
முன் பல்லை காட்டிய படி நாணிக் கோணி இழுத்துக் கொண்டு யாரிடம் கேட்கிறாய் என் மனமே நான் யாரென்று??? நான் யாரென்றறியாமல் நீயென்று சொல்வெனென்று மனப்பால் குடிக்கிறாயா? மட மனமே? நீ கொண்ட கற்பிதங்களையும் நீ ஜனித்த இடத்தின் வேர்களின் மூலங்களையையும் படைத்தவனை பார்த்து கேட்கிறாயே கேள்வி...!
அகந்தையை தன்னுள் அடக்கி தன்னை மறந்த மானுடர்களின் வரிசையில் என்னை சேர்க்க நினைக்கும் உன்னை வென்று போவது மட்டுமல்ல.....நான் ....மயங்கிக் கிடப்பதும் நான்..தான்..!
தோட்டத்து வேலிகளுக்குள் ஊர்ந்து செல்லும் அரவம் நானே. நிலச் சூட்டின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு தானென்ற தன்னுள் தவழ்ந்து செல்லு தவம் போன்ற வாழ்கை அது. தோட்டத்துக்குள் வேர்பிடித்து நிற்கும் செடிகளும் கொடிகளும் நானே...!
எமது கால்களைப் பரப்பி நீர்க்கால்களை தேடி நிலத்துக்குள் சென்று விரிந்து பரந்து பிடிப்புக் கொண்டு நிலத்தின் குளுமையோடு உறவாடுவதோடு நில்லாமல் விடியலில் ஜனிக்கும் சூரியனின் வெம்மையை எட்டிப் பிடித்து உணவுக்கான சக்தியை வாங்கி எமக்குள் நாமே நின்று வாழ்ந்து பின்னொரு நாள் சலனமற்று காய்ந்து கருப்போவதும் யார்?
மருகிப் போய்தான் பல்கி விரிந்தேன். நித்திய இருளில் நிரந்தரமாய் தியானித்துக் கிடக்கையில் என்னுள் நானே ஆழ்ந்து அமிழ்கையில் சப்தங்களின்றி சமைந்து கிடக்கையில் வேண்டுமென்றேதான் விருப்பத்தினை எனக்குள் விரித்துப் போட்டேன். சப்தமானேன்...!
எப்படி.....தெரியுமா?
அது இருளில் இருந்து ஜனித்த சப்தம்...என்னின் அமைதியை கிழித்து முதன் முதலின் என்னை காண அவித்தைக்குள் நான் அடி எடுத்து வைத்த அற்புதக் கணமது. இதோ...இதோ இன்று மனமான நீ, நீ என்று உன்னை செல்லும் உன் உடலுக்குள் மூச்சுக்காற்றாய் சென்று ஆழச் சுவாசிக்கையில் மூலாதாரத்தை முட்டி மோதி இடைவெடாமல் இறைத்துப் போடுகிறதே ஒரு சப்தம்...அ...உ....ம் அது என்ன அலங்கார ஓசையா..? அல்ல... அல்ல....
அது ஆதியில் யாம் எம்மில் வெளிப்படுத்திய சப்தத்தின் தொடர்ச்சி.
என்னுள் இயங்கிக் கிடக்கும் எல்லாம் இந்த சப்தத்தின் முடிச்சினை தன்னுள் தேக்கி வைத்திருப்பது உனக்குத் தெரியுமா?சப்தமாய் வெளிப்பட்டு காலங்களற்று யாம் சப்தமாகவே அதிர்ந்து அதிர்ந்து, அந்த அதிர்வுகளின் உராய்வுகளில் வெளிப்படுத்திப் போட்ட பிந்து என்னும் ஓளியினை, சக்தியினை எம்முள் இருந்து பரப்பிப் போட்டோம்.
நாதமும் பிந்துவும் கலந்து லயித்துக் கிடந்த பரமானந்தத்தில் யாம் தோற்றுவித்த ஒவ்வொன்றும் எம்மில் ஜனித்து, ஜனித்த வேகத்தில் தம்மை வேறாய் உணர்ந்து ஓடும் ஓட்டத்தில் எம்மை யாமே அறியும் பயணத்தில் தெறித்து விழுந்தன அண்ட சாராசரமும், உமக்கு புலப்படும் பால்வேதிகளும், கோள் வெளிகளும்....இன்ன பிற சொற்களுக்குள் கொண்டு வர இயலா எமது இயல்புகளும், சூத்திரங்களும்....
தேற்றன் யார்? என்று மனமே நீ கேள்! உன்னுள் ஆழ்! தேற்றத்தின் தெளிவு யார் ? என்று கேட்டு கேட்டு, கேட்டு முட்டி மோதி உடைந்தே போ.. மனமே...நீ! சுத்த மாயையாய் யாம் வெளிபட்டு நின்ற சக்தி வடிவத்தின் சீற்றத்தில் தெறித்து விழுந்த கோடாணு கோடி நட்சத்திரங்களில் ஒன்று நீ காணும் சூரியன் எனும் என் சூட்டு வடிவம்...
காலங்கள் கடந்து எரிந்து, எரிந்து ஒரு கணத்தில் எம்மில் இருந்து தூக்கியெறிந்த பிண்ட தூசுகள் எல்லாம் அவற்றின் மூலக்கருத்தான சூரியனின் அச்சுப் பிடிப்பில் சுற்றி வர, சுற்றி வர, சூடு தணிந்து போனவை அந்த, அந்த சூழலுக்குள் அகப்பட்டுப் போக அப்படியே எம்முள் இயங்கி வர, பூமி என்னும் நெருப்பின் பக்குவத்தில் எமது பரிமாணத்தில் கூடிக் கலந்து எமது சக்தி அணுக்கள் எல்லாம் கூடிக் கலந்து பரப்பிப் போட்டதுதான் பிரணானும், நீரும்...சூடு தணிந்த நிலமும்...
கணக்குகள் இட்டா யாம் எம்முள் இவற்றை ஜனிப்பித்தோம் அல்லது எம்மை கற்பித்து ஏதோ செய்ய வேண்டும் என்ற யாக்கையிலா....? அல்ல அல்ல.. யாமே எம்மில் எல்லாமாய் இருந்து ஆடிக் களிக்கும் எமது தீரா ஆட்டத்தின் தேடல் இது, நான் கடலானேன், மண்ணானேன், மரமானேன், நீரும் நிலமும் சேர்ந்த பகுதிகளில் இருந்து ஏதோ ஒரு யாக்கையில் இயக்கத்தினை உட்கொண்ட சிறு உயிரானேன்...
எமது ஆற்றலின் இயக்க வடிவினை எல்லாம், இயங்கும் எல்லாம் தம்முள் பொருத்திக் கொண்டு தானாய் இயங்கையில், அதிசயமய் மானுடர்களுக்குள் தோன்றிய அவித்தையின் சூட்சும பரிமாணம் மனமானது. அதுவே இன்று என்னை யாரென்று என்னிடமே கேள்வி கேட்கிறது.
புல்லாய், பூடாய், பல் விருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்...எல்லாமாய் யாம் இருந்து சூட்சும இயங்கு நிலையில் நகரும் பொழுதுகளில் மானுடராய் அகப்பட்டு நகரும் எமது நாடகத்தில் யாமே சுகிக்கிறோம், யாமே நடிக்கிறோம், யாமே கோபிக்கிறோம், யாமே அசைக்கிறோம், யாமே தண்டிக்கிறோம், யாமே சந்தோசத்தில் குதிக்கிறோம் யாமே சோகத்தில் துவள்கிறோம்...
கேள்வி கேட்பவனாயும், பதில் சொல்பவனாயும், நேருக்கு நேராய் மோதுபவனாயும், ஒளிந்து நின்று அடிப்பவனாயும், அவச்சொற்கள் பேசுபவனாகவும், சுபச் சொற்கள் பேசுபவனகவும் ஆணாகவும், பெண்ணாகவும் அலியாகவும் எல்லாமாய் யாமே இயங்குகிறோம்.
மானுடர் என்னும் பக்குவத்தில் யாம் வெளிப்படும் தன்மைகள் கூடுதலாய் மிகுந்திருக்கிறது. மனம் என்ற ஒன்றினை நகர்த்தி விட்டு உயிர் என்ற படிமாணத்தில் தன்னை புகுத்திக் கொள்ளும் எல்லா மானுடரும் தன்னை தான் என்ற பெயரினுள்ளோ, தொழிலினுள்ளோ, உறவினுள்ளோ, உருவத்திற்குள்ளோ அடைத்துக் கொள்வதில்லை. உடல் கடந்து சத்திய சொருபத்தின் நிலையினை உணர்கையில்...
சுற்றி நிகழும் சூதுகளின் சூத்திரங்கள் தெரிகிறது. முரண்களின் மூலம் தெரிகிறது. பிரபஞ்ச நியதி என்னும் எமது இயக்கவிதிகளுக்கு முரண்பட்ட மனிதர்கள் மனதுக்குள் நின்று மடங்கிப் போகையில் அவர்களிடம் ஸ்தூலமாய் செல்லாமல் சூட்சுமமாய் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள்.
முரண் பட்ட மனிதர்களையும் மனித வாழ்க்கையை சுமுகமாய் நகர விடாதவர்களையும், மனிதர்களுக்குப் பின்னால் அவர்களைப் பற்றி குறை சொல்பவர்களையும் அவதூறு சொல்பவர்களையும், தன்னைப் போல தன்னை ஒத்து வாழும் மானுடர்களை துர் வார்த்தைகளால் துன்பபடுத்தியும், உடலால் வதைக்கவும் நினைப்பவர்களையும்.....
தத்தம் இடத்திலே அமர்ந்து மனம் விலக்கி, மூச்சினை உக்கிரமாக உற்று நோக்கி பிரபஞ்சம் என்னும் தன் ஆதி இயக்க நிலையின் சமன் பாடுகளைக் கூட்டிக் குறைத்து தவறிழைத்தவன் கதறிக் கதறி, முட்டி மோதி அழுது புரண்டு தன்னின் தவறினை உணரும்படி தண்டிக்கிறார்கள். இது பிரம்ம சொரூப இயல்பின் வெளிப்பாடு. மனமற்ற மனிதர்கள் யாவரும் நானே.....! ஒரு நாள் பூமியை அசைத்து யாம் விளையாடுவது வெறும் நிகழ்வல்ல அது எமது தேவையின் வடிவம்....
ஒரு நாள் ஆழக்கடலை நிலங்களுக்குள் பரவ விட்டுப் பார்ப்பதை தேவையற்ற நிகழ்வாய் மனித மனங்கள் எண்ணலாம்....எமது ஒட்டு மொத்த நகர்வுக்கும் அது தேவை, ஆனால் நோக்கமில்லை. எமது செயல்கள் எல்லாம் முழுமையான எம்மின் நகர்வே...
இப்படியேதான் மனமற்ற மனிதர்களுள் இருந்து முரண்பட்ட மனிதர்களையும் புரட்டிப் போடுகிறோம். சொர்க்க, நரகங்கள் என்ற பொய்யினைச் சொல்லி மனிதர்கள் மனம் ஒடுங்கி மனம் மறப்பார்கள் என்று விளையாடி பார்க்கிறோம். முரண்படும் மனிதர்களின் வாங்கும் தன்மைக்கு ஏற்ப பாடங்கள் கொடுத்து அவர்களை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோம்.
மனிதர்கள் சமப்பட்டு இருந்தால் எமது உற்று நோக்கில் எல்லாம் சரியாகும். அழுந்திக் கிடந்து முரண்டு பிடிப்பவனின் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டு வாழ்க்கை தடம் புரட்டப்பட்டு, நிலையாமையை ஆழமாக அவனின் ஜீவனுக்குள் உணரச் செய்து அழியும் உடலை அலைக்கழித்து அசாதரண பாடங்களும் எடுக்கிறோம்.
மட மனமே யாரிடம் வந்து கேட்கிறாய்......நீ யாரென்று... ? ஓடி ஒளி, தேடித் தெளி! அடங்கி ஒடுங்கு.....! நான் யாரென்று உன்னிடம் உரைத்தவை யாவும் சொற்பமே....கேள்விகளற்று அடங்கையில், எமது முழுமையில் நீ கரைகையில் உன்னிடம் சொல்ல நானுமில்லை நீயுமில்லை.....
மிச்சமில்லாத எல்லாமே நீயும் நானும்...!
பூரணம்.......சம்பூரணம்.....!
தேவா. S
Comments
சொல்வதெல்லாம் மனம்வழியென்றாலும்..சொல்ல சொல்ல மனமிழந்து சொல்நிற்கும் என்பதால் சொல்கிறேன்..
சொல்லால் சொல்லமுடியாததை சொல்லிட துடிக்கும் உங்கள் ஆசை அரியது..!!
புரிந்தவருக்கு இது இசை..புரியாதவர்க்கு இது சத்தம்..
இசைத்திடுங்கள்.. உங்கள் இன்னிசை கேட்காத காதுகளிலும் கேட்டு பொங்கட்டும்...!!
சில இடங்கள் எனக்கு தெளிவாக புரியவில்லை.