Skip to main content

அது ஒரு மாலை நேரம்....!
















அது ஒரு மாலை நேரம்..... என் கிராமத்து வீட்டின் கொல்லைப் புறத்தில் அமர்ந்திருக்கிறேன். மாலை வெயில் மெலிதான சிரிப்புடன் விடைபெற எத்தனிக்கையில் மேற்கிலிருந்து சூரியக் கதிரின் ஆரஞ்சுப் பழ ஒளியை மேனியில் வாங்கிய படி வரும் ஆடு மாடுகளின் கூட்டம்....

காராம் பசுக்களின் கழுத்து மணிகள் ஆடிக் கொண்டிருக்கும் சப்தம் தூரத்திலிருந்து ஏதோ ஒரு கிறக்கத்தை உண்டு பண்ண, கூடவே அந்த மேய்ப்பன் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர எழுப்பும் ஒலியும் அதன் உடன் சேர்ந்து கிறக்கத்தை அதிகமாக்க மெல்ல அரைக்கண்கள் சொருகிய படி....சொக்கிப் போய் கிடக்கிறேன்...!

கோழிகள், சேவல்கள், குஞ்சுகள் எல்லாம் ஒரு கெக்கரிப்போடு மெல்ல நிலம் கிளறியும், கால்களை சிரண்டி சிரண்டி எதையோ தேடிய படி என் வீட்டு பஞ்சாரத்தை நோக்கி வருகின்றன...

காலையில் வயலுக்குப் போன மாரிமுத்து தாத்தா ஏர்க் கலப்பையோடு...மாடுகளை ஓட்டிக் கொண்டு என் வீட்டு புஞ்சையை கடந்து நடந்து போய்க்கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை சேறு....இருந்ததைப் பார்த்த நான் "...ஏன் தாத்தா வயக்காட்ல தானா சேத்த கழுவிட்டு வந்தா என்ன...? " என்று கேட்க நினைப்பதற்குள் அவரின் இறுக்கி கட்டிய பழுப்படைந்த வேட்டி தாண்டி வெளியே தெரிந்த கோவணத்தை பார்த்து சிரித்தே விட்டேன்...பிறகு எங்கே கேள்வி கேட்பது...!!

அந்தி வானம் எவ்வளவு அழகாய் மிருதுவாய் இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இந்த வானத்தை தொட்டுவிடவேண்டும் என்ற என் கனவெல்லாம் நொறுங்கிப் போன அந்த நாளில் வானம் என்ற ஒன்றே கிடையாது என்று அறிந்த அந்த நொடி கலக்கமானதுதான்.. வானம் மட்டும் என்று சொல்ல முடியாது...நிலாவிற்கு கூட ஒரு நாள் போவேன் என்று திடமாய் நம்பியிருக்கிறேன்...காரணம் என் செல்ல அம்மாதான்...

எப்போது பார்த்தாலும் வானத்தைக் காட்டி, காட்டி சோறு ஊட்டுகிறேன் என்று சொல்லி சொல்லி என் நம்பிக்கையை வளர்த்து விட்டாள். அம்மா சோறூட்டும் போது அந்த நிலவின் கிரகணத்தில் மின்னும்.... கையிலிருக்கும் கிண்ணமும் அழகு.... என் அம்மாவும் அழகுதான். அம்மா எவ்வளவு பாசக்காரி....உச்சி மோந்து எனக்கு உண்ண கொடுக்கும் போது நான் உண்ணா விட்டால் " இரவில் சங்கிலிக் கருப்பன் வருவான் உன்னைத் தூங்கவிடமாட்டான் கண்ணா..." என்று பயமுறுத்தியே சாப்பிட வைப்பாள்.

வயிறு முட்ட ஊட்டி விட்டு நான் போட்டிருக்கும் வெள்ளை முண்டா பனியனைத் தூக்கி விட்டு வயிற்றில் கை வைத்து பார்த்து என் சாமிக்கு போதுமாய்யா...? என்று கேட்கும் போது நான் கெக்கபிக்க என்று பல நாள்கள் விபரம் தெரிந்தே சிரித்திருக்கிறேன்....அப்போது எனக்கு வாணி (வாயில் ஒழுகும் எச்சில்) ஊற்றும்....ங் ங்..ங் என்று ஒரு மாதிரி சிரித்து வைப்பேன்...வாயை அம்மா முந்தானையில் துடைக்கும் போது அம்மாவின் வாசம் ஒரு விதமாய் என் மூக்கினுள் செல்ல...

தோளோடு அவளைக் கட்டிக் கொண்டு கழுத்துச் சூட்டில் என் முகம் புதைத்துக் கொள்வேன். அப்படி முகத்தை பாதி மூடிக் கொண்டு ஓரவிழியால் நிலாவைப் பார்ப்பேன்...குளு குளுவென்று என்னை பார்த்து சிரிக்கும்.....நானும் நிலா உள்ளே இருக்கும் அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே உறங்கி விடுவேன்.

காலங்கள் எப்போதும் பிள்ளைப் பருவத்தில் அட்டகாசமாய் இருந்திருக்கின்றன.... என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இருள் போர்வையை பூமி மீது இயற்கை அழகாய் போர்த்தி விட தொடங்கியிருந்தது... ! என்னைக் கடந்து சென்ற ஆடு மாடுகளின் ஓசைகள் தூரத்தில் இன்னமும் கேட்க....என் வலது பக்கத்தில் இருந்த ஒற்றைப் பனைமரத்தோடு தன் சல்லாபத்தை ஆரம்பித்திருந்தது வாடைக்காற்று...

அடிக்கடி இப்படித்தான்..இந்த கரியன் இருக்கிறானே..(ஒத்தப் பனையை இப்படித்தான் நான் அழைப்பேன்) மிகவும் சந்தோசமாகவே இருப்பான்...! சலசலவென்று காற்றினை தன்னுள் வாங்கி அவனெழுப்பும் ஒலி அலாதியாய் இருக்கும்....! அவனின் உயரத்தைப் பார்த்து எப்போதும் பிரமித்துக் கொண்டே இருப்பேன்...! இப்போதும் சலசலத்துக் கொண்டிருக்கிறான் கரியன்...

கரியனுக்கு நேர் எதிரே இருக்கும் எங்க பெரியாச்சி...(புளிய மரம்) இப்போது மிக உற்சாகமாய் இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டேன். ஆமாம் காலையில் எழுந்து வெளியே சென்ற அவளின் பிள்ளைகள் எல்லாம் அவளின் மடிக்கு திரும்பி வந்து அமர்ந்து கொண்டு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் தருணம் அவள் முழு நிறைவோடுதானே இருப்பாள். எல்லா பறவைகளும் ...அதை நான் பார்த்தேன், இதை நான் தின்றேன்...நீ இன்னிக்கு எங்க போன.. நான் அங்க போனேன்....என்று பேசிச் சிரித்துக் கொண்டிருக்கையில் .... எனக்கு வந்த பொறாமை இருக்கிறதே....

என்ன பொறாமை என்று கேட்கிறீர்களா...அட...என்னையும் கூட சேத்துகிட்டா என்ன? மாட்டேன்னா சொல்றேன்....என்று எண்ணியபடியே வானத்தை எட்டிப் பிடித்திருந்தது என் பார்வை..

ஆமாம் இரவு ஆகட்டும் உடனே....இந்த வானம் பண்ணும் அலங்காரம்.. இருக்கிறதே... அதை நான் சொல்ல மாட்டேன்....நீங்களே பாருங்கள்....அலங்கார நட்சத்திரங்களோடு அவள்(து) எப்படி ஜொலிக்கிறது என்று....

மையல் கொண்டு நான் நின்றிருந்த நேரம் எவ்வளவு என்று உணரும் முன்பு....

வீட்டிக்குள்ளிருந்து அப்பத்தாவின் குரல்..." ஏப்பு இருட்டுல நிக்கிறியே...காத்து கருப்பு ஏதாச்சும் வந்து அடிச்சிரப் போவுது...உள்ள வாய்யா..." என்னை எட்டிப்பிடிக்க....

என் ஏகாந்தத்தை அங்கேயே கலைத்து விட்டு "........இந்த வந்துடனப்பத்தோவ்.. " என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றே விட்டேன்...!


அப்போ....வர்ர்ர்ட்டா.....!


தேவா. S


PS: Next shot .... " கழுகு என்னும் போர்வாள்...!

Comments

செம ரசனை.... அம்மாவின் அன்பு மிகவும் நெகிழச் செய்கிறது..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல