Pages

Saturday, September 26, 2015

யாகத் தீ...!


நான் எழுதிய கவிதைகளை எல்லாம் நீ இப்போது வாசிக்கிறாயா? ஒரு வெறுப்போடுதான் கேட்டேன். அவள் பதிலேதும் சொல்லாமல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமனே நானும் அலைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சப்தமில்லாத அந்த நிமிடங்களை சடக்.. சடக்...சடக் என்று மென்று விழுங்கிய படியே காலம் ஓடிக் கொண்டிருந்ததை பற்றிய பிரக்ஞை எனக்கு அறவே இல்லாதிருந்தது போலத்தான் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும்...

சடாரென்று என்னைப் பார்த்தாள்...கலைந்த கேசத்தைப் பற்றிய யாதொரு அக்கறையுமின்றி என்னை அவள் அப்படி ஊடுருவிப் பார்த்தது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது...

நீ ஏன் எதுவுமே எழுதுவது இல்லை இப்போதெல்லாம் என்று அவள் கேட்டது, சடலத்திடம் போய்  ஏன் இறந்து கிடக்கிறாய் என்று கேட்பதைப் போலவே தோன்றியது எனக்கு. நான் எழுதுவதில்லைதான் ஆனால் அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை...

ஒவ்வொரு இறகாக பிய்த்துப் போட்டு விட்டது காலம். நான் முன்பு போல தோகை விரிக்க இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று எனக்குத்  தெரியவில்லை. அகங்காரத்துக்காக எந்த மயிலும் தோகை விரிப்பதில்லை அது அழகியலின் வெளிப்பாடு. இருந்தாலும் அது சிலரால் அகங்காரமாய்த்தான் பார்க்கப்படுகிறது. கவிதைக் கண்களோடு எதார்த்த சாலையில் பயணிக்க முடியாது என்று முன்பொரு நாள் நான் உன்னிடம் சொன்னேன் அல்லவா...?

அவளைப் பார்த்து கேட்டபடியே தொடர்ந்தேன்....

என் காதலும், கவிதைகளும், ஏகாந்த எண்ணங்களும் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவிலிருக்கிறது, பிழைக்கலாம் இல்லையேல் அப்படியே மரித்துக் கூட போகலாம். என் கனவுகளில் கூட என்னால் கவிதைகள் பற்றி எண்ண முடிவதில்லை... கோமாவில் இருப்பவனுக்கு எப்படி வார்த்தைகள் வேர்ப்பிடிக்கும், வெற்று ஓட்டைகளைக் கொண்ட மூங்கில் குச்சியா ஜீவனுள்ள இசையைப் பிறப்பிக்கிறது....?

புல்லாங்குழல் மட்டுமல்ல எந்த வாத்தியக்கருவியுமே இசையைப் பிறப்பிப்பதில்லை. இசை, எழுத்து, ஓவியம், இன்ன பிற படைப்புகள் யாவுமே யாரோ ஒரு கலைஞனின் காலம் கடந்த எண்ணங்களின் பிரதிபலிப்புதான். 

அவள் எதுவும் பேசாமல் மீண்டும் கடலை வெறிக்கத் தொடங்கி இருந்தாள்....பின் சற்று நெருக்கமாக என்னருகே வந்து அமர்ந்தாள், என் தலையை அவள் தோளில் சாய்த்துக் கொண்டாள், ஆதரவாய் கரங்களைப் பற்றிக் கொண்டு.... எனக்கு உன் வாழ்க்கை என்னவென்று தெரியாது ஆனால் நீதான் என் வாழ்க்கை என்பது மட்டும் தெரியுமென்றாள்....

உள்ளுக்குள் துளிர்த்துக் கொண்ட ஏதோ ஒன்று என் விழிகளில் கண்ணீராய் எட்டிப் பார்க்க, அவள் கரங்களால் என் கண்ணீரைத் துடைத்தெறிந்தாள்.....

மீண்டும் அவள் கைகளை இறுக்கிக் கொள்ள...

வாழும் வரை காதலை எழுத வேண்டிய நிர்ப்பந்தமொன்று என் முன் கடலாய் விரிந்து கிடப்பதாய் எனக்குத் தோன்றியது....

காற்றில் பறந்த
அவளின் தலை கோதி
கன்னங்களை கைகளில் ஏந்தி
என் உயிருக்குள் ஏறிக் கொள் 
தேவதையே... என்றேன் மெளனமாய்!

அவள் விழிகளால் என் விழிகளைத்
தொட்டு தொட்டு
அவள் தீட்சைக் கொடுக்க....
முன்பொரு நாள்
அவள் பாதங்களில் நான்
தூவிய என் எழுத்துப்பூக்கள்
மோட்சமைடைந்தோம் 
உன் தேவதையின் பாதம் தொட்டு
என்று கண் சிமிட்டிக் கிசு கிசுப்பாய்
சொன்னதெல்லாம் உறக்கம் கலைந்து
தூளி எட்டிப்பார்க்கும் குழந்தையாய்
என் நினைவுகளிலிருந்து எட்டிப்பார்க்க
காதலாய் அவளைப் பார்த்தேன்...

அவளின் இடையில் பதிய முயன்ற
என் விழிகள் ஆயிரத்தோராவது முறையாய்
வழுக்கி விழுந்து
மீண்டும் ஒரு கிணற்றுத் தவளையாய்
அவளின் இடுப்பேற முயன்று கொண்டிருக்க...
ஒரு சிறு மழையொன்று
செல்லமாய் அவள் முன் நெற்றி விழுந்து
என்னை நகர்ந்து போ 
என்று மிரட்ட....

கற்பனைகளை எல்லாம் குவித்து
எனக்குள்ளிருக்கும்
அவளுக்கான கவிதைகளை
தரையிறக்க
இதோ எனக்குள் மூண்டு கொண்டது
மீண்டுமொரு யாகத்தீ...!
தேவா சுப்பையா...1 comment:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

யாகத் தீ மூளட்டும்...
கவிதைகள் மலரட்டும்...!!!