Skip to main content

பேயி இருக்கா இல்லியா...?!



















இருட்ட ஆரம்பிச்சுருச்சு மழைக் காலம்னாலே இப்படித்தேன் 7 மணிக்கே கரும் கும்ம்னு ஆயிடும். எல்லா கருமாந்திரமும் பேசுறாய்ங்க நம்ம ஊருக்கு இன்னும் பஸ்ஸு ஒண்ணு விட ஒரு நாதி இல்ல. ஒய்யவந்தான் போற காரு ஒண்ணு இருக்கு அதான்ப்பு டவுனு பஸ்ஸு, அந்த வண்டிக்காரவுகளா பாத்து மனசு வச்சி பெரிய கருவ மரம் ஒண்ணு இருக்கும் ரோட்டோரமா நம்ம ஊருக்குப் போற பாதையில அதையே இஸ்டாப்பிங்கா நினைச்சு இறக்கி விடுவாய்ங்க...நாம அந்த கருவைக்கு பின்னால இருக்குற ஒத்தயடிப்பாதைய புடிச்சி ஒரு 3 மைல் நடக்கணும்....

மேலத்தெரு மாணிக்க மாமா நல்லாத்தான் நடவுடையா இருந்தாப்ல...! நேத்து கம்மாயில குளிச்சுபுட்டு வீட்டுக்கு வந்த மனுசன் நெஞ்சு வலிக்கிதுத்தா... கொஞ்சம் வென்னிரு கொடுன்னு அவரு மக சின்னது கிட்ட கேட்டுருக்காரு..அம்புட்டுதேன்! தூக்கியாந்து சிவங்ஙே (சிவகங்கை)... ஆஸ்பத்திரில போட்டுட்டாக! மாரடைப்பு வந்துருக்குன்னு சொல்லி பொறவு காப்பாத்தி புட்டாங்கே...!

என்ன ஒண்ணு அந்த கிறுக்குப் பய நடராசு மக கல்யாணம் சாரிக்க (விசாரிக்க) வந்த ஆட்டோக்காரப் பய ஊருக்குள்ள நின்னுகிட்டு இருந்தான்...! வெரசா தூக்கியாந்து பொழைக்க வச்சாச்சு... இல்லேன்னா மனுசன் போய்ச் சேந்து மூணு நாளாயிருக்கும்...! ம்ம்ம் ச்சும்மா பேச்சுக்குத்தேன் சொல்றேன் 70 வயசானாலும் மாணிக்க மாமா மனுசன் விருச்சி கம்பு மாறி கனம் இல்லாமத்தேன் இருப்பாப்ல...நல்லா இருக்கணும் புண்ணியவான்..! புள்ள குட்டிக்காரன்...மக மக்க கலியாணத்த பாத்துடாப்லனா அப்புறம் ஒண்ணுமில்ல...

பஸ்ஸ காணமேப்பு இன்னமும் அப்பிய கார்த்திய மாசத்துல வானத்த நம்ப முடியாது எப்ப வேணும்னாலும் தொரத்தொரன்னு ஊத்த ஆரம்பிச்சுடும். நான் கூட எங்காத்தாகிட்ட சின்னதுல கேட்டிருக்கேன் வானத்த எவனும் பொத்து கித்து விட்டுட்டானா...ஒழுகிகிட்டே இருக்குன்னு, அதிலயும் மழ நேரமுன்னா கார்க்காரப் பயலுக எப்பவும் லேட்டாத்தேன் வருவாய்ங்க....!

6:30 மணி பஸ்ஸுக்குதான் வெரசாத்தென் ஒடியாந்தேன், ஆனா என்ன காலக் கெரகமோ என் நேரமோ? அந்த காரு வரவே இல்லென்னு சொல்றாய்ங்க! சுத்தியிருக்கிற ஆளுகள்ல நம்மூரு ஆளுக ஒருத்தனையும் காணோம்...! ஒய்யவந்தான் வண்டி போயிருச்சாண்ணே...கெச்சலா இருந்த பெரியவரு என்னிய வந்து கேக்குறாரு... ! அதுக்குத்தனுங்கய்யா நானும் காத்துக் கெடக்குறேன்...ன்ன்னு சொல்லிபுட்டு அண்ணாந்து வானத்த பாத்தேன்...ம்ம்ம்கூம் விடாதுப்பே.. விடாது பொழுது விழுந்த வானம்...விடவே விடாது...

ஆனா அது இல்ல என்னோட யோசனை... என்னோட கவலையெல்லாம் இந்த இருட்டுக்குள்ள அம்மூரு சுடுகாட்ட வேற நான் தாண்டி போகணும்.அத நெனச்சாதேன்..ஈரக்கொல ஆடுது...! ஆத்தி...கூதக் காத்து வேற அடிக்கிது...அப்பவே எங்காத்தா சொல்லிச்சு..பொக்குனு போய்ட்டு வந்துருப்புன்னு....ம்ம்ம்ம் என் காலவெனை...என்ன செய்ய...?


போன வாரம் தூக்கு மாட்டி செத்துப் போன காரை விட்டு முத்தண்ணன் வேற பேயா சுத்துறதா நேத்து சுப்பிரமணி பய சொல்லாம இருந்தா கூட கொஞ்சம் தெம்பா இருந்திருப்பேன். இப்ப அது வேற பயந்து வருதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கப்பவே ஏண்ணே கல்ல (கடலை) சாப்பிடுங்கண்ணே வறுத்தது.. சூடா இருக்குண்ணே மழ நேரத்துக்கு நல்லா இருக்கும்ணேன்னு ஒரு சிண்டுப் பயவுள்ள இந்த குளிருலயும் கல்ல வித்துகிட்டு என்னைய கூப்பிடுது..பாவம் அவன் பொழப்பு.. ! பள்ளிக் கொடத்துக்கு போகாம புள்ள குட்டிய இப்படித்தேன் சீரழியுதுக....டவுனு பக்கந்தேன் கவனிச்சு பாப்பக போலிருக்கு புள்ளைக்குட்டிய வேல வெட்டிக்கி போகக்கூடாதுன்னு...சரி அதை விடுங்க...

மழை பெய்ற நேரத்துல ஒரு சுருளு கடலைய வாங்கி சூடா கையில கொட்டி தோள உதுத்து அப்டியே காத்துல ஊதிப்புட்டு.....சூடா வாயில ரெண்டு ரெண்டா போடணும்ணே... ரெண்டு ரெண்டா...கூடப் போட்றக்கூடாது...! மழை வெளியே நச நசன்னு பெய்யிறப்ப எல்லாம் எங்காத்தா கல்லய என்ன செய்யும் அவிச்சி புடும்...தண்ணியும் கடலையுமா உப்ப போட்டு ரெண்டு போவினில போட்டு கொடுக்கும். கல்லைய உடைச்சுதானே நீங்க சாப்புடிவிய? நாங்க தோள உறிக்காம அப்படியே ஈரத்தோட வாயில போட்டு அப்புடியே சூட்டோட உறிஞ்சி அந்த கல்லையில சாந்து இருக்கும் பாருங்க உப்புத் தண்ணி அத சூடா ஒரு உறிஞ்சி உறிஞ்சி புட்டு...அப்பறமா கல்லைய உடைச்சு..அவிச்ச பருப்ப எடுத்து மறுவடிக்கும் ரெண்டு ரெண்டா வாயில போட்டு அதக்கிகிட்டு ...நம்ம கூட்டாளிமாருக..இல்லன்னா அத்த மாருக.. பக்கத்து வீட்டு ஆளுக எல்லாம் ஒண்ணா ஒக்காந்து மழய வேடிக்க பாத்துகிட்டே திம்போம்...!

கல்லைய தின்னுகிட்டு இருக்கப்பவே காரு வந்துருச்சு...ஆத்தே இங்கன நின்னா அம்புட்டு சனமும் இந்த வண்டிக்கிதானா? அடிச்சி புடிச்சு ஏறிபுட்டேன்....ஆனா இடம் கிடைக்கல.. அது கிடக்குது கழுத...இடங் கிடைக்கலேன்னா...போய்ட்டு போகுது...அடிச்சு பத்துங்கப்பு வண்டியன்னு நினைச்சுகிட்டெ ஒரு இண்டுல நின்னுகிட்டேன். என் மனசு பூரா செத்துப் போன காரவீட்டு முத்தண்ணன் வேற ரொம்பவே பயமுறுத்திகிட்டு இருந்தாரு. அவரு மட்டுமா போன ஒரு வருசத்துல செத்துப் போன பக்கிய எல்லாம் மொத்தமா மனசுக்குள்ள வந்துருச்சுக...!

மிலிட்ரிகாரு பொண்டாட்டி மருந்த குடிச்சப்ப.... அங்கனகுள்ள அப்போதைக்கு நாந்தேன் ஆம்பள இருந்தேன்....! வீட்டுக்குள்ள இருந்து அலறி அடிச்சிகிட்டு போயி போனைப் போட்டு பக்கத்து டவுனுல இருந்து ஆட்டோ வர்றதுக்குள்ள போயி சேந்துட்டா மகராசி...! 45 வீடு இருக்குற ஊருக்கு என்னடா ஆஸ்பத்திரி கேக்குறியன்னு ஒரு தடவ மருவாதி இல்லாம பேசி புட்டாரு செயிச்சுப் போன எம்.எல்.ஏ...!

கொஞ்சப் பேருதேன் இருக்கோம்னு காருக்காரப் பயலுகளும் ஊருக்குள்ள வர்ரது கிடையாது. கவர்மெண்டும் பாதைய சரி செஞ்சு கொடுக்கல... வண்டிப் பாததேன் (பாதை) இருக்கு. அதுவும் ரெண்டு பக்கமும் கருவ முள்ளு உங்கைய கிழிக்கவா இல்லா கண்ண குத்தவானு இளிச்சுகிட்டு நிக்கும். அப்பப்ப என்னிய மாறிப் பயலுக எல்லாஞ் சேந்து அத கழிச்சு போடுவோம்...!

நான் பத்தாப்பு படிக்கிம் போதே எங்கய்யா தவறிப் போயிட்டாருண்ணே....படிப்பு நின்னு போச்சு. ஆத்தாவும் நானும் சேந்து ஒழச்சு ஒழச்சு...ரெண்ட அக்காளுகள கட்டிக் கொடுத்துப் புட்டு இருக்குற ஒத்த தங்கச்சிக்கு இந்த உடம்ப கடம்பால அடிச்சு வெள்ளாமை பாத்துகிட்டு இருக்கோம். 25 வயசான என்னப்பு...ரெண்டு மூணு பொம்பளப் புள்ளைய கூட வளந்துட்டேனா...அதனால கொஞ்சம் பயந்த சுபாவந்தேன் நான். அதுவும் இந்த பேயி பிசாசுண்ணா ஆத்தி..இப்பவே நெஞ்சுக்குள்ள கருக்குன்னு வருது....

' ஏய்.. வண்டி நின்னு எம்புட்டு நேரமாச்சு யாருப்பா...சிலுக்கப்பட்டி கருவமரம் ..கேட்டது.. எறங்குய்யா வெரசா..." கண்டக்டரண்ணண் விட்ட சவுண்டுல காது சவ்வு அந்து போச்சு...! இந்தா இறங்கிட்டேண்ணேன்னு...சொல்லிகிட்டே படிக்கட்ட விட்டு எறங்குன உடனே... பஸ்ஸு போயிருச்சு....

இப்ப நான், கரு கும்முனு இருட்டு...கருவ மரம் அப்புறம் கருவைக்கு புறத்தாடி இருக்குற எங்கூருக்கு போற நொடிச்சுப் போன வண்டிப்பாதை இதா இருக்குறோம். என்ன என்னமோ கத்துதுக...வண்டு, தவளை காட்டுக்குள்ள கிடக்குற குள்ள நரிக எல்லாமே! நிலவடிக்கும் ஒடியாந்திரலாம்னு கை லைட்டு கூட கொண்டு வரலப்பு....கத்தி அழுகணும்னு ஆச...ஆனா அழுகுற சத்ததுல தூங்கிகிட்டு இருக்குற பிசாசு பேயிங்க எதுனாசும் கெளம்பிருச்சுகன்னா....அது வேற இருக்குள்ள...

கூதக்காத்து சுத்தி சுத்தி அடிக்கிது... முடியாம கெடக்குற புள்ள நைய்யி நைய்யின்னு அழுகுற மாறி தூத்த வேற போடுது. ஏப்பா.. டேய் உங்க சங்காத்தமே வேணாம்னு எங்க்கிட்டு போய் ஒளிஞ்சுச்சோ இந்த நிலவு..நான் நடக்குற சத்தம் எனக்கே கேக்குது...! அட இது என்ன இது சில்லு வண்டு சத்தமா இல்ல கொலுசு சத்தமா...கூப்புடாம கொல்லாம மிலிட்டரிகாரன் பொண்ட்டாடி வேற தலைய விரிச்ச மேனிக்கி மனசுக்குள்ள வந்து சிரிக்கிது....இந்தா.. இன்னும் கொஞ்ச நேரதுல்ல ஊருச் சனத்தையே வச்சு எரிச்ச சுடுகாடு வேற வரப் போகுது...

நெஞ்சாங் கொல படக்கு படக்குனு அடிக்க்குது.. ஈரல் அந்து கீழ..கீழ விழுந்துடுமோன்னு ப்யந்து வருது...! ஆத்தே.....தப்பு பண்ணிட்டோம்டா...இன்னும் தங்கச்சிய கட்டிக் கொடுக்கல வயசான ஆத்தா வேற இருக்கு...எங் குடும்பத்த யாரு காப்பாத்துவா ? பேயி கீயி அடிச்சு கொன்னு புடுச்சுன்னா செத்துல போயிருவேன். இல்லை அடிக்காம கொள்ளாம மச்சு வீட்டு பத்மினி அக்காவுக்கு புடிச்ச மாறி புடிச்சுகிட்டு நம்மள இத்தினி இத்தினியா கொல்லுமோன்னு நெனச்சிகிட்டு இருக்கும் போதே சட்டைய புடிச்சி ர்ர்ர்ர்ர்ரப்ப்ப்ப்ன்னு இழுத்த்துச்சு........

என்னமோ ஒண்ணு...ஏய்...........யார்ராது என் சட்டையன்னு..கத்திகிட்டு கைய வச்சி வெலக்கி விடயில கையில சட்டையில் ஆப்டுகிட்டு இருந்த கருவ முள்ளு கைய கீறி விட்ருச்சு....ஏய்...கருப்பு சாமி எங்கொல சாமிடோய்..என்ன ஒண்ணும் பண்ண முடியாதுப்பேன்ன்னு நான் கத்துன கத்துல நடுக்காடே ரெண்டு பட்டுத்தேன் போயிருக்கும்....

மாரநாட்டு கருப்ப சாமி காப்பாத்தேய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கத்திகிட்டே விட்டேன் சவாரில......காத்தா பறந்து வந்து என்னய காப்பாத்து சாமீன்ன்னு சொல்லும் போதே ஒரு தெகிரியம் வந்துச்சு..இருந்தாலும் விடல ஓட்டத்த....காட்டுமிராண்டி மாறி கத்திகிட்டு ஓடி கீழ கிடந்த பள்ளத்த பாக்காம அதுல இடறீ விட்டு குப்புற அடிச்சு விழுந்து கம்மா மேட்ல இருந்து உருண்டு, கல்லு கரணி எல்லாம் மேல குத்தி உடம்பு பூரா சேறும் சகதியுமா இருக்கையில தங்கச்சிக்கு வாங்கியாந்த ஃபேரண்ட் லவ்லி கிரீமயும், மதகுபட்டி ஐயா கட அல்வாவையும் விடாம புடிச்சுகிட்டேன். எந்திரிச்சு சுதாரிச்சுகிட்டு ஓடலாம்னு பாத்தா ச்ச்சும்மா குப்புன்னு மல்லிய பூவு வாசம் வெற அடிக்குது......மெரண்டு போயி பொம்பள பேயி வந்துருச்சுடோய்ய்ன்னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு மறுக்கா ஓட்டமா ஓடி கருவாட்டு பொட்டல் கிட்ட வந்து நிக்கையில மூச்சு எறக்கிது பாருங்க....

இன்னும் கொஞ்ச தூரந்தேன்....நான் திரும்பி பாக்காம வெரசா நடக்க ஆரம்பிச்சேன். ஒடியாந்த ஓட்டத்துல சுடுகாட்ட தாண்டி வந்தத நெனக்கையில ...அட சுடுகாட்ட தாண்டிட்டமப்பான்னு ஒரு அசட்டு தெகிரியம் வந்துச்சு...! ஊருக்குள்ள நுழையறதுக்கு முன்னாலயே கண்ணுக்கு ஒசராமா இருக்குற எங்கய்யா வச்ச ஒத்த பன மரம் கண்ணுக்குத் தெரியும். அந்தா தெரியுது பாருங்க...எந்த சாமி புண்ணியமோ வந்து சேந்துட்டேன் சாமி! அந்த ஒத்த பனை இருக்குள்ள அதுக்கப்புறம் ஒரு கொல்லகா (கொல்லைக் கால்வாய்) இருக்கு...அதுல தண்ணி மழ நல்லா அடிச்சி பேஞ்சிச்சின்னா வரும். இப்ப தண்ணி இருக்காது...மழதான் பெய்யவா வேணாமான்னு பூசாரிகிட்ட சோழி போட்டு கேக்குற மாறி கேட்டுக்கிட்டு இருக்கே....

வீட்டுக்கு முன்னாடி கொஞ்ச தூரத்துல இருக்குற கவர்மென்டு டீப் லைட்டுக்கு கீழ வந்து சட்டை வேட்டிய சரி செஞ்சுகிட்டேன்! கழுத்துல கருவ முள்ளு இழுத்து விட்டது எரிஞ்சுகிட்டே இருந்துச்சு...சரி...அது என்ன கழுத...கொஞ்சம் வேப்பெண்ணைய தேச்சா போகுது மூதேவின்னு நினைச்சுகிட்டு...உரப்பு ஆன கைய தடவிகிட்டு, தலைய சரி செஞ்சுகிட்டு வீட்டுக்குள்ள் போறதுக்குள்ள ஆத்தாளும் தங்கச்சியும் வாசல்லயே காத்துகிட்டு நிக்கிறாக.....! "என்னண்ணே சட்ட துணிமணியெல்லாம் சகதியாயிருக்கு"ன்னு தங்கச்சி வேற கேட்டு வேற தொலச்சிபுட்டா..? ஏப்பு என்ன ஒரு மாறியா இருக்க? இன்னியாரத்துல போவேணாம்னு எம்புட்டு தடவ சொன்னேன் இரு காப்பி தண்ணி கொண்டாரேன்னுட்டு ஆத்தா அடுப்படிக்குள்ள போயிருச்சு....

அட அது ஒண்ணுமில்ல தங்கச்சிமா கார்காரங்கே எல்லாம் ஒழுங்காவா வண்டி ஓட்டுறாய்ங்க....சேத்த அடிச்சிபுட்டு போய்ட்டாய்ங்கே...இந்தாமா இந்த பைய புடி...நீ கேட்டு விட்ட சாமான் எல்லாம் இருக்குமான்னு சொல்லிட்டு பைய கொடுத்து கொஞ்ச நேரத்துல அவ கேட்டா "....ஏண்ணே எங்கண்ணே மல்லியப் பூவு? வாங்கியார மறந்துட்டியா" ன்னு? வாங்கியாந்தனத்தா.........உள்ளுக்கு இல்லியா? ம்ம்ம் எங்க போச்சு...அட.... கம்மாக்கரையில் உருளும் போது மல்லியப்பூ வாசம் அடிச்சுதே..அது பொம்பளைப் பேயி இல்லையா...நம்ம வாங்கியாந்த மல்லியப்பூ அங்க வெளிய விழுந்துதான் பேயா மெறட்டுனுச்சா? அடக் கருமாந்திரமேன்னு....நானே சிரிச்சிகிட்டு இல்லத்தா...அண்ணன் மறந்துட்டேன் போலன்னு சொல்லிபுட்டு ....

'ஏத்தா தங்கச்சி வென்னீரு போடுத்தா அண்ணே குளிக்கிறேன்.. மேலு காலு எல்லாம் பெல்லா (பொல்லாத) வலி வலிக்கிது....'ன்னு சொல்லி புட்டு கொல்லக் கடவுல போயி ஆத்தா கொடுத்த பா லுகாப்பிய குடிச்சிகிட்டு யோசிச்சேன்...

'பேயி இருக்கா இல்லையா? யாரும் பாத்துருக்காகளா இல்லையா?' அட எனக்குதேன் தெரியல சிவங்கே (சிவகங்கை) பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கூடவே வரீகளே நீங்கதேன் சொல்லுங்கப்பு.....?.அட உங்களத்தேன் கேக்குறேன்..........? என்னது எம்பேரு என்னவா............அட போங்கப்பு...பதில கேட்டா எம்பேர கேட்டுகிட்டு...........அத எல்லாம் தேவாகிட்ட கேளுங்க....அவருக்குத்தான் தெரியும் எம்பேரு எல்லாம்...!

சரி விடுங்கப்பு... பதில சொல்லுங்க....

" பேயி இருக்கா இல்லியா "


தேவா. S



Comments

//பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கூடவே வரீகளே நீங்கதேன் சொல்லுங்கப்பு.....?.அட உங்களத்தேன் கேக்குறேன்..........? என்னது எம்பேரு என்னவா............//
அய்யய்யோ.. நான் இல்ல :)
நான் எங்கயும் கூட வரள..
//நெஞ்சாங் கொல படக்கு படக்குனு அடிக்க்குது.. ஈரல் அந்து கீழ..கீழ விழுந்துடுமோன்னு ப்யந்து வருது...//

...அவ்வ்வ்வ்வ்வ்...இப்போ போஸ்ட் படிச்சிட்டு எனக்கு இப்பிடி தான் இருக்கு.
நல்லா கிளப்புறாங்க பீதிய....! :D
எழுத்து நடை அருமை தேவா.
எங்கள் ஊர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்) பக்கமும் இவ்வளவு பேருந்து வசதி இல்லாத கிராமங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்தப்பக்கம் செல்லும் போது இங்கு உள்ள மக்கள் பள்ளிக்கு செல்வதற்கு, மருத்துவத்துக்கு செல்வதற்கு எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று யோசிப்போம். அந்த சிரமங்களை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள். அருமை.
வாழ்த்துக்கள் தேவா.
கம்மாக்கரையில் உருளும் போது மல்லியப்பூ வாசம் அடிச்சுதே..அது பொம்பளைப் பேயி இல்லையா...///

இப்படி தான் பல சமயங்களில் பேய் இல்லாமலே நம் கற்பனையில் பேயை உருவாக்கி கொண்டு இருக்கிறோம்....
பேய் கண்டிப்பாக இருக்கிறது,மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதம் ஒரு பேயும்[pay],வாரசம்பளக்காரர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்துவிடும் இதைத்தவிர அரியர்ஸ் பேயும் அவ்வப்போதுவரும்.வந்த பேயை கடன்காரர்களுக்கு திருப்பி விடுவதற்குள் நம்ம ஆவி போய்விடும்.
பேய் கண்டிப்பாக இருக்கிறது,மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மாதம் ஒரு பேயும்[pay],வாரசம்பளக்காரர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்துவிடும் இதைத்தவிர அரியர்ஸ் பேயும் அவ்வப்போதுவரும்.வந்த பேயை கடன்காரர்களுக்கு திருப்பி விடுவதற்குள் நம்ம ஆவி போய்விடும்.
பணப்பேய், பேராசைப்பேய், லஞ்சப்பேய், வரதட்சணைப்பேய், சந்தேகப்பேய்ன்னு ஏகப்பட்ட பேய்கள் இருக்கே.. இதில் எதைன்னு குறிப்பிட்டு சொல்றது :-)))
ஹேமா said…
வாசிக்க வாசிக்கச் சிரிப்புத்தான் !
Chitra said…
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க எழுதி இருக்கிற விதம், பயத்துக்கு பதிலா சிரிப்பை வரவழைக்குது.... சூப்பர்!
Ungalranga said…
ஒரே ஒரு சந்தேகம்..

இது காமெடியா? ஜீரியஸா?

படிச்சு பார்த்தா ரெண்டுமாவும் தெரியுது..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த