Skip to main content

அலுத்துதான் போகிறது...!
















அலுத்துதான் போகிறது
அன்றாட சராசரிகளோடு
நித்தம் மல்லுக்கட்டும்
டைம் டேபிள் வாழ்க்கை!

என்றேனும் ஒரு நாள்
கூடு விட்டு கூடு பாய்ந்து
அந்தக் குயிலுக்குள் ஊடுருவ வேண்டும்
யாருமற்ற வனமொன்றில்
அலுக்கும் வரை கூவி, கூவி
காற்றின் ஸ்பரிசங்களோடு
காதல் செய்ய வேண்டும்!

ஒரு மரத்தின் இலையாய்
மாறி...
ஆடி, அசைந்து நடனமாடி
பழுத்து, சருகாகி
காற்றில் பறந்து
மண்ணில் விழுந்து
மெளனமாய் மட்கியே...
போக வேண்டும்...!

ஒரு மழைக்குப் பின்னான
வானவில்லாய்
கண நேரம் ஜொலித்து விட்டு
வானத்தின் பெருவெளியில்
கரைந்தே போகவேண்டும்

காற்றில் பறக்கும்
ஒரு பஞ்சாய் மாறி
இடம் சென்று; வலம் திரும்பி;
மேலெழும்பி; கீழ் தவழ்ந்து
அங்கும் இங்கும்...
அலைந்து, அலைந்து
உதிர்ந்து போகவேண்டு!

அடர் கானகத்தின்
வெறுமையினை சுமக்கும்
பேரமைதியாய் படுத்துக் கொண்டு
காட்டு மலர்களோடு
சல்லாபிக்க வேண்டும்..!

இப்படியாய்...

எல்லாமாகும் ஏக்கத்தில்
லயித்து, லயித்து
வார்த்தைகளை கோர்த்தெடுத்து
வடிக்கும் கவிதை முடித்த
நிறைவோடு..
மரித்துப் போகவும் வேண்டும்..!

ஆமாம்...

அழுத்துதான் போகிறது
அன்றாட சராசரிகளோடு
நித்தம் மல்லுக்கட்டும்
டைம் டேபிள் வாழ்க்கை!

தேவா. சு

Comments

அழுத்துதான் /// அழுத்தா அலுத்தா அண்ணே....

ஒரு மழைக்குப் பின்னான
வானவில்லாய்
கண நேரம் ஜொலித்து விட்டு
வானத்தின் பெருவெளியில்
கரைந்தே போகவேண்டும்....

இந்த பாத்திரத்தில் நீங்க முன்னமே வந்துவிட்டீங்க அண்ணே....
ஹேமா said…
ஒரு கவிஞனுக்கு மட்டுமே இப்படியான ஆசைகள் வரும் தேவா.சுகமான இதமான ஆசைகள்.முடியாத பேராசைகளோ.ஆனாலும் வேண்டும் !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த