Pages

Monday, February 2, 2015

காதல் மழை.....!


ஒரு மழை நாளில் யாரோ கதவைத் தட்டினார்கள். யார் இப்படி மழை நேரத்தில் புயல் போல கதவைத் தட்டுவது என்று கோபமாய் எழுந்து கதவைத் திறந்தால் அங்கே நின்று கொண்டிருந்தது தென்றல்...

எந்தக் காலத்தில் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறது காதல் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே வரலாமா என்று கேட்டாள் எப்போதோ எனக்குள் வந்து விட்டவள், இந்தப்  பக்கமாய் வந்தேன் ..., மழை ஓவரா பெய்யுது அதான் அப்டியே அம்மாவைப் பாத்துட்டுப் போலாம்னு....... வீட்ல யாரும் இல்லையா...என்று வீட்டுக்குள் ஊருக்குப் போயிருந்த அம்மாவைத் தேடிய விழிகளின் வழி அடைக்காமல் நகர்ந்து நின்றபடி,

வாங்க....என்று நாகரீகத்திற்கு தாவியது எனக்குள்ளிருந்த காட்டுமிராண்டி காதல்...

தனியாவா இருக்கீங்க...?என்று கேட்டாள் எனக்குள் எப்போதும் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவள். ட்டு முடித்தவளிடம் எப்படி சொல்வேன் நான் எப்போதும் உன்னோடுதானே இருக்கிறேன் என்று...

யாருமில்லேன்னா நான் கிளம்பவா........என்றவளிடம்... நான் வேணும்னா காஃபி போட்டுக் கொண்டு வரவா......குடிச்சுட்டுப் போங்களேன்.. என்று ஒரு கோப்பைக்குள் என் ஆசையை நிறைத்துக் கொண்டு வர ஒரு சம்பிரதாய முயற்சி செய்தேன்....

அச்ச்சச்சோ வேண்டாமென்று மழை நேரத்தில் மேலும் உஷ்ணத்தைக் ஏற்றியவளை இருக்க சொல்லிவிட்டு....
....
....
....

மேசை மீது இரண்டு கோப்பைகளிலிருந்தும் ஆவி பறந்தது.... 


ஒவ்வொரு மிடறாய் அவள் குடித்துக் கொண்டே....ஏதேதோ கேட்டுக் கொண்டிருக்க பூக்கள் நிறைந்த வனத்தினுள் பறந்து,பறந்து தேனெடுக்கும் பட்டாம் பூச்சியின் பரவசத்தோடு மிதந்து கொண்டிருந்தேன்...நான்!

காஃபி... க்ளாஸா இருக்கு என்ன தூள்ள போட்டீங்க என்றாள்....

இது..... வந்து... காபித் தூளில் போட்டதல்ல...
வந்து.... காதல் தூளில் போட்டது....

உள்ளுக்குள் உஷ்ணமாய் இருந்த காதல் மெல்ல மெல்ல வீட்டுப் படி விட்டிறங்கி தெருவிற்குள் வரும் குழந்தையாய் தத்தித் தத்தி எட்டிப்பார்க்க....

சப்தமாய் அவள் சிரித்தாள்... வெட்கம் ஆண்களின் சொத்தும்தானென்று அப்போது புரிந்தது எனக்கு...

நல்லா பேசுறீங்க... கவிதை எழுதுவீங்கதானே...? 

கடகட வென்று ஒடிப் போய் மட மடவென்று நான் கிறுக்கி வைத்த டைரிகளை எல்லாம் அவள் முன் குவித்தேன்....

அதோ எதிரில் இருப்பதுதான் சாமியறை... அதற்குப் பக்கத்தில் இருப்பதுதான் தேவதையின் அறை என்று... என் கவிதைத் தொகுப்புகளை சேகரித்து வைத்திருக்கும் என்னுடைய அறையை அவளிடம் காட்டினேன்....

அடிக்கடி என் வீட்டுக்கு 
வந்து செல்லும் பக்கத்து தெரு
தேவதையொன்று என் 
டைரிகளில்தான் குடியிருக்கிறது...!

***

ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் 
பேசிக் கொண்டதில்லைதான்...
ப்ரியத்தை பகிர்ந்து கொண்டதில்லைதான்...
நான் காதலிக்கிறேனா என்பது கூட...
அவளுக்குத் தெரியாதுதான்...
ஆனாலும்....
நான் எழுதும் எல்லாக் கவிதைகளும் 
அவளுக்கானதுதான்...!

பேய் மழை பெய்து கொண்டிருக்கையில் என்னைக் முழுதாய் விழுங்கிக் கொண்ட பிசாசோடு உட்கார்ந்து அவளுக்காக எழுதிய கவிதைகளை காட்டுவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை....

யாருக்காக எழுதியது இவை எல்லாம் என்று 
கேட்டவளிடம்...
யாருக்காக நீ பிறந்தாயென்றேன்...?

காதல் மட்டுமே வாழ்க்கையில்லைதானே கேட்டு விட்டு விழிகளால் சிரித்தவளிடம் காதல்தான் வாழ்க்கையே என்றேன்...

என்னை பிடிக்குமென்கிறாயா? என்கிறாயா என்றவளிடம்...

உன்னை மட்டும்தான்....பிடிக்குமென்றேன்...!

நான் எதற்காகவோ வந்தேன்.... என்றாள்...
நீ எனக்காகவே வந்தாய் என்று நினைத்து கொள்கிறேன் என்றேன்....

மழை விட்டு விட்டது நான் வரட்டுமா என்றவளை ஏக்கமாய் பார்த்தபடி  ச.....ரி... வாங்க....என்றேன்...

ஆனால்... 

காதல் பிடித்துக் கொண்டது என்றவள்....  வெட்கச் சிரிப்போடு ஓடி மறைந்து விட்டாள்....

படாரென்று அடைத்துக் கொண்டது கதவு....

எனக்குள்ளும் அடித்துப் பெய்தது காதல்.....!
தேவா சுப்பையா...

2 comments:

Krishna moorthy said...

எல்லோரின் மனதுக்குள்ளும் மழை பெய்ய செய்து விட்டீர்கள் அதுவும் காதல் அடை மழையாய்.நீல வானம் பெய்யும் போது நிறைய மனங்களில் தீ பரவும் என்பதை மெல்ல பற்றவைத்து விட்டீர்கள் .அற்புதம் .நெகிழ்ச்சியின் பிராவகமாய் வார்த்தைகள் .அற்புதம் .

Anonymous said...

Excellent !!!இப்படிக்கு
ரசிகை