கழனியில வேல பாக்க
கலங்கி நின்னதில்ல...
கட்டுக் கதிரு சுமந்தும் ....
நடக்க சிரமப்பட்டதில்ல...
கையில் இரண்டு இடுப்பில் ஒண்ணு...
வயித்தில் ஒண்ணு....
இருந்த போதும் கவலையில்ல...
பத்துவீடு...சுத்திவந்து...
பத்துபாத்திரம் தேய்ப்பதில....
கூட... குறையுமில்ல...
மூலையில கிடந்தாலும்...
மூணுவேளை கஞ்சி ஊத்த...கஷ்டமில்ல....!
இரவு பகல் பாராம...
மிருகமா என்னை வேட்டையாடி...
கொன்னாலும்...பரவாயில்லை...
மொட்டையா போற...மகன்...
குடிச்சு...குடிச்சு.....சீரழிஞ்சு...
அவன் குடல கருக்கி...எங்க உசிர....
எடுக்காம இருந்தா சரிதேன்...!
கவுர்மெண்டே...கட துறந்து...
கருமாதி நடத்துதே....!
காந்தி போட்டோவ.....
காகிதத்தில் போட்டு வச்சு....
கல்லாவுல சமாதியாக்கி....
கல்லுக்கடை (டாஸ்மாக்) நடத்துதே!
கேக்க ஒரு நாதி இல்ல....
என் சுமைய எறக்கி வைக்க யாருமில்ல...
எல்லா சாமிய கும்பிட்டும்....
ஒரு சாமிக்கு கூட காதும் இல்ல...!
என்னதான் நவீனமயமாக்கல்...புதிய தொழில்களின் முதலீடு....தொழில் நுட்ப வளர்ச்சி, மகளிர் இட ஒதுக்கீடு என்று நாம் பேசி வந்தாலும்....மது அரக்கன் தமிழகத்தின் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையினை பதம் பார்க்கமல் இல்லை. குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு...தேசப்பிதாவாய்...மகாத்மவை ஏற்றுக் கொண்ட ஒரு ஜன நாயக நாட்டில் ஏன் ஒரு பூரண மதுவிலக்க்கினை நம்மால் ஏற்படுத்த முடியவில்லை? என்பது... இன்று பிறக்கும் குழந்தை கூட கேட்கும் ஞானக் கேள்வி.
நமது மக்களுக்கு மதுவின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தேவை...! மேல் தட்டு மக்கள் இதனை பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கொண்டிருப்பதால் அவர்களின் வாழ்வியல் முறையில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை ஆனால்.....வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மிகைப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் தான் பாதிக்கப்படுகின்றன. கல்வியின்மையும்....மதுவினை பற்றிய விழிப்புணர்வும் இல்லாததுதான் இதற்கு காரணம்....!
அரசியல்வாதிகளும் , தன்னார்வதொண்டு நிறுவனங்களும்...மிக முக்கியமாக ஊடகங்கள் மது பற்றிய விழுப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்த வேண்டும்! அறியாமையின் காரணமாக மதுக்கடைகளில் வீழ்ந்து கிடக்கும் எம்மக்களை காப்பாற்ற அரசு மிக முக்கிய முடிவுகளை உடனடியாக எடுத்தால் அது வறுமையில் வாடி மது அரக்கனால் சீரழிந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான மக்களை காப்பற்றி...சீரான, தெளிவான அடுத்த தலைமுறையை சர்வ நிச்சயமாய் உண்டாக்கும்!
தேவா. S
Comments
நமது மக்களுக்கு மதுவின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தேவை...!
...... தேவா, மதுவை ஒழித்தால் - கள்ள சாராய கோட்டையில் மாட்டி விடுகிறார்கள். நீங்கள் சொல்லியபடி, மக்களிடம் ஒரு விழிப்புணர்வு தான் தேவை. அரசாங்கத்துக்கும் இதில் பங்கு உண்டு. கல்லாவை கட்டி கொண்டிருக்கிறவர்கள், கண்ணீரை பற்றி கவலைப்படுவார்களா?
மது அரக்கனின் அராஜகத்தில் மக்கள் வெளிவரவேண்டும் எனபதை அழகான கவிதையில் வடித்திருக்கிறீர்கள்.
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி....!
மதுவின் பிடியில் இருந்து வெளியேற மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அது மெதுவாகத்தான் வரும். விளைவுகளை நன்கு அறிந்தும் பல காரணக்களுக்காக மதுவைனி நாடுகிறார்கள். என்ன செய்வது ......
நல்ல சிந்தனை தேவா
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா