Skip to main content

அஜித் என்னும் டான்...!

















நடிகர்களிடம் எல்லாம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று இறுமாப்போடு எப்போதும் வியாக்கியானம் பேசிச் செல்லும் மேதாவிகள் கூட்டத்திற்குள் போலியாய் இருக்க நான் எப்போதும் விரும்பியது இல்லை. ரஜினியை விழுந்து விழுந்து ரசிக்க வெள்ளித் திரை தாண்டிய அவரின் வாழ்க்கை காரணமாய் இருந்தது. ஒரு பஸ் கண்டக்டராய் இருந்து......

நாட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்து விட்டார் என்று சந்தோசப்பட்டு ஒரு கூட்டமும் குரல் கொடுக்கவில்லை ஏன் என்று ஒரு கூட்டமும் எப்போதும் விமர்சித்துக் கொண்டே இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டாராய் மாறி இருக்கிறார் என்றால்....

அவர் கடந்து வந்த தூரத்தையும் அதைக் கடக்க அவர் சந்தித்து இருக்கும் பிரச்சினைகளையும், வலிகளையும், சோதனைகளையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். சினிமா வாய்ப்புக்கள் சொற்பமாய் கையில் ரஜினி கையில் வைத்திருந்த காலத்தில் எல்லாம் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு படுத்திருந்த நேரம் எல்லாம் இருந்திருக்கிறதாம்..

வயிற்றில் பசியோடு அண்ணா சாலையில் நடந்து செல்லும் போதெல்லாம் ரஜினி அங்கே வைக்கப்பட்டிருக்கும் மிகப் பிரபல நடிகர்களின் கட் அவுட்டுகளையும் போஸ்ட்டர்களையும் பார்த்துக் கொண்டே நடப்பாராம். கையில் சிகரெட் நெருப்பு புகைந்து கொண்டிருக்கையில் உள்ளுக்குள் ஒரு நெருப்பு புகைந்து கொண்டே இருக்குமாம்.....இன்று சினிமா என்னும் துறையில் அவர் எட்டியிருக்கும் உயரத்திற்கு பின்னால் இத்தனை வலிகளை கடந்த அபார பலம் இருக்கிறது. வெற்றியாளர்கள் எல்லோரும் பல சூழல்களை கடந்து வந்தவர்கள்தான்...

திறமை என்பதை மட்டுமே நம்பி,  விழுந்து, விழுந்து எழுந்து வந்தவர்கள்தான் இங்கே கவனிக்கப்படவேண்டியவர்கள். வறுமையில் இருந்து குறுக்கு வழியில் முன்னேறி பதவிகளையும், உச்சாணிக் கொம்புகளைப் பிடித்தவர்களும், சுற்றி சுற்றி ஆயிரம் சூழல்கள் உதவி செய்ய அந்த சூழலினால் மேலேறி வந்தவர்களையும் காலம் மெல்ல மெல்ல உதறிவிட்டு விடுகிறது....

மாறாக.....

எந்த வித உதவியும் இல்லாமல் போராடி, போராடி நேர்மையாய் மேலேறி வந்தவர்களை எப்போதும் தன் தோள்களில் வைத்தே அது சுமக்கிறது. இப்படித்தான் அஜித்தை பிடிப்பதற்கும் எனக்கு பல காரணங்கள் இருக்கிறது. எல்லா துறையிலும் இப்படியாய் ஆட்கள் இருந்தாலும் சினிமா என்னும் மிகப்பெரிய மக்கள் வசீகர சக்தியில் இருப்பவர்களால் அதிக தாக்கங்கள் நமக்கு கிடைத்து விடுகின்றன. சினிமாதானே என்று யாரேனும் சொல்லிச் செல்வதை என்னால் ஏற்க முடியாது. சினிமா எப்போதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியாத்தான் இருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திலிருந்து ஒரு வாழ்க்கை முறை பல நேரங்களில் நமக்கு கிடைத்திருக்கிறது, எவ்வளவு உண்மையோ அதே போல வாழ்க்கையிலிருந்தும் பல திரைப்படங்கள் உருவாகியும் இருக்கின்றன. இதை எப்பவுமே மறுக்கவும், மறக்கவும் முடியாது. பாச மலர் படம் பார்த்து விட்டு தங்கையை உயிருக்கு உயிராய் நேசித்தவனும் இருக்கிறான், நூறாவது நாள் பார்த்து விட்டு பல கொலைகளை செய்தவர்களும் இருக்கிறார்கள்.

சினிமா தாக்கத்தை எப்படி உண்டாக்குகிறதோ அதே வலுவோடு சினிமா நடிகர்களும் கடும் தாக்கத்தை சமூகத்தில் அதுவும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் கடந்த 50 வருடத்துக்கு மேல்  நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாடகத்தன்மையை விட்டு எப்போது எதார்த்த வாழ்க்கைக்குள் சினிமாவை இயக்குனர்கள் கொண்டு வந்தார்களோ அன்றே....தன்னை எப்போதும் திரைக்குள் வைத்துப் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ளும் ஒரு மனோபாவத்துக்கு மனிதர்கள் வந்து விட்டார்கள்.

நீங்கள் என்ன சினிமாவை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்..? ஏதேனும் நல்ல புத்தகத்தையோ அல்லது போராடி வென்ற அரசியல் தலைவர்களைப் பற்றியோ, புரட்சிக்காரர்களை பற்றியோ பேசலாமே என்று நீங்கள் கேட்கலாம்......? கேள்வி அறிவின் அடிப்படையில் சரிதான் என்றாலும்,

நான் ஏன் அஜித்தை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால், ஒரு புத்தகமும் ஒரு சித்தாந்தமும் கொள்கைகளும் கோட்பாடுகளும் அறிவு ஜீவிகளுக்கே உரித்தானது...என்பதை ஒத்துக் கொள்ளும் போது,  பாமரனை, சராசரி மனிதர்களை வசீகரப்படுத்தி ஏதோ ஒரு கருத்தை சினிமா என்னும் ஊடகம் முழுமையாய் அவனுக்குள் எளிதாய் கொண்டு சேர்த்து விடுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அஜித் போன்ற நடிகர்களை வெள்ளித் திரை கடந்து சம கால இளைஞர்கள் தன்னம்பிக்கையின் சின்னமாய் பார்க்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல.....அதே போல எந்த துறையில் நாம் இருந்தாலும் அங்கே ஒரு போர்க் குணத்தோடு போராடி மேலெழும்பி வரவேண்டும் என்ற வைராக்கியத்தையும் நாம் படிக்கவேண்டும். அமராவதி படத்தில் நடித்த ஒரு கெச்செலான சிவந்த தோற்றம் கொண்ட அந்த இளைஞன் தான்.....

இன்றைக்கு தமிழகத்தின் மிகைப்பட்ட இளைஞர்களின் தலையாக இருக்கிறார் என்றால்...

அமராவதியிலிருந்து இப்போது வரவிருக்கும் பில்லா II  வரை அவர் என்ன என்ன செய்தார்? எத்தனை வலிகளை அந்த இளைஞன் சுமந்திருப்பான், கடந்திருப்பான் என்பதையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். 1996 என்று நினைக்கிறேன் காதல் கோட்டை படம் முடிந்த பிறகு தொடர்ச்சியாய் அஜித்துக்கு தோல்விப் படங்கள்தான்....சீண்ட ஆளில்லை...ஆமாம்... அஜித்தின் அப்பா ஒரு பெரிய டைரக்டரோ தயாரிப்பாளரோ அல்லது அவரது சொந்த பந்தங்கள் எல்லாம் சினிமாத் துறையிலோ இருந்திருக்க வில்லை....

ஒரு மெக்கானிக்காக இருந்த பையன் சினிமாவில் கதாநாயகனாய் வந்து நடித்து தொடர்ச்சியாய் படங்களில் நடித்ததே பெரும் சாதனைதான் என்றாலும் அவருக்கு கிடைத்த அவமானங்களும் முட்டுக்கட்டைகளும் அந்த சாதனையை எல்லாம் சரித்துப் போடத்தான் முயன்றது. தோல்விகளை எல்லாம் அவர் கடந்து கொண்டிருந்த போது கோடாம்பாக்கத்து ஜாம்பவான்களின் அரசியலும் அவரை நிலை தடுமாறவும் செய்து கொண்டிருந்தது. அஜித் என்னும் எந்த வித சினிமா பின்புலம் இல்லாத இளைஞன் வாய் திறந்து எது பேசினாலும் அது மிகப்பெரிய அரசியலாக்கப்பட்டு அவமானமாய் மாற்றப்பட்டு அவரின் கைகளில் திரும்ப கொடுக்கப்பட்டது....

மிரளாமல் எல்லாவற்றையும் சாவகாசமாய் கடந்து வர அஜித் போராடிக் கொண்டிருக்கையில் பைக் ஆக்ஸிடென்ட் ஆகி முதுகெலும்பில் அடிபட்டு இனி அஜித் எழுந்து நடமாடுவதே கடினம் என்பன போன்ற சூழல்கள் எல்லாம் வந்தன. இதோ இன்று தமிழ் சினிமாவின் தடம் பதித்து நிற்கும் மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாய் மிளிர்கிறார், ரஜினி படத்துக்கு இருக்கும் மிகப்பெரிய ஓப்பனிங்கும், மாஸும்....அஜித்துக்கும்...இன்று...

இது எல்லாம் அஜித்தின் விடா முயற்சியாலும், தனித்தன்மையாலும் தானே ஏற்பட்டது...?!!!!

சினிமாவில் நடிக்கும் ஒரு நடிகன் நான்....என்ற அளவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது எல்லை எதுவென்று அவர் தெளிவாய் தெரிந்து வைத்திருப்பதால்தான்...கத்துக் குட்டி கலர்க் கலர் நட்சத்திரங்கள் தங்களை சூப்பர் ஸ்டாராய் நினைத்துக் கொண்டு மேடைகளில் ஏறி பக்கம் பக்கமாய் அரசியல் பேசிய போதெல்லாம் அஜித் எப்போதும் மெளனமாகவே இருக்கிறார். 

ஒரு திரைப்படம், அந்த திரைப்படம் முடிந்தால் பெரும்பாலும் அடுத்த திரைப்படம் இப்படித்தான் தனது தொழில் சார்ந்த கூர்மையான நகர்வாக இருக்கிறது அவரின் நகர்வுகள். இடைப்பட்ட காலத்தில் எந்த வித ஆடம்பரமும் விளம்பரமும் வெட்டிப் பேச்சுக்களும் இல்லாததாய் அவரின் வாழ்க்கை இருக்கிறது.

ரஜினியையும், அஜித்தையும் எப்போதும் மனிதர்கள் விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லையே ........அந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லையே என்று......இதிலிருக்கும் அபத்தத்தை மிகைப்பட்டபேர்கள் புரிந்து கொள்வதில்லை, ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஒரு நடிகனை நடிகனாய் பார்த்துப் பழக்கப்படாதவர்கள், அவர்களின் உழைப்பின் உயரத்தை சரிபார்த்து அதற்கு பின்னால் இருக்கும் சோகங்களைப் பார்த்து பழக்கப்படாதவர்கள்...

இப்படி பழக்கபடாமல் போனதற்கு ஒரு பெருங்காரணமாய் எம்.ஜி.ஆர் அமைந்து விட்டார். எல்லா வகையிலும் எம்.ஜி.ஆரைப் பிடித்து பார்த்து பார்த்து ரசித்து அவரை தமிழக முதல்வராக்கிய தமிழக மக்கள் அதே வீச்சில் மற்ற நடிகர்களையும் பார்த்து அவர் செய்தது போலவே செய்ய வேண்டும் என்று  எதிர்ப்பார்ப்பால் ஏற்பட்டிருக்கும் ஒரு மூளைக் குழப்ப நோய் இது. 

நீதியரசர்களும், மாவட்டக் கலெக்டர்களும், டாக்டர்களும் தொழிலதிபர்களும், கல்லூரிப் பேராசிரியார்களும் இன்ன பிற தொழில் செய்பவர்களும் தங்கள் வேலையப் பார்த்துச் செல்ல அனுமதிக்கும் என் சமூகம் ஒரு நடிகன் குரல் கொடுக்கவில்லை என்றால்..உடனே கோபித்துக் கொள்ளும்.

செய்யும் செயல்களை படம் போட்டு விளம்பரம் செய்பவன் புகழுக்காய் அதைச் செய்கிறான். செய்யும் செயலின் விளைவுகளை எண்ணி உதவிகள் செய்பவன்  அதை விளம்பரமாக்க விரும்புவதில்லை. இங்கே அஜீத் என்னும் ஒரு சாமானியன் தமிழ் சினிமாவின் 'டான்' ஆனதை ஒரு உதாரண விடயமாக எடுத்துக் கொண்டு நாம் நிறுவ விரும்பி இருப்பது எல்லாம்....

'தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும்' 

என்ற சர்வைவல் தியரிப்படி எத்தனை முட்டுக்கட்டைகள் வாழ்க்கையில் வந்தாலும் அஜித்துகள் அவற்றை எதிர் கொண்டு எதிர்த்து போரிட்டு, தனியாய் நின்று ஜெயித்து எந்த துறையில் இருக்கிறார்களோ அந்தத் துறையின் தலையாக மாறுவார்கள்......இதை யாராலும் மறுக்கவோ மாற்றவோ முடியாது...!

ஏ வாழ்க்கையே....!
வலிக்கும் இரணங்கள் கொடு,
எரிக்கும் வெம்மை கொடு,
துளிர்க்கும் உயிரினை கொடு,
எதிர்த்து அடிக்கும் வீரத்தைக் கொடு
ஜெயிக்கும் போதெல்லாம்
பணிவைக் கொடு.....!

தேவா. S

Comments

அஜீத்தை நாங்கள் வெறும் நடிகராக பார்த்ததில்லை.... நல்ல மனிதநேயம் உள்ளவர்... நக மனிதர்களை மதிக்க தெரிந்தவர்.. தன்னை விட வயதில் சிறியவர் என்றாலும் அவரை மரியாதையோடு அழைப்பவர் அஜீத்.

இவ்வளவு பெரிய நடிகர் என்ற பந்தா அவரிடம் எப்போது இருந்ததில்லை.

ஒரு நாள் அஜீத்தை ஏர்போர்ட்டில் என் அண்ணன் பார்த்து இருக்கிறான் அப்போது அஜீத் அவர் சூட்கேஸ்களை அவரே தள்ளி கொண்டு போனார் அந்த புகைப்படம் எனிடம் இன்னும் உள்ளது...

இதே போல் மற்ற ஒரு நடிகரையும் பார்த்து இருக்கிறான் அவர் பின்பு நான்கு பேர் புடை சூழ வந்திருக்கிறார்.

இந்த மாதரி அஜீத்தின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரசிகர்கள் நாங்கள்...

அவர் நடித்தாலும் நடிக்கவில்லை யென்றாலும் அவரை எப்போதும் நேசிக்கும் கூட்டம் நாங்கள்.....
Unknown said…
நடிகனை நடிகனாக மட்டும் பார்க்காமல் தத்துவஞானிகளாகவும், அறிவு ஜீவிகள், வழிகாட்டிகள், கருத்து கந்தசாமிகள் எனப் பல போஸ்டிங்குகளைக் கொடுத்துப் பெருமைப்படுத்தி வருகிறோம்!

இதனால்தான் அவர்களுக்கும் இயல்பாகவே 'முதல்வர்' கனவும் வந்துவிடுகிறது!

பின்புலமின்றி, தன்னம்பிக்கையோடு வாழ்வில் ஜெயிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் அஜீத்தை நேசிக்கிறான்!
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...
Harini Resh said…
Supperb post Deva Anna :)
Harini Resh said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த