Pages

Wednesday, January 28, 2015

அடையாளம்...!


எங்கிருந்து தொடங்கியது இந்த இராட்சச வாழ்வின் முதல் முடிச்சு? கனவுகளை செரித்து செரித்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் ஒரு மலைப்பாம்பைப் போல எங்கேதான் ஊர்ந்து செல்கிறது? அடையாளம் தொலைத்துக் கொள்ளும் முயற்சிகளெல்லாம் கிணற்றிலேறி வழுக்கி விழும் தவளையைப் போல் மீண்டும் மீண்டும் அதல பாதாளத்திற்குள் செல்வதும் மீண்டும் மனம் அதை மீட்டெடுத்து மேலேற்றுவதுமாகவே முடிந்து போகுமோ இந்த வாழ்க்கை...? 

அடையாளமற்றுப் போகவேண்டும். இந்த பெயரை நான் தொலைக்க வேண்டும். இன்னார் இன்னாரென்ற உறவுமுறைகளையும் பந்தச் செருக்குகளையும் எப்போது எரிக்கப் போகிறேன் நான்? படாரென்று வீட்டின் கதவை அறைந்து மூடிவிட்டு உள் சென்று தாளிட்டுக் கொள்வதைப் போல அடிக்கடி சராசரி வாழ்க்கையின் கதவுகளை நான் அடித்து மூடிவிடுகிறேன்.. இந்த வாழ்க்கையின் பெரும் அபத்தம்.. அடையாளம். யாரும் எதற்காகவும் வேண்டாம். சரி என்றோ தவறென்றோ சொல்லிக் கொண்டிருக்க ஒரு மனிதரும் தேவையில்லை. வாசலில் நிற்கும் மரத்தினைப் போல வெறுமனே நின்று கொண்டிருக்க வேண்டும். இலைகளை உதிர்த்து  மொட்டையாய் நின்றாலும், பூத்துச் சிரித்து குலுங்கினாலும் தான் யாரென்று அது அறிவதோ அல்லது அறிவித்துக் கொள்வதோ இல்லை. அடையாளம் என்பதே மிகப்பெரிய அசெளகரியமாய் இருக்கிறது எனக்கு.  தொடர்பு கொள்வதுதான் வாழ்வின் தாத்பரியமே என்ற உண்மையை நான் பார்க்கவே விரும்பவில்லை.

எங்கு திரும்பினாலும் அடையாளக் கூச்சல்கள். நான் இன்னார், அவன் அப்படியானவன், இவள் இப்படி, இது எப்படி இருக்கிறது? அவர்கள் இதை செய்தார்கள், இது ருசிக்கும், இது கசக்கும், இது துவர்க்கும் என்று ஓராயிரம் குறிப்புகள், விளக்கங்கள், வேண்டாத பேச்சுக்கள். வேண்டாத பேச்சுக்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேண்டிய பேச்சு என்ற ஒன்று இருக்கிறதா என்று என்னை சீண்டிப்பார்க்கிறது என் பகுத்தறிவு. என்னைக் கேட்டால் பேச்சே தொந்தரவுதான். வார்த்தைகள் அகங்காரத்தைச் சுமந்து வரும் வேலைக்காரர்கள். எனக்கு இங்கு சொல்லவும் எதுவுமில்லை கேட்கவும் எதுவுமில்லை. எதையாவது கிறுக்கிச் சென்று கொண்டே இருக்கும் போது மனம் ஒருநிலைப்பட்டு விடுகிறது. வேறு எதைப் பற்றிய எண்ணங்களுமற்று ஒவ்வொரு எழுத்திற்குப் பின்னாலும் ஓடிக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.... திருத்திக் கொள்ளுங்கள்... ஒவ்வொரு எழுத்திற்குப் பின்னாலும் ஓடுவது மட்டுமே பிடித்திருக்கிறது.

கடந்த காலம் ஒரு பொறுப்பில்லாத குப்பை வண்டிக்காரனைப் போல தெரு முழுதும் குப்பைகளை இறைத்துக் கொண்டே செல்கிறது.. அதன் பின்னால் ஒரு குப்பை பொறுக்குபவனைப் போல நான் பொறுக்கிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறேன். குப்பை பொறுக்கி, பொறுக்கி அலுத்துப் போய் விட்டது. அலுத்துப் போன அந்த நாளில் அக்கடா என்று போங்கடா நீங்களும் உங்க பொழைப்பும் த்தூ....என்று மனதால் காறி உமிழ்ந்து விட்டு ஒரு ஓரமாய் போய் அமர்ந்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.. எப்போது குப்பை பொறுக்குவதை விட்டேனோ அப்போதே குப்பை போடுவதும் நின்று விட்டது. யார் குப்பை போட்டது? ஏன் இப்போது குப்பையில்லாமல் போனது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே....

யூ ஸ்டுப்பீட்ட்ட் நீதாண்டா குப்பையைப் போட்ட..... அதை நீதாண்டா பொறுக்குன..... நீ நிறுத்தின... அதுவும் நின்றுச்சு.... என்று காலம் கணக்கு தெரியவில்லை என்று எட்டாம் வகுப்பில் பேந்தப் பேந்த முழித்த போது காச் மூச் என்று முட்டைக் கண்ணை வைத்துக் கொண்டு பயமுறுத்தலாய் கத்திய சரளா டீச்சரைப் போலவே என்னை பார்த்துக் கத்த ஆரம்பித்து விடுகிறது. எல்லாமே இங்கே தந்திரம் தான். ஒரு ரூபாய் சம்பாரிக்க ஒம்பதாயிரம் விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும். தம் கட்டியபடியே இருக்க வேண்டும் கொஞ்சம் தம் குறைந்து போனால்...ஓய்ய்... தூரமா போடா... என்று வெகுஜனம் நம்மை விரட்டி விடும். இந்த ஆட்டத்திற்குள் இருக்க வேண்டுமானால் நிறைய நடிக்க வேண்டும் நிறைய நடிக்க நிறைய படிக்க வேண்டும். நிறைய படிப்பது என்பது புத்தகத்தை விரித்து காகிதத்திற்குள் மூளையை ஊற வைத்து ஆங்காங்கே பிழிந்து கொள்வது மட்டுமல்ல...,  நிறைய பேர் மாதிரி பார்த்துப் பார்த்து படித்து அவர்கள் மாதிரியே வர பிரயாசைப் படவேண்டும், இஷ்ட தெய்வங்களின் வாழ்க்கையைப் போல, பிடித்த தலைவர்கள் பேசும் பேச்சைப் போல, பிடித்த நடிகனின் ஹேர் ஸ்டைல் போல என்று ஆரம்பித்து யாரோ ஒருவரின் உள்ளாடை வரை காப்பியடிக்க வேண்டி இருக்கிறது. 

பேசு பேசு என்று ஒரு கூட்டமும், பேசாதே....பேசாதே என்று ஒரு கூட்டமும், இது சரி அது தவறு அல்லது அது சரி இது தவறு என்று  போதித்துக் கொண்டே இருக்கிறார்கள். போதும்டா பாவிகளா பூமிக்கே புற்று நோய் வந்து விடப்போகிறது போய் ஒரு ஓரமாய் அமர்ந்து தொலையுங்களேன் என்று கத்தவேண்டும் போலிருக்கிறது. நேத்து வரைக்கும் நல்லாத்தாண்டா இருந்தான்... இன்னிக்கு என்ன ஆச்சு இவனுக்குப் பாவம் என்று உடனே என் மீது ஒரு வர்ணம் பூச ஓடி வந்து விடுவார்களே.... என்றுதான்...

எந்த அடையாளமும் இல்லாத ஒரு வாழ்க்கையை நோக்கி பள்ளி விட்டு ஓடும் பள்ளிச் சிறுவனாய் ஓட நினைக்கிறேன்.

பெயர் ஒரு சுமை, பதவி ஒரு சுமை, உறவு என்ற அடையாளம் ஒரு சுமை. என்னைப் பார்த்து யாராவது நீங்கள் யார் என்று கேட்டால்..... நானா...? நானா..... நான் வந்து நானேதான் என்று முகத்தை அவர்கள் முகத்திற்கு அருகில் கொண்டு போய் வைத்து உஆஹா ஹா ஹா... ஹா ஹா என்று சிரிக்கத்தான் தோன்றுகிறது. இன்னும் சிலர் வெகு அருகில் நான் நிற்கும் போதே நீங்க....யாருன்னு தெரியலையே தம்பி....ன்னு முகவாய்க்கட்டையைச் சொரிவார்கள்.....

இப்படி எங்கு சென்றாலும் அடையாள அட்டை, அடையாளச் சீட்டு, வாக்குரிமைச் சீட்டு, இந்த  உறுப்பினர் அட்டை, அந்த உறுப்பினர் அட்டை, கடவுச்சீட்டு, இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா? என்ன சாதி? மதம், எந்த வீடு, தெரு,  ஊர், வட்டம், மாவட்டம்,  மாநிலம், நாடு?  இது எதுவுமில்லாமல் வாழவே முடியாது என்றாகி விட்டது. இவை எல்லாமே சிக்கல்கள். விலங்குகளுக்கு கழுத்தில் சங்கிலி போட்டு தட்டில் பாலை ஊற்றுவது போலத்தான்   நம்மைக் கட்டிப் போட்டு இந்த அடையாளங்கள் வாழ்க்கையை ஊற்றுகிறது. நிஜத்தில் கட்டுப்பாடுகள் யாருக்கு அவசியம் சொல்லுங்கள்...? கட்டுப்பாடுகளின்றி பிறருக்கு ஊறு விளைவிப்பனவற்றுக்குத்தான் கட்டுப்பாடுகள்....

கட்டெறும்புக்கு விதிக்கப்படும் நியதி எதற்கு கறுப்பெறும்பிற்கு என்றுதான் நான் கேட்கிறேன்? கட்டெறும்பு கடிக்கும், கறுப்பெறும்பு கடிக்குமா...? கடி என்று சொன்னாலும், கடிக்கப் பயிற்சிகள் கொடுத்தாலும் கடிப்பதல்ல அதன் குணம்.

வெகு விமர்சையாகத்தான் எல்லா தொடங்கல்களும் இருக்கின்றன, என் கடவுள் தேடலும் அப்படித்தான். கொட்டு மேளத்தோடு தொடங்கிய பவனி, ஒரே ஒரு குருக்கள் வர்றார், ஒரே ஒரு குருக்கள் வர்றார் என்னும் ரேஞ்சுக்கு நான் தேடல்ல இருக்கேன்....நான் தேடல்ல இருக்கேன் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் பஞ்சு மிட்டாய் விற்றதெல்லாம் ஒரு காலம். கடவுளோடு நெருக்கமானவனாய் காட்டிக் கொள்வதும், அதி சிறந்த பக்தனாய் தன்னை வரிந்து கொள்வதும், எப்போதும்  நெஞ்சை நிமித்தி எல்லாவற்றுக்கும் பெருந்தன்மையாய் எல்லாம் அவன் செயல், சாந்தம், சமாதானம், நிசப்தம் என்று வராத புன்னகையை எடுத்து உதட்டில் வைத்துக் கொண்டு உள்ளுக்குள் வக்கிர மிருகமாய் அலைந்து கொண்டிருப்பதும் மிகப்பெரிய நடிப்பு.

கடவுள் தேடல் ஒரு அடையாளம், கடவுள் இல்லை என்று சொல்வது ஒரு அடையாளம், பகுத்தறிவு பேசுவது ஒரு அடையாளம், விஞ்ஞானத்தைச் சார்ந்து மட்டுமே நான் கருத்து பகிர்வேன் என்பது ஒரு அடையாளம், நல்லவன், கெட்டவன், நாசமாய்ப்போகிறவன், படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்று சுற்றிச் சுற்றி அடையாளங்கள் அடையாளங்கள் அடையாளங்கள்....! இது எதுவுமே இல்லாமல்....ச்ச்சும்மா வாழ முடியாதா..என்ன...?

முடியாதுதான்....ஆனாலும் வாரத்தில் ஒரு நாளாவது இப்படி அடையாளம் தொலைத்துக்கொள்கிறேன் நான். 

வார இறுதியின் கடைசி வேலை நாளின் அந்த வசீகர மாலையில் மெல்ல மெல்ல இந்த இரைச்சலை விட்டு, ஜன சந்தடியினை விட்டு, பெயர், ஊர், தொழில், உறவுகள் என்று எல்லாவற்றையும் விட்டு ஒரு மிருகமென தாவிப் பாய்ந்து அந்த இரவுக்குள் சென்று விடுகிறேன். அது ஒரு மிகப்பெரிய திறப்பு, அதிரகசியமான நுழைவு வாயில் உள்ளே சென்று விட்டால் அவ்வளவுதான் டபக் கென்று அதன் வாய் மூடிக் கொள்ளும். வேறு உலகம் அது. திரும்பிய திசைகளிலெல்லாம் விரும்பிய வண்ணத்தில் பூக்களை நாம் படைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கெட்டிய தூரம் தாண்டியும் ஒரு மனிதர் அங்கே இரார். வெளிச்சமான வானம் வேண்டுமெனில்....ஆர்ப்பாட்டமாய் சூரியன் அங்கே பவனி வரும்....இரவு வேண்டுமெனில் ஒரு புள்ளியாய் சூரியன் ஒடுங்கிக் கொள்ள புஷ்டியான நிலவு வரும்...

நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இளைப்பாறுதல்.  இது எப்படியானது தெரியுமா? ஓடி ஓடிக் களைத்து இனிமேல் ஓடவே முடியாது என்று விழுந்து மூச்சிறைத்துக் கிடப்போமே...அது போன்ற இளைப்பாறுதல். இளைப்பாறி மெல்ல மெல்ல எழுந்து ஒரு மெல்லிய தடுமாட்டத்துடன் நடந்து நாம் விரும்பும் ஒரு சமவெளியில் வந்து நின்று கொண்டு....ஊஊஊஊஊஊஉ என்று நரியைப் போல ஊளையிடலாம்.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர் என்று சிம்மமாய் கர்ஜித்துக் கொள்ளலாம், நிலவொளியில் ஒரு தடாகத்தில் நம் உருவம் பார்த்து யாரோவென்று வெகுண்டெழுந்து உறுமலாம்....

சாந்தமாய் வால் குலைத்த நாயாய் வெறுமனே படுத்துக்கொண்டு  சுவாசத்தைப் பார்த்தபடி கிடக்கலாம், பசித்தால் சாப்பாடு என்பதை மாற்றி கிடைத்தால் சாப்பாடு என்று சங்கல்பம் செய்து பழகலாம், நம் நிழலைப் நாமே தொட்டுப் பிடிக்க முயன்று முயன்று தெரிந்தே தோற்றுப் போகலாம், விரும்பினால் தீரத் தீர குளித்துக் கொண்டே இருக்கலாம் இல்லையென்றால் சோம்பலாய் அப்படியே திரியலாம்....

இப்படியான வார இறுதி வாய்ப்புகளில் நான் யாராகவுமே இருப்பதில்லை. இது ஒரு பயிற்சி, வேண்டும் வரை இரையைச் சேர்த்துக் கொண்டு  ஏதோ ஒரு குகைக்குள் சென்று ஒதுங்கிக் கொண்டு விரும்பிய போது உண்டு, உறங்கி ஓடி ஆடி வாழும் ஒரு வாழ்க்கைக்கான ஒரு முன்னேற்பாடு, அதைப் பழகிக் கொள்ள செய்யும் ஒரு சிறு யுத்தி. ஆடி ஓடி பொருளீட்டி சடாரென்று நத்தை கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்வது போல உள் இழுத்துக் கொண்டு மோனத்தில் லயித்துக் கிடக்கும் ஒரு தந்திரம். இருக்கும் போது இல்லாமல் போக எடுக்கும் ஒரு பயிற்சி. யாருமில்லாத வார இறுதிகளில் வெறுமனே வழிந்தோடும் வாழ்க்கையை நாம் தரிசிக்க முடிகிறது, சுகந்தமான அதன் நறுமணத்தில்  வெறுமனே சுற்றித் திரிய  முடிகிறது.

அது இருள்தான் ஆனால்...வெளிச்சம் என்றால் அப்படி ஒரு வெளிச்சம். அது வெளிச்சம்தான் ஆனால் அவ்வளவு ஆழமான கருமை அது. எல்லா சப்தங்களும் ஒரு வெள்ளைக் காகிதத்தை ஊடுருவிச் செல்லும் ஒளியைப் போல நம்மை கடந்து செல்ல எந்த வித பதிவுகளுமின்றி இதே உலகத்திற்குள் வேறு மனிதராய் வாழ்ந்து  கொண்டிருக்கையில் மீண்டும் நீரினின் ஆழத்திலிருந்து மேலெழும்புவது போல சராசரியான வார நாட்களுக்குள் மீண்டும் வந்து தள்ளி விடுகிறது  காலம். ஏக்கத்தோடு  வேறு வழியில்லாமல் மீண்டும் காலில் சக்கரம் மாட்டிக் கொண்டு, நான் நான் என்று அலையும் அவஸ்தை, யாருமில்லை, எதுவுமில்லை என்று தெரிந்தே இன்னார் இன்னது என்று நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை என்றாவது ஒரு நாள் பாம்பு சட்டையை உரித்துப் போட்டுவிட்டுப் போவது போல போகத்தான் வேண்டும்....

அதுவரையில்...இப்படி ஏதாவது கிறுக்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது.....ப்ரியங்களுடன்
தேவா சுப்பையா....

3 comments:

Unknown said...

ஐயா பாலகுமாரன் வரிகளின் தாக்கம் அதிகம்.....

புரியாத ஒரு தேடல்.....

அருமை

'பரிவை' சே.குமார் said...

அருமையான கட்டுரை அண்ணா.

arul said...

நண்பா, உங்களை பெயர் சொல்வதை விட இது அதிக நெருக்கமாய் இருப்பதை உணர்கிறேன். நீங்கள் எழுதிய "குணா" பட அனுபவ பதிவிலிருந்து உங்கள் பதிவுகளை படிக்கிறேன். என் மனநிலையில் நான் எப்படி குணாவை உணர்ந்தேனோ அதே போல் நீங்கள் உணர்ந்ததால் உங்கள் பக்கங்கள் மீது மிக பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. மேலும் நானும் தலைவர் ரஜினி ரசிகன் ! (உங்களின் லிங்கா விமர்சனம் அருமை)ஆனால் குணாவும் மிக பிடித்த படம். அப்பொழுது வந்த தலைவரின் தளபதியைவிட குணாவை அதிகம் பார்த்தேன். இப்பொழுது நீங்கள் எழுதியுள்ள அடையாளம் பற்றிய உங்கள் புரிதல்கள் போலவே எனக்கும்.. நான் 2005ல் ப்ளாக் எழுத ஆரம்பித்தபொழுது எழுதியது அடையாளம் பற்றிய அப்பொழுது எனது பார்வை அது ஒரு "வலி" யாகவே மாறிப்போனது..முடிந்தால் என்னுடைய அப்பொழுதைய பதிவை பாருங்கள்
http://arulnithya.blogspot.com/2005/12/blog-post_113592264398906281.html
http://arulnithya.blogspot.com/2006/06/blog-post.html
அன்புடன் அருள் நித்யா