நாட்டின் சுதந்திரத்துக்கு போராடினோம் என்ற முத்திரையை இன்னும் முதுகில் சுமந்து கொண்டு, தேசியம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலியாய் இந்திய தேசத்தில் தன் ஏகாதிபத்திய கால்களை வலுவாக பதித்துள்ள காங்கிரஸ் என்னும் அரக்கனை இந்த தேர்தலில் தமிழகத்தில் தோற்கடித்தால் தான் ஒரு தொன்மையான இனத்தின் பலம் என்ன என்று சர்வதேச சமுதாயத்திற்கு நாம் அறிவிக்க முடியும்.
வரலாற்றின் பக்கங்களில் தமிழன் என்ற ஓர் இனமே இருக்காது என்ற அளவிற்கு வீழ்ச்சிகள் வந்த போதிலெல்லாம் வீறு கொண்டு எழுந்திருக்கிறது தமிழினம் . மதம், மொழி, இனம் என்று எல்லா வகையான சவால்களையும் நாம் காலம் காலமாக எதிர்கொண்டு வந்திருக்கிறோம்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய இந்திய சுதந்திரப்போரின் வீர வரலாற்றின் பக்கங்களில் எடுத்தியம்பி இருக்கும் தமிழர்களின் பங்கு என்னவோ மிகக்குறைவுதான்..ஆனால் எதார்த்தத்தில் அதிகபட்ச தமிழர்கள் தம்மை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி தமது இன்னுயிரை கொடுத்த செயலை எல்லாம் சிறு துரும்பாக மறைத்துப் போட்டு விட்டதும் ஒரு அரசியல் சூழ்ச்சியே....!
' வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும் '
என்று அறைகூவல் விடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத சேதுபதியாயிருகட்டும், ஜான்சி ராணி அளவிற்கு வெளியுலகம் அறியப்படாத வீரமங்கை வேலு நாச்சியாராய் இருக்கட்டும், கப்பலோட்டிய தமிழனையும், பூலித்தேவனையும், வீரன் சுந்தரலிங்கனாரையும், வாஞ்சிநாதனையும் நாம் மறந்து போக காரணமாயிருப்பதற்கு பின்னால் ஏராளமான செய்திகள் வராலற்றின் முதன்மைப்பக்கங்களில் ஏற்றப்படாமலேயே போனதாகவே இருக்கட்டும்...
காலங்கள் தோறும் வஞ்சிக்கப்பட்ட இனமாக தமிழினம் இருந்து கொண்டே இருக்கிறது. காரணம் தமிழர்களின் நம்பிக்கையின் அளவும், விருந்தோம்பலின் அளவும் அவர்களின் கண்களைக் கட்டிப் போட்டு கபடு சூது வாதுகளை அறியாவொண்ணம் தடுத்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இந்திய சுதந்திர போராட்டத்தின் எச்சமாய் காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்தில் ஊடுருவிப் பரவி இன்றளவும் ஏதோ ஒரு வகையில் நினைத்துப் பார்க்கும் அளவில் இருப்பதற்கான ஒரே காரணம் கர்மவீரர் காமராசர். ஆனால் காமராசர் என்ற ஒரு தனி மனிதனின் செயல்களை எல்லாம் காங்கிரஸ் என்று பெயர் பொறித்து, தமது கட்சியின் பிரச்சாரத்தில் எல்லாம் இந்திய தேசிய விடுதலையை பொறித்துக் கொண்டு கயமை நாடகம் ஆடிய காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இருந்தார்கள் என்று சொல்வதை விட முதலாளிகள் இருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
அதுவும் ஈழப்பிரச்சினையில் இந்தியாவை ஆண்ட ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் எடுத்த முடிவுகள் எல்லாமே அங்கே அடக்குமுறை செய்யப்பட்டு கொடுமைகளால் சூழப்பட்டு இருந்த தமிழர்களுக்கு உதவும் போக்கில இருக்கவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்த எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனும், தலைவனும் தமிழனாய் இருந்து அடிமட்டத்தில் இருந்த பிரச்சினைகளை மேல் மட்டத்தில் சொல்லி புரியவைக்கவும் இல்லை, அப்படி மாறுபட்டு மேலிடம் நடந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்று மிரட்டவும் இல்லை....
இந்திய காங்கிரசின் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் 50 வருடத்திற்கும் மேலான சுதந்திர இந்தியாவின் சுகபோகங்களில் ஊறித் திளைத்தவர்கள். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எப்போதும் கவலைகள் இருந்ததில்லை ஏனேன்றால் தேசத்தின் பெரும்பான்மையான நாட்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியால் மட்டுமே...அந்த கட்சி எடுத்த மிகைப்பட்ட முடிவுகளின் போக்குதான் இன்றைய இந்தியா....
இன்றைய இந்தியாவின் நிலை பற்றி விவரிக்கவும் வேண்டுமோ...?
காங்கிரஸ் அரசின் வாய் ஜாலம்தான் மதச்சார்பின்மை என்ற ஒரு அஸ்திரம்! காங்கிரசின் வேரில் இருக்கும் தொண்டன் வரைக்கும் ஊறிப் போயிருக்கும் மதத்தன்மையை யாரும் மறுத்தல் ஆகாது. மதச்சார்பின்மை என்பது காங்கிரசின் முழுமையான ஒரு அரசியல் சாதுர்யம்! மதச்சார்பற்ற ஒரு கட்சி தமது நீண்ட நெடும் பயணத்தில் உலகளவில் பெரும்பான்மையான இந்திய சிறுபான்மையினர்கள் யாரையேனும் ஆட்சிப்பொறுப்பில் ஏற்றி இந்திய பிரதமாராக்க நினைத்துக் கூட பார்த்திருக்குமா?
உத்தர பிரேதச அரசினை கல்யாண் சிங் தலைமையிலான பாஜக ஆண்ட போதிலும் பாபர் மசூதி இடிக்கப்படும் நிகழ்வினை மத்திய புலனாய்வுத்துறையினர் மூலம் அந்த சமயத்தில் ஆண்ட நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அறிந்தே வைத்திருந்தது. இங்கே தான் இருக்கிறது குள்ள நரித்தனம்! காங்கிரஸின் ப்ரீ கேண்ட்ஸ் தான் பாபர் மசூதி இடிப்பினை அரங்கேற்றி அங்கேயும் அரசியல் நிகழ்வாய் தமக்கு நல்ல பெயர் தேடிக்கொண்டது வக்கிர காங்கிரஸ்.
பாபர் மசூதி இடிக்க திட்டம் தீட்டியது ஆர்.எஸ்.எஸ், உடந்தையானது பாஜக ஆனால் அதை மத்தியில் ஆண்ட குள்ள நரித்தன காங்கிரஸ் நினைத்திருந்தால் தடுத்தி நிறுத்தியிருக்கலாம். இந்திய தேசத்தின் அரசியலில் காலுன்றி விரவி நிற்க காங்கிரஸ் மறைமுகமாய் அனுமதித்த இந்த நிகழ்வின் மூலம் மக்கள் மனதில் இருந்து நிரந்தரமாய் தூக்கியெறியப்பட்டது பகிரங்க மதவாதகட்சியான பாஜக!
சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் செருப்பு காலோடு சென்று கோவிலினுள் இருந்த சீக்கிய தலைவர் பிந்தரன் வாலே சுட்டுக் கொல்லப்பட்டதும் அதற்கு பழிவாங்கும் விதமாய் இந்திரா காந்தி சுடப்பட்டதும் நாடறிந்தது. சுட்ட மெய்க்காப்பாளனுக்குள் என்னவிதமான நியாயம் இருந்திருக்கும் என்று சிந்திக்கவே விடாமல் மக்களின் புத்தியை மூளைச்சலவை செய்து வைத்த நயத்தில் காங்கிரஸ் ஜெயித்துதான் போனது.
இந்திரா காந்தியின் கொலைக்கு பின்னால் சீக்கிய இனம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டாலும் சீக்கிய தலைவர்கள் தமிழக துரோக அரசியல்வாதிகள் போல காங்கிரசிடம் அத்தனை சீக்கிரத்தில் ஒன்றும் விலைபோகவில்லை....ஏதோ ஒரு விதத்தில் சீக்கிய இனத்தை திருப்தி படுத்த காங்கிரஸ் செய்த தொடர் முயற்சிகளின் விளைவு இன்று நமக்கு ஒரு சீக்கிய பிரதமர்....
ஈழத்தில் நடாத்தப்பட்ட வன்கொலைகளின் பின்னால் இந்தியாவை ஆண்ட ஏகாதிபத்திய காங்கிரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் இருந்தது என்பது நாளை பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் கூட தெரிய வாய்ப்பிருக்கிறது. விடுதலை புலிகளின் ஈழ தேச கனவுகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நாடு இந்தியா. இந்திராவும், எம்ஜிஆரும் கொடுத்த ஊக்கத்தில் வெடித்துப் பிறந்த போராட்டத்தின் தலைவர்தான் பிரபாகரன்.
தொடர்ந்து அநீதிகள் இழைக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சமுதாயம் காந்திய வழியில் போராடிப் பார்த்து சளைத்துப் போய் திலீபன்களை காவுகொடுத்து தமது கையில் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒரு வன்முறையை எல்லா நேரங்களிலுமே சத்தியத்தால் வெல்ல முடியாது. (இந்திய விடுதலையை காரணம் காட்ட வேண்டாம்...இந்திய விடுதலை சத்தியாகிரகாத்தாலும் நிகழ்ந்தது, வெள்ளையன் இனி நிர்வாகம் செய்யவேண்டாம் என்று தீர்மானித்ததாலும் நிகழ்ந்தது)
ஒரு வன்முறையை அடக்க இன்னொரு வன்மை தேவைப்படுகிறது. இந்த நோக்கில்தான் ஒவ்வொரு தேசத்தின் இராணுவமும் நிர்மானிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு எதேச்சையான விசயம். எந்த திட்டமிடலும் இல்லாமல் அடித்துக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும், கற்பை சூறையாடிக் கொண்டும் இருந்தவனை திருப்பி அடிக்க எடுத்த முயற்சி. சுதந்திர காற்றை சுவாசிக்க நிகழ்த்தப்பட்ட ஒரு உயிர்ப் போராட்டம்.
எங்கேயும் முரணில்லாமல் நகர்ந்து கொண்டிருந்த போராட்டதின் நடுவே நிகழ்த்தப் பெற்ற மிகப்பெரிய ஒரு ராஜதந்திர பிழை ராஜிவ் காந்தியின் கொலை. இங்கே நிகழ்ந்த சறுக்கலை காரணம் கொண்டு ஒரு தேசத்தின் பூர்வாங்க மக்களையே எரித்துப் போட்டு ஈழதேசத்தினை சுடுகாடாக்கி ஈழ மக்கள் அனைவரையும் கொன்று குவிக்க ராஜபக்சேக்கு துணைக்கு போன இந்திய ஆளும் காங்கிரசின் செயல் சரியானதா?
ஒரு இயக்கம் நடத்திய செயலுக்கு தேச மக்களின் உயிர்களை பெண்களென்றும், கர்ப்பிணிகளென்றும், குழந்தைகளென்றும், முதியவர் என்றும், பாராமல் கொன்று குவித்த செயலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டு இரத்தம் குடித்து தம் திருப்தியை தீர்த்துக் கொண்ட
காங்கிரஸ் சகிப்புத்தன்மைகள் கொண்ட இயக்கமா?
காந்திய வழி நடப்பவர்களா?
அறம் பற்றி பேச தகுதியானவர்களா?
நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் தோழர்களே??????? மும்பை நகரினுள் நுழைந்து ஈவு இரக்கமின்றி பொது மக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்ற கேள்வியை கூட விட்டு விடுவோம்...இன்னமும் கொலைகாரன் அஜ்மல் கஸாப்பை வைத்துக் கொண்டு அழகு பார்க்கிறாயே ஏய் முட்டாள் காங்கிரஸ்.....தமிழன் என்றால் மட்டும் உனக்கு கேவலமா?
மேற்கு வங்கத்தில் கொடுக்கப்பட்ட 65 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்காவிட்டால் அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று கொக்கரிக்கிறாரே.. மம்தா பானர்ஜி அந்த வீரம் கூட இல்லையே தி.மு.க விடம் என்பதுதானே சக தமிழர்களாய் ஒரு மூத்த அரசியல் தலைவராகிய கலைஞரிடம் தமிழர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம்....?
ராஜ தந்திரியான கலைஞரையே தனது கிடுக்கு பிடியில் வைத்திருக்கும் இத்தாலிய மூளையை சின்னா பின்னமாக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது எம் தோழர்காள்?
ஒட்டு மொத்த இந்தியாவிலேயே மத்தியில் தனக்கு ஒரு மாற்று கட்சி இருக்க கூடாது என்று காய் நகர்த்தி மாஃபியா தேசத்தில் இருந்து வந்த ஒரு மூளை அசுரத்தனமாய் விசுவரூபம் எடுக்கும் இக்கணத்தில் உறுதி பூண்டு கொள்வோம்....
ஏ....அராஜக திமிர் பிடித்த இரத்தம் குடிக்கும் கங்கிரசே நீ எமக்கு வேண்டாம்......! வேண்டாம் ...! வேண்டவே வேண்டாம்....!
காங்கிரசை தமிழகத்தை விட்டுப் பெயர்த்தெடுக்கும் தீரமுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நண்பர் கே.ஆர்.பி. செந்தில், கும்மி மற்றும் தம்பி ராஜாராமன் (விந்தை மனிதன்) அனைவருக்கும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் இந்த கட்டுரை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறது.
களப்பணியில் இணைய கீழ்க்கண்ட அலைபேசிகளை தொடர்பு கொள்ளவும்.
கேஆர்பி.செந்தில் - 8098858248
விந்தைமனிதன்( ராஜாராமன்) - 9500790916
தேவா. S
Comments
மன்னிப்பே இல்லாத இந்த கொடூரங்களுக்கு வாக்குச்சீட்டு மூலம் தான் பலிதீர்க்க முடியும். நமக்கான நேரம் இது.
நாட்டின் இதயமான பாராளுமன்றத்தை தாக்கியவனையே இன்னும் தூக்கிளிடக்காணும்? சுத்த சொம்பைகள்!
தமிழக மக்களே!இந்த முறையாவது சரியான தீர்ப்பை அளியுங்கள்.
haha ellam makal kolla pattathuku kalignarku pangu ilada mari pesi irukirirkal.....
konjam manathil kaivaithu solungal 4 seat pirachanaiyil mathiyil irunthu veliya vantha ootuporikiyuku angu 30000 per irantha opo enna seithu kondu irunthar ungal raja thanthiri???
matrapadi congress patriya karuthukaluku en manamrtha kaithattukal !!!
இந்த குமுறல்கள் தேர்தல் அன்று வெளிப்படவேண்டும் என்பதே உணர்வுள்ள தமிழர்களின் ஒரே எண்ணம்.
பலர் இதை ஒத்துக்கொள்வதே இல்லை. சபாஷ் தேவா சார்.
அதை விட ஆயுதம் ஏந்திய போராட்டமும் ஒரு காரணம்.
பின்வரும் சுட்டியை இணைத்து, உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Defeat Congress