Skip to main content

தனி...!





















கேள்விகளும் பதில்களும் பொய்யே...............இதுவும் ஒரு நாடகமே!

நேற்றைய பதிவின் நீட்சி....

அடிக்கடி உங்கள் உலகம் வேறு, வேறு என்று சொல்கிறீர்களே? உங்கள் உலகம்தான் என்ன? அங்கு யார் இருக்கிறார்கள்....?

இப்படி ஒரு கேள்வி கேட்டால் 3 பாகம் எழுதலாம்.........! திட்டமிடல் இல்லாமல் மனதில் தோன்றியதை லைவ் ரிலேயாவே எழுதி விட்டேன். கட்டுரையின் போக்கிலேயே நானும் போய் விட்டேன். நீங்களும் வாங்க........

சத்தியத்தில் என் உலகில் நான் மட்டுமே இருக்கிறேன். கொஞ்சம் வேடிக்கையாக பார்ப்பவர்களுக்கு என்னை பைத்தியக்காரன் என்றே எண்ணத்தோன்றும்...அது பற்றிய கவலையில்லை எனக்கு. என் அன்றாடங்களில் நானும், நானும் இருக்கும் நேரங்கள் மிகுதி. காலை எழும் போதே என்னுள் இருந்து ஒரு வித துள்ளலாய் உடன் எழும் அந்த விசயம் என்னோடு எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்.

மனதுக்குள் பேசுவது ஒரு விதம் இது அவ்விதமன்று..என் இருப்பினை நான் உணர்ந்திருக்கிறேன் தெளிவாகவே..! ஆரம்ப காலங்களில் மனம் என்ற ஒன்று திடப்பட்டு அதோடு இருகி நின்ற பொழுதில் என் உள்முனைப்பை, என்னுடைய விழிப்புணர்வை நான் அறிந்தே இருக்கவில்லை. ஐம்புலனும் புறம் நோக்கி ஓடி பெறும் அனுபவங்களை மூளையில் கிரகித்து அதைக் கொண்டு பலவிதமான உணர்வுகளைப் பெறும். எனக்கு சாதகமான நிகழ்வுகளாக அவை இருக்கும் போது மூளை சந்தோசம் என்ற ஒரு உணர்வினைச் சொல்லி ஒரு விதமான திரவங்களை என் உடலெல்லாம் சுரக்க வைத்து அந்த சந்தோச உணர்வினைக் கொண்டு மனம் ஒரு வித விஸ்தாரிப்பு செய்து, நான் இதைச் செய்து விட்டேன் அல்லது எனக்கு இது கிடைத்து விட்டது என்று ஒரு இறுமாப்பு கொள்ளச்செய்யும்.

அந்த இறுமாப்பானது காணும் மனிதர்களிடம் எல்லாம் என்னைப் பற்றி நான் விவரித்து வைத்திருக்கும் மமதையின் மூலமே பேச்சு நடத்தும், நான் யார் தெரியுமா, இன்ன மாதிரியானவன் என்று தம்பட்டம் அடிக்கும் வகையிலேயே ஒரு வித தொனி இருக்கும்.

ஏதேதோ அனுபவங்கள், நெருங்கிய உறவுகளின் மரணங்கள், நட்புகளின் பிரிவுகள், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஒரு ஒட்டம்...தொடர் சங்கிலியாக எல்லா நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பொழுதுகளில் எல்லோரும் ஏதோ ஒரு கணத்தில் நம்மை விட்டு போய்தானே விடுகிறார்கள். குறைந்த பட்சம் உறங்கும் வேளையிலாவது.....

கல்லூரி முடித்த கையோடு அடுத்து என்ன செய்வது வேலையா இல்லை மேற்படிப்பா என்று தீர்மானிக்கும் பொறுப்பினை என் கையிலேயே கொடுத்து விட்ட அப்பா....!!!!! என்ன செய்வது என்று தீர்மானிக்கவும், சரியான வழிகாட்டலும் இன்றி தனித்து நின்ற நான்....

வட்டாரவளர்ச்சி அலுவலராய் இருந்த அப்பா நினைத்தால் அவரின் நெருங்கிய நண்பரனா எங்கள் ஊர் எம்.எல்.ஏ விடம் சொல்லி வடசேரியில் இருக்கும் கிங் கெமிக்கல்ஸில் என்னை அப்ரஸண்டிஸ் கெமிஸ்ட்டாக சேர்த்து விட்டிருக்க முடியும்....! நண்பர்கள் எல்லாம் என்னிடம் சொல்ல, நான் அம்மாவிடம் சொல்ல...அம்மா தயங்கி தயங்கி அப்பாவிடம் சொல்ல.. அப்பா சொன்ன பதில்.....

" அதெல்லாம் முடியாது..."

அவனே அவன் வழியை பார்த்துக் கொள்ளவேண்டும் என்று என்னை முட்டி மோதி தள்ளிய போது நான் தனியேதான் நின்றேன்.....! எங்களைப் போன்ற கிராமப்புறங்களில் ஊராட்சி ஒன்றியப்பள்ளியிலும், அரசு மேல் நிலைப்பள்ளியிலும் தமிழ் வழிப் படித்தவர்களுக்கு கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி கற்று தேறி வருவதே.....பெரும்பாடு....!

அதுவும் கற்று முடித்து வேலை தேடும் போது சரளமாய் ஆங்கிலம் பேசவேண்டும் என்ற நிபந்தனையில்லாத எந்த நிறுவனம்தான் முக்கிய நகரங்களில் இருக்கிறது.ஒரு பயோடேட்டா எப்படி அடிக்கவேண்டும் என்றூ கூடத்தெரியாமல் முதன் முதலில் கையிலேயே ஒரு பயோடேட்டா தயார் செய்து....எங்கள் ஊர் லைப்ரரிக்கு போய்...ஹிண்டு பேப்பர் எடுத்து எழுத்துக் கூட்டி கம்பெனியின் விளம்பரத்தை பார்த்து...

என் முதல் விண்ணப்பத்தை தமிழக தென் கோடியான தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் இருந்து தபால் வழியாக அனுப்பிய முதல் நாள்.....ஓ...நாமும் ஒரு வேலைதேடும் பட்டதாரியா? என்ற கேள்வியும், ஒருவித சிலிர்ப்பும் எழுந்த போதும் நான் தனியாய் தானிருந்தேன்...

சென்னையிலிருந்து நியூ இன்டியா அஸ்ஸுரன்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை முகவர்கள் வேண்டும் என்றும் நீங்கள் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சென்னைக்கு வரவேண்டும் என்றும் என்னை கடித வாயிலாக அந்த நிறுவனம் என்னை கூப்பிட்ட போது எனக்கு விற்பனை பிரதிநிதி என்றாலே என்ன என்று தெரியாது...

கல்லூரியில் திளைக்க திளைக்க சுற்றிய திமிர் கூடவே இருந்தது.....அது காற்றில் பறந்த காலம் ஆனால் எதார்த்தம் என்னை தர தரவென்று இழுத்து செல்லப்போகிறது என்பது எனக்கு எப்படி தெரியும்? கடிதத்தோடு......சென்னை பயணம்......திருவள்ளுவர் பேருந்து.....கையிலே பெட்டி...பெட்டியினுள் இருந்த இளநிலை பட்டமும், அரைகுறை ஆங்கிலமும், நெஞ்சு முழுக்க இருந்த திமிரும் என்னை எங்கோ கூட்டிச் சென்றுவிடுமென்ற கனவோடு.. கையில் நான் புரட்டிக் கொண்டிருந்த ஒரு பாலகுமாரனின் பல்சுவை நாவலோடு வேலை தேடுவதற்கான என் முதல் சென்னை பயணத்தில் நான் மட்டுமே இருந்த போது வயது 21......

உறவினர் வீட்டிலிருந்து குறிப்பிட்ட அந்த வேலைக்கான நேர்முகத்தேர்விற்காக அசோக் பில்லர் தாண்டி,உதயம் சந்திரன் தியேட்டர் தாண்டி இடப்பக்கம் திரும்பி, வலப்பக்கம் திரும்பி......அந்த கம்பெனி கொடுத்த முகவரியை சென்னை அவ்வளவாக அறிந்திராத நான் கனவுகளோடு அடைந்து...மாடியில் இருக்கும் அந்த அலுவலகத்தை அடையும் முன் கீழே இருக்கும் தேங்காய் கடைக்காரரிடம்...அந்த முகவரி சரிதானா என்று விலாச சரிபார்ப்பு செய்யும் போது அந்த வியாபரி எங்கள் ஊர் அருகே இருக்கும் தம்பிக்கோட்டை என்று அறிந்து கொண்டது அல்ல இப்போது முக்கியம்...அதற்கு அடுத்து அவர் சொன்ன தகவல்தான் முக்கியம்....

நான் இன்டர்வியூக்கு சென்ற கம்பெனி இப்படி பல பேரை அழைத்துள்ளதாம்....அவர்களிடம் பதிவுக்கட்டணமாக ஏதோ வசூலித்து விட்டு.......பிறகு வேலைக்கு நீங்கள் எடுக்கப்படவில்லை என்று சொல்லிவிடுமாம். கடைக்காரார் சொல்லி முடித்துவிட்டு.......நம்ம ஊர் புள்ளையா இருக்கீங்க.....அங்க எல்லாம் போகாதீங்க என்று சொல்லிவிட்டு அவரது அன்பை பகிரும் வண்ணம் கொடுத்த இளநீரை நான் அருந்தும்போது எனக்கு கண்ணீர் வந்ததை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத போது நான் தனியாகத்தான் நின்றிருந்தேன்.....

இப்படியாக என் உலகத்தில் நான் ஜெயித்த போதெல்லாம் கொண்டாட கூட்டமும், தோற்ற போதெல்லாம் என்னோடு நான் மட்டுமே மாறி மாறி நின்று.....நான் என்னோடு இருப்பது மட்டுமே மெய்யெனப்பட்டது.மனிதர்களின் புகழ்ச்சியும்,சூழலும், வரும் போகும்....இது இயல்பு...ஆனால்...நித்தியமானது ஒன்று அது நான் என்னும் என் இருப்பு....!

இப்படி ஆடி ஆடி நான் என்னோடே இருக்கப் பழகிக் கொண்டேன். நட்புகள், உறவுகள், பணம், பொருள், எல்லாம் வரும் போகும்.

யாருமற்று நானிருந்த
என் கருப்பையின் வாசம்...
காலம் எல்லாம் என்...
நாசியில் நெடியடிக்கிறது..!

உடையற்று நிர்வாண...
கோலம் கொண்டு ...
என்னை உந்தித் தள்ளிய
கருவறை விட்டெறிந்த
மாயாலோகமோ....மீண்டும்
என்னை நிர்வாணமாய்
மண்ணறைக்குள் தள்ளும்..
இல்லையேல்...
தீயிலிட்டு பொசுக்கும்..!

இடையினில் இருக்கும்
வாழ்க்கையில்...
மமதைகள் எனக்கெதற்கு...?
நான் பெரியவன் என்ற
பொய்யில் காணும்
கனவுகள் எனக்கெதற்கு...?

சந்தோசமாய்..கூட்டமாய் ஒரு வாழ்வின் ஓட்டத்தில் ஓடித்தான் ஆகவேண்டும். மாற்றவேண்டும் எனில் யாரால் முடியும்? வேண்டாம் என்று மறுத்து விட்டு மரணிக்கவா முடியும்?

இந்த களத்திலே எனக்கான கதாபாத்திரத்தை நானா வடிவமைத்தேன்? வடிவமைத்தது யாரென்றறியாத போதிலும்...கொடுத்த பாத்திரத்தை செய்ய முடியும்தானே? அடிக்கும் படியாக வரும் பந்துகளை அடித்தாடுகிறேன்....அடிவாங்கும் படி வரும் பந்துகளில் அடி வாங்குகிறேன்...தொட முடியாத பந்துகளை விட்டு விடுகிறேன்......

சிக்சர் அடிக்கும் பந்துகளை கவனமாக சிக்சருக்கு அனுப்புகிறேன்....!

சில நேரம் கூட்டம் கை தட்டுகிறது; பல நேரம் கூவி கூவி திட்டுகிறது. யார் என்ன சொன்னாலும், என் ஆட்டமல்லவா? நான் ஆடித் தீர்க்கவேண்டியது அல்லவா? வேறு யாரேனும் விளையாட முடியாத எனக்கே எனக்காய் கொடுக்கப்பட்ட வாய்ப்பல்லவா?

என் உலகம் கனவுகளால் நிரம்பியிருக்கிறது.....அங்கே கவலைகளும் உண்டு சந்தோசங்களும் உண்டு. என் உலகிலெனக்கு அவ்வப்போது எதிரிகள் என்று யாரேனும் வருவார்கள்....தோழர்கள் என்றும் பலர் வருவார்கள்.....எல்லாம் கடந்து செல்லும் ஒரு தடதடக்கும் ரயில் போல, அலையில் மிதக்கும் கட்டை போல....அலைக்கழிந்து, சிலநேரம் நீரில் மூழ்கி, சில நேரம்...மேலே மிதந்து, கீழே தாழ்ந்து....

நான் தனித்தவன் ஆனால் எல்லோரிடமும் சூட்சுமமாய் நிறைந்தவன்! என் உலகில் மனிதர்கள் என்று தனித்தனி அடையாளமிட்டு வருபவர்களும், ஜெயித்தவர்களும், தோற்றவர்களும்....கருவிகளே.....!கருவிகள் தாண்டி கர்த்தாவை பார்த்துக்கொண்டே புன்முறுவலாய் நகர்ந்து கொண்டே இருக்கும் என் வாழ்வில், என் உலகில் யாருமில்லை.....இன்னும் சொல்லப் போனால் நானுமில்லை.

ஸ்தூலமாம் பொருளுக்கு சூட்சுமமே முதல். நான் சூட்சுமங்களின் காதலன்.

முதல் கேள்வி கேட்டவர் என்ன நினைத்து கேட்டிருப்பாரோ தெரியாது........ஆனால்.........பதிலே சொல்ல முடியாதா ஒரு கேள்விக்கு அரைகுறையாய் ஒரு பதில் சொல்லியிருக்கிறேன்.

குற்றமிருப்பின் பொருத்தருள்க;

அடுத்த கேள்விக்கு பதில்...நாளை !

தேவா. S


கழுகின் இலக்கு...



Comments

Unknown said…
// நான் சூட்சுமங்களின் காதலன்.//
Unknown said…
//என் உலகத்தில் நான் ஜெயித்த போதெல்லாம் கொண்டாட கூட்டமும், தோற்ற போதெல்லாம் என்னோடு நான் மட்டுமே மாறி மாறி நின்று.//
Unknown said…
ஆகா... இது நான் எழுதியிருக்க வேண்டிய பதிவு என்று தோணுகிறது. எங்களின் இன்றைய பதிவின் பெயர் கூட தனித்திருப்பவனின் வீதி வழி உலா என்பது தான்..
http://bharathbharathi.blogspot.com/2011/03/blog-post.html
Unknown said…
கேள்வி கேட்டவரை, கேள்விக்கான களம் அனைத்தையும் மறந்துவிட்டு உங்களுக்கான வார்த்தைகளில் பதிவு நகர்கிறது. கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிறுகதையாய் இறுதி வரை நீள்கிறது.
Chitra said…
இப்படியாக என் உலகத்தில் நான் ஜெயித்த போதெல்லாம் கொண்டாட கூட்டமும், தோற்ற போதெல்லாம் என்னோடு நான் மட்டுமே மாறி மாறி நின்று.....நான் என்னோடு இருப்பது மட்டுமே மெய்யெனப்பட்டது.மனிதர்களின் புகழ்ச்சியும்,சூழலும், வரும் போகும்....இது இயல்பு...ஆனால்...நித்தியமானது ஒன்று அது நான் என்னும் என் இருப்பு...



....A matured mind's insight!
Chitra said…
இடையினில் இருக்கும்
வாழ்க்கையில்...
மமதைகள் எனக்கெதற்கு...?
நான் பெரியவன் என்ற
பொய்யில் காணும்
கனவுகள் எனக்கெதற்கு...?


.....அகந்தை, அழிவைத் தரும். தன்னடக்கம் - humility - சிறப்பைத் தருமே - தன்னிலை என்றும் உணர வைக்குமே.
அருமையான பதிவுங்க.
// அடிக்கும் படியாக வரும் பந்துகளை அடித்தாடுகிறேன்....அடிவாங்கும் படி வரும் பந்துகளில் அடி வாங்குகிறேன்...தொட முடியாத பந்துகளை விட்டு விடுகிறேன்......//

INRAIYA SEESANIL VANTHU VILUM VAARTHTHAIKAL ARUMAI. VAALTHTHUKKAL
ஹேமா said…
வாழ்வோடு போராடியதை அழகாகத் தொகுக்கிறீர்கள் தேவா !
உங்கள் நண்பருக்கு இப்போது தெரிந்திருக்கும் உங்கள் எது என்று....!!!
அருமையான பதிவு... அழகாகத் தொகுக்கிறீர்கள்.
VELU.G said…
//ஆனால்...நித்தியமானது ஒன்று அது நான் என்னும் என் இருப்பு....!
//

அந்த நான் யார்?
VELU.G said…
அரைகுறை விளக்கமெல்லாம் இல்லை

இதற்குமேல் இதை தெளிவாக விளக்க முடியாது

அருமை
//எங்களைப் போன்ற கிராமப்புறங்களில் ஊராட்சி ஒன்றியப்பள்ளியிலும், அரசு மேல் நிலைப்பள்ளியிலும் தமிழ் வழிப் படித்தவர்களுக்கு கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி கற்று தேறி வருவதே.....பெரும்பாடு....!//

அட ...எங்க இனமா நீங்க ... :)


//இப்படி ஆடி ஆடி நான் என்னோடே இருக்கப் பழகிக் கொண்டேன். நட்புகள், உறவுகள், பணம், பொருள், எல்லாம் வரும் போகும்.//

//என் வாழ்வில், என் உலகில் யாருமில்லை.....இன்னும் சொல்லப் போனால் நானுமில்லை.//

புத்தர் சொன்ன மாதிரி ...அனாத்மா ......

பட் Anyway I Like நக்மா ..:))
Kousalya Raj said…
உங்கள் உலகத்தில் எதுவும் இல்லை, ஆனால் எல்லாம் இருக்கிறது.

//முதல் கேள்வி கேட்டவர் என்ன நினைத்து கேட்டிருப்பாரோ தெரியாது//

'என் உலகம் வேற' என்று எல்லோரிடமும் நீங்க சொல்ல மாட்டீர்கள்...புரியாதவர்கள் இடத்தில் இந்த வார்த்தையை சொல்லும்போது அவர்களுக்கு இது ஒரு கர்வத்தின் தொனியாக தெரியும். வார்த்தைக்கு பின் இருக்கும் வாழ்க்கை(யதார்த்தம்) தெரிய வாய்ப்பில்லை.

எனக்கு தெரியும்...உணரமுடியும்...பாடம் பயின்று கொண்டிருக்கும் ஒரு மாணவியாய்...!

இன்னும் அதிகம் பாடம் பயிலவேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தான் அது !

அதற்கு கடந்து வந்த வாழ்க்கை பாதையை ஒவ்வொன்றாக விளக்கி தெளிவாய் புரிய வைத்தமைக்கு என் நன்றிகள் கோடி.

//நான் தனித்தவன் ஆனால் எல்லோரிடமும் சூட்சுமமாய் நிறைந்தவன்!//

இதை விட அற்புதமாய் சொல்லமுடியாது...

கேள்விகள் தொடரும்...! :))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த