளும் வரை மீண்டு கொண்டிருப்பவன்
பாவிதான், துரோகிதான்;

மீளல் ஒரு சூழ்நிலை மாற்றிதான்
அது மீளும் வரை
இடதை வலதாக காட்டுகிறது
வலதை இடதாகவும் மேலைக் கீழாகவும் 
கீழை மேலாகவும் காட்டிக் கொண்டேஇருக்கிறது...
மீள்பவனை ஊமையாக்குகிறது;
மீள்பவனின் வார்த்தைகளிலிருக்கும் 
சத்தியமென்பது விழலுக்கிறைத்த
வெற்று நீர்தான்...
ஆனாலும்...
மீளலொரு நாள் தன்னை
மீட்டெடுத்துக் கொள்கிறது
கூட்டுப் புழுவினை உடைத்து
சிறகசைத்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சியென என்றாலும்
மீளும் வரை கூட்டுப் புழுவின் 
அவஸ்தையோடுதானிருக்க வேண்டியிருக்கிறது...
ஆமாம்....
தூரிகையும் வர்ணக் கலவையும் மட்டும்
என்ன புரிதலைக் கொடுத்து விடும்
காண்பவர்களின் கண்களுக்கு....
தீட்டி முடியும்வரை
அது ஓவியமல்ல....
வெற்று வர்ணங்களின் 
குழப்பக் கலவைதானே...?!
தேவா சுப்பையா...


Sunday, August 23, 2015

ப்ரியப் பெரும் பொழுது....!


எதைப் பார்க்கிறோமோ அதை எப்படி பார்த்தோமோ அப்படியே விளங்கிக் கொண்டு, அது எதுவாக இருக்கிறதோ அதாக புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு கலை. அபிப்பிராயங்களோடுதான் நாம் ஒவ்வொரு விசயத்தையும் அணுகுகிறோம், ஒன்றை பற்றி விமர்சிக்க அல்லது அதை பற்றி கருத்து சொல்ல நமது விருப்பு வெறுப்புகளையும், ஏமாற்றங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் நம்மை அறியாமல் திணித்தே அது பற்றி ஒரு அபிப்பிராயம் கொள்கிறோம்.

நிஜத்தில் எது எதுவாக இருந்ததோ அல்லது இருக்கிறதோ அது பற்றிய யாதொரு அக்கறைகளுமின்றி தத்தமது மனதில் வரைந்து கொள்ளும் பிம்பங்களாகவே மிகைப்பட்டவர்களின் வாழ்க்கை இங்கே இருக்கிறது. நாம் வெளியே காண்பதும், அது பற்றிய அபிப்பிராயங்களைச் சொல்வதும், நமது சொந்த யோக்கியதையே அன்றி வேறு ஒன்றுமே அல்ல...

எதை அறிந்தோமோ
அது அறிந்ததன்று....
சத்தியத்திடம் போதனைகளென்றே
ஒன்று இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
வெகுளியாய் பூத்துச் சிரிக்கும்
பூக்களிடம் சொல்வதற்கு மலர்ச்சியைத் தவிர
வேறொன்றுமில்லைதானே....?!
மலர்தலும்...காய்ந்து சருகாகி வீழ்தலும்
முழுமையில்தானே நிகழ்கிறது...?
யார் எழுதி வைத்தார்கள்...
இந்த வாழ்க்கைச் சமன்பாட்டை...
இது இது இப்படித்தான் என்று 
ஏதேனும் விதி ஒன்று இருக்கிறதா என்ன
இந்த இயற்கை பெரும் இயக்கத்தில்...?
வாழ்க்கை மீதிருக்கும் ப்ரியத்தைதானே...
பொழுதெல்லாம் கூவிக் கொண்டிருக்கின்றன
வனத்துக் குயில்கள்...?
சலசலப்போடு ஓடாவிட்டால்...
ஓடையென்று கூறுவீர்களா அந்த
நீர் தேக்கத்தை...?
கடும் வெயிலுக்குப் பிறகான
அந்தியில் நதிக்கரையோரம் வீசும்
தென்றலை மலர்ச்சியோடு முகம் குளிர வாங்கிப் பாருங்களேன்...
அப்போது.... தெரியும்...
வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறதா... இல்லையா என்று...?!
பெருமழை பெய்வது போல இடித்துப் பெய்தே விடாதா...
அபிப்ராயமற்ற வாழ்க்கை நமக்குள்ளும்....?
தேவா சுப்பையா...

Tuesday, July 14, 2015

திருத்தப்பட்ட பிழைகள்...!பள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும்  தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும் நதிதான் எத்தனை அழகானது.... வசீகரமானது..!வற்றிப் போனாலும் மீண்டும், மீண்டும் தனது தடங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு கடந்த காலத் தழும்புகளை வெளிக்காட்டாமல் உற்சாகமாய் கரை புரண்டோடும் நதியின் வாழ்வோடு எத்தனையோ உயிர்களுக்கு தொடர்பு உண்டுதானே....?

நதி என்று ஒன்றும் கிடையாது, நதித்தல் என்ற ஒன்று மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நதியின் பிரவாகத்தில் கணத்திற்கு கணம் அங்கே புதிய வாழ்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும் நதியை இதுதான் இன்னதுதான் என்று வரையறை செய்து விட முடியாது, அது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேங்கிக் கிடப்பதல்ல...அது எப்போது புதியது, சற்று முன் நீங்கள் பார்த்தது அல்ல இப்போது பார்த்துக் கொண்டிருப்பது என்று ஓஷோ சொல்வதைப் போல...

நதிகள் வாழ்க்கையின் மையக் கூறினை, அதன் அடித்தளத்தைத் தானே நமக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

எழுதும் போது கூட நதி நகர்வதை ஒத்த ஒரு பிரக்ஞை நிலை எனக்குத் தோன்றுவதற்கு காரணம் உண்டு, இதைத்தான் இப்படித்தான் என்று ஒரு முன் திட்டமிடலோடு எழுதத் தொடங்கினால் அங்கே செத்துப் போன வார்த்தைகளைத்தான் பிரசவிக்க முடியும்....ஆனால் எழுத்துக்கு உயிர் இருக்க வேண்டும் அந்த ஜீவன் வாசிப்பவனின் ஆன்மாவோடு சென்று கலக்க வேண்டும். வாசித்துக் கொண்டிருக்கையிலேயே துக்கமோ, பேரானந்தமோ அவனை ஆட்கொள்ள வேண்டும். அதுவரை அவன் பயணப்படாத தூரங்களுக்கு அவனை அந்த எழுத்துத் தூக்கிச் செல்ல வேண்டும். இரத்தமும் சதையுமாய் உணர்வைக் கொடுக்காத எழுத்துக்கள் எல்லாம் ஒப்பனை பூசிய நாடக நடிகர்களைப் போலத் தான் எனக்குத் தெரியும்....

ஒரு காலத்தில் மனித மனங்களைச் சுண்டி இழுக்க ஒப்பனைகள் தேவைப்பட்டிருக்கலாம், ஆனால் காலங்கள் கடந்து இன்றும் எழுதுபவன் தன்னை ஆகச் சிறந்தவன் என்று நிலை நிறுத்திக் கொண்டு ஊருக்கு உண்மைகள் சொல்வேன் என்று கட்டியம் கூறுவது போல எழுதுவது மிகப்பெரிய அபத்தம். அதோடு மட்டுமில்லாமல் ஒரு எழுத்து நல்லதைத்தான் சொல்ல வேண்டும் என்று வரையறைகள் செய்வதும், அப்படி எழுதாதவர்களை விமர்சிப்பதும் மிகப்பெரிய அபத்தம். நான் ஏன் நல்லதைச் சொல்ல வேண்டும். எழுதுவது என்பது கரடு முரடாய் காட்டில் முளைத்து வளரும் ஒரு முள் செடியைப் போல தான் தோன்றித்தனமானதாய் இருக்க வேண்டும், கூண்டு போட்டு தினம் தண்ணீர் ஊற்றி, உரமிட்டு போஷாக்கோடு வளர்க்கும் வீட்டுச் செடிகள் பார்க்க வேண்டுமானால் அழகானதாய் இருக்கலாம்...

ஆனால் தானே நின்று, தானே எழுந்து, தானே விழுந்து, தன் இஷ்டப்படி வளரும் ஒரு காட்டுச் செடியின் சுதந்திரமும் அதன் அனுபவமும் வேறுதானே...?

போன வாரம் நண்பர் ஒருவரை அவரது குடும்ப சகிதமாய் சந்திக்க நேர்ந்தது, லிவ்விங் டுகெதர் பற்றி பேச்சு வந்தது அப்போது, திருமண வாழ்க்கையைப் போல புனிதம் வேறொன்றிலும் வந்துவிடாது என்று தம்பதி சகிதமாய் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்....

நான் சட்டென்று சொன்னேன், எனக்கு திருமணம் சடங்கு அதன் பின் உருவாக்கிக் கொள்ளப்பட்ட வாழ்க்கை இது எல்லாமே போலியாகத் தெரிகிறது என்றேன். காரணம் என்னவென்றால் ஆயிரம் பேரைக் கூட்டி இவனுக்கு இவள் மனைவி என்று தாலி கட்டிக் கொண்டு அதன் பின் இந்த சமூகத்திற்காக, பெற்றவர்களுக்காக, பிறந்த பிள்ளைகளுக்காக என்று போலியாய் அனுசரித்து அனுசரித்து ஆயிரம் முரண்பாடுகளோடு வாழ்வதில் இருக்கும் ஒரு நச்சுத் தன்மையை யாரும் புரிந்து கொள்வதே இல்லை. ஒரு ஒப்பந்தம், அதை மீறினால் நமக்கு கெட்ட பெயர் வந்து விடும் அல்லது இந்த சமூகம் நம்மை கேவலமாக பேசும் என்பதற்காகவே இருவர் வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று நடித்துக் கொண்டு வாழ்க்கையை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்....?

வாய்ப்பிருந்தால், இந்த உலகம் ஒன்றும் சொல்ல வில்லை என்றால் பிரிந்து போகலாம் அதிலொன்றும் பிரச்சினை இல்லை என்றால் இன்றைக்கு மிகையான திருமண பந்தங்கள் சுக்கு நூறாய்த் தான் போயிருக்கும். இது கொஞ்சம் உங்களுக்கெல்லாம் எரிச்சலை வரவழைக்கலாம் கண்டிப்பாய் எரிச்சல் வரத்தான் செய்யும் ஏனென்றால் நான் இங்கே உடைத்துக் கொண்டிருப்பது நூற்றாண்டுகளாய் உங்களுக்குள் கட்டி எழுப்பப் பட்ட ஒழுக்கம் சார்ந்த வரைமுறைகள், வழமையாய் புகுத்தப்பட்ட பொதுபுத்தி இது, சரலேன்று ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.... 

ஆனால் இப்படிப் பாருங்களேன்....

ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாய் இணைந்து வாழ யாதொரு சமூக நிர்ப்பந்தங்களும் கிடையாது, சமூக நெறிக்காவலர்கள் என்று சூப்பர்வைஸ் செய்ய ஒருவரும் அங்கில்லை, இருவரும் சுதந்திரப் பறவைகள், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தீர்மானித்துக் கொள்ளும் பரிபூரண உரிமை இருவருக்குமே இருக்கிறது, அவர்கள் இருவரையும் காதலையன்றி வேறு ஒன்றுமே பிணைத்திருக்கவில்லை, அவளுக்காக அவனும், அவனுக்காக அவளும் என்று மட்டுமே  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், கூண்டு பூட்டப்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் கூண்டே கிடையாது, இருவருமே எந்த நிர்ப்பந்தங்களாலும் பூட்டப்படவில்லை, அவர்கள் ஒன்றாய் இருக்க அவர்களுக்குள் இருக்கும் அன்பே பிரதானமாய் இருக்கிறது....

அவனுக்காக அவள் ஒன்றை விட்டுக் கொடுத்தாள் என்றால் அது போலியான விட்டுக் கொடுத்தலாயிருக்காது அது முழுமையான புரிதலில் இருந்து பூத்த பூவாய் இருக்கும்,  அதே போல அவனும், எந்த சூழலிலும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து செல்வதென்றால் யாதொரு தடையுமில்லை என்ற சூழலிலும் ஒருவர் கை பிடித்துக்  கொண்டு ஒருவர்  உனக்கு நான் எனக்கு நீ என்று வாழும் வாழ்க்கையில் இருக்கும் சுகத்தை அனுபவிக்கும் போதுதான் நியதிகளுக்குள் நின்று கொண்டு புழுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் அபத்தம் என்னவென்று புரியும்.

சரியான துணையை இந்த சமூகம் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு அபத்தத்தை நமக்குத் துணையாக்கி விட வேறு வழியில்லாமல் வாழும் வாழ்க்கையை விட சரியான துணைக்காய் கோடி முறை கோட்டினை அழித்து மறுபடியும் போட்டுக் கொள்வதில் தவறொன்றும் இல்லைதானே....?

எந்த தலை சிறந்த ஓவியம்
அழித்து திருத்தாமல் 
முழுமையடைந்திருக்கிறது....?
அடித்து எழுதாத கட்டுரையோ
கவிதையோ இந்த பூமியில் உண்டா...
முழுமையானது என்று எதுவுமே
இந்த பிரபஞ்சத்தில் கிடையாது....
இன்று நீங்கள் பார்க்கும் முழுமைகளெல்லாம்
திருத்தப்பட்ட பிழைகள் தானே?!
தேவா சுப்பையா...

Wednesday, June 17, 2015

தாய்மை...!என்னுள் உயிர் துடிக்குமொரு
சொப்பனம் கண்டேன்...
பால் சுரக்கையில் குறுகுறுக்கும்
மார்பெனதாய் இருந்து
தேகம் முழுதும் பூரித்திருந்ததப்போது;
யான் எனதெண்ணிக் கொள்ளும்
மமதை அழிந்து இன்னொரு
உயிர் சுமக்கும் பெருமிதத்தில்
வீங்கிப் பெருத்திருந்ததென் வயிறப்போது...
பசி இரண்டென்றெண்ணி
நிறைய உண்டேன்;
தாகமிரண்டென்றெண்ணி அதிகம் குடித்தேன்....
தனிமையிலிருந்த போது
அதை தவமாய் கருதி
கண்மணி என் உயிரோடு வயிறுதடவி
பேசிச் சொக்கிக் கொண்டிருக்கையில்
பாவியென் சொப்பனம் கலைந்ததென்ன...?
இப்பிறவியிலொரு ஆணாய் என்னை
மீண்டும் நிலைக்கும் படி ஊழ்வினையென்னைச்
சபித்துச் சென்றதென்ன...?
எப்பிறப்பில் இனி நான் பெண்ணாவேன்...?
என்னுளிருந்தென் சிசு உதைக்கும் சுகமறிவேன்...?
கனவாகிப் போன என் கனவாவது
வாய்க்குமா மீண்டுமொரு முறை.. இனியென்றெண்ணி
ஏக்கத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...
இவ்வரிகளினூடே.............தேவா சுப்பையா....
Monday, May 18, 2015

கொட்டுச் சத்தம்...!


எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும் சுப்ரமணி மாமா சிவனே என்று படுத்துக் கிடந்தார். அத்தையைப் பார்த்தால்தான் பாவமாயிருந்தது. தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தது. பவானியும், பார்கவியும் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், உறவுகள் எல்லாம் சுற்றி அமர்ந்து இருந்தது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மணிதான் வாசலில் நின்று கொண்டு துக்கம் விசாரிக்க வருபவர்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தான்....

அஞ்சு பைசாவுக்கு பிரயோசனம் இல்லாதவண்டா என்று மணியைப் பற்றி மாமா என்னிடம் புலம்பிக் கொண்டே இருப்பார். பன்னென்டாவதைக் கூட ஒழுங்க முடிக்க முடியாத தண்டச் செம்மம்டா அவன்...ஆளும் கிராப்பும், சைக்கிள் கம்பெனியும்னு அவனை அப்டியாடா நான் நினைச்சுப் பாத்தேன்...ஒரு டாக்டராவோ, எஞ்சினியராவோ....மாமா பொறுமுவார்... சரி விடுங்க மாமா என்று ஆறிப்போன டீயை குடிக்கச் சொல்வேன் நான்...

பார்கவியைப் பத்தி கவலை இல்லடா எனக்கு எம்.ஏ பிஎட் எப்டியும் ஏதாச்சும் ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சுடும், அதுக்குதான் ஆரம்பத்துல ஸ்கூல்ல சேக்கும் போதே எம்பிசின்னு சொல்லி சேத்து வைச்சேன் உண்மையில நாமல்லாம் பார்வர்ட் கேஸ்ட் தாண்டா என்று சாதியைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார் மாமா. சாதி எல்லாம் தப்புதானே மாமா, சாதியை வச்சுக்கிட்டு, கூட இருக்குற மனுசாளை எதுக்கு நாம அன்னியமா நடத்தணும் மாமா...? எல்லாரும்  மனுசங்கதானேன்னு கேட்டுவிட்டு அவரது முகத்தை பார்ப்பேன்.....

வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்து சீவலோடு மடித்து லாவகமாய் வாயில் திணித்தபடியே உற்சாகமாய் பேசத் தொடங்குவார் மாமா....

சாதியை வச்சுக்கிட்டு மனுசாளை அடிமைப் படுத்தணும்னு எப்போ நினைச்சானுவளோ அப்பவே சாதிங்கற அமைப்பு கெட்டுப் போக ஆரம்பிச்சுடுச்சுடா செல்வம், எல்லோருக்கும் எல்லா வேலையும் செய்யத் தெரியாது, செய்யவும் வராது, ஒவ்வொருத்தருக்கு ஒண்ணு ஒண்ணு வரும், யாருக்கு எதுவருமோ அதை அவங்க அவங்க செய்றதும் அப்டி செய்றவங்க ஒரு கூட்டா வாழ்றதும் தப்புண்ணு எப்டி சொல்லுவ நீ...? நிஜத்துல எல்லாமே ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கணுமா இல்லையா...? எனக்கு வெவசாயம்தான் தெரியும், ஏன் தெரியுமா? என் பாட்டன் பூட்டன் எல்லாம் பயிரு பச்சை, தண்ணி, சகதின்னு வாழ்ந்துட்டுப் போய்ட்டான் அவன் வெதச்சை வெதை நான்.... அப்டியே தானே சிந்திக்க முடியும்... என்னையைப் போய் கோயில்ல மணி அடிச்சு மந்திரம் சொல்லுன்னு சொன்னா எப்டி சொல்ல முடியுன்னு நீயே சொல்லு....

ஒரு வேளை நான் இன்னிக்கு நான் மந்திரம் கத்துக்கிட்டு மணி அடிச்சு பூசை செய்ய ஆரம்பிச்சா என்னோட ஏழாவது தலைமுறை அதை சுருதி சுத்தமா செய்ஞ்சு முடிப்பான், ஆனா அதுக்கு நாம எவ்ளோ மெனக்கெடணும் தெரியுமா? அதான் முன்னாடியே சொன்னேனே... யாருக்கு எது வருமோ அதை செஞ்சுக்கலாம், அதுக்காக ஒருத்தரை ஒருத்தர் அடிமைப்படுத்திக்கறதுதான் இதுல உள்ள அபத்தமே....

சாதியை ஒழிச்சுப்புட்டா, படிச்சவன், படிக்காதவன்ன்னு ஒரு சாதி உருவாகும், ஏழை பணக்காரன்னு எப்பவுமே ஒரு சாதி இருந்துகிட்டே இருக்கும், ஒரே மாதிரி சிந்திகிறவங்க எல்லாம் ஒரு கூட்டமா உக்காந்துகிட்டு அவுங்ககுள்ளயே கொடுத்து வாங்கி எல்லாத்தையும் சுகமா செஞ்சுக்கிடுவாங்க, மொத்ததுல மனுசன் சுகமா இருக்கணும், எல்லாம் ஈசியா முடியணும்...இப்ப நம்ம குடும்பத்துக்குள்ளயே எடுத்துக்கயேன்...நீயும் நானும் வேற சாதிதானே...? என் சொந்தப் புள்ளைக்கும் எனக்கும் ஒத்து வரமாட்டேங்குது, என் தங்கச்சி புள்ள நீ என் கூட ஒத்துப் போற எல்லாத்துலயும்...

ஒரே மாதிரி நினைப்பு செயலும் இருக்கவங்க எல்லாம் ஒரே சாதிடா மருமகப்புள்ள...

சத்தமாய் சிரிப்பார் மாமா....

ஒப்பாரி சத்தம் அதிகமானது.... சென்னையிலிருந்து சின்ன மாமா குடும்பத்தோடு வந்திருந்தார். கட்டிக் கொண்டு எல்லோரும் அழுதார்கள். சுப்ரமணி மாமாவை அப்படி பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப சங்கடமாயிருந்தது.... 

டேய்.. செல்வம்....இதையெல்லாம் பேப்பர்ல எழுதிக்க, வேகமா போய் வாங்கிட்டு வா, பன்னென்டு மணிக்கு மேல பாடிய எடுக்கணும்டா, அப்பா சொல்லச் சொல்ல அவசரமாய் கிழிக்கப்பட்டஒரு நோட்டின் பேப்பரில் கிறுக்க ஆரம்பித்தேன்...

எளநீர் - 2
ஊதுபத்தி ஒரு பாக்கெட்
சூடம் பெருசு ஒரு பாக்கெட்,
காட்டன் வேட்டி - 4
மண் கலயம் சிறியது - 3
மல்லுத்துணி 5 மீட்டர்....

மல்லுத்துணின்னா என்னப்பா...? பாடிய அதுல கட்டி தாண்டா கொண்டு போகணும் சுடுகாட்டுக்கு என்று அப்பா சொல்லிக் கொண்டிருந்த போதே...நேத்து காலையில செத்ததுப்பா, வயசான ஒடம்பு வேற, வாங்க பாடிய தூக்கி செத்த ஆத்திட்டு மறுபடி அதே இடத்துல வைப்போம், நாகராசு பெரியப்பா கூப்பிட்டார், கொட்டகையில் உக்காந்திருந்த நாலு பேர் எழுந்து உள்ளே போக அப்பா என்னையும் வாடா தம்பி என்று மாமாவைத் தூக்க உள்ளே கூப்பிட்டார்...

பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்....

உள்ளே ஆண்கள் கூட்டமாய் போனதும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு பாப்பா அத்தை இன்னும் வேகமாய் அழ ஆரம்பித்திருந்தது....நான் பார்கவியைத்தான் பார்த்தேன். பாவம் அழுது அழுது கண் எல்லாம் சிவந்து தலை விரிகோலமாய் பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது. பார்கவி என்னை நிமிர்ந்து கூட பார்க்காதது ஒரு மாதிரி இருந்தது எனக்கு....

தாடையை இழுத்து கட்டி இருந்தார்கள். கால் கட்டைவிரல் இரண்டையும் முடிச்சுப் போட்டு, நெற்றியில் அடர்த்தியாய் பூசப்பட்ட விபூதியும், அதன் மத்தியில் பெரிசாய் வைக்கப்பட்டிருந்த 1 ரூபாய் காசும் என்று மாமாவைப் பார்த்த உடனேயே எனக்கு அழுகை வந்தது. இரண்டு நாள் முன்புதான் சவரம் செய்து கொண்டிருக்கும் போது பார்த்தேன். மூன்றாம் நாள் தாடி இன்று வெள்ளை வெளேன்று முகத்தில் முளைக்க ஆரம்பித்திருந்தது...

நெத்தி நிறைய விபூதி பூசணும்டா செல்வம்...நாம எல்லாம் பாசுபத சைவர்கள்னு எங்க தாத்தா சொல்லுவார், பசுபதியான சிவனைக் கும்பிடுறவங்க. செத்ததுக்கு அப்புறம் ஒண்ணுமே கிடையாது தெரியுமா? செத்ததுக்கப்புறம் இப்புடி நடக்கும் அப்புடி நடக்கும்னு எல்லாம் நல்லா கதையளப்பாங்க அதை எல்லாம் நம்பாத, உயிரோட இருக்குற வரைக்கும்தான் எல்லாமே, மனசுங்கற விசயமே சாகுற வரைக்கும்தான் இருக்கும் செத்துப் போனா ஏதுடா மனசு....?

உடம்பு இருக்க வரைக்கும்தான் மனசு இருக்கும். உடம்பு போய்டுச்சுன்னா மனசும் போய்டும். உயிரோட இருக்க வரைக்கும் மனசு உபத்திரவம் இல்லாம வாழணும், மனசு உபத்திரவத்தோட சோக்கா நல்ல மனுசாள் மாதிரி வாழ்றதா வேசம் போடுறவன் எல்லாம் நாய் மாதிரி உள்ளுக்குள்ள கஷ்டப்பட்டுக்கிட்டுதாண்டா இருப்பான்....

இந்த உலகத்துல எல்லாருமே நியாயவான்தான். எவனப் பாரு அடுத்தவனுக்கு அவன் நியாயம் சொல்லிட்டுதான் இருப்பான். செத்துப் போனா வெறும் சாம்பல்தான் எல்லோருமே...., மனுசன் ஒண்ணு சாம்பலா போகணும் இல்ல மண்ணோடு மண்ணா  போகணும் ஆக மொத்தம் தூசா போய்த்தான் ஆகணும்னு சொல்லிக்கிட்டே பழனி தண்டாயுதபாணி கோயில்ல இருந்து ஸ்பெசலா வாங்கிட்டு வந்த விபூதிய மாமா டெய்லியும் பூசிக்குவார். மனுசனை நெத்தியில விபூதி இல்லாம பாக்கவே முடியாது.

மாமா உடம்பை மொத்தமா மேல தூக்கி இரண்டு ஆட்டு ஆட்டிட்டு மறுபடி கீழ வச்சுட்டு மொத்த கும்பலோட வெளியில வந்து மறுபடி அப்பா சொன்ன பட்டியலைத் தொடர ஆரம்பிச்சேன்.

பன்னீர் சின்ன பாட்டில் 10.....
ரோசாப்பூ மாலை 4......பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

சைக்கிளில் ஏறி கடைத்தெருவெல்லாம் சுற்றி எல்லா சாமானையும் வாங்கியதாய் நினைத்துக் கொண்டு சிலதை விட்டு மறுபடி போய் வாங்கியாந்து, சுடுகாட்டுக்கு ஓடி, பிணமெரிப்பதற்கு எல்லாம் தயாராய் இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஓடிவந்து.... குளிக்காமல் கொள்ளாமல் லுங்கியும், சைக்கிளும், வியர்வையுமாய் எனக்கு அது புதிய அனுபவமாயிருந்தது.

கல்யாண வீடாய் இருந்தாலும் சரி சாவு வீடாய் இருந்தாலும் சரி சுப்ரமணி மாமாவோடு ஒரு ஓரமாய் உட்கார்ந்து பேச ஆரம்பித்து விடுவேன். சாகும் போது பூ மாதிரி பிரியணும்டா உயிர், அய்யயோ சாகப் போறேனேன்னு பதறிக்கிட்டு சாகக் கூடாது என்று மாமா அடிக்கடி சொல்வார்....

ரொம்ப சிரம்ப்பட்டாருக்காரு உயிர் போறப்ப....சீனு சித்தப்பா கேதம் கேட்க  வந்த ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நெஞ்சு வலி வந்து துடிச்சு இருக்கார், மீனாம்மா என்னை எப்டியாச்சும் காப்பாத்திடு ரெண்டு பொண்ணுகள வச்சு இருக்கேன்னு ரொம்பவே அண்ணிகிட்ட கதறி இருக்கார் பாவம்....ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் போதே முடிஞ்சு போச்சு....மாஸிவ் அட்டாக்....

சித்தப்பா சொல்லிக் கொண்டிருந்ததை என்னால் நம்ப முடியவே இல்லை. அவ்ளோ புரிதலான மனுசனுக்கு இப்டி நடந்திருக்க வாய்ப்பு இல்லையே என்று சொல்ல நினைத்து வாயை அடைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு எழுந்து வேறு ஒரு மூலையில் போய் நின்று கொண்டேன்....

சாவுறோம்ன்றது தெரிஞ்சு புரிதலோட டாட்டா பாய் பாய்னு போய்ச் சேரணும் அதான் வாழ்க்கை....தெரியுமா? செத்துப் போய்ட்டா அவ்ளோதான் எல்லாமே முடிஞ்சு போச்சு..., அதுக்கப்புறம் எதுவுமே கிடையாது. ஒண்னுமில்லாததுக்குதான் நாம இப்டி கிடந்து அடிச்சுக்கிறோம்.......எரிஞ்சு போன பிணத்துக்கு என்ன அர்த்தத்தை கொடுக்க முடியும் நாம....? யரோ இருவர் பேசிக் கொண்டிருந்தனர்...., 

அது எந்த  மாமனோ... எந்த மருமகனோ.....?! 

எல்லாம் வெறுப்பாய் வந்தது எனக்கு.... வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். உச்சியில் ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது....

வாசலில் கொட்டுச் சத்தம் அதிகமாக அதிகமாக....ஓவென்று அழ ஆரம்பித்திருந்தேன்....!
தேவா சுப்பையா...Thursday, April 16, 2015

தேடல்...16.04.2015!


எழுதுவதற்கான எல்லா சூழல்களும் இன்று இருப்பதாகத் தோன்றியது எனக்கு. மழை வரப் போகிறது என்று  எப்படி யூகிக்க எப்படி முடியுமோ அப்படித்தான். கருத்த மேகங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்க குளிர்ந்த காற்று வீசி சூழலை ரம்யமாக்க இதோ எந்த நொடியிலும் கனிந்து விழுந்து விடும் தூறல் மழை என்று தோன்றுமல்லவா அப்படித்தான். சட சடவென்று புறச் சூழல்கள் அறுபடத் தொடங்கிய அந்த கணத்தில் பேனாவோடும் பேப்பரோடும் பரந்து விரிந்த வான் பார்க்கும் வசதி கொண்ட இந்த சாமானிய எழுத்தாளனின் பால்கனிக்கு நீங்களும் வந்தமர்ந்து பார்த்தீர்களானால் இதைப் புரிந்து கொள்வீர்கள்...

கடந்த வாரத்தில் மலைகள் சூழந்த ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவை ஒன்றும் என்னிடம் பேசவில்லை. பெருந்தவத்திலிருக்கும் யோகிகளைப் போல வாழ்க்கையை பற்றிய எந்த ஒரு அக்கறையுமின்றி ஆங்காங்கே அவை படுத்துக் கொண்டிருந்தன. சாலையோரமாய் வாகனத்தை நிறுத்தி விட்டு மலைகளோடு மலைகளாய் படுத்துக் கொள்ளலாமா என்று அவ்வளவு ஆசையாயிருந்தது எனக்கு. வெயிலோ, மழையோ, குளிரோ, பெருங்காற்றோ அவை அப்படியேதான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவை முழுமையாய் வாங்கிக் கொள்கின்றன. வாங்கிக் கொள்கின்றதானே அன்றி அவை எதற்கும் எதிர்வினை ஆற்றுவது கிடையாது.  சபிக்கப்பட்டவர்கள் மனிதர்கள்தான் இங்கே எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஆற்ற வேண்டியிருக்கிறது.

நான் சொல்றது காதுல விழுதா இல்லையா? ஏன் கல்லு மாதிரி உக்காந்து இருக்கீங்க என்று யாரவது கேட்டால் நிச்சயமாய் சந்தோசப்படத்தான் வேண்டும். கல் மாதிரி இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சகித்து வாழ்வது என்பது வேறு சகிக்க ஒன்றுமே இல்லை என்று தேமேவென்று வழிவிட்டுக் கிடப்பது வேறு. மலைகளும் அப்படித்தான் அவை தேமே என்று கிடக்கின்றன. பெயர்த்தெடுத்தால் பெயர்த்தெடுத்துக் கொள்ளுங்கள், பார்த்து ரசித்தால் ரசித்துக் கொள்ளுங்கள். உங்கள் செயலோடு எனக்கு யாதொரு தொடர்புமில்லை என்பது மாதிரிதான் அவை இருக்கின்றன. எவ்வளவு பெரிய ஞானத்தை இவை போதிக்கின்றன என்பதை யோசித்தபடியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.

பேசுவதிலும் எழுதுவதிலும் ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்று எழுத்தாளர் நண்பவர் ஒருவர் என்னிடம் கூறினார். இங்கே கருத்தே கிடையாது, எதிலுமே கருத்து கிடையாது என்று நான் சொன்னதை அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. கருத்து என்பதே பொய். நிகழ்வது மட்டுமே நிஜம். ஏதோ ஒன்று செய்ய ஏதோ ஒன்று நிகழ்கிறது. அந்த ஏதோ ஒன்று நிகழ இன்னொன்று நிகழ்கிறது. இப்படி எல்லாமே சங்கிலித் தொடராய் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எதுவுமே அர்த்தமில்லாதது என்றாலும் மனிதர்களுக்கு அர்த்தம் வேண்டும். அர்த்தப்படுத்திக் கொள்ளவே நிறைய பேசுகிறார்கள். நான் மிகப்பெரிய புரிதல் கொண்டவர்கள் என்று கருதிய நிறைய பிரபலங்களை கூர்ந்து கவனித்த போது சுயதம்பட்டமும் பெருமையும் அவர்களுக்குப் பின்னால் பேயாட்டம் ஆடியதைக் கவனிக்க முடிந்தது.

எல்லாப் பாதைகளுமே பொய்யானவை. எந்த பாதையுமே எங்கும் நம்மைக் கூட்டிச் செல்லாது. இந்த கணத்தில் எனக்குள் என்ன நிகழ்கிறது. அதை நான் எப்படிப் பார்க்கிறேன், இந்த இரண்டுக்கும் நடுவில்தான் என் வாழ்க்கை நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. சந்தோசமோ துக்கமோ, பிறப்போ இறப்போ, பெறுதலோ இழத்தலோ எல்லாமே ஒன்றுதான். பிழைப்புக்காய் நான் வந்திருக்கும் இந்த நகரத்தின் ஓட்டத்தில் எவ்வளவு பிரம்மாண்டமாய் பொய்கள் தங்களை நிஜமென்று அறிவித்தபடி ஆடிக் கொண்டிருக்கின்றன தெரியுமா?

120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் எங்கோ மோதி தூள் தூளாகி எப்போது மரணித்தோம் என்று தெரியாமல் மரணித்துப் போகும் மனிதர்கள்தான் இங்கு அதிகம். எனது அதிகபட்ச ஆசை என்ன தெரியுமா? குறைந்த பட்சம் நான் மரணிக்கும் போது என் மரணம் எனக்குத் தெரிய வேண்டும். ஒரு கோப்பை முழுதும் நிரம்பியிருக்கும் குளிர்ந்த பியரை ஒவ்வொரு மிடறாக மெல்ல மெல்ல அனுபவித்துக் குடிப்பது போல மரணத்தை எதிர் கொள்ள வேண்டும். இதோ என் நினைவு தப்பப் போகிறது. இதோ என் உடல் மெல்ல மெல்ல தளர்ச்சியடைகிறது. ஏதேதோ வலிகள் உடல் முழுதும் பரவுகின்றன.... உடம்பு கிடந்து அடித்துக் கொள்கிறது, ஒரு விக்கலோடு விடுபடுவேனோ, அல்லது பெரும் இருமலோடு பிய்த்துக் கொண்டு வெளியேறுமோ உயிர், அல்லது கதறிக் கதறி கூக்குரலிட்டு வாழ வேண்டும் என்ற ஆசையோடு போராடி விடுபடுமோ....

எது எப்படியாய் வேண்டுமானலும் இருக்கட்டும் ஆனால் என் மரணத்தை நான் பார்த்து விட வேண்டும். எல்லாம் பொய் என்று நான் படித்த பாடத்தை சரிதான் என்று உணர்ந்தபடியே நீண்ட பெருமூச்சோடு குட் பை ஆல் என்ற நினைப்போடு போய்ச்சேர வேண்டும். எல்லாம் அடங்கினாலும் எனக்குள் இருக்கும் பெருங்காதல் என்னும் உணர்வு என்னோடு வரவேண்டும். உணர்வாய் பனி படர்வது போல அந்தப் பேருணர்வால் இந்த பிரபஞ்சத்தில் எல்லா பகுதியிலும் பரவி விரவி நீக்கம்ற யான்....எனது என்பவனாய் மாற வேண்டும். மலையைப் போல வெறுமனே இந்த வாழ்க்கைக்குள் வெறுமனே நீரில் மிதந்து கொண்டு வானைப் பார்ப்பது போல பிரக்ஞையோடு கிடக்க வேண்டும்.

என்னவாயிருக்கும் அது?
யாதாய் இருக்கும் அது?
இருளினில் வெடித்து கிளம்பும்
பேரொளியாய் இருக்குமோ?
இல்லை...
எல்லாம் சுருங்கிப் போய்
அசாத்திய இருளாய் 
கம்பீரமாய் கிடக்குமோ..?
மிருகமென திரியவைத்த அது
கடவுள் நான் என்று
என்னை தன்னுள் அடக்குமோ?
அல்லது
கடவுளென்ற கற்பனையை
உடைத்தெறிந்து பெரு மிருகமாய் 
என்னை தின்னுமோ?
யாதாய் இருக்குமது...?
என்னவாயிருக்குமது...?

வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவள் நினைவு வந்து சட சடவென்று என்னுள் மழை பெய்ய, கூடு திரும்பும் பறவையாய் மனம் சிறகடிக்கத் தொடங்கியது.

ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.....

காதல் மட்டும் என்னுள் இல்லையென்று வைத்துக் கொள்ளுங்களேன்....இந்நேரம் எங்கோ போய்ச் சேர்ந்திருப்பேன்....


எழுதத் தொடங்கி இருந்தேன் நான்...!தேவா சுப்பையா...
Saturday, April 4, 2015

சுவடுகள்...!


திசைக்கொன்றாய்
என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன்
எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின்
குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க
அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக
நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன்,
இனி எப்போதும் நான் முன்பு போல்
இருக்கப் போவதில்லை..என்று
என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது
எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம்,

முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது
யார் யாரோ வந்தார்கள்,
ஏதேதோ கேட்டார்கள்,
பேசிச் சிரித்தார்கள்,
பூக்களை சிலர் பரிசளித்தார்கள்,
புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள்,
கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள்,
ஏமாந்தேன் என்றார்கள்....
சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன
என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி
ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது
என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி
இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது...
அப்போதும் துடித்துக் கொண்டிருந்த
என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல்
யாருக்கானதாய் இருக்கும் என்று
இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று
என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட்டார்கள்...

பூக்களால் தன்னை நிரப்பிக் கொள்ளும்
அதே பூமியின் இன்னொரு பக்கத்தில்
வெடித்துப் பிளந்து கிடக்கும் நிலத்திற்குள்
வேர் நாக்குகளை செலுத்தி தாகம் தீர்த்துக் கொள்ள
முயன்று முயன்று தோற்றுப் போய் கோபமாய்
நிற்கின்றன முள் மரங்களுக்கு எப்படித் தெரியும்
துரோகத்தையும், நியாயத்தையும்
ஒரே பாத்திரத்திலிருந்துதான் இந்த வாழ்க்கை
எடுத்து பரிமாறிக் கொண்டிருக்கிறது என்று....

யாருக்கோ என்னைப் பிடித்தது,
யாரையோ எனக்குப் பிடித்தது,
இரண்டுமே இப்போது ஒன்றுமில்லை
அறுபடாத இந்த மனதின்  கன்னத்தில்
தீக்குளம்பாய் வழிந்து கொண்டிருக்கும்
தகிக்கும் கண்ணீரை துடைக்க முடியாமல்...
அமீபாவாய் ஊர்ந்து கொண்டிருக்கிறேன்...நான்...
எங்கு போவது...?
யாருக்காய் போவது..?என்றெழும் கேள்வியை மட்டும்
அறுத்தெறிந்து விட்டால் போதும்....தேவா சுப்பையா...

Sunday, March 29, 2015

நினைவுப் பறவை...!


உனக்காய்....ஏங்கிக் கொண்டிருக்கும்
என் எழுத்துக்களை
அடைத்து வைத்து, அடைத்து வைத்து
எத்தனை நாட்களைத்தான்
நான் நகர்த்த முடியும்..?

தூரத்தில் பறக்கும் பருந்தின்
நிழலைப் போல இப்போதும்
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு சொந்தமாயிருக்கின்றன...

மறந்து போன அழகிய கனவின்
தெளிவில்லாத பிம்பமாய்
ஏதேதோ ஞாபகங்கள்
இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுகளென்று
மீண்டும் மீண்டும் நினைவுகளில்
உன்னைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகளில்
சலிப்புற்று சரிகிறேன் நான்...

தூரத்து வானில் சிறகடிக்கும்
பட்டமொன்றின் வர்ணக் கலவையில்
என்னை தொலைத்துக் கொண்டே
உனக்கும் எனக்கும் பிடித்த
பாடலொன்றை நினைவுகளால்
பாடிக் கொண்டிருக்கும் போதே
எல்லாம் நின்று போகிறது...

நூலறந்த பட்டம்
திசையறியாமல் காற்றில்
எங்கோ பறந்து செல்ல...
பகிர செய்திகளின்றி
நீல வானத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன
வெண் மேகங்கள்....
வலிக்கும் சிறகுகளை இழுத்துக் கொண்டு
மெல்ல மெல்லத் தாழிறங்கிக் கொண்டிருக்கிறது
என் நினைவுப் பறவை....
.....
.....
....

நான் உனக்காக
கவிதை ஒன்றை எழுதத் துவங்குகிறேன்...
தேவா சுப்பையா...
Wednesday, March 4, 2015

வாழ்வே தவம்....!சுமக்க முடியாமல் புத்தகக் கட்டை சுமந்து பள்ளி சென்ற பாதைகள், வெறிச்சோடி கிடக்கும் திருவிழா சமயங்களில் வள்ளி திருமணம் நடக்கும் அந்த  மிகப்பெரிய பொட்டல், காய்ந்து தேய்ந்து கிடக்கும் கண்மாய், முதுகு பிடித்து இழுக்கும் கருவேலஞ் செடிகளுக்கு நடுவே ஊர்ந்து செல்லும் ஒற்றையடிப் பாதை, மூன்று குச்சிகளை ஊன்றி வைத்து தடித்த விறகினை மட்டையாக்கி நெருஞ்சி முள் குத்த ஓடி விளையாடிய சலசலக்கும் அந்தப் பனங்காடு, இன்னமும் உச்சி பொழுதினில் ஆங்காங்கே நிழலை விரித்து வைத்தபடி வெறுங்காலோடு சூடு பொறுக்க முடியாமல் வரும் மனிதர்களை நேசமுடன் எதிர் நோக்கும் கருவேல மரங்கள்........

பொட்டல் காட்டில் காய்ந்து போன புல்லினை இழுக்க முடியாமல் ஆங்காங்கே இழுத்து பசி தீர்த்துக் கொள்ள முயலும் ஆடு, மாடுகள், அதை இன்னமும் மேய்த்துக் கொண்டிருக்கும் அரைஞான் கொடியால் டவுசரை இழுத்துக் கட்டிக் கொண்டிருக்கும் பையன்கள், பாவாடையை வயிற்றுக்கு மேல் இழுத்து கட்டி சுருங்கிப் போன மேல் சட்டையை மறைக்க முயலும் சிறுமிகள்...., தொள தொள முண்டா பனியனோடு மடித்துக் கட்டிய லுங்கியோடு கண்கள் சுறுக்கி எதிரே வருபவர்களை வெள்ளந்தியாய் பார்த்துச்  சிரிக்கும் பெரிசுகள், வாயில் அதக்கிய புகையிலையோடு திண்ணைகளில் பிற்பகலில் மூடிய அரை இமைகளோடு கடந்த கால நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கும் அப்பத்தாக்கள், ஆள் அரவமற்ற தெருக்களில் சுதந்திரமாய் சுற்றித் திரியும் கோழிகள், எதைப் பற்றிய பிரக்ஞையுமின்றி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தெரு நாய்கள்...

என்று என் கிராமத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் ததும்பிக் கொண்டிருக்கும் என் பால்ய கால நினைவுகளை நான் என்ன செய்வது...? 

இந்த நினைவுகளை எல்லாம் விட்டு விட்டு மீண்டுமொரு பொருளீட்டும் நாடக வாழ்க்கைக்குள் என்னை தள்ளி விடக் காத்திருக்கும் என் நிகழ் காலத்தை நான் என்ன செய்வது...?

ப்ரியத்தைப் பூசிக் கொண்டு நிற்கிறது என் கிராமம், பதின்மத்தில் இரட்டை ஜடை போட்டு, வசீகர கண்மை பூசி, பாண்ட்ஸ் பவுடர் பூச்சோடு காற்றில் அலைந்து கொண்டிருக்கும் ஜிமிக்கிகளோடு, போட்ட ரெட்டை ஜடை இரண்டில் ஒன்றைத் தூக்கி மார்பில் போட்டபடி, இடுப்பில் சொருகிய தாவணியை நொடிக்கொரு முறை அவிழ்த்துச் சொருகும் பரிமளாவைப் போலவே தளதளவென்று இன்னமும் அதே வசீகரத்துடன்....,

நகரத்து வாழ்க்கையிலொன்றும் குறைகளில்லைதான் என்றாலும் அதன் செயற்கை மணத்தை நுகர்ந்து நுகர்ந்து அலுத்துப் போய் விட்டதெனக்கு. பெண்கள் எல்லாம் பெண்கள்தான், ஆண்கள் என்றால் ஆண்கள்தான், பிள்ளைகள் என்றால் பிள்ளைகள்தான் என்றாலும் பிழைத்தலுக்காய்  வாழும் வாழ்க்கை வேறு, வாழ்தலுக்காய் வாழும் வாழ்க்கை வேறுதான். நகரம் பிழைக்க மட்டுமே ஓடிக்  கொண்டிருக்கிறது. கிராமம் வாழ்வதற்க்காக மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கிராமத்து முலாம் பூசப்பட்ட தங்கங்கள் எல்லாம் நகரத்தில் வந்து தங்கள் மேல் ஈயம் பூசிக் கொள்ளக் காட்டும் ஆர்வம்தான்...,

திட்டம் போடுகிறார்கள், பணம் சேர்க்கிறார்கள், கடன் வாங்குகிறார்கள், பளீச்சென்று உடுத்திக் கொண்டு பளபளக்கும் ஆபரணங்களோடு தவணை முறையில் வாங்கிய வாகனத்திலேறி அங்குமிங்கும் ஆளாய்ப் பறக்கிறார்கள்....ம்ம்ம்ம். என்னதான் இருந்தாலும் கிராமத்து மொளக்கூட்டுத் திண்ணையில் வேலை எதுவுமே இல்லாவிட்டாலும் தலைக்கு கை வைத்து உறங்கும் ஒரு கிராமத்தானின் சுகம் அதில் கிடைக்குமா என்ன...? வாழ்க்கை வளர்க்க பட்டணம் வந்தவர்கள் வயிறு வளர்த்துத் தொந்தியோடு திரிகிறார்கள், நிறையவே வசதிகளோடு நோய்களையும் வாங்கிக் கொள்கிறார்கள்....

ஆடிப்பாடி விளையாடிச் சிரித்த கிராமங்களெல்லாம் சோர்ந்து போய் விட்டன இப்போதெல்லாம், முன்பெல்லாம் சொல்லி வைத்தாற் போல பெய்த மழை கூட இப்போது வேண்டா வெறுப்பாய் பூமி நனைத்து விட்டு நள்ளிரவில் திருட வந்த திருடனைப் போல ஓடிப் போய் விடுகிறது. இல்லையென்றால் விசேசத்துக்கு வந்து விட்டு வெகு நாள் தங்கிச் செல்லும் விருந்தாளியைப் போல தேவைக்கு அதிகமாகவே மழையைக் கொட்டி நிரப்பி பயிர்களை துவம்சம் செய்கிறது. அளவோடு காலமிருந்த காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையும், எதிர்பார்ப்புகளும், தேவைகளும், அளவோடு இருந்தது. மனிதர்கள் எல்லை மீற இயற்கையும் எல்லை மீற ஆரம்பித்து விட்டது. மனிதர்களின் குண நலன்களும், சக மனிதர்களை, சூழலை எதிர் கொள்ளும் விதத்தின் சாயலே மீண்டும் மனிதர்கள் மீது வாழ்க்கையாய் வந்து விழுகிறது. நன்றியுணர்ச்சி குறைந்து போய் இதை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும், அதை செய்தால் எனக்கு என்ன கிடைக்கும், என் வேலை முடிந்தால் சரி, என் வயிறு நிரம்பினால் சரி... என்று பிழைத்து வாழும் வாழ்க்கையை மட்டுமே மனிதர்கள் மிருகங்களைப் போல வாழத் தொடங்கி விட்டதால் வாழ்தல் என்றால் என்ன என்ற புரிதல் யாருக்கும் இல்லாமல் போய் விட்டது.


முழுமையாய் இந்த வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக் கொடுக்க யாருமே இங்கு தயாராகவே இல்லை. எல்லோரிடமும் ஒரு திட்ட வரையறை இருக்கிறது. இதைச் செய்தால் இப்படி ஆகும் அதைச் செய்தால் அப்படி ஆகும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள், ஆனால் காலம் ஒரு திட்ட வரையறை வைத்திருப்பதைப் பற்றி யாரும் யோசிப்பதே இல்லை. எழுதி வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்க அங்காடிக்கு சென்று பட்டியலைப் பார்த்துப் பார்த்து பட்டியலின் படி பொருட்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு வருவதைப் போல காலம் மனிதர்களைத் தன் திட்டத்தின்படி சட் சட் என்று மாற்றிக் கொண்டே வருகிறது. வாழ்தல் பற்றிய புரிதல் வந்தால்தான் காலத்தின் பட்டியலோடு நம் பட்டியல் ஒத்துப் போகும். அதற்கு நிறையவே ஒத்துக் கொள்ள வேண்டும். என்னால் எல்லாம் நிகழ்ந்தது என்ற கர்வம் ஒடிந்து விழ, இது வாழ்வால் நிகழ்ந்தது,  நான் இங்கு ஒன்றும் செய்யவே இல்லை, நான் செய்தது எல்லாம் காலத்திடம் ஒரு வெள்ளைக் காகிதத்தைப் போல என்னைக் கொடுத்தது மட்டுமே என்ற தெளிவு வரும்.

கிராமங்களின் இயற்கைசார் வாழ்வு அந்தத் தெளிவினை எம் மூதாதையர்களுக்கு தடபுடல் விருந்தாய் வைத்து மகிழ்ந்தது. அந்த தடபுடல் விருந்தில் ஒரு கை சோறு என் மூதாதையர்களால் எனக்கும் ஊட்டப்பட்டிருக்கிறது. அந்த ஒரு கை சோறு கொடுத்திருக்கும் அளவிடமுடியாத அதிர்வுகளின் எச்சம் தான் என்னை இது போன்ற கட்டுரைகளை என்னை எழுத வைக்கிறது. சமகாலத்தின் மிகப்பெரிய அவலமாய் நான் நினைப்பது என்ன தெரியுமா? இயற்கையோடு மல்லுக்கட்டிக் கொண்டு நீயா நானா என்று நிலத்தை உழுது விதைத்து தண்ணீர் பாய்ச்சி, பயிர் பச்சைகள் வளர்ந்ததா இல்லையா..? நன்றாய் நெல் கட்டி வளர்ந்திருந்தால்....பெரிய கருப்பா, காளியாத்தா, மாரியாத்தா, முனியாண்டி, அய்யனாரே உன்னை கையெடுத்து கும்புடுறோமப்பு....எஞ்சாமியளா நல்லா வெள்ளாமை வெளையணும் என்று வயக்காட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வதும் விளையாவிட்டால், அடப்பாவி பெரிய கருப்பா, ஏன்டி மாரியாயி, காளி என்ன கொறை வச்சேன் ஒங்களுக்கு நான், பொங்கல்  வைக்கலையா, கடா வெட்டலையா, என்ன மொறை செய்யல நான், மருவாதையா பொட்டுத் தண்ணிய தூத்தலா போட்டு எம் பயிருகள காப்பத்து இல்லேன்னாக்க பாத்துக்க....

என்று வெள்ளந்தியாய் மறைமுகமாய் இயற்கையோடு பேசிக் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் இன்று இயற்கையையும், மூதாதையர்களால் சமைந்தது இந்த வாழ்க்கை என்ற சத்தியத்தையும் மறந்து விட்டு திணிக்கப்பட்ட தெய்வங்கள் வானிலிருந்து இறங்கி வந்து வாழ்க்கையை மாற்றிப் போடுவார்கள் என்று நம்பிக் கொண்டும், எல்லாமே என்னால் நடந்தது, இந்த வாழ்க்கையில் நன்றி சொல்ல ஒன்றுமே இல்லை, இதைச் செய்தால் அது நிகழும், அதைச் செய்தால் இது நிகழும் என்று ஸ்தூலமாய் தங்களின் வாழ்க்கைக்குள் நின்று பகுத்தறிவுவாதம் பேசுவதுமாய் நின்று கொண்டிருப்பதும்தான்.

நன்றியோடு இருப்பது மட்டுமே வாழ்க்கை. என் தாய் மண்ணின் ஜீவநாடியான கிராமங்களில்தான் இன்னமும் ஆங்காங்கே இந்த நன்றியுணர்ச்சியும், தன் முனைப்பு இல்லாத இயற்கை சார்ந்த வாழ்வும் கொஞ்சமேனும் எஞ்சிக் கிடக்கிறது. தொன்மையான நமது பாரம்பரிய வாழ்க்கையை மீட்டெடுத்து இயற்கை சார் வாழ்விலிருக்கும் மனோதத்துவம் சார்ந்த உளவியல் மேம்பாட்டினை புரிந்துணர்வு கொண்டவர்கள் நமது அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் சொன்னால் மட்டுமே தெளிவான திடமான அடுத்த தலை முறையினரை நம்மால் உருவாக்க முடியும்.


கண்மாயில் குளிப்பதன் சுகமென்பது.. 
சுதந்திரத்தோடு மட்டுமா தொடர்புடையது...?
அது மண்ணோடு, மக்களோடு, உணர்வுகளோடு, இயற்கையோடு...
சேர்ந்து வாழும் பேற்றின் ஒரு பேரின்பக் குறீயிடு அல்லவா...!?
நட்சத்திர விடுதியின் நீச்சல் குளத்தில் குளிக்கிறோமென்று
பெருமிதப் பட்டுக் கொள்ளுங்கள்...
ஆனால்.... 
வாழ்க்கை என்னவோ எங்கள் வயக்கட்டு சகதிக்குள் தான்
வெகு காலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறதென்பதையும்
 அறிந்து கொள்ளுங்கள்...!ப்ரியங்களுடன்
தேவா சுப்பையா...