Skip to main content

உமா....!



























சிவா இன்னமும் கத்திகிட்டேதான் இருந்தான்..........கொஞ்ச நாளாத்தான் அவனுக்கு இந்த புத்தி. எப்ப பாத்தாலும் ஏதாச்சும் குத்தம் கண்டு பிடிச்சு கத்துறது. ஆமா நாய்னு சொல்ல ஆசைதான் ஆனா கழுத்துல தாலி கட்டிட்டா கொலையே பண்ணினாலும் அவனை கும்பிட்டு கொண்டாடடுணும்னு படிச்சு படிச்சு சொல்லிக் கொடுத்து இருக்காங்க.....அபியோட ஸ்கூல் பஸ் இப்ப வந்துடும் இன்னும் ஒரு 10 நிமிசத்துல அதுக்குள்ள நான் அவளுக்கு லஞ்ச் ரெடி பண்ணி பாக்ஸ்ல வச்சு....அச்சோ 6 வயசு பொண்ண ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள.... பெண்டு நிமிருது...

இவன கல்யாணம் பண்ணி தொலைச்சு...அச்சச்சோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் என்னவோன்னு பேசுறவங்க எல்லாம் என்னை திட்டுவீங்க.. சரிதானே..? நல்லா திட்டுங்க.... அடுத்தவங்களை தன் கூட கம்பேர் பண்ணி திட்றதுதானே நம்ம பொழைப்பு.. !

என் கஷ்டம்னு என்னனு நீங்க தெரிஞ்சுக்க வேணாம் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க...? போங்க.. நீங்க போய் உங்க வாய்க்கு வந்த படி என்னைய ஊர்ல எல்லோர் கிட்டயும் சொல்லுங்க...நம்பி காதலிச்சு கல்யாணம் பண்ணி வந்து குடித்தனம் பண்றேனே என் புருசன்...அவரே சொல்லும் போது நீங்க எல்லாம் என்ன? பஜாரின்னு சொல்லுங்க.. அடங்கா பிடாரின்னு சொல்லுங்க.. திமிர் பிடிச்சவன்னு சொல்லுங்க...! ஆமாம் கோபப்பட்டு எதித்து நின்னு அநியாயத்தை கட்டுன புருசனா இருந்தாலும் கேள்வி கேக்குறவள அப்டிதானே சொல்லுவீங்க...

ஸ்கூல் பஸ்ல பாப்பாவை ஏத்தி விட்டாச்சு குளிச்சுட்டு.. வரலாம்னு தலைய அவுக்க ஆரம்பிச்ச் நிமிசத்துல....சுரீர்னு முதுகுல ஒரு அடி.........திரும்பி அசுர வேகத்துல பாத்தா.. எனக்காக உயிரையே கொடுப்பேன்னு தொரத்தி தொரத்தி காதலிச்சு.....கை புடிச்ச சிவா.......முகம் சிவக்க உதடு துடிக்க.....

எதுக்கு இப்ப என்னை அடிச்ச நீ? ம்ம்ம்ம் கோபத்தில் எதுக்குடான்னு வந்த நாக்கை கலாச்சார கத்தி வந்து கட் பண்ணி பின்னுக்கு தள்ளியது....! எவ்ளோ நேரம்டி..? எவ்ளோ நேரம் நான் கத்திகிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு ம*** ரு போச்சுன்னு உன் பாட்டுக்கு வேலைய பாத்துகிட்டு இருக்க?

இதைத்தாண்டி இதைத்தாண்டி .. இதத்தான் சொல்றேன் நீ என்ன மதிக்க மாட்டேன்றனு... அதுவும் வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து.....ஏன்...ஏன்.. ? நானும் உன்னை பாத்துட்டு தாண்டி இருக்கேன்.... பியூட்டி பார்லர் போறதும், லிப்ஸ்டிக் வாங்குறதும், மஸ்காரா வாங்குறதும், ஹேர் ஸ்ப்ரே வாங்குறதும்... ரொம்பத்தான் ஆடுற என்னடி எவன மயக்க இது எல்லாம்....

தலையை அவிழ்த்த படி கேட்டேன்.... ஏன் சிவா? இது எல்லாம் செஞ்சா வேற யாரயாச்சும் மயக்கத்தான் செய்யணுமா? உருகி உருகி காதலிச்சப்ப ஐ ப்ரோ நீ த்ரடிங் பண்ணினாதான் நல்லா இருக்குன்னு சொல்வ? போட்டு இருக்க பெர்ப்யூம் உனக்கு ஆப்ட்டா இருக்குடினு சொல்வ? கெஞ்சுவ குழைவ? என்ன...என்ன...அது எல்லாம் பொய்யா? மனசுல இருந்த கொஞ்ச நஞ்ச காதலையும் ஆதங்கமாய் கொட்டி கேட்டேன்..நான்!

ஏய் பசப்பாதடி...? அதான் ஆபிஸ்ல இருந்து நைட் எல்லாம் கால் வருதே.. .அது என்ன இது என்னனு கேட்டு...எனக்கு தெரியாதா உன்னை பத்தி...ஏன்டி நான் அலுத்து போய்ட்டேனா உனக்கு....திராவகத்தை எடுத்து காதில் ஊற்றினான் சிவா....

உமா,, உமான்னு சுத்தி சுத்தி வருவியேடா பாவி..என்ன பாத்தா பசப்புறேன்னு சொல்ற...! ஆபிஸ் வேலை நிமித்தமா அதுவும் ஏதாச்சும் அவசரம்னா அதுவும் நூறு எக்ஸ்கியூஸ் சொல்லிட்டுதானே என் ஆபிஸ்ல இருந்து பேசுறாங்க அதுவும் உன் முன்னாலதானே பேசுறேன்.சிவா!

சந்தேக புத்தி பொதுவாவே ஒரு கேவலமான வியாதி....அதுவும் கட்ன பொண்ட்டாடியை சந்தேகப்படுறவனோ இல்லை புருசன சந்தேகப்படுறவளோ சந்தேகமே இல்லாம நரகத்துலதான் வாழ்றாங்க. தப்பு பண்ணாத பொண்ணுக இல்லாம இருக்க மாட்டாங்க...அதுல ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லை.. ஆனா கூட இருக்கவனோ இருக்கவளோ தப்பு பண்றான் இல்லை பண்றான்னு உணரக் கூட சக்தியில்லாத மிருங்களா நாம எல்லாம்?

பெரும்பாலும் இந்த குற்றாச்சாட்டு விழுறது என்னைய மாதிரி பொண்ணுக மேலதான்... கொஞ்சம் சந்தோசமா வாய்விட்டு சிரிச்சா கூட " பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சாபோச்சுனு " பழமொழிய சொல்லி கட்டுப்படுத்து வாங்க.....யோசித்த படி சிலையாய் நின்று கொண்டிருந்த என்னை....

தே******யா என்று தவறான தொழில் செய்யும் ஒரு பொதுப் பெயரச்சொல்லி கூப்பிட்ட படி என்னாடி காதுல விழாத மாறி நிக்கிற... ஓடி வந்து செவுட்டில் அவன் அடித்த அடி காதுகளின் வழியே ஊடுருவி மூளைக்குள் பரவி உடம்பெல்லாம் அதிர வலியில் கண்ணீரை வரவழைத்தது...

யோசனை பண்ணிகிட்டு இருந்த எனக்கு உடம்பு எல்லாம் ஆட ஆரம்பிச்ச உடனே.. வலில...என்ன பண்றதுனு யோசிச்சுட்டு இருந்த அடி தாங்க முடியாம நங்குன்னு செவத்துல மோதி திரும்பி முறைச்சு பாத்தேன்.. அவனை.....த்தூ....மூஞ்சில காறி துப்பினேன்...

பொண்டாட்டிய அடிக்கிற கை நீட்டி? இதுக்குதான் எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்ப வளர்த்து வச்சிருக்கியா நீ...? நான் திருப்பி அடிக்க எவ்வளவு நேரம் ஆயிடும் உன்னைய...காதலிச்சுதானே உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன்...என்ன அடிச்சு வேணா கொல்லு ஆனா திமிரா செய்யாத....அத.., என் நடத்தைல ஏன்டா சந்தேகப்படுற...

ஒரு ஆம்பளை எத்தனை மணிக்கு வேணா வரலாம்... எத்தனை பொம்பளை கூட வேணா தப்பாவே கூட பேசாலாம், என்ன ஸ்டைல் வேணா பண்ணலாம்...அப்டி எல்லாம் பண்ணினா அவனை தேவடியாத்தனம் பண்ற பொறம்போக்குனு ஏன்டா சொல்ல மாட்டேகிறீங்க.....?

நீ கூடத்தான் என்கிட்டயே பந்தா பண்னியிருக்க நீ வேலை பாக்குற உன்னோட கம்பெனில இருக்குற பொண்ணுகள பத்தி... நீ பொண்னுகள பத்தி பேசி என்கிட்ட பந்தா பண்ணினா உன்னைய நான் ஹீரோவா நினைக்கணும்..ஆனா என்ன மாதிரி வேலைக்கு போற பொண்ணுக ப்ரசண்டபிளா இருக்கணும்னு உடை உடுத்திகிட்டு போனா அலங்காரம் பண்ணிகிட்டா அது தேவடியாத்தனமா?

பொம்ளைய மட்டும் சொல்லி அதுக்கு பெண்பால்ல பேரு வச்சிச்சு பாரு இந்த சமுதாயம் இது திருந்தணும் அப்பத்தான் உன்னை மாதிரி ஆளுங்களும் திருந்துவாங்க...ஏன் சிவா ரெண்டு பேரும்தான் வேலை பாக்குறோம்..என்னிக்காச்சும் உன்னைய நான் சமைன்னு சொல்லியிருக்கனா? ரெண்டு பேரும் தானே சாப்பிடுறோம்? இல்லை கிச்சன் பக்கம்தான் நீ வந்து இருக்கியா? சமைக்கிறது சாப்பிடறதுக்குதானே.. வேலைக்கு போகாம வீட்ல இருக்குற பொண்ணா இருந்தா சமைச்சு போட்டா சரி.... ரெண்டு பேரும் தானே சம்பாரிக்கிறோம்..! சம்பாரிச்சு கொண்டு வந்து உன்கிட்டதானே கொடுக்குறேன். நீயும் வந்து கிச்சன்ல சமைக்க வேண்டியதுதானே...?கேக்குறேன்ல சொல்லு சிவா ?

புள்ளைய ஸ்கூல் அனுப்பறதுல இருந்து, துணி மணி தொவைக்கிறதுல இருந்து....உன் ஜட்டி பனியன் வரைக்கும் நாந்தானே தொவச்சு போடுறேன்...என்னிக்காசும் எனக்கு புடவை ஜாக்கெட் தொவச்சு கொடுத்திருக்கியா.. அது என்ன சிவா நியாயம்..? ஊர்ல பொண்டாட்டி புருசனுக்கு செஞ்சா அது கடமை...புருசன் பொண்டாட்டிக்கு செஞ்சா புருசன பொண்டாட்டி கைக்குள்ள போட்டுகிட்டானு கேவலமா ஒரு பேச்சு....என்னாது இது எல்லாம்?

இத பார்... வேலைக்கு போறதுக்கு முன்னால உன்னை கேட்டுத்தான் போனேன். இனிமே அதுவும் செய்யப் போறது இல்லை...! உன்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.. நீ அடிக்கு ஒரு தடவை என்ன சந்தேகப்பட்டுதான் வாழணும்னு முடிவு பண்ணி இப்டி கொடுமைப் படுத்தின....நான் போலிஸ்ல கம்ப்ளெய்ன் கொடுக்கவும் தயங்கமாட்டேன்...

சரி சரி.. உனக்கு ஆபிசுக்கு நேரமாச்சு..சிவா..டிபன் எடுத்து டேபிள்ள வச்சு இருக்கேன்.. துன்னுட்டு கிளம்புற வழியப்பாரு... எனக்கும் டூட்டிக்கு நேரமாச்சு.... வெட்டியா சந்தேகப்பட்டு சண்டை போட்டு என்னாத்த கிழிக்கப்போறொம்... காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் போதாது.. புள்ளைய பெத்துகிடுறது மட்டும் சாதனை இல்லை...அதை மரியாதையா வளர்க்கணும்....

உன் பயம் எல்லாம் என்ன....? உமா நம்மளை விட்டு வேற ஒருத்தன் கூட போய்டுவாளோ? இப்டி வெளில எல்லாம் போறாளே? அலங்காரம் பண்ணிக்கிறாளே? அப்படின்னுதானே நினைக்கிற...இந்த கேவல எண்ணம்தான் சந்தேகத்தோட அடிப்படை.....அப்படி எல்லாம் எல்லோரும் போய்டமாட்டங்க சிவா... !

எல்லோருக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு, காதல்னு ஒண்ணு இருக்கு அதுல ஒருத்தரதான் நினைச்சுகிட்டு இருப்பாங்க...! பாக்குறவங்க பேசுறவங்க எல்லாரும் மனசுக்குள்ள வரமாட்டாங்க.. அதுவும் ஒரு பொண்ணுக்கு இந்த வைராக்கியம் ஜாஸ்தி...! விளையாட்டுக்கு கூட அப்படி தப்பா போய்டமாட்டா அப்படியே போனாலும் அதுக்கு பின்னால ஏதோ சில காரணங்கள் இருக்கும்...

தப்புன்னு பண்றவங்க ஆண்லயும் இருக்காங்க.. பொண்ணுகள்லயும் இருக்காங்க...ஆனா அதை உதாரணமா வச்சுகிட்டு வாழ முடியாது...சிவா... ! உன் கோவத்தை கொறச்சுக்கா மறக்காமா சாப்டுட்டு ஆபிஸ் கிளம்பு நான் குளிக்கப் போறேன்...பட்டினியா மட்டும் போய்டாத ப்ளீஸ்...!

பேசி முடிக்கிறவரைக்கும் சிவா ஆடாமா அசையாம என்னையே பாத்துட்டு இருந்தான் சிவா....அவனைச் சொல்லி குத்தம் இல்லை...உயிருக்குயிரா நேசிச்சு வீட்டை எதித்து என்னை கல்யாணம் பண்ணிகிட்டான்....ஆம்பிளைங்க மனசுக்குள்ள ஏகப்பட்ட அழுக்குகள சேத்து வச்சிருக்கறதுக்கு காரணம் இந்த சமுதாயமும், கற்பிதங்களும்தான்...

ஷவரை திறந்து விட்டேன்..........குளிர்ச்சியாய் சில்லென்று உடம்பு முழுதும் பரவியது தண்ணீர்.....

செருப்பு மாட்டி வீட்டை விட்டு இறங்கும் போது......சிவா சாப்பிடத் தொடங்கியிருந்தான்.. ! கோவம் இன்னும் முகத்தில் இருந்தது...பாய் சிவா.. ஐம் லீவிங்.. சேஃபா வண்டி ஓட்டிட்டுப் போ...டோண்ட் டேக் இட் இன் யுவர் ஹெட்.....!.சொல்லி விட்டு பஸ் ஸ்டாப் நோக்கி ஓடினேன்....

எனக்கு இன்னிக்கு செகண்ட் ஷிப்ட்....

பேருந்து விட்டிறங்கி டைம் ஆபிஸில் கார்டு பஞ்ச் பண்ணிட்ட்டு...உள்லே போய் யூனிபார்ம் சாரி கட்டிக் கொண்டு... ரெஸ்ட் ரூமில்....என் புருவம் திருத்தினேன், உதட்டில் உறுத்தாத சாயம் பூசினேன்....இமைகளுக்கு மஸ்காரா கொடுத்த அழுத்ததில் கண்கள் பளீச்சென்று இருந்தது....ஹேர் ஸ்ப்ரே எடுத்து தலைக்கு அடித்து....படிய வாரி...ரப்பர் பாண்ட் போட்டு இறுக்க அள்ளிக் கட்டினேன்....

சிலீர் என்ற வரவேற்பரையின் ஏசி உடம்புக்குள் ஊடுருவ அந்த நான்கு நட்சத்திர ஓட்டலின் வரவேற்பரை கவுண்டர் உள்ளே நுழைந்தேன்...! என் முந்தய ஷிப்ட் கொலிக்கிற்கு வணக்கம் தெரிவிக்கையில்...இன்டர்காம் சிணுங்கியது....

ரிசப்ஷன் குட் ஈவ்னிங்......குரலில் வழிந்தோடிய புன்னகையும்.. மென்மையும்.. மறுமுனைக்கு போய் சேர்ந்தது...

அறை என் 303 கெஸ்ட்....என்னிடம் குழைந்தார்...ஹாய் இஸ் இட்.. உமா....? சோ.. ஸ்வீட்....யூ ஆர் ஆல் வேய்ஸ் ஸ்மைலிங் அட்ராக்சன் டு யுவர் ஹோட்டல்...! ஹவ் கம் யூ ஆர் ஆல்வேய்ஸ் கீப்பிங்க் ஹாப்பினெஸ் அட் யுவர் பேஸ்...டியர்...?

வட இந்தியவை சேர்ந்த 50+ வயது என்னிடம்...வழிந்தது....

ஓ.. தேங்க் யூ சோ மச் சார்...........ஹவ் கேன் ஐ கெல்ப் யூ சார்?

கேட்டு விட்டு போனை வைத்தேன்...! வேலை சூடு பிடிக்கத் தொடங்கியது...இடது புறம் கன்னமும் காதும் இன்னமும் பயங்கரமாய் வலித்துக் கொண்டுதான் இருந்தது...

மனம் ....சிவாவையே நினைத்துக் கொண்டிருந்தது... ஐ... லவ் யூ சோ மச் டா சிவா......!

குரூப் புக்கிங் கூட்டமாய் வந்து மனிதர்கள் சூழ..அந்த நாள் என்னை விழுங்கத் தொடங்கியிருந்தது....!


தேவா. S


Comments

அருமையா இருக்கு மக்கா......
பல இடங்களில் நடப்பவைதான்...
உங்கள் பாணியில் உமாவாக வாழ்ந்திருக்கிறீர்கள்.
அருமை அண்ணா.
ரொம்ப நல்லாயிருக்கு இது மாதிரி இப்ப பல இடங்களில் நடக்குதே. பிடிச்ச விசயம் அவ்வளவு செஞ்சாலும் அவங்க கணவர் மேல இருக்கிற அன்பு!
கதை நன்றாக உள்ளது ......(யாராவது வந்து template கமெண்ட்ஸ் சொல்லுவாங்க ....உண்மைலேயே கதை நல்ல இருக்குப்பா )
கதை, நடை நல்லா இருக்குங்க சகோ...

ஆனா, எல்லா விசயமும் அந்த "உமா" இந்த உலகத்துக்கும் கலாசாரத்துக்கும் பயந்துதான் அப்படி நடந்துக்கற மாதிரி இருக்கே!

// மனம் ....சிவாவையே நினைத்துக் கொண்டிருந்தது... ஐ... லவ் யூ சோ மச் டா சிவா......! //

இந்த ஒரு வரியைத் தவிர...

ஆனா, பெண்கள் இவ்வளவு விட்டுக்கொடுத்துப் போனாலும், ஆண்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்களா? இந்த கதையின் நாயகன் "சிவா" வைப்போலவே!?? :((
இது நீங்க எழுதுனதுனு சொன்னா என்னால நம்ப முடியல தேவா....!

லிப்ஸ்டிக், மஸ்காரா, பெர்ஃப்யூம் பத்தி யார்வேணா எழுதலாம். ஆனா...

//இடது புறம் கன்னமும் காதும் இன்னமும் பயங்கரமாய் வலித்துக் கொண்டுதான் இருந்தது...

மனம் ....சிவாவையே நினைத்துக் கொண்டிருந்தது... ஐ... லவ் யூ சோ மச் டா சிவா......!//

இது CHANCELESS... எல்லாராலும் ஆண்களாலும் எழுத முடியாது. அதே போல் எல்லாப் பெண்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உணர்ந்தவர்களுக்கு இந்த வரிகள் அவர்களது உயிரைத் தொட்ட உணர்வு ஏற்படுவது உறுதி.

I am spellbound reading this article.
dheva said…
கவி நா @

1) உமா பயப்பட்ட மாதிரி தெரியுதா.. அது அவளுக்கு சிவா மேல இருக்க காதல் தாங்க...சகோதரி....!

2) ஆண்கள் விட்டுக் கொடுத்து போவதில்லைனு எப்டி சொல்ல முடியும்? விட்டுக் கொடுத்து போறதுன்ற வார்த்தையை எடுத்துடுறேன்...ஆனா... புரிஞ்சு போய்கிட்டுதான் இருக்காங்க.. ! அப்படி இல்லாத சிலருக்காகத்தான் கதையே....

கதை எழுதியதும் ஒரு ஆண்தானே சகோதரி...!
Kousalya Raj said…
இதை கதை என்று எண்ண முடியவில்லை... யதார்த்தம்.

ஒரு சில கணவர்களிடம் இருக்கும் இந்த 'தான்' என்ற மனோபாவம் பல மனைவியரின் வாழ்வை சிதைத்து கொண்டிருக்கிறது. அதுவும் உமா மாதிரி வேலைக்கு போகும் பெண்களின் நிலை வேதனை. எல்லாம் சகித்துக் கொண்டு தனக்குள்ளே புதைத்துக் கொண்டு வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள்.

//அழுக்குகள சேத்து வச்சிருக்கறதுக்கு காரணம் இந்த சமுதாயமும், கற்பிதங்களும்தான்...//

பெண் தன் கோபத்தை பல இடங்களில் காட்டி இருந்தாலும், ஆணை மட்டுமே குறை சொல்லாமல் சமூதாயத்தை சுட்டி காட்டியவிதம் மிக பிடித்து இருக்கிறது.

//மனம் ....சிவாவையே நினைத்துக் கொண்டிருந்தது.//

பெண்களிடம் இந்த அன்பு, பாசம் மட்டும் இல்லை என்றால் பல ஆண்களின் நிலை கவலைக்கிடம் தான்.

பெண்ணின் மனநிலையில் நின்று மிகஇயல்பான வார்த்தை பிரயோகம். ஆனால் கதை மனதை ஏதோ செய்கிறது.
VELU.G said…
ரொம்ப அருமை

கதை அப்படியே ஆற்றின் பிராவாகமாக பொங்கி ஓடுகிறது
Chitra said…
தேவா, ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.... உங்கள் எழுத்து நடை, மேலும் மெருகூட்டுகிறது.
க ரா said…
photo va parthu payanthiten nan..
aparamana kathai na ..
Radha said…
possessive/conditional love and unconditional love...always the latter wins !!
ஹேமா said…
தேவா...இப்படிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளைக் கேட்டும் பார்த்துமிருந்தாலும் நீங்கள் சொல்லும் விதம் அதன் அழுத்தம் ரசிக்க வைக்கிறது அப்படியே !
kadhai கதை நல்லாருக்கு.. பிளாக்கின் லே அவுட் பக்காவா நீட்டா இருக்கு
இல்லை, "ஆண்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்களா?" னு கேள்வி தான் கேட்டேன் சகோ. அதுவும் உங்க கதையின் முடிவை வெச்சுதான் கேட்டேன்.

மத்தபடி, எல்லா ஆண்களையும் அந்த மாதிரி நான் பார்க்கல.

ஒரு பெண்ணோட கஷ்டத்தை ஒரு பெண்ணிங் பார்வையிலேயே நீங்க எழுதியிருக்கும் விதமே சொல்லுதே, எல்லா ஆண்களும் அப்படியில்லைன்னு.

நன்றி சகோ புரிதலுக்கு...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த