Skip to main content

பார்வை...!

















கல்லூரியில் ஸடடி ஹாலிடேஸ் விட்டாச்சு...இது ஃபோர்த் செமஸ்டர்...இரண்டாம் ஆண்டின் இறுதி....வீட்டுக்கு போகமால் இங்கேயே படிக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்தேன். கல்லூரி திருப்பத்தூர் டூ மதுரை ரோட்டில் ஊரின் வெளிப்புறத்தில் நான் தங்கியிருந்தது பஸ்டாண்ட் பக்கம்.

கல்லூரிக்கு போய் படிக்கலாம் நல்ல அமைதியாக இருக்கும்...ஆனால் ரொம்ப தூரம்...என்று நினைத்துக் கொண்டு ரூமிலேயே படிக்கலாம் என்று தீர்மானித்தேன்....ஆனால்...தங்கியிருக்கும் இடத்தின் சுற்று புறம் என்னை படிக்க விடாது...பக்கத்து ரூமில் தேர்ட் இயர் ஸ்டுடண்ஸ்..மேலும் ரூமுக்கு கீழே ஒரு மியூசிக் ரெக்கார்டிங் சென்டர்......

என்ன பண்ணலாம் என்ற கேள்விக்கு ஸ்விடிஸ் மிஷன் ஹாஸ்பிட்டல் நினைவுக்கு வந்தது......வெள்ளைக்காரங்க காலத்துல கட்டியதுன்னு சொல்வாங்க...ஓரிரு தடவைகள் போயிருக்கிறேன்...ஹாஸ்பிடலுக்கு பின்னால நிறைய அடர்த்தியான மரங்கள் மேலும் பெரிய பெரிய வீடுகள் எல்லாமே வெள்ளைக்காரர்கள் தங்கி இருப்பதற்காக கட்டப்பட்டவை என்று சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன்...எந்த அளவு உண்மை என்று தெரியாது .....ஆராயக்கூடிய வயதும் மனதும் இல்லை.....எப்படியாவது அரியர்ஸ் எல்லாம் கிளியர் பண்ண வேண்டும் என்ற பயம் மட்டும்தான் இருந்தது.

+2 வரை தமிழ் வழிக் கல்வி கற்று விட்டு கல்லூரி வந்து ஆங்கிலத்தில் கற்கும் அவஸ்தை.....கிட்ட தட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு சமம்.. ஆக்ஸிஜனேற்றம் என்ற சொல்தான் தெரியும்...அதை ஆங்கிலத்தில் ஆக்ஸிடேஷன் என்று சொல்லும் போது... செந்தமிழில் நிறைந்திருந்த மூளை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும்.

முதலில் எல்லா நோட்சும் புரிய வேண்டும்...அப்புறம் படிக்க வேண்டும்....அப்புறம் எழுத வேண்டும் ...இதுதான் மெத்தட்..ஆனால் என்னைப்போன்ற தமிழ் வழி மாணவர்கள் விளங்கிக் கொள்வது கடினம். இப்படி விளங்காமல் போவதாலேயே...வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பேசி சிரிப்பதும்...எதிர்த்த டெஸ்க் கீதவையும், கவிதாவையும் பற்றி பேச்சுக்கள் திரும்பி.....விரிவுரையாளரின் கோபத்தில் கெட் அவுட் என்ற வார்த்தையை கேட்டு... சந்தோசமாய்.. வகுப்பை விட்டு வெளியேறி....

கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பக்ஸ் கடையில் (டீ, காபி, வடை, சிகரெட் கிடைக்குமிடம்) போய் அமர்ந்து கொண்டு ஒரு டீ வாங்கிக்கொண்டு....உலகத்தில் சாதிக்காததை சாதித்து விட்டது போல....பேசிக் கொண்டிருப்போம்....அப்போதைய மனோ நிலையில் நாங்கள் எல்லாம் மாவீரர்கள்...கல்லூரி உள்ளே ஒழுங்காய் படிப்பவர்கள் எல்லாம் பால்வாடிகள்(nursery)...அப்படிதான் நினைத்துக் கொள்வோம். சொல்லுங்க அப்புறம் எப்படி பரீட்சையில் பாஸ் பண்றது....?

அந்த பயம்தான் இப்போ ஸ்டடி ஹாலிடேஸ்க்கு ஊருக்கு போகாம இப்போ ஸ்வீடிஸ் மிஷன் ஹாஸ்பிடலின் பின் புறத்தில் உக்காந்து....சத்தம் போட்டு...பொட்டதட்டு தட்டிக் கொண்டிருக்கிறேன்...அதாவது ஒரு அதீத மனப்பாடம்...இப்படி மனப்பாடம் செய்வதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. ஆமாம் இடையில் ஒரு வார்த்தை மறந்து விட்டால்...பேலன்ஸ் ஆன்ஸர்ஸ் எல்லாம் அம்பேல்...

ஏன் படிக்கிறோம் என்று தெரியாமலேயே பரீட்சையும் அதில் பாஸ் பண்ணவேண்டிய அவசியமும் மட்டுமே தெரிந்தது. கண்ணெதிரே எப்போதும் அப்பாவின் உருவம்....வந்து மிரட்டும்....இருந்தாலும் என்னவோ ரொம்ப கஷ்டப்படுவது போல ஒரு வேசமிட்டு அரைகுறையாய் வளரும் தாடியை கூட ஷேவ் பண்ணாமல்... வளரவிட்டு ஒரு பில்டப்போடு நகர்ந்த நாட்கள் அவை..

படிப்பதே பெருமையாகி அந்த பெருமைக்கு வயதும் திமிரும் உதவி செய்ய எப்போது ஒரு குறுகுறுப்பும் வேகமும் இருந்த படியால் மனப்பாடம் செய்வதிலும் அது வெளிப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கி படித்துக் கொண்டே இருந்தேன் பக்கம் பக்கமாக....மதிய உணவு வேண்டாம்...என்று மனது சொன்னது... காலை உணவே லேட் ...அதனால்..ஈசியாக மனதின் சொல்லோடு ஒத்துப் போக முடிந்தது.

வார்த்தைகள் வாசிக்கும் போது மனதிலும் ஒலியாய் காதுகள் வழியே சென்று மூளையிலும் ஒரே நேரத்தில் இரண்டு விதங்களில் உள்ளே ஏறி உட்கார ஆரம்பித்து விட்டது....கவனம் எங்கும் சிதறாத படி...பரீட்சை பற்றிய பயம் கவனமாக பார்த்துக் கொண்டது. படித்துக் கொண்டே இருந்தேன்...திடீரென ஒரு எண்ணம்....

ச்சே... என்ன ஒரு கஷ்டமான வாழ்க்கை....அம்மா, அப்பாவை விட்டு வேறு ஊரில் வந்து...புரியாத ஒரு மொழியில் பாடம் படித்து அதை மனப்பாடம் செய்து பரீட்சை எழுதி வாழ்க்கை எவ்வள்வு கஷ்டமானது...டிகிரி முடிச்சு அப்புறம் வேலை தேடி...எதிர்காலம் ஒரே இருட்டாக இருந்தது.....ஒரு மாதிரி டென்சனும் விரக்தியும்.... நேரம் ஓடியதே தெரியவில்லை....

மாலை வேளை இருட்டிவிடுவேன் என்று மிரட்டத் தொடங்கிய நேரத்தில்...அங்கிருந்து கிளம்பினேன்...வரும் வழியில்...ஓ...இது என்ன போர்ட்...கைவிடப்பட்ட கண்பார்வை தெரியாதவர்கள் மையம்....மெல்ல அந்த பக்கம் திரும்பி நடக்க தொடங்கினேன்...சில மணித்துளிகளில் அந்த காம்பவுண்ட் கடந்து உள்ளே சென்றேன்... "ப " வடிவில் வீடுகள் வரிசையாக ஹாஸ்டல்...கண்பார்வையற்றவர்களுக்கானதா? கேள்விகளொடு கையிலிருந்த நோட்டுபுத்தகம் விரல்களில் சுழன்று கொண்டிருந்தது........

அடி பைப் ஒன்றில் ஒரு பெண் 2 வயது குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்...அந்த குழந்தையின் அருகிலே போய் பார்த்தேன்..ஆமாம் அதுவும் கைவிடப்பட்ட கண் தெரியாத குழந்தை...மெல்ல பேச்சுக் கொடுத்தேன் அந்த பணிப்பெண்ணிடம்...அதிகம் பேசாமல் ...வேலையில் மும்முரமாயிருந்தார்....

மெல்ல நகர்ந்து ஒரு அறையின் பக்கம் போனேன்...அறை வாசலில் ஒருவர் ரேடியோவோடு அமர்ந்து இருந்தார். அறையினுள் ஒரே இருள்...மெல்லிய ஒரு இரவு விளக்கு போல ஒன்று மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒன்றை ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த அந்த 30 வயது மதிக்கத்தக்கவரிடம்...அண்ணே....லைட் போட்டுக்கலையா அண்ணே.... நான் கேட்டது பைப்படியில் குழந்தையை குளிப்பாட்டிக்கொண்டிருந்த பெண்ணுக்கு கேட்டு பதில் சப்தமாய் என் சராசரி மூளையை சிதைத்தது...

" அவுகளுக்கு எதுக்கு லைட்டு..... கூறு கெட்ட கேள்வி கேக்குறியே நீ யாருய்யா? "

சுளீரென்று முகத்தில் அறைந்த வார்த்தைகளை எடுத்து பொறுக்கி மனதுக்குள் அடுக்கி நிமிர்ந்த பொழுது... அதன் கனம் தாளாமல்...அழுத்தம் கண்ணீரைக் கொண்டு வந்தது....ஆமாம் இவர்களுக்கு விளக்கு தேவையில்லை....தொலைக்காட்சி தேவையில்லை... ஏதோ ஒரு விசயம் இவர்களிடம் பறிக்கப்பட்டு இருக்கிறது ஆனாலும் ஒரு நம்பிக்கை உந்து சக்தியாய் இவர்களை தள்ளி விடுகிறது....

இப்போது ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தவர் கூடவே பாடலை பாடிக் கொண்டு...தாளம் இட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.....

சற்று முன் எரிச்சலாக இருந்த வாழ்க்கை இப்போது எனக்கு ஏதேதோ கொடுத்து இருப்பதாக நம்பினேன். எப்போதும் இல்லாததை நோக்கி ஓடும் மனம் இருப்பதை கொண்டு திருப்தி கொள்வது இல்லை என்பதையும் உணர்ந்தேன்.....

வாழ்வின் இந்தக்கணத்தில் என்னை இருத்தி இருக்கும் ஏதோ ஒரு சக்தியின் குவியலை மனம் நன்றியோடு நோக்கியது. தன்னம்பிக்கையின் வேர்கள் என்னுள் பரவ மாற்றுத் திறனாளிகளின் மலர்ச்சியும் சந்தோசமும்...உதவியது....! இன்னொரு பக்கம் எல்லாம் இருந்தும் ஒழுக்கமின்றி வாழும் அருவருப்பு ஜென்மங்களின் மீது வெறுப்பும் வந்தது.......!

வரிசையாக எல்லோரையும் பார்து விட்டு....வெளியில் வந்து உலகத்தை பார்க்கும் போது கவலைகள் எல்லாம் போலியாய் என்னை விட்டு உதிர்ந்தே போயிருந்தன.....

வாழ்வின் பக்கங்களில் ஒவ்வொரு மனிதனும் சிறப்பானவன்தான் ஏனோ அவன் மற்றவர்களுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு தனது கஷ்டங்களுக்கு தானே காரணமகிப் போகிறான். அதற்கு சூழ் நிலையை காரணம் காட்டுவது எப்போதும் பழகிப் போன மனதுக்கு வசதியாய்ப் போய் விட்டது. உண்மையில் செல்ஃப் எஸ்டீம் என்று சொல்லக் கூடிய சுய பார்வை மதிப்பீடு மனிதனுக்கு வேண்டும்....

அது இல்லை என்றால்...கண்கள் இருந்தும் பார்வையற்றவர்கள்தான்...! சக்தி இருந்தும் அதை பயன் படுத்த தெரியாதவர்கள்தான்......இப்படியே போன என் சிந்தனை நிச்சயமாய் கண் தானம் செய்தே ஆக வேண்டும் நம்மால் இயன்ற அளவு ஒரு மனிதனின் பார்வைக்காவது உதவ வேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுக்க வைத்தது....

பரீட்சை மற்றும் வாழ்க்கை பற்றிய பயங்கள்...ஓடி ஒளிந்து கொள்ள....அன்றைய இரவின் உறக்கத்தின் ஆழத்தில் அன்றைய தினத்தின் தெளிவுகளோடு சுகமாய் உறங்கியே போனேன்....!


தேவா. S

Comments

பாஸ் இந்த தமிழ் மீடியம்ல இருந்து மாறுகின்ற அவஸ்தை கஷ்டம் நான் +2 படிக்கறப்ப அனுபவிச்சேன்
//வன் மற்றவர்களுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு தனது கஷ்டங்களுக்கு தானே காரணமகிப் போகிறான். அதற்கு சூழ் நிலையை காரணம் காட்டுவது எப்போதும் பழகிப் போன மனதுக்கு வசதியாய்ப் போய் விட்டது.///

unmai unmai unmai
(டீ, காபி, வடை, சிகரெட் கிடைக்குமிடம்) போய் அமர்ந்து கொண்டு ஒரு டீ வாங்கிக்கொண்டு....உலகத்தில் சாதிக்காததை சாதித்து விட்டது போல....பேசிக் கொண்டிருப்போம்..../////

இம்சை அரசன் terror, உங்களை தான் சொல்கிறார்
அவுகளுக்கு எதுக்கு லைட்டு..... கூறு கெட்ட கேள்வி கேக்குறியே நீ யாருய்யா? "///

இந்த பதிவை பற்றி யாரவது கேள்வி கேட்டா
க ரா said…
நல்ல பதிவுண்ணா :)
Anonymous said…
அவுகளுக்கு எதுக்கு லைட்டு..... கூறு கெட்ட கேள்வி கேக்குறியே நீ யாருய்யா? "
//
நல்லாதான் கேள்வி கேட்ருக்கு அந்த அக்கா..நாந்தான் வாரியர் தேவா என கம்பீரமாக சொன்னீர்களா அண்ணே?
தேவா அவர்களுக்கு மிக்க நன்றி இந்த பதிவிற்கு,
//தன்னம்பிக்கையின் வேர்கள் என்னுள் பரவ மாற்றுத் திறனாளிகளின் மலர்ச்சியும் சந்தோசமும்...உதவியது//
மாற்றுத் திறனாளிகள் பலர் தன்னம்பிக்கை உடையவர்கள் தான். ஆனால் அவர்கள் மீதான மற்றவகளின் பார்வை நபருக்கு நபர் மாறுபடுகிறது.

ஒரு மாற்றுத் திறனாளியாய் என் அனுபவத்தை கூறுகிறேன். என்னால் சிறு வயதிலிருந்தே நடக்க முடியாது. எங்கு சென்றாலும் என் பெற்றோர்களே தூக்கிச் செல்வார்கள். அப்போது பலர் என்னை விநோதமாக பார்ப்பார்கள். சிறு வயதில், அது எனக்கு ஒரு மாதிரியாய் இருந்தது ஆனால் பழகிவிட்டது. தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த என்னிடமும் என் ஊனம் என்னை சாய்த்தது. ஊனம் என்ற வார்த்தை இங்கே குறிப்பிடக் காரணம் அப்படி காரணம் காட்டியே என் படிப்பு 4 வருடங்களுக்கு முன் பாதியில் பறிக்கப்பட்டது.

எங்களைப் போன்றவர்கள் சிலருக்கு இரக்கப் பார்வை பிடிக்காது. ஆனால் நான் சொல்வது இரக்கம் கூட பட வேண்டாம் ஆனால் ஏளனம் செய்யாதீர்கள். தங்களின் இந்த பதிவு என் உணர்வை மிகவும் தூண்டி விட்டது. எங்களை தன்னம்பிக்கை ஊற்றாய் நினைத்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.
ஹேமா said…
கண் இருந்தும் பார்வையற்றவர்களாக இருப்பவர்களுக்கு வெளிச்சம் தரும் பதிவு தேவா !
dheva said…
எஸ்.கே... @

I SALUTE AND RESPECT YOU BOSS!!!!!! THANK YOU FOR UR VALUBALE COMMENT.....AND FIRST TIME AM RECEIVING SUCH A SENSITIVE...LOVEABLE COMMENT....

IT DEFINATELY BOOSTING ME... BOSS...!


THANK YOU ...!
Kousalya Raj said…
//தங்களின் இந்த பதிவு என் உணர்வை மிகவும் தூண்டி விட்டது. எங்களை தன்னம்பிக்கை ஊற்றாய் நினைத்த தங்களுக்கு மிக்க நன்றிகள்//

இதுதான் ஒரு நல்ல (மனிதனின்) எழுத்தாளனின் வெற்றி....தேவா உங்கள் பதிவு ஒருத்தரின் உணர்வை எந்த அளவு தொட்டு இருக்கிறது என்பதை பின்னூட்டத்தில் படித்ததும் கண் கலங்கி விட்டேன்.

சகோதரர் எஸ். கே, உங்களின் வார்த்தைகள் மனதில் அப்படியே பதிந்து விட்டது. ஒரு உடல் குறையும் இல்லாமல் உள்ளத்தில் குறைகளை வைத்து கொண்டு தன்னம்பிக்கை இன்றி அலைபவர்களை விட நீங்கள் மிக சிறந்தவர் சகோ. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

தேவா.....வாழ்கையில் பல மாற்று திறனாளிகளை சந்தித்து இருப்போம்...உங்கள் பார்வையின் மாறுபட்ட கோணம்..... உங்களுக்குள் தன்னபிக்கையை விதைத்த தருணம்.... மிக அருமை . நம் வாழும் வாழ்கையும் சொல்லும் வார்த்தையும் ஒரு அர்த்தத்துடன் இருக்க வேண்டும் என்பதை நன்றாகவே புரிய வைக்கிறது.

இருவருக்கும் என் நன்றிகள் பல.
jothi said…
//சற்று முன் எரிச்சலாக இருந்த வாழ்க்கை இப்போது எனக்கு ஏதேதோ கொடுத்து இருப்பதாக நம்பினேன். எப்போதும் இல்லாததை நோக்கி ஓடும் மனம் இருப்பதை கொண்டு திருப்தி கொள்வது இல்லை என்பதையும் உணர்ந்தேன்.....//

அனைவரின் வாழ்க்கையிலும் இதுபோல் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் நிகழ்வது உண்டு அதை மனதுள் வாங்கி சிந்தித்து வாழ்கையை சீர்துக்கி பயனுள்ள வாழ்க்கை வாழ பழகிக்கொள்ளவேண்டும் . சிந்தனையை தூண்டிய நல்ல பகிர்வு தேவா ..
வினோ said…
/வாழ்வின் பக்கங்களில் ஒவ்வொரு மனிதனும் சிறப்பானவன்தான் ஏனோ அவன் மற்றவர்களுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு தனது கஷ்டங்களுக்கு தானே காரணமகிப் போகிறான். அதற்கு சூழ் நிலையை காரணம் காட்டுவது எப்போதும் பழகிப் போன மனதுக்கு வசதியாய்ப் போய் விட்டது. உண்மையில் செல்ஃப் எஸ்டீம் என்று சொல்லக் கூடிய சுய பார்வை மதிப்பீடு மனிதனுக்கு வேண்டும்... /

அண்ணே இது அனைவருக்கும் வேண்டும்.. இப்படி சுய பார்வை இருந்தால் அனைத்தும் சுகமாய் அமையும்..
// எப்போதும் இல்லாததை நோக்கி ஓடும் மனம் இருப்பதை கொண்டு திருப்தி கொள்வது இல்லை என்பதையும் உணர்ந்தேன்//
உண்மை தாங்க...
சிந்தனையை தூண்டிய நல்ல பகிர்வு.
vinthaimanithan said…
நிஜமான கல்வி பாடப்புத்தகங்களுக்கு வெளியேதான் இருக்கின்றது என்பதை உணர்த்தும் கதை! வாழ்த்துக்கள்!

"அவர்கள் தமது தடித்த புத்தகங்களினால் என் விரைகளை நசுக்குகிறார்கள்!" என்ற ஒரு கருப்பினக்கவிஞனின் கவிதைவரிகள் நினைவுக்கு வருகின்றது...
@எஸ்.கே

//எங்கு சென்றாலும் என் பெற்றோர்களே தூக்கிச் செல்வார்கள்.

I Salute ur parents.

//அப்போது பலர் என்னை விநோதமாக பார்ப்பார்கள்.//

அவங்க கிடக்கானுங்க பங்காளி மனசுல ஊனம் பிடிச்ச பசங்க.

//எங்களைப் போன்றவர்கள் சிலருக்கு இரக்கப் பார்வை பிடிக்காது.//

இதை சொல்லும்போதே நீங்க ஜெய்ச்சிட்டிங்க பாஸ்.

//நான் சொல்வது இரக்கம் கூட பட வேண்டாம் ஆனால் ஏளனம் செய்யாதீர்கள்.//

அதுங்கள எல்லாம் “நான் கடவுள்” மாதிரி வாழ தகுதியற்ற ஜென்மங்கள் சொல்லி போட்டு தள்ளனும்.
@தேவா

//தங்களின் இந்த பதிவு என் உணர்வை மிகவும் தூண்டி விட்டது. எங்களை தன்னம்பிக்கை ஊற்றாய் நினைத்த தங்களுக்கு மிக்க நன்றிகள்//

மாப்ஸ்!! நீ மறுபடியும் ஜெய்ச்சிட்ட மாப்ஸ்... இப்பொ எல்லாம் உன் எழுத்து மூளை தாண்டி இதயத்துல போய் நிக்குது.... (அறிவை தாண்டி மனச தொடுகிறது...)
Anonymous said…
ரொம்ப நல்ல பதிவு அண்ணா!
தேவா அண்ணன் இன்னொரு முறை அருமையான பதிவு .உங்களுக்கு என் அனபான வணக்கம். ஒவ்வெரு பதிவிலும் என்னக்கு பிடித்த வரிகள் என்று போடுவேன் .இந்த பதிவில் எனக்கு பிடித்த வரிகள் இதோ

//எப்போதும் இல்லாததை நோக்கி ஓடும் மனம் இருப்பதை கொண்டு திருப்தி கொள்வது இல்லை என்பதையும் உணர்ந்தேன்.....//

@s .k .
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை .
குறை இல்லாத மனிதன் உலகத்தில் யாருமே இல்லை மக்கா.இங்கு மனிதர்கள் நிறைய பேர் மனதில் ஊனத்துடன் இருக்கிறார் .
நீங்கள் என் முன்னால் இருந்தால் அப்படியே உங்களை கட்டி பிடித்திருப்பேன் (அப்படியே நீங்களும் கற்பனை செய்து கொள்ளுங்கள் ).மேலும் நீங்கள் சிறந்து இருக்க வாழ்த்துக்கள் மக்கா
Ama APSA collegelaya padichchinga? Nachchiyarla padam pathingala... College poningala?
dheva said…
ஆமா...குமார். அங்கதான் படிச்சேன்.... நாச்சியார்லதான் படம் பார்ப்போம்.. நீங்க??? எப்டி சொல்றீங்க... நீங்க திருப்பத்தூரா?
movithan said…
ஒரு ஆணித்தரமான கதைக்கருவை நீங்கள் விரிவாக்கும் போக்கே தனி........

வார்த்தைகள் வாசிக்கும் போது மனதிலும் ஒலியாய் காதுகள் வழியே சென்று மூளையிலும் ஒரே நேரத்தில் இரண்டு விதங்களில் உள்ளே ஏறி உட்கார ஆரம்பித்து விட்டது.

மனம்,மூளை இரண்டும் ஒன்றுதானே சார்.
///கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பக்ஸ் கடையில் (டீ, காபி, வடை, சிகரெட் கிடைக்குமிடம்) போய் அமர்ந்து கொண்டு ஒரு டீ வாங்கிக்கொண்டு....உலகத்தில் சாதிக்காததை சாதித்து விட்டது போல....பேசிக் கொண்டிருப்போம்....அப்போதைய மனோ நிலையில் நாங்கள் எல்லாம் மாவீரர்கள்...கல்லூரி உள்ளே ஒழுங்காய் படிப்பவர்கள் எல்லாம் பால்வாடிகள்(nursery)...அப்படிதான் நினைத்துக் கொள்வோம். சொல்லுங்க அப்புறம் எப்படி பரீட்சையில் பாஸ் பண்றது....?//

இப்படி நிறைய மாவீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..! வேறு என்ன செய்வது .. ? மொழிப் பிரச்சினை அநேக இடங்களில் பாடாய்ப் படுத்துகிறது அண்ணா ..!
//தன்னம்பிக்கையின் வேர்கள் என்னுள் பரவ மாற்றுத் திறனாளிகளின் மலர்ச்சியும் சந்தோசமும்...உதவியது....! //

அழகான கட்டுரை அண்ணா ., தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கின்றது ..
மேலும் மகிழ்ச்சிக்கான எல்லைகள் நமது மனதின் எல்லைகளே அன்றி மற்றவர்களின் பார்வையில் அது இல்லை என்பதும் உண்மையே.
எஸ்.கே அவர்களுக்கு எனது பாராட்டினை தெரியப்படுத்துகிறேன் ..!!
Unknown said…
தன்னம்பிக்கையூட்டும் அருமையான பதிவுங்க..
அன்புள்ள அண்ணா... தங்களுடைய எல்லா பதிவுகளையும் நான் படிப்பதுண்டு... அதில் பல ஏன் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கும்... அவைகளில் பல என்னை பாதித்ததுமுண்டு... பல பதிவுகள் என்னை யோசிக்க வைத்திருக்கிறது... சில பதிவுகளில் நான் என்னை பார்க்க முடிக்கிறது... எல்லாவருக்கும் அன்மைந்து விடாது எண்ணங்களை எழுத்துக்களாக்கும் அற்ப்புத கலை... உண்மையை சொல்ல போனால் உங்க பதிவுகளுக்கு எப்படி கமெண்ட் போடுறதுன்னே எனக்கு தெரியல... அதனால தான் பல சமயம் நான் ஓடி ஒளிய வேண்டியிருக்கு.,.. ஆனால் ஒளிந்து கொண்டே ஓரமாக நின்று உங்கள் எழுத்துக்களை காதலித்துக் கொண்டு தானிருக்கிறேன்...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த