Pages

Wednesday, January 14, 2015

இப்படிக்கு... வாசகன்...!


வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று அடித்துப் பிடித்து மேலேறி குமுதம், விகடன், குங்குமம், கல்கண்டு, கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, ராணி, தேவி என்று பயணித்து சரக்கென்று க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று பயணித்து, விவேக் ரூபலாவிடமும், பரத் சுசியிடமும், நரேன் வைஜயந்தியிடமும் சுற்றிக் கொண்டிருந்தது. கதைகள் படிக்க ஆரம்பித்த போது பிடி சாமியின் திகில் கதைகளை வாசிப்பதென்பது ஒரு மிகப்பெரிய மிரட்டல் அனுபவமாயிருந்தது எனக்கு.

வாரமலரில் அப்போது ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அப்போது என்று நான் குறிப்பிட்டுச் செல்வது 1987 அல்லது 1988 ஆயிருக்கும் என்று நினைக்கிறேன். தினமலர் செய்தித்தாளை என் எதிர் வீட்டில்தான் வாங்குவார்கள். ஞாயிற்றுக் கிழமை அன்று மட்டும் அவர்கள் வீட்டில் என்னைப் போன்ற அரை டிரவுசர்கள் விடுமுறை நாளின் எல்லா அவரச(!!!!!) வேலைகளையும் தெருவிலேயே விட்டு விட்டு போய் வாரமலரைப் படிக்க க்யூவில் நிற்போம். ரா....ஜா...வை....ச்  சு.....ற்...........றி  பு....கை .........மூ..........ட்......ட......மா........ய்......ஏ.......தோ...... ஒ......ன்......று .......நி.............ன்........ற...........து......ராஜாவைச் சுற்றி ஏதோ ஒன்று புகை மூட்டமாய் நின்றது என்று எழுத்துக் கூட்டி வாசித்த பருவம் அது. வாரமலரை கையிலெடுக்கவே ஒரு மாதிரி நடுக்கமாய் இருக்கும். பிடி சாமியின் திகில் ஓட்டம் நிறைந்த கதையும் அதற்கு வரையப்படும் ஓவியமும் படு அமர்க்களமாயிருக்கும். கதை படித்தல் என்பதை பூரணமாய் உணர வைத்த காலம் அது. ஊடகப் பெருக்கமும், இது போன்ற சமூக இணைவு தளங்களும் இல்லாத காலத்தில் புத்தக வாசிப்புதான் நமக்கு எல்லாமே. அம்புலிமாமாவாகட்டும், பாலமித்ராவாகட்டும், ராணிமுத்து போன்ற வ்யது  வந்தவர்கள் வாசிக்கும் புத்தகமாகட்டும் அந்த காலத்தின் மனிதர்களை மிக விரிவாக ஒரு கற்பனை உலகத்தில் வாழ அது ஒரு உற்சாக வழி செய்து கொடுத்தது. 

பேருந்து பயணங்களில் எல்லாம் தவறாமல் நிறைய புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்வேன் நான். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும்  ஏதோ ஒரு காரணத்திற்காக பத்து நிமிடம் அல்லது இருபது நிமிடம் பேருந்து நிற்கும் போது அங்கிருக்கும் தேநீர் கடையில் சூடாக டபுள் ஸ்ட்ராங்காக தேநீரை வாங்கி உறிஞ்சி கொண்டே அங்கே தொங்க விடப்பட்டிருக்கும் அத்தனை வார இதழ்களின் அட்டையையும் கண்களால் உறிஞ்சி ரசிக்கும் அனுபவம் என்னைப் போலவே உங்களில் பலருக்கும் வாய்த்திருக்கும். ஆனந்த விகடன், குமுதம் வாசிக்காமல் பதின்மத்தைக் கடந்து வந்த பிள்ளைகள் யாருமே நம் சமூகத்தில் இருக்க மாட்டார்கள். வார இதழ்களை வாசித்து ருசித்து அந்த ரசனையில் தான் நாவல்களை வாசிக்க நான் வந்தேன். ரமணி சந்திரன், லக்க்ஷுமி, சிவசங்கரி இன்ன பிற குடும்ப நாவல்கள் எழுதும் எழுத்தாளர்களை எல்லாம் நான் வாசித்ததே கிடையாது. ஓகோ அப்படி என்றால் மற்ற இலக்கியவாதிகள் எழுதிய ஆகச் சிறந்த புதினங்களை எல்லாம் வாசித்தாயிற்றோ..? என்றுதானே கேட்கிறீர்கள் அதுவும் இல்லை.

இந்த உலகம் ஆயிரம் பேரை அடையாளம் காட்டும். ஆகச்சிறந்த படைப்பு இதுதானென்று ஆங்காங்கே அறிவு ஜீவிகள் இந்த பூமியின் எல்லா மூலைகளிலும் நின்று கொண்டு பேசிக் கொண்டுதானிருப்பார்கள் ஆனால் எந்த ஒரு புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த அடுத்த வரிகளில் நான் எதிர்ப்பார்த்து வாசிக்க நினைக்கும் விசயங்கள் இல்லையோ அவ்வளவுதான் அது சாகித்ய அகாடமி வாங்கிய புத்தகமாய்  இருந்தாலும் சரி அல்லது நோபல் பரிசு பெற்ற புத்தகமாய் இருந்தாலும் சரி  மூடி வைத்து விடுவேன். எல்லோரும் எல்லா வகையான எழுத்துக்களையும் ரசித்து விட முடியாது. எது எல்லாம் எனக்கு வேண்டுமென்று நினைக்கிறேனோ அதை எல்லாம்தான் நான் புற உலகில் தேடிக் கொண்டிருக்கிறேன். திரைப்படமாகட்டும், பாடலாகட்டும், மனிதர்களாகட்டும் அல்லது இடங்கள் ஆகட்டும் எதுவாயிருந்தாலும் அது  நமக்குள் இருக்கும் அந்த வெளிச்சத்தை வெளியில் காட்ட வேண்டும்.


அடிப்படையில் அமானுஷ்யங்கள் மீது விருப்பங்கள் கொண்டவன் நான். எனக்கு இந்த வாழ்க்கை ஏன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது? புற்றீசல் போல பிறந்து மரித்துப் போகவேண்டிய காரணம்தான் என்ன? பழங்காலத்து மனிதர்கள் வாழ்ந்து அப்படியே விட்டுப் போன பாழடைந்த வீடுகள், அரண்மனைகள்,  கோயில்கள் அந்த இடங்களில் இருக்கும் அந்த பழைய வாசனை, சுடுகாடு, ஆர்ப்பரிக்கும் கடலின் அடி ஆழத்தில் சிக்கினால் நான் என்ன ஆவேன்? தீச்சுவாலைக்குள் சிக்கிக் கொண்டால் எனக்கு என்ன தோன்றும்..? இறந்து போகும் மனிதர்களின் கடைசி எண்ணம் என்னவாயிருக்கும்? காதல் என்ற ஒன்று ஏன் மனிதர்களை இந்தப் பாடு படுத்துகிறது? ஒரே சீராய் எல்லா ஜீவராசிகளுக்கும் காமம் என்பது ஒரெ மாதிரியான இயக்கமாய் அமைந்து அதன் உச்ச நிகழ்வில் ஏன் அவ்வளவு வசீகரம் இருக்க வேண்டும்? உடல் அதிர அந்த அனுபவத்தைப் பெற்று பெற்று அல்லது பெறவேண்டி தொடர்ந்து எல்லா ஜீவராசிகளும் காமத்தில் மூழ்கி திளைக்க வேண்டும் என்று காமத்தின் உச்சமாய் ஆர்கசத்தை வைத்த அவ்வளவு பெரிய அப்பாட்டக்கர் யார்? மிட்டாய் கொடுத்து மாத்திரை விழுங்க வைக்கும் நமது லெளகீக அறிவின் தடிமன் ஆதியின் குணத்திலிருந்து வந்ததாய்தானே இருக்க முடியும்...?

ஏன் ஆதிக்க உணர்வினையும், நான் நான் என்ற  வாழ்க்கையையும், ஆசைகளையும் மனிதன் கொண்டிருக்கிறான்? சர்வ நிச்சயமாய் இவன் வணங்கும் கடவுளர்கள் யாருமே கிடையாது அல்லது இவன் எதிர்ப்பார்ப்பது போலவே கிடையாது என்று ஆழ்மனதிற்கு தெரிந்தும் வெளியே பகட்டாய் எனது மதம், எனது கடவுள் என்று கொடிபிடிக்கிறானே அது ஏன்...? உலகில் எல்லா நாடுகளும் கடவுள் வழிபாடு செய்து கொண்டுதானிருக்கின்றன. எப்போது  மனித மூளையில் உருவானார் இந்த கடவுள்? வாழ வந்தவன் வாழ்ந்து செல்ல வேண்டியதுதானே? இடையில் எதற்கு கடவுள்...>? கடவுள் தான் நேரில் வந்து எல்லாம் செய்யச் சொன்னார் என்றால்....

நான் பிறந்து 38 வருடங்களாகிறது இதுவரையில் கடவுள் வரவே இல்லை. எனக்கு முன்பு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கடவுளைக் கண்டவர்களால் இவர்தான் கடவுள் என்று பொதுவில் காட்ட முடியவில்லை...? பொதுவில் வரப்பயப்படும் கடவுள் என்ன கடவுள்...? ஏன் மனிதர்களை கூட்டம் கூட்டமாக சேர்த்து போதனை என்ற பெயரில் இம்சித்து கடவுளுக்கு ஏஜெண்டாக இவ்வளவு மனிதர்கள்..?

இவ்வளவு கேள்விகளைச் சுமந்து கொண்டு என்னால் எல்லா புத்தகங்களையும் படிக்க முடியவில்லை. தமிழில் வந்தது என்று சொல்லி பரிந்துரை செய்யப்பட்ட அதி அற்புத சூப்பர் டூப்பர் நாவல்கள் எல்லாம் எனக்கு போரடிக்க அப்படியே போட்டு விட்டு தூங்கியிருக்கிறேன். எனக்கு தேவை கதை கிடையாது. எனக்கு தேவை அதிரடியான திருப்பங்கள் நிறைந்த ஒரு புதினம் அல்ல. வாய்க்குள்ளும் மூளைக்குள்ளும் நுழையாத பெயர்களை உலக நாவல்களிலும், திரைப்படங்களிலுமிருந்து பிய்த்தெடுத்து எழுதும் பின்நவீன எழுத்துக்களிலும் எனக்கு ஒரு நாளும் ஈர்ப்பு வந்ததே இல்லை.


எனக்குள் இருக்கும் அமானுஷ்யங்களின் முடிச்சுக்களை அவிழ்க்க எந்த எழுத்தால் முடிகிறதோ அந்த எழுத்து சராமரியாய் என்னை குத்திக் கிழித்து மயக்கமடைய வைக்கிறது. வாசகனுக்குப் புரியாத எழுத்தினை எழுதி நீ மேலேறி வந்து படித்து விளங்கிக் கொள் என்ற எந்த மேதாவித்தனத்தையும் என்னால் நான் எழுதும் எழுத்தில் காட்ட முடியவே முடியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி சாவி தேவைப்படும். மாற்று சாவி போட்டு திறந்தால் ஒரு பூட்டும் திறக்காது. எது தேவையோ அதைத் தேடியே ஒரு வாசகனாய் நான் பயணித்தேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்பது இன்று பாலகுமாரனைத் தாண்டி யார் யாராகவே போய்விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒரு மழை நாளில் கம்பளி போர்த்திக் கொண்டு மனதுக்குப் பிடித்த புத்தகத்தை வாசித்துக் கொண்டே உப்பு போட்டு வேக வைத்த நிலக்கடலையை கொறித்திருக்கிறீர்களா நீங்கள்..? ஆம் என்றால் அது எவ்வளவு ரசனையான விசயம் என்பதை மீண்டுமொரு முறை எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள். ரசனை என்பது சூழல் தானே...? இதுதான் புத்தகம் இதைத்தான் நீங்கள் படிக்க வேண்டும் என்று ஆகச்சிறந்த புத்தகங்களைப் பட்டியலிடும் அண்ணாச்சிகளை எல்லாம் நான் அலட்சியமாய்த்தான் பார்ப்பேன். ஏனென்றால் உங்களுக்கும் எனக்கும் படு கேவலமாய் தெரிவது அவர்களுக்கு ஆகச்சிறந்ததாய் தெரியலாம். நமக்கு அட்டகாசமானதாய் தெரிந்தது அவர்களுக்கு படுகேவலமாய் தெரியலாம். யாருக்கு என்ன கவலை..அவரவர்களின் பாதையில் அவரவர்கள் பயணித்தல்தான் நல்லது.

அனேகமாய் என் புத்தகத்தை எடுத்து வாசிக்கப் போகிற அத்தனை பேருமே  என்னைப் போலவே தேடலில் இருப்பவர்களாகத்தான் இருக்கவேண்டும். எப்போது புத்தகம் வெளிவரும் என்பதை கூடிய விரைவில் அறிவிக்கிறேன் என்ற செய்தியை இந்தக் கட்டுரையைக்கு நடுவில் செய்யும் சிறு விளம்பரமாக நினைத்துக் கொள்ளுங்கள்(!!!!). புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இதைப்படி அதைப்படி இதை வாங்கினேன் அதை வாங்கினேன் என்று இலக்கிய அரட்டைகள் ஆங்காங்கே ஜோராக நடந்து கொண்டிருக்க இன்னொரு புறம் மாதொருபாகன் என்னும் ஒரு படைப்பை முடக்கியதோடு பெருமாள் முருகன் என்னும் படைப்பாளியை அவமானப்படுத்தியுமிருக்கிறது நமது சமூகம். படைப்பவன் தனது கட்டட்டற்ற பெருஞ் சுதந்திர வெளியிலிருந்து தானறிந்த வரலாற்றினை தனக்குள் இருக்கும் வலியினை சிறு புனைதலோடு இந்த சமூகத்தின் முன்பு படைத்தளிக்கிறான். அவனை நிர்ப்பந்தப்படுத்தி ஒரு அரசியலுக்குள் சிக்க வைத்து எதை எதையோ நிறுவ விரும்புபவர்களுக்கு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்பைத் தவிர வேறொன்றுமே இருப்பது கிடையாது.

இந்து என்று ஒரு மதம் எப்போது உருவானது? தமிழகத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்துக்களாய் எப்போது மாறினார்கள்? தமிழர்களின் கடவுள் வழிபாட்டு முறை தொன்மையில் எப்படி இருந்தது...? அவன் ஏதேனும் மதத்திற்குள் மதம் பிடித்து அலைந்து கொண்டிருந்தானா? இப்படியான கேள்விகளை எல்லாம் மதவாதிகளிடம் முன் வைத்தால் அவர்கள் புராணங்களை எடுத்துக் கொண்டு வந்து நம் முன் பகடை உருட்டுவார்கள். உண்மையில் சொல்லப்போனால் இந்து என்னும் மதம் அல்லது வழிமுறை சகலவிதமான சுதந்திரங்களையும் கொண்டது. கடவுள் மறுப்பாளர்களையும், பொய்யர்களையும், திருடர்களையும், பெண் பித்தர்களையும், அதி சிறந்த ஞானிகளையும் மனித நேயம் கொண்ட மனிதர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும், சித்தர்களையும் கொண்ட ஒரு திறந்த பெருவெளி அது.  இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் இந்து மதம் அல்லது சனாதான தருமம் என்பது இந்த பிரபஞ்சத்தினை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு குறியீடு....

இதில் இல்லாதது எதுவுமில்லை...? இருப்பதெல்லாம் அதுவே...!பார்க்க முடியாத பல விசங்களை பிரபஞ்சம் கொண்டிராமல் நல்லதை மட்டுமெ கொண்டிருக்க முடியுமா என்ன...? இதைத்தானே சிவபுராணம் " உள்ளானே...இல்லானே..."  என்று கூறுகிறது. அடிப்படை தெளிவு விசாலமானதாய் இருந்திருந்தால் மாதொருபாகன் போன்ற படைப்புகள் எரிக்கப்பட்டிருக்காது. புத்தகங்களைப் பற்றியும் வாசித்தலைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கையில் பெருமாள் முருகனைப் பற்றியும் பேசவேண்டியதாயிற்று....!

ஒரே  விசயத்தை சொல்லி விட்டு இந்த கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். அதாவது புத்தகங்களைப் புதிதாய் வாங்குவதற்கு முன்பு இதுவரை வாங்கிய புத்தகங்களை வாசித்துவிட்டோமா என்ற ஒரு சிறு சுயபரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே....

பர்ஸின் கனமாவது குறையாமலிருக்கும்....!
ப்ரியங்களுடன்....
தேவா சுப்பையா


2 comments:

-'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அண்ணா.

பகிர்வு வாசித்து கருத்து இடுகிறேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

அருமையான பகிர்வு! என் சிறுவயது வாசிப்பு அனுபவங்களை நினைவுகூற வைத்தது! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!