Skip to main content

வானமகள், நாணுகிறாள்....!



அமீரகத்தின் கோடைக்காலம் கொஞ்சம் பலவீனப்பட ஆரம்பித்திருக்கிறது. கனத்து அடர்ந்து வீசிய கந்தகக் காற்று கொஞ்சம் தடிமன் குறைந்து மெலிதாய் சிலிர்த்து சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. கோடையை கொடையாய்க் கொடுத்த காலம் கடும் குளிருக்கு முந்தைய வசந்தகாலத்தில் இன்னும் ஒரிரு வாரங்களில் அடி எடுத்து வைத்து விடும். துபாய் முழுவதும் சாலையோரங்களில் கோடையிலும் பசுமையாய்ச் சிரித்த பசும் புற்களைத் தாலாட்ட தென்றல் தாய் வந்துவிடுவாள். இனி என்ன... குதூகலம்தான் கொண்டாட்டம்தான்...

விதவிதமான பூக்களை சொரிந்த படியே சாலையோரத்துச் செடிகள் தலையசைத்துச் சிரிக்கப் போகின்றன. சோகமாய் கடற்பரப்பில் பறந்து கொண்டிருந்த சீகல் பறவைகள் கூட்டத்தோடு கூட்டணி சேர, கடற்கடந்து இன்னமும் பறவைகள் கூட்டம் வந்து சேரும்... புறாக்கள் எல்லாம் பேசிச் சிரித்தபடி சாலைகளைக் கடந்து சென்று புல்வெளியில் படுத்துறங்கும்....

கோடையினைக் கடந்து அமீரகம் குளிர் காலத்துக்குள் நுழையும் அழகே தனிதான்...!  நாட்கள் செல்ல செல்ல சாலைகளை அடைத்து நிற்கும் பனிக்கூட்டமும், அதை விரட்ட வாகனங்கள் காலை எட்டு மணிக்கும் விளக்கிட்டு செல்லும் வேகமும், மழையை இப்போதோ எப்போதோ பெய்து விடுவேன் என்று  மிரட்டும் மேகக்கூட்டமும், மாலையில் நடக்க இறங்கும் மனிதர் கூட்டமும், வார இறுதியில் நிரம்பி வழியும் பூங்காக்களும், குளிர்கால விழாக்களும், வியாபாரத் திருவிழாக்களும், வெளிநாட்டவர்கள் வருகையுமெனத் திணறிப்போகும்... இந்த துபாயிலா.. அப்படி வெயில் அடித்தது, அப்படி வியர்த்தது என்ற யோசனையோடு ஜெர்கினுக்குள் நுழைந்து கொண்டு குளிர்காலம் முதலாய் இயக்கப்படாத வீட்டின் ஏசியை வேடிக்கை பார்த்து அதிசயித்துப் போவதும் உண்டு...!

காதுவரை கம்பளிப் போர்த்திக் கொண்டு குளிரினை சுகமாய் அனுபவித்தபடி உறங்குகையில் அதிகாலை அலாரம் அடித்து அடித்து தோற்றுப் போய் கடைசியில் வைக்கும் ஒப்பாரியில் மெல்ல சோம்பல் முறித்து எழுந்து செல்லமாய் தலையில் ஒரு தட்டு தட்டி நிறுத்தி விட்டு.. கண்ணாடி ஜன்னல் வழியே பனி வழியும் அமீரகத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பது சுகம் என்றால்.... மெல்ல எழுந்து ஹீட்டரைத் தட்டி விட்டு தண்ணீர் சூடாகும் வரை மீண்டுமொரு குட்டித்தூக்கம் போட்டு பின் எழுந்து போய் நடுக்கும் குளிரில் வெது வெதுப்பான நீரில் குளிப்பது இன்னும் சுகம்...!

திட்டமிடாத ஒரு வார இறுதியில் இரவு உணவுக்காய் ஒரு பாலைவன ஒரத்தில் நண்பனின் குடும்பத்தோடு சென்று விட்டு குளிர் தாங்க முடியாமல் மண்ணில் கிடந்த கட்டைகளையும் அட்டைகளையும் எடுத்து பக்கத்தில் கேம்ப் பயர் போட்டுக் கொண்டிருந்த ஒரு அரபி நண்பரிடம் இரவல் வாங்கிய சில மரத்துண்டுகளையும், போட்டு திடீர் கேம்ப்ஃபயர் உருவாக்கி, நெருப்பு அணையாமலிருக்க பாலை மண்ணை உதைத்து உதைத்து தேடி தேடி கட்டைகளையும், காய்ந்த  செடிகளையும் போட்டு எரித்து எரித்து நடுநிசி வரை பெரும் நெருப்பின் கதகதப்போடு நிறைய கபாப் துண்டுகளோடு கழிந்த அந்த ராத்திரி மிகவும் வசீகரமானது.

திருமணத்துக்கு முன்பெல்லாம் வியாழக்கிழமை இரவுகளை  அலையடிக்கும் தேரா க்ரீக் பாறைகளின் மீது தனியே அமர்ந்து சுகித்திருக்கிறேன். விடிய விடிய ஆட்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள். கடற்கரை காற்று உடல் தொட்டு விளையாடிக் கொண்டிருக்கையில் கற்பாறைகளில் மோதும் அலைகளை ரசித்தபடி பருத்து விரிந்து கிடக்கும் கருவானில் கண்களைப் பதித்தபடி கண் சிமிட்டும் நட்சத்திரங்களோடு விடிய விடிய பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.

வெயிலும், குளிரும் இயற்கையின் இரு முனைகள் என்றாலும்....குளிர் எப்போதும் சாந்த சொரூபி... அது புத்தியையும் உடலையும் மென்மையாக்கி ஏகாந்த உணர்வுகளை எப்போதும் கிளறிவிட்டு ஒரு காதலியாய் எப்போதும் வேடிக்கைப் பார்க்கும். புத்திக்குள் ஏதேதோ உணர்வுகள் சில்மிஷம் செய்ய...சட்டென்று நமது ஊரின் மார்கழி மாதம் புத்திக்குள் ஏறி உட்கார்ந்து சம்மணமிட்டுக் கொள்ளும்.

தலைக்கு சால்வை கட்டிக் கொண்டு கோலமிடும் பெண்களுக்கு நடுவே அதிகாலை பத்தாம் வகுப்பு ட்யூசனுக்காய் முண்டாசுக் கட்டிக் கொண்டு சைக்கிள் மிதித்து நகர்கையில் என் அவளின் வீட்டு வாசலில் இல்லாத அவளை நினைத்துக் கொண்டே...

அவள் வீட்டு வாசலில் இருக்கும் பூசணிப்பூவைப் பார்த்தபடி சைக்கிள் பெடலை அழுத்தி மிதித்து குளிருக்குள் நகர்ந்த சொர்க்க நாட்களை சொக்கட்டான் போட்டு இழுத்து வந்து நினைவுபடுத்தும் அந்த சமகாலக் குளிர். வாழ்க்கை எப்போதும் அழகுதான் என்றாலும் அதைக் காதலோடு பிணைத்துக் கொள்கையில் இன்னும் அழகாகிப் போகிறது.அப்படித்தான் அழகான மார்கழி அவளின் நினைவுகளால் இன்னும் அழகாகிப் போகும். 

ஆழமாய் சுவாசித்து அலாதியான நினைவுகளுக்குள் விழுந்து விட்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் இந்தக் கட்டுரையை முடிக்கும் பிரயாசை ஆயாசமாக எட்டிப் பார்க்க்கிறது. உணர்வுகளை  அனுபவிக்க தொடங்கும் முன்பே அதை வார்த்தைப்படுத்தி விடவேண்டும் என்ற அவசரப்புத்தி வெட்கத்தோடு நாணிச் சிரிக்கவும் செய்கிறது. அனுபவித்ததைப் பகிர்தல் என்பது எதன் பொருட்டோ தேவையாகிப் போய்விடுகிறது...!

அலாதியான விசயங்களைப் பகிர்தலை விட வேறென்ன வேண்டிக் கிடக்கிறது...? என்றும் தோன்றுகிறது.....

அமீரகம் மட்டுமல்ல.... என் தாய்த்தமிழகமும் அழகான மழை நாட்களுக்குள் நுழையப்போகிறது, அதன் பின் மார்கழிக் குளிர், பின் விழாக்கள் என்று குதூகலிக்கப்போகிறது. வரவிருக்கும் மழைக்காலத்தில் நிறைய மழை பெய்யட்டும்.....!!!!சேதங்கள் விளைவிக்காத சிறப்பான பருவமாய் லயிப்போடு  கடந்து போகட்டும்....

பிறகென்ன....

பனிக்காலம் ஆரம்பிக்கப் போகிறது
இரவுகளில் யாரும் வெளியே வரமாட்டார்கள்...
இனிதான்..
நான் நடுங்கிக் கொண்டாவது
வெளியே நடக்கவேண்டும்..!


தேவா. S

Comments

Unknown said…
நல்ல ரசனையுடன் உங்களின் அமீரக வாழ்க்கையில் நிகழ்ந்த வசந்த குளிர் கால பொழுதுகளை அருமையாக கூறியுள்ளீர்கள் தோழரே! மனம் குளிரும் படைப்பு!
tamil said…
லண்டன் குளிர் இப்போ என்னை ஸ்பரிசம் செய்ய ஆரம்பித்து விட்டது
மிக அருமையான பகிர்வு...... உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Shankar M said…
வானமகளின் நாணத்தினால் மனிதத்தில் ஏற்படும் மாற்றத்தை அழகாய் சொல்லியிருக்கிறாய் தோழா... வருடா வருடம் தோன்றும் அனுபவம் என்றாலும், ஒவ்வொரு முறையும் நினைவுகளின் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே தான் போகிறது....
ரசித்து எழுதி உள்ளதை ரசித்தேன்... நன்றி...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...