Skip to main content

மறந்து போன பயணங்கள்...!





















சரியாக எப்போது என்று சொல்லமுடியாத காலம் கடந்த நிலை அது...! என்னாலேயே நான் என்னவாயிருக்கிறேன் என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் இருந்தேன்..அது எப்படி என்றும் விவரிக்க முடியவில்லை ஆனால் ஒப்பீடு சொல்ல முடியும்.... நகரும் காற்று போல ...சக்தியாய் இருந்தேன்... நெருப்பில் சூடு மறைந்திருப்பது போல.... காற்றில் பறந்து அலையாய் வந்து காதில் விழுகிறதே வார்த்தைகள்..அது போல...! வாசிக்கும் போது ஒரு புரிதல் ஏற்படுகிறதே அது போல... அது போலத்தான் ஆனால் அதுவல்ல.

உடல் விட்டு நான் நகர்ந்து வந்தது புரிந்ததது ஆனால் காலம் எவ்வளவு என்று சொல்லத்தெரியவில்லை அல்லது அது காலமில்லா இடம் அதனால் கணித்துப்பார்க்கவே தோணவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் உடல் சம்பந்தமான நினைவுகள் இருந்தது அதுவும் விட்டுப் போகும் நிலையில் அதாவது கண்ணாடியை மறைத்திருக்கும் பனி இளஞ்சூட்டில் பாதி கலைந்து பாதி நீராய் வடிந்து வெறுமையாக கண்ணாடியை காட்ட எத்தனிக்குமே அதுமாதிரி....கலங்கலாய்.. மங்கலாய் ஏதேதோ நினைவுகள்.உடல் சார்ந்த உறவுகள் எல்லாம் சுற்றி நின்று கலங்கிக் கொண்டிருந்ததும் எனக்குள் ஏதோ நிகழ்ந்து நெஞ்சில் வலி ஏற்பட்டதும் மட்டும் நினைவில் இருந்தது. அதுவும் மறைந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு புரிதல் இருந்தது. அந்த புரிதல் ஏற்கெனவே இருந்த உடலின் அனுபவத்தில் இருந்து தேக்கப்பட்டது. பசி என்ற ஒரு உணர்வும், வலி என்ற ஒரு உணர்வும், காமம் என்ற உணர்வும் அந்த தேக்கத்தில் இருந்தது. மற்றபடி அந்த உடல் பற்றியும் உடலால் ஏற்பட்ட உறவுகள் பற்றியும் ஒன்றும் தோன்றவில்லை. அதாவது முன்பே சொன்னது போல வலி இருந்தது....அடி இல்லை..! சந்தோசம் இருந்தது...சந்தோசப்படுத்த ஒன்றும் இல்லை....


எந்த நகர்தலும் இல்லை.. நான் இருந்தேன் ஆனால் இல்லை...ஏன் என்று கேள்விகளும் இல்லை.அது இருட்டா அல்லது ஒளியா என்று ஆராய்ச்சி செய்யவும் தோணவில்லை.. ஏதோ ஒரு கணத்தில் என் புரிதல் அதிகமானது நான் நகர்வதைப் போல தோன்றியது...எனக்கேற்ற இடம் நோக்கிப்பாயத்தொடங்கினேன். பள்ளத்தை நோக்கிப் பாயும் நீர் போல....இருட்டில் பயணிக்கும் ஒளி போல....மேலிருந்து கீழே விழும் பொருள்போல ஒரு தேவையிருந்தது அந்த நகர்வுக்கு, அந்த நகர்வுக்கும் எனது முந்தைய உடலில் ஏற்பட்ட அனுபவ புரிதலுக்கு ஒரு தொடர்பு இருப்பது போலத்தான் தோன்றியது.... நகர்ந்தேன்.... நகர்ந்தேன்.....நகர்ந்தேன்.... எந்த இலக்கை அடைந்தேன்.....அறியவில்லை...ஆனால்... இப்போது ஸ்தூலாமாய் இருந்த எதுவினுள்ளோ இருந்தேன்.... அந்த ஸ்தூலத்தை நான் என்று நினைத்தேன்...!


என்னால் அசைய முடிந்தது புரிதல் இருந்தது ஆனால் எண்ணமில்லை. எண்ணங்கள் பதிய வேண்டிய இடம் வெறுமையாய் இருந்தது ஏற்கெனவே இருந்த புரிதலில் காத்திருந்தேன்... ஸ்தூலத்துக்குள் வந்தவுடன் ஏதோ ஒன்றுக்காக காத்திருப்பதாய் தோன்றியது. வெறுமனே அங்கும் இங்கும் சுற்றித்திருந்தேன் சுற்றித் திரிவதற்கு உள்ளே இருந்த திரவம் உதவி செய்தது. இடைவிடாது ஒரு சப்தம் சீரான வேகத்தில் கேட்டுக் கொண்டே இருந்ததும் என்னைச்சுற்றி இருந்த ஒரு வித இளம் சூடும் ஒரு வித சந்தோசத்தைக் கொடுத்தது. சில நேரங்களில் பயந்தும் சில நேரங்களில் சந்தோசமாகவும் இருந்தேன் அது வேறு யாருடைய செயலலோ ஏற்படுவதாகத் தோன்றியது. சில நேரங்களில் எனக்கு சீராயும் பல நேரங்களில் மாறி மாறியும் சுவாசம் கிடைத்துக் கொண்டிருந்தது.....!

ஏதோ ஒரு தருணத்தில் என்னால் என்னை இருத்திக் கொள்ளமுடியவில்லை நான் நழுவிக் கொண்டிருந்தேன்...! கடந்த முறை நகர்ந்ததிற்கும் இப்போது நகர்வதிற்கும் நிறைய மாறுதல்கள் இருந்தது.....ஸ்தூலமாய் இருந்த எனக்கு வலியின் அவஸ்தை இருந்தது.. நழுவி... நழுவி.....ஓ....ஏதோ ஒரு வெளிச்சக்காட்டிற்குள் வந்து விழுந்து விட்டேன்... விழுந்த கணத்தில் மொத்தமாய் ஏதோ ஒன்று நாசிக்குள் சென்றது ...அதை திருப்பி வெளியில் விட ஏற்கெனவே இருந்த புரிதல் உதவி செய்தது. இடைவிடாது அந்த செயலை செய்யத்தொடங்கினேன்...! புரிதலில் இந்தப்பழக்கம் இருந்ததால் உடனே பழகிக் கொண்டேன்...! ஆனால் பளீச் என்ற வெளிச்சமும் சுற்றியிருந்த எரிச்சலும் நான் சுகமாயிருந்து பழகிய நிலைக்கு எதிராய் இருந்ததால் .. நான் என் கோபத்தை காட்டி சப்தமாய் ஏதேதோ செய்தேன்.....!

கொஞ்ச நேரத்தில் ஏதோ ஒன்று அருகில் வந்ததும் பற்றி இழுத்து உறிஞ்சத்தொடங்கினேன்....இதற்கும் ஏற்கெனவே தேக்கி வைத்திருந்த புரிதல் உதவி புரிந்தது. பல காலங்களில் செய்த அந்த அனுபவத்தின் புரிதல் இருந்ததால் அந்த செயலும் எனக்கு பழகிப் போனது. கொஞ்சம் ஏதோ ஒரு திருப்தி ஏற்பட....கண் இமைகள் விரித்து மெல்லப்பார்த்தேன்....முடியவில்லை...வெளிச்சம் என்னை மீண்டும் கண்களை மூடச்செய்தது. இப்படித்தான் இருக்கப்போகிறோம் என்று தெரிந்து விட்டது. இங்கே தான் இருப்போம் என்றும் புரிந்து விட்டது. வேறு எண்ணம் இல்லை...மீண்டும் பழைய நிலையில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு கண்களை மூடி அப்படியே கிடந்தேன்....எந்த பதிவும் இல்லா நிலையில் அவ்வப்போது கண்கள் மூடி பழைய நிலையை நினைத்து சந்தோசப்படும் போது உதடுகள் இழுத்து கொள்வேன் வாய் அகட்டிக் கொள்வேன்.....அதுவும் புரிதலில் இருந்த நிகழ்வுதான்! கொஞ்ச நேரத்தில் ஏதோ ஒன்று என்னவோ செய்ய....மீண்டும் சப்தமிட்டு கைகால்கள் உதைத்து மீண்டும் முன்பு செய்ததப் போலவே செய்தேன்......மெத்தென்று என் மீது மீண்டும் அது மோத....ஏற்கெனவே இருந்த புரிதலும் அனுபவமும் கொண்டு வாய் வைத்து பற்றி உறிஞ்சத்தொடங்கினேன்.

மீண்டும் நான் கண்மூடி எனது சப்தமில்லா நிலையையும், இருளில் மிதந்த நிலையையும் நினைத்துக் கொண்டே இருந்தேன்.... நேரமும் இல்லை காலமும் இல்லை...இப்போது மீண்டும் எனக்கு ஏற்கெனவே ஏற்பட்ட ஒரு அவஸ்தை ஏற்பட்டது. எனக்குள் ஏதோ ஒன்றூ பற்றி இழுப்பது போல தோன்ற....கை கால்கள் உதறி.... சப்தமிட்டேன்.... எதுவும் நிகழவில்லை....சப்தமிட்டால் ஏதோ ஒன்று கிடைக்கும் அந்த ஒன்று என் அவஸ்தையை தீர்க்கும் என்று ஏற்கெனவே அனுபவித்தில் இருப்பதால்..மிக சப்தமாக கத்தினேன்...கை கால்களை உதைத்தேன்.....

" ங்கா.....ங்கா....ங்கா...ன்ங்கா....ங்கா.....ங்கா..........ன்ங்கா........"

தொடர்ச்சியான நீண்ட என் போரட்டத்திற்கு நடுவே...யாரோ.....


" யேய்...புள்ள அழுகுது தூக்கி பால் குடும்மா......ரொம்ப நேரமா கத்துறான்மா"


என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை ஆனால் உடனே எனக்கு பற்றி இழுக்கும் மெத்தென்ற அந்த விசயம் கிடைத்தது........

நான் உறிஞ்சத்தொடங்கினேன்....சூடாய் அந்த திரவம் என்னுள் இறங்கத்தொடங்கியது...கததப்பான அந்தசூட்டிலும் எனக்கு ஏற்பட்ட ஒரு மயக்கத்தில்....உறங்கத்தொடங்கினேன்.....!


தேவா. S


பின் குறிப்பு: புரிந்தவர்களுக்கு இது அவர்கள் ஏற்கெனவே உணர்ந்த ஒரு அனுபவம். புரியாதவர்களுக்கு இது ஒரு கதை.

Comments

பின் குறிப்பு: புரிந்தவர்களுக்கு இது அவர்கள் ஏற்கெனவே உணர்ந்த ஒரு அனுபவம். புரியாதவர்களுக்கு இது ஒரு கதை.

இந்த அனுபவம் எனககு வரவில்லை அதனால் இதை படித்த அனுபவம் மட்டும் தான்
பலமுறை படிக்க வேண்டிய இடுகை

உங்களிடம் நிறைய ஆற்றல் உள்ளது. அடையாளம் காணுங்கள் நிச்சயம் கணிக்க முடியாத உயரம் செல்வீர்கள்

வாழ்த்துகளுடன்
மீளவும் உணர்ந்து .....நன்றாக் எழுதியிருகிறீர்கள். மேலும் பல் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
இதுக்குத்தான் இறந்தபிறகு என்னாவோம்னு கேட்டீங்களா? மறுபிறவியா? உங்கள் எழுத்து நடை நல்லாயிருக்கு.
@@@ஜெயந்தி--//இதுக்குத்தான் இறந்தபிறகு என்னாவோம்னு கேட்டீங்களா? மறுபிறவியா? உங்கள் எழுத்து நடை நல்லாயிருக்கு.//

யக்கா.. வேற பதில் இல்லை அதனால்
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
என்ன ஆச்சு தமிழிஷ் ல சப்மிட் பன்னலையா பயமா ?
:-)
dheva said…
நீங்க எல்லாம் இருக்குறப்ப எனக்கு என்ன பயம் ஜெய்லானி.....ஜெயந்தி அக்காவிற்கு நாளைக்கு பதில் சொல்றேன் ....தம்பி உனக்கு இப்போவே சொல்றேன்...

" நாளைக்கு காலைல தமிழ்ஷ்ல போடறேம்பா..."


மிக்க நன்றி தம்பி..!
ஹேமா said…
//என்னால் அசைய முடிந்தது புரிதல் இருந்தது ஆனால் எண்ணமில்லை. எண்ணங்கள் பதிய வேண்டிய இடம் வெறுமையாய் இருந்தது ஏற்கெனவே இருந்த புரிதலில் காத்திருந்தேன்...//

நல்ல புரிதல் தேவா.அனுபவங்களால் மனம் பக்குவப்படுகிறது.
Chitra said…
ஹலோ தேவா .......
" ங்கா.....ங்கா....ங்கா...ன்ங்கா....ங்கா.....ங்கா..........ன்ங்கா........" என்று சில மாதங்கள் முன் பதிவுலகில் தவழ்ந்து வந்த தேவாவா இது? எழுத்து நடையில், நன்கு வளர்ந்து விட்டீர்கள். பாராட்டுக்கள்!
ஹாய் தேவா..
எப்படி இருக்கீங்க?

ரொம்ப நாளைக்கு பிறகு.. திரும்ப வந்துட்டேன்..
நிறைய மிஸ் பண்ணிட்டேன்.. பின்னூட்டம் போடா முடியல. மன்னிக்கவும்..
மீண்டும்......உங்க பதிவு படிக்கறது.. ரொம்ப ஹாப்பி..
என்ன ஒரு எழுத்து நடை, ரொம்ப அருமை...தொடரட்டும் உங்கள் பயணம்.. :)
intha nigazvu ellorukkume irkku. aana atha unara mudiyaathu. unga ezuthu nadaila enna ullukkulla vacchu karpanai panni parthutten.
இந்த அனுபவத்தை சொற்களில் வடிப்பது கடினம்தான்...அதையும் தாங்கள் சிறப்பாக செய்துள்ளீர்கள்.... எனக்கெல்லாம் இந்தளவுக்கு ஞாபகம் இல்லீங்க... இருந்தாலும் இதப்படிக்கிறச்ச அந்த உணர்வு தொத்திக்கொண்டது...

நல்ல இடுகை...
Kousalya Raj said…
இறப்பும் பிறப்பும் ! வார்த்தைகளில் இப்படியும் வடிக்கமுடியும் என்பதை மீண்டும் மீண்டும் படித்து உறுதி செய்துகொள்கிறேன் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...