Pages

Thursday, January 5, 2012

தேடல்.....05.01.2012!

அதிக தொடர்புகளால் புத்தி புறம் நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கையில் உணர்தல் என்பது நிகழ்தல் மிகக் கடினமாகவே இருக்கிறது. இரைச்சலான சூழல்களும் இரைச்சலான மனிதர்களும் சேர்ந்து நமது தடிமனைக் கூட்டி விட்டு ரத்தமும் சதையுமான பிண்டமாய் நம்மை நாமே மட்டுப்படுத்தி நினைக்க வைத்து விடுகிறார்கள்.

மனிதர்கள் எல்லாம் கடவுளை கற்பனை கதாபாத்திரமாக நினைத்துக் கொண்டு முட்டி முட்டி வணங்குகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் கடவுளை மறுக்கும் ஒரு நாத்திகனை விட கடவுளை வணங்கும் ஆத்திகனுக்குத் தெளிவாகத் தெரியும் தான் வணங்கும் கடவுள் இல்லவே இல்லையென்று. புறத்தில் எதுவும் கூறாவிட்டாலும் ஆழ்நிலை மனம் அதை நம்பத்தான் செய்யாது.

ஒரு மழை பெய்த மாலை நேரம், அது ஒரு மிகப்பெரிய சிவன் கோயில். முன்னூறு வருடங்களுக்கு முந்தைய கோயில் அது என்று அந்தக் கோயிலின் கல்வெட்டு செய்தி பகின்றது. கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய தெப்பக்குளம் ஒன்று மழையால் நிறைந்து கிடந்தது. தெப்பக்குளம் நிறைந்தால் கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு தண்ணீர் வந்து விடுமாம். தெப்பக்குளம் நிறைந்து இருந்தது.

ராஜகோபுரத்திலிருந்து கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நேராய் கர்ப்பகிரகம் இருக்கும். ராஜகோபுரம், அதற்குப் பிறகு வெட்டவெளிப்பாதை, பின் கோயில் வெளிச்சுற்று உள்சுற்று என்று நீண்டு கொண்டே செல்லும் பாதை கர்ப்பகிரகத்துக்கு முன்பிருந்த நந்திக்கு அருகில் என்னைக் கொண்டு நிறுத்திய போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். அவரும் எனக்காக தீபாரதனை காட்டிவிட்டு வெறெங்கோ சென்று விட்டார்.

நல்ல அடர்த்தியான இருளை அந்த கர்ப்பக்கிரக வெளிச்சுற்றில் இருந்த மஞ்சள் குண்டு பல்புகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இருளின் மிகுதியால் மங்கலாய் ஒரு வித சோம்பலோடு இருந்த அந்த சூழலும் சில்வண்டுகளின் சப்தமும் என் முட்டிக்கும் ஒரு இரண்டு அல்லது மூன்று இஞ்ச் குறைவான அளவு நிறைந்திருந்த மழை நீருமாய்.....நான் சிவபுராணம் சொல்லிக் கொண்டிருந்தேன்....

சொர்ண காளீஸ்வரார் எண்ணெய் விளக்குகளின் வெளிச்சத்தில் மெளனமாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவபுராணம் சொல்ல ஆரம்பித்த சில நொடிகளில் சூழலை மறந்தேன்.

தில்லையுள் கூத்தனே....தென்பாண்டி நாட்டனே...என்று வார்த்தைகளில் மனம் கரைந்து அல்லல் பிறவி அறுப்பானே...என்று வெறுமனே சப்த வடிவங்களில் நகர்ந்து கொண்டிருந்தேன். சிவபுராணம் ஒரு சிறந்த மந்திரம் என்று சிறுவயதில் என் தாத்தா கூறிய போது எனக்கு ஜீ பூம்பா போன்ற ஒரு மந்திரமாய் இருக்குமோ என்றுதான் தோன்றியிருக்கிறது. சூ......மந்திரக் காளி.. என்று சொல்லி... அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்பார்களே அப்படி நினைத்துக் கொள்வேன்.

மந்திரம் என்பது வெற்று வார்த்தைகளோ அல்லது மிகப்பெரிய மேஜிக்கை நம் கண் முன் காட்டும் விடயமோ அல்ல..! பெரும்பாலும் சப்தங்களின் ஏற்ற, இறக்கங்களில் அர்த்தங்களே அறியாமல் மனம் நிதானப்பட்டுப் போகும். சிவபுராணம் போன்ற மந்திரங்கள் சப்தங்களால் மனதை சாந்தப்படுத்துபவை அல்ல மாறாக பொருளால் அவை நம்மை கரைத்துப் போட்டு விடும்.

இன்பமும் துன்பமும் உள்ளானே...இல்லானே..... என்று சொல்லும் போது கூர்மையான புத்திகள் அது என்ன உள்ளானே ....பிறகு இல்லானே என்று யோசிக்கத்தான் செய்யும். ஸ்தூல, சூட்சும பிரபஞ்ச நிகழ்வுகளை இரண்டு வார்த்தைகளும் சம்மட்டியால் அடித்து சொல்லிக் கொடுக்கும். கூத்தன் என்று தமிழ் சைவ சித்தாந்த நூல்கள் சிவனை விவரிக்கும் இடமெல்லாம் அற்புதமானவை.

நாளும் இங்கே நடந்து கொண்டிருப்பது கூத்து. இந்தக் கூத்தை எல்லாமாய் இருந்து ஒரு சக்தி அரங்கேற்றிக் கோன்டிருக்கிறது. அந்த சக்தி, (எனர்ஜி)தான் கூத்தன்...!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் எப்படி பிறப்பை அறுப்பான்? பிஞ்ஞகன் என்றால் பிறை, பாம்பு, கங்கா நீர் என்றெல்லாம் கண்ணில் காணக்கூடிய யாவையும், காணாதவைகள் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டவன் என்று பொருள் கொள்ளலாம். பிரபஞ்ச இயக்கமே பிஞ்ஞகன்.

பிரபஞ்ச இயக்கம் எப்படி பிறப்பை அறுக்கும். பிறப்பு என்பது உடலுக்கு மட்டுமே ஏற்படுவது என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு மறுபிறப்பு இல்லை என்று கூறுபவர்கள் உண்டு. இது உண்மைதான். புலன்வயப்பட்ட வாழ்க்கையில் புலன்களின் அனுபவமே நாம் என்று ஆகிறோம். புலன்கள் அழிந்த பின் பிறகு எப்படி கடந்த பிறவி நினைவு வரும். முன் ஜென்மத்தில் நான் இப்படி இருந்தேன் அப்படி இருந்தேன் என்று கூறுவது எல்லாம் அனுமானங்களே....

ஆனாலும் மறு பிறப்பு உண்டு என்று நான் கூறுவேன்.

மறுபிறப்பு என்று இங்கே நான் கூறுவது உடலினைச் சார்ந்த நினைவுகளின் பிறப்பல்ல உடலைச்சார்ந்த அனுபவங்களைத் தாங்கிய சக்தியின் பிறப்பு. உள்ளது அழியாதுதானே? இல்லாதது தோன்றாதுதானே..? இருக்கும் பிரபஞ்சத்தின் நிறை கூடவோ குறையவோ செய்யாமல் அது அப்படியேதான் இருக்கிறது. புதிதாய் பிறக்கும் குழந்தைக்கு உடலைக் கொடுப்பது இரண்டு உடல்களில் தேங்கிக் கிடக்கும் சத்துக்களின் கூட்டு...உயிரைக் கொடுப்பது...எது?அந்த சக்தி எங்கே இருந்து வருகிறது....

என்றெல்லாம் யோசித்துப் பார்க்கையில் அது பிரபஞ்சச் சுழற்சி மற்றும் ஏதோ ஒரு செயலின் விளைவு என்றுதானே கொள்ளவேண்டும். இந்தப் பிறப்பின் விளைவு மறு சக்தியாய் பரிணமிக்கிறது. அதாவது இந்த பிறப்பின் செயலின் விளைவுகள்...

நிற்க....!

பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் நமது அத்தனை செயல்களின் விளைவையும் நமது இறப்புக்குள் கொடுத்து விடமுடியாது அது சக்திப்பரிமாற்றமாய் அதிர்வுகளாய் வேறு ஒரு உடலுக்குள் சென்று தொடர்கிறது. இப்படி தொடராது இருக்க என்ன செய்யவேண்டும்...?

அதாவது பிறப்பழிக்க வேண்டுமெனில் பிஞ்ஞகனாகிய இந்த பிரபஞ்ச சக்தியை புத்தியில் தேக்கி செய்யும் செயல்கள் எல்லாம் நான் என்னும் உடலோ மனமோ மட்டும் செய்வது இல்லை. இது ஒரு கூட்டு நிகழ்வு நான் என்னும் உடலும் மனமும் ஒரு கருவி என்று உணரும் போது பிஞ்ஞகனாகிய பிரபஞ்சத்தின் செயலாகத்தானே எல்லாம் போய்விடுகிறது....

இதன் விளைவுகள் பிரபஞ்சத்தோடு கரைந்து வேறு பரிணாமத்திற்கு புரிதலாய் பயணப்படுமே அன்றி மறுபடியும் உடல் என்னும் வடிவம் கொண்டு இங்கே அனுபவப்பட வேறு ஏதும் இல்லைதானே....? இந்த பிறப்பு அறுந்து போய் விடும்தானே...கூட்டாய் நின்ற சக்திதுகள்கள் நான் என்ற மட்டுப்பட்ட நிலை கடந்து யாம் என்ற பேரியக்கத்தின் துகள்களாய் சிதறிப் போகும்தானே...உடலாய் இருக்கும் பிறப்பு நிகழாது நின்றுதானே போய்விடும்...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்....!!!!

சிவபுராணத்தின் இடையில் வரும் இரண்டே வார்த்தைகள்தான் இவை....! இவற்றின் ஆழம் எவ்வளவு பெரியது...! கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்தானே...?!!!!!

சிவபுராணம் சொல்லி முடித்து நான் கோபுர வாசலைப் பார்க்கிறேன். அது வெகு தொலைவில் இருக்கிறது. சுற்றிலும் யாரும் இல்லை. கர்ப்பக்கிரகம், சிவலிங்கம், மங்கலான ஒளி, சுவர்க்கோழிகளின் சப்தம், காலுக்கடியில் தண்ணீர்....

பயம் மனதைக் கவ்வியது. மறுபடியும் மனமே ஒரு கேள்வி கேட்டது....இது கோவில்தானே...? பிறகு என்ன பயம்....? என்று....ஆமாம் கோவில்தானே...எதுக்கு பயம்? நானே கேட்டுக் கொண்டேன். இருந்தாலும் பயம் என்னை விடவில்லை. சத்தியத்தில் கடவுள் என்று மனிதரைப் போல ஒருவர் இருக்கிறார். அவர் என்னைக் காப்பார் என்றால் இங்கே எனக்குப் பாதுகாப்பு உணர்வு வரவேண்டும். எதைப் பற்றியும் பயம் வரக் கூடாது ஆனால் பயம் வருகிறது என்ற கேள்விக்கு...பயம் என்பது தெளிவின்மை என்று பதில் கிடைத்தது.

இந்த தெளிவின்மையை குரூர புத்திகள் உள்ள மனிதர்கள் பல தரப்பட்ட துறைகளில் இருந்து கொண்டு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சரி தெளிவு வர என்ன செய்யவேண்டும்? உண்மையை அறிய வேண்டும். உண்மையை அறிதல் என்றால்....? நான் என்ற எண்ணம் விட்டு வெளியே நின்று எல்லாவற்றையும் பார்த்தல்...நான் என்ற எண்ணம் அகற்ற என்ன செய்ய? மனிதர்களை நேசி; அடுத்த மனிதர்களின் வலியை உணர்; யாரையும் ஏமாற்றாதே...; புறம் சொல்லாதே; ஒருவரைப் பற்றி ஒருவரிடம் அவதூறு பேசாதே; சேவையை விளம்பரம் செய்யாதே; மற்றவர் புகழ செயல்கள் செய்யாதே....என்று ஏதேதோ புத்தியில் உறைக்க....அதன் தொடர்ச்சியாய்...

கடமையைச் செய்யும் போது பலனை எதிர்பார்க்காதே...! அதாவது நீ எதிர்பார்த்து காய் நகர்த்தாதே....கடமையின் விளைவு பலன் என்பது பிரபஞ்ச நியதி....! சரி இப்படி இருந்தால் என்ன ஆகும்....? பிறப்பறுக்கலாம்...., பிஞ்ஞகன் ஆகலாம்...!

கர்ப்பகிரகத்தை முழுதாய் சுற்றி வரும் வரையில் ஓம் நமசிவாயா என்று ஓங்கி கத்தி பயத்தை வெளியேற்றினேன்...! இப்போது மட்டும் சிவன் என்று படத்தில் காட்டப்படும் ஒருவர் புல் மேக் அப்போடு ஜடாமுடி, புலித்தோல், தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, நெற்றிக் கண், என்று உருட்டும் விழிகளோடு என் எதிரில் வந்து நின்று ....என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டால் நான் ஏதாவது கேட்கும் நிலையில் இருப்பேனா....? அல்லது எதாவது கேட்பேனா....?

ஹா...ஹா...ஹா சத்தியமாய் மயக்கம் போட்டு விழுந்து மூர்ச்சையாகித்தான் போவேன்...!

கோயிலை விட்டு வெளியில் வந்து விட்டேன்.....நன்றாக இருட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு கையேந்தி பவனில் போய் கை கழுவி விட்டு....

நாலு இட்லி கொடுங்கண்ணே ....என்றேன்...! என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் வேகமாய் உணவருந்திக் கொண்டிருந்தனர்....!

சிவம் என்பது உருவமல்ல, மனிதனல்ல, சிவம் என்பது தெளிவு என்று உள்ளுக்குள் சப்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

நான் பயமற்று இருந்தேன்....!


தேவா. S3 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///.நான் என்ற எண்ணம் அகற்ற என்ன செய்ய? மனிதர்களை நேசி; அடுத்த மனிதர்களின் வலியை உணர்; யாரையும் ஏமாற்றாதே...; புறம் சொல்லாதே; ஒருவரைப் பற்றி ஒருவரிடம் அவதூறு பேசாதே; சேவையை விளம்பரம் செய்யாதே; மற்றவர் புகழ செயல்கள் செய்யாதே....///

...பிறப்பறுக்க தவம் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை... இப்படியும் செய்யலாம்ன்னு ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

...நன்றாய் மனதில் பதிந்தது. உங்கள் தேடலின் தீர்வுகள்.. எம்மையும் தேடி வர நீங்கள் எழுதி வருவது.. மனதிற்கு மகிழ்ச்சி..

தொடரட்டும் உங்கள் தேடல்...! :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///இப்போது மட்டும் சிவன் என்று படத்தில் காட்டப்படும் ஒருவர் புல் மேக் அப்போடு ஜடாமுடி, புலித்தோல், தலையில் கங்கை, கழுத்தில் பாம்பு, நெற்றிக் கண், என்று உருட்டும் விழிகளோடு என் எதிரில் வந்து நின்று ....என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டால் //


...ஹா ஹா... என்னங்க இது.. சீரியஸ்-ஆ படிச்சிட்டு இருக்கும் போது. இப்படி சிரிக்க வச்சிட்டீங்க.. செம.. செம... நா வேற நினச்சு பாத்துட்டேன்.. உண்மை தான்.. மயக்கம் தான் வரும்...!

சூப்பர்..! :)

தனி காட்டு ராஜா said...

:)