Skip to main content

வெற்றிச் சிறகுகள்...!

















வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை. சோகங்களும், சந்தோசங்களும் எப்போதும் நம்மைச் சமப்படுத்தியே அழைத்து செல்கின்றன என்ற உண்மையைப் பெரும்பாலும் மறந்து விட்டு சோகங்களின் அதிருப்திகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு மழையைக் கண்டு தன்னின் ஆத்மா நிறைந்து சந்தோஷித்து திளைத்தவனும் இருக்கிறான். அதே மழையை வெறுத்து இது என்ன தொந்தரவு என்று வெறுப்பவனும் இருக்கிறான். ஒரு செயல் இரண்டு விதமான பார்வைகள். பார்வைகளை பிறப்பிக்கும் மூளைகளின் கற்பிதங்கள் தாம் இத்தகைய வேறுபட்ட எண்ணங்களை உருவாக்குகின்றன.

மனிதன் திறந்த மனதோடு எல்லாவற்றையும் வரவேற்கும் தன்மையோடு எப்போதும் இருக்க வேண்டும். மாறாக நமது சமுதாயத்தில் இப்போது எதிர்மறை மனோநிலையோடு வாழும் ஒரு வாழ்க்கை முறை நமக்குத் தெரியாமலேயே நமக்குள் புகுத்தி விடப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக எளிதான காரியமாக எதைச் சொல்வீர்கள் நீங்கள்?

இந்த உலகின் மிக எளிதான காரியம் என்பது " இல்லை " என்று சொல்வதும் " முடியாது " என்று மறுப்பதும்தான். ஒரு செயலை ஏற்று அதனை பொறுப்பு கொண்டு நகர்த்திச் செல்லும் போது அங்கே ஏதேனும் நாம் செயல் செய்ய வேண்டியிருக்கிறது. திட்டமிடல் அவசியப்பட்டு போகிறது. கூர்மை தேவைப்பட புத்தியை உலுக்கி விட்டு எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகிறது. உழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால்..

" முடியாது " என்று ஒரு வார்த்தையை கூறிய பின்னால் அங்கே எந்த செயலும் நிகழ்வதில்லை. இப்போது கூட ஒரு விடயத்தை கயிற்றின் மீது நடப்பது போல விளங்க வேண்டுகிறேன். இயலாத காரியங்களை இயலாது என்று சொல்வதற்கு பார்வையின் தெளிவுகளை நம் சுயநலத்திற்கு அப்பாற்பட்டு செலுத்த வேண்டும். இதற்கும் ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

எந்த ஒரு செயலையும் செய்யும் போது நான், நான் நான் மட்டுமே இதனால் பயன் பெறவேண்டும் என்ற ஒரு எண்ணமிருப்பின் அந்த செயலைச் செய்வதை விட நம்மை முன்னிலைப்படுத்துவதிலேயே நம் கவனம் அதிகமாக இருக்கும். நாம் முன்னிலைப் படவில்லை எனில் ஒட்டு மொத்த செயலையுமே நாம் விட்டு வெறுத்து ஒதுங்கி, "முடியாது" என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுவோம்.

வாழ்க்கை மிக அற்புதமானது அதை ஒரு அழகியல் தன்மையோடு நாம் தொடரவேண்டும். எப்போதும் இயங்கும் சராசரி நிகழ்வுகளை விடுத்து அவ்வப்போது குழந்தைகளாக நாம் மாறவேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகள் போல அல்ல....குழந்தைகளாகவே என்ற வார்த்தை படிமத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை இவ்வளவு இறுகிப் போனதற்கு காரணம் நாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைப்பாடுகள், நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சம்பிரதாய வலைகள், மனோவசியக் கட்டுக்கள், என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை எல்லாம் காலம் காலமாக நம்மாலும் நமக்கு வழிகாட்டுகிறேன் என்று கூறி வழி கெடுத்தவர்களாலும் பின்னப்பட்டது என்பதை அறிக. இவற்றை எல்லாம் அறுத்தெரிந்து வெளியே வரும் போது தான் உண்மையான சத்திய வாழ்க்கை கிடைக்கும். இதை ஆன்மீகம் விடுதலை,முக்தி என்று கூறுகிறது.

எனது ஆச்சர்யம் என்ன தெரியுமா? உங்களை ஒரு சக்கர வாழ்க்கைக்குள் அடைத்துக் கொண்டு, நான் இப்படிப்பட்டவன், இப்படி வாழ்பவன், இந்தக் கட்சியை சேர்ந்தவன், இந்த சித்தாந்தம் கொண்டவன் இந்த ஊர்க்காரன், என்று ஓராயிரம் மனோவசியக் கட்டுக்களைப் போட்டுக் கொண்டு நீங்கள் சுதந்திரமானவர் என்று எந்த தார்மீக நியாயத்தில் கூவி கூவி அறிவிக்கிறீர்கள்?

ஒரு வித மாயக்கட்டுக்குள் இருந்து கொண்டு சுதந்திர புருசர்கள் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. வெறுமையாய் இருக்கும் மனிதன் தன் சூழலுக்கு ஏற்ப நியாயங்களைத் தேடுகிறான். அது " அ " வாய் இருந்தாலும் சரி " ஆ "வாய் இருந்தாலும் சரி அல்லது " இ " ஆய் இருந்தாலும் சரி....அதில் இருக்கும் நியாத்தை தேடி எடுத்துக் கொண்டு பேசும் சக்தி நமக்கு இருக்கிறதா? இப்படி ஒரு சுதந்திரமான மனிதனாய் வாழும் போது நீங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் நன்மைகளை எடுத்துக் கொண்டவர்கள் ஆவீர்கள் தானே?

சித்தாந்தங்களும் தத்துவங்களும் தோன்றியது மனித வாழ்க்கையை சீரமைக்கத்தான் அவைகளே இறுதி உண்மைகள் அல்ல. தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகளைப் பற்றி ஒரு மனிதன் முதலில் உணர்ந்து, அது பற்றி சிந்தித்து ஏன் இந்த சூழல் எனக்கும் என மக்களுக்கும் என்று முதலில் நினைத்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க அவனின் விழிப்புணர்வு சரியாக இருக்கும் பட்சத்தில்தான் நடந்திருக்க வேண்டும். சித்தாந்தங்களும் தத்துவங்களும் பிறக்க ஒரு மனிதன் தன்னின் இருப்பை, சூழலை, சக மனிதரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவனாயிருக்க வேண்டும்.

தெளிவான சிந்தனைகளின் பிறப்பிடம் முழுமையான விழிப்புணர்வு என்று அறிக;

ஏதோ கூற வந்து எங்கோ சென்று விட்டேன். கட்டுக்கள் இல்லாத ஒரு வாழ்க்கை வாழும் போது நீங்களும் நானும் நாமாகவே இருக்கிறோம். தயவு செய்து எவரின் கருத்துக்களும் அத்து மீறி உங்களின் விழிப்புணர்வு நிலையை உடைத்துப் போட்டு உங்களுக்குள் ஊடுருவி உங்களின் மூளைகளை கட்டுப்படுத்த விடவே விடாதீர்கள்.

இயற்கையில் வாழ்க்கையும் வாழ்வின் ஓட்டமும் மிகத்தெளிவாய் சிக்கல் இல்லாததாய் இருக்கிறது, அதை மட்டுப்பட்டு நின்று மடங்கிப் போய் விடாமல், அகண்டு பரந்து விரிந்த வானில் நமது வெற்றிச் சிறகுகளை விரிப்போம்....! எல்லைகள் கடந்த முழுமையின் ஏகாந்தத்தில் எப்போதும் சந்தோஷித்து இருப்போம்.

" உண்மைகளை வாங்கும் என் பாத்திரத்தில் சத்தியங்களை நிரப்ப எனக்கு கோட்பாடுகள் எதற்கு கொள்கை என்ற குறுகிய வட்டமெதற்கு...! ஒட்டு மொத்த பிரபஞ்ச நகர்வும் எமது கோட்பாடு....! ஒட்டு மொத்த மானுட நலமும் எமது கொள்கை! "

அடுத்த கட்டுரை என்ன அப்டீன்னு இப்பவே சொல்லிடுறேங்க..........


" கழுகு என்னும் போர்வாளுக்காக " காத்திருங்கள்.....!


தேவா. S

Comments

வெற்றிச் சிறகுகள்...! - Arumai...
//எனது ஆச்சர்யம் என்ன தெரியுமா? உங்களை ஒரு சக்கர வாழ்க்கைக்குள் அடைத்துக் கொண்டு, நான் இப்படிப்பட்டவன், இப்படி வாழ்பவன், இந்தக் கட்சியை சேர்ந்தவன், இந்த சித்தாந்தம் கொண்டவன் இந்த ஊர்க்காரன், என்று ஓராயிரம் மனோவசியக் கட்டுக்களைப் போட்டுக் கொண்டு நீங்கள் சுதந்திரமானவர் என்று எந்த தார்மீக நியாயத்தில் கூவி கூவி அறிவிக்கிறீர்கள்?
ஒரு வித மாயக்கட்டுக்குள் இருந்து கொண்டு சுதந்திர புருசர்கள் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
//

அண்ணே நீங்களும் சக்கர வாழக்கை தானே வாழுறீங்க....
திடீர்னு எங்களை பார்த்து சிரிச்சா எப்படி னே :)
என் தமிழர் இனம் அங்கே கதறு கிறதே என்று இலங்கை தமிழர்களை பார்த்து சொல்லுகிறீர்கள்...
நீங்கள் மனித இனம் என்று பார்த்தால் சிங்களர்கள் கூட மனித இனம் தான்....

அதுக்காக நீங்க கதற வேண்டாம் ...துடிக்க வேண்டாம்...என்று நான் சொல்ல வில்லை.... அது அவர் அவர் உணர்வு.....
ஆனா அதே சமயம் நீங்க எங்களை பார்த்து சிரிச்சிருக்க கூடாது..அது தான் தப்பு :)

நீங்கள் தான் சுதந்திரமானவர்....என் இருப்பை உணர்ந்தவன் என்று அடிக்கடி சொல்லுகிரிர்றீகள்...
நாம யாருமே சுதந்திரமானவர் அல்ல னே ....எனக்கு என்னவோ டைனோசார் இனம் அழிஞ்ச மாதிரி மனித இனம் கூட ஒரு நாள் சுவடு ஏதும் இல்லமால் அழிந்து போகலாம் என்று தான் நினைக்கிறன்

எது இல்லாம இருக்கோ அது மட்டுமே சுகந்திரமானது ....எது இருக்கோ அது இல்லாம போய்டும் ( சரி ..எதோ ஒளரனுமுனு தோனுச்சு ..ஒளரிட்டேன்...)

அப்போ வர்ட்டா :)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த