Skip to main content

கரையை தேடும் ஓடங்கள்..!



ஏதேதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது தன்னிச்சையாய். ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க ஓடிய சிறுவன் திரும்ப வழி  மறந்து எங்கேயோ நிற்கும் ஒரு திடுக்கிடலாய் எனக்கு சமகாலம் இருக்கிறது. என் தாத்தா இறந்து போன போது எண்ணெய் தொட்டு வைக்க வேண்டும் என்று இறந்த உடலின் தலையை முதன் முதலாக தொட்ட போது இடுப்பில் கோமணத்தோடு குளியலுக்கு தயாராயிருந்த அந்த உடலை நான் ஆச்சர்யமாய் பார்த்தேன் ஒரு பயத்தோடு.

காலத்தின் திசைகள் இதுதானென்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது. என் தாத்தாவும் என்னைப் போல வண்ணத்துப் பூச்சி பிடிக்கச் சென்றவர்தான். வண்ணத்துப் பூச்சி என்ற ஒன்றே இல்லை என்று அறிந்த பின் அவர் மரணித்தாரா இல்லை. அறியாமலேயே வண்ணத்துப் பூச்சியை பிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் மறைந்தாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை வேறு ஏதோ ஒன்றை பிடித்து விட்டு வண்ணத்து பூச்சியை பிடித்து விட்டேன் என்ற இறுமாப்பில் கூட இறந்திருக்க கூடும்.

ரங்கூனிலிருந்து அவர் என் அப்பத்தாவிற்கு எழுதி இருந்த கடிதங்களில் குடும்பத்தின் நிகழ்வுகளைப் பற்றி கேட்டும் கொடுத்து விட்ட பணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்துமே நிறைய எழுதி இருந்தார். உன் உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டியது என்று எழுதி அவர் அடிக்கோட்ட இடமே காதலின் வெளிப்பாடாக இருந்திருக்க கூடும். அதுவும் அந்தக் கடிதத்தை என் அப்பத்தாவிடம் வாசித்தவன் அடிக்கோடிட்டு எழுதியிருக்கும் வாசகத்தை அழுத்தம் திருத்தமாய் சொல்லி இருப்பானா என்று தெரியவில்லை. வெளிப்படுத்திக் கொள்ளாத காதல் எப்படி இருந்திருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.

அப்பத்தா தாத்தாவிற்கு அவர் ரங்கூனிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள்  எழுதிய சில கடிதங்களையும் என்னால் வாசிக்க முடிந்தது. கடிதம் இப்படி ஆரம்பித்து இருந்தது....

" மஹாகனம் பொருந்திய, ஸ்ரீமான், ராஜ ராஜஸ்ஸ்ரீ, சிரஞ்சீவி, மரியாதைக்குரிய அய்த்தான் அவர்களுக்கு.. " என்று நீட்டி இழுத்து சுழிக்கும் இடத்தில் எல்லாம் மயிலின் தலையிலிருக்கும் கொண்டையாய் சுழித்து  எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தின் தலைப்பில்  " உ சிவமயம் " என்ற  வார்த்தை அழுத்தமாய் இருந்தது.

சிவகோத்திரம். சிவனை பெயரிலும், விபூதியாய் நெஞ்சிலும், நெற்றியிலும், தோளிலும், தனது 75 வயதிலும் என் தாத்தா அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். சிவகாமி அம்மாள் என்ற அப்பத்தாதான் ஒரு வேளை தாத்தா தேடி அடைந்த பட்டாம் பூச்சியாய் இருக்குமோ என்று கூட சில நேரம் யோசித்து இருக்கிறேன். ஒரு மாதிரியான நிதானமான காலத்தில் அவர் வாழ்ந்து முடித்திருக்கிறார். என் அப்பாவின் காலத்தின் முற்பகுதியில் அந்த நிம்மதி பரவி இருந்திருக்கிறது. இப்போது அவரும் சமகாலத்தின் குறைகளை சலித்துக் கொண்டேதான் நகர்ந்து கொண்டிருக்கிறார்.

என்னுடைய காலம் சலிப்பிலேயேதான் தொடங்கி இருக்கிறது. நிதானம் என்ற வார்த்தையையும், நிம்மதி என்ற வார்த்தையையும் எழுதி, எழுதி நிம்மதி அடைந்து விட்டதாய் நினைத்துக் கொள்கிறேன். பட்டாம் பூச்சி இருக்கிறது என்று  என் அப்பா இப்போதும் சொல்கிறார். அவர் அந்த பட்டாம் பூச்சியைப் பிடித்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. நானும், என் தாத்தாவும் என் அப்பாவும் மட்டும் வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்லும் பட்டாம் பூச்சியை பிடிக்க ஓடவில்லை. ஒட்டு மொத்த உலகமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் ஒரு வரலாறு. ஒவ்வொரு சூழல், ஒவ்வொரு கதைகள். ஒவ்வொரு கதைக்குள்ளும், வீரம் இருக்கும், விவேகம், இருக்கும், வெற்றி இருக்கும் தோல்வி இருக்கும் ,காதல், காமம், ஏமாற்றம் விரக்தி, நம்பிக்கைகள், மதம், சாதி,...இப்படியான இத்தியாதி இத்தியாதிகள் இருக்கும். என் அப்பாவிற்கு,என் அம்மாவும் நானும் என் குடும்பத்தினரும் இருப்பது போல அவரது அப்பா செல்லையா பிள்ளைக்கு ஒரு ரங்கூனும், சிவகாமி அம்மாளும், ஐந்தாறு பிள்ளைகளும், அவரது அப்பா, ராமசாமி பிள்ளைக்கும் அவரது அப்பா கருப்பையா பிள்ளைக்கும், அவரது அப்பா முத்து பொன்னம்பலம் பிள்ளைக்கும் இருந்திருப்பார்கள்.

என் அப்பாவின் பெயருக்குப் பின்னால் இந்த பிள்ளை என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் 50-50 ஆக இருந்தது. அதாவது திருமண பத்திரிக்கைகளில் தொடங்கி , உறவுகளின் திருமணத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிற்காகவும்,  தனது தகப்பனாரை சுட்டி செய்திகள் சொல்லவும் அவர் பிள்ளை என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார். அலுவலக சம்பந்தமாகவும் இன்ன பிற தொடர்புகளிலும் அவர் அதை பயன்படுத்தியது இல்லை.  நான் சுத்தமாய் பயன்படுத்துவதில்லை. என் மகளுக்கு அவள் யார் என்ன சாதியென்றே தெரியாத சூழலிலேயே வளர்கிறாள். அவளின் பிரிவினைகள் எல்லாம் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பினோஸ், அராப்ஸ் அவ்வளவுதான்.. கூடுதலாய் ஒரு கம்யூனிட்டி ஸ்ட்ராங்காக தெரியுமென்றால் அது மலையாளிகள்...மட்டுமே...!

ஏனென்றால் எங்கே சென்றாலும் மலையாளிகள் தங்களின் ஆளுமையை மலையாளிகளாகவே காட்டிக் கொள்வார்கள். கொஞ்சம் பணம் சேர்ந்து நல்ல வசதியாய் இருக்கும் பெரும் பணக்கார தமிழர்கள் இன உணர்வுக்கு வெகு தூரமானவர்கள். தமிழனிடம் அவர்கள் தமிழிலே கூட பேசுவது கிடையாது. பெரும்பாலும் இந்தியாவிற்கு மட்டுமே சாதி மிகவும் அவசியமானதாய் இருக்கிறது. அறிவியல் வளர்ந்து  இன்று எத்தனையோ சமூக இணைவு இணைய தளங்கள் வந்து விட்டது. நமது கல்வியையும் அறிவையும் விஞ்ஞான வளர்ச்சியையும் வைத்துக் கொண்டு வேறு ஏதாவது உபயோகமாய் இந்த பூமிக்குச் செய்து விட்டுப் போவோம் என்ற எண்ணம் இல்லாமல், இன்னமும் சாதியையும், மதத்தையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

சாதி என்ற ஒன்று இல்லை என்று சொல்லும் நீ உன் பிள்ளைக்கு வேறு சாதியில் திருமணம் செய்வாயா..? என்று முதலில் என் சட்டையைப் பிடிப்பார்கள். இது எல்லாம் பழைய பஞ்சாங்க கேள்விகள். வாழ்க்கையே போலி, பூமியே சூரியன் கண்ட ஒரு பெரும் கனவு..இதில் எங்கே இருந்து வந்தது சாதி. என் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆலோசனையைத்தான் நாங்கள் சொல்ல முடியும். யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும். 100 ட்யூசன் வைத்து அறியாதவர்கள் படிக்கட்டும். நமக்கு ட்யூசனே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து வெகு நாட்களாயிற்று.

ஆன்ம வெளிச்சம் இல்லாத குருட்டு புத்திகள்தான் இன்று பாகுபாடு அரசியலை நடத்தி இரத்தம் குடித்துக் கொண்டிருக்கின்றன. வெறிபிடித்த நாயை அடித்துக் கொல்வது போல காலம் இவர்களை அடித்து தூக்கிக் கொண்டு போகப் போகிறது. அப்போது என்ன செய்யும் இவர்களின் அரசியலும் சாதியும், மதமும், கடவுளும்...!

இல்லாத வண்ணத்துப் பூச்சியை துரத்துகிறேன் பேர்வழி என்று வனத்தை, வாழ்வாதாரத்தை சேதப்படுத்தும் இந்த மாதிரியான ஜந்துக்களுக்கு பூமியே நரகமாகிப் போகிறது.

நானும் வண்ணத்துப் பூச்சியை துரத்தி வந்தவன் தான் இப்போது வண்ணத்துப் பூச்சி என்று ஒன்று இல்லை என்று  தெரிந்து மீண்டும் வந்த வழியே திரும்ப நினைக்கையில் வழி மறந்து போய்விட்டது. வண்ணத்துப் பூச்சியே இல்லை என்று நான் யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. என் தாத்தன்களும், பாட்டன்களும், உங்கள் தாத்தன்களும், பாட்டன்களும் கண்டிப்பாய் வண்ணத்துப் பூச்சியை காணாமல் மரித்தவர்கள் என்று உறுதியாய் உங்களிடம் சொல்ல நான் வழி கண்டு பிடித்து மீண்டும் என் வீடு அடைய வேண்டும். பட்டாம் பூச்சி என்ற ஒன்றே இல்லை என்று அறிவதே முக்தி அல்லது விடுதலை என்பது எனக்குத் தெரிந்துதான் விட்டது...

ஆனால்...வழி மறந்து போய் விட்டது மட்டும் இல்லாமல் திரும்பும் வழி மிகவும் சிக்கலாகவும் இருக்கிறது. ஏதேதோ கற்பிதங்கள், ஏதேதோ அனுபவங்கள், ஏதேதோ அறிவுகள், ஏதேதோ வழிகாட்டல்கள், எப்படி எப்படியோ நகரவேண்டும் என்று  சொல்லப்பட்ட வழிமுறைகள்.....இதை எல்லாம் நான் மறக்க வேண்டும், அல்லது அழிக்க வேண்டும்.

அப்போதுதான் நான் வீடு திரும்ப முடியும்.....இல்லையென்றால் என் பாட்டனையும் உங்கள் பாட்டனையும், என் தாத்தனையும் உங்கள் தாத்தனையும் போல்....

பட்டாம் பூச்சி என்று ஏதோ ஒன்றை கற்பித்துப் பிடித்து விட்டதாகக் கருதிய படியோ, இல்லையேல் பட்டாம் பூச்சி ஒன்றை தேடியபடியே....கிடைக்கவில்லை என்ற ஏக்கத்துடனோ...மரிக்கக் கூடும்...

வீடு திரும்ப வேண்டும்....!


தேவா. S





Comments

Excellent Anna...

வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் பகிர்வு அண்ணா...

எதார்த்தமான எழுத்தில் அருமையான பகிர்வு...

நானும் வண்ணத்துப் பூச்சியை தேடுகிறேன்... இனி தேடவேண்டிய அவசியமில்லை...

மனசில் முதல் முறையாக ஒரு தொடர்கதை ஆரம்பித்து இருக்கேன்... உங்கள் கருத்து தேவை அண்ணா...
Shankar M said…
நல்ல பதிவு தேவா.... இல்லாத ஒன்றை இருப்பதாய் நம்பி இங்கே இங்கே என்று தேடி தேடி.... எங்கும் கிடைக்காமல் ???? இப்படித்தான் மனிதம் நகர்கிறது என்ற பட்டவர்த்தமான உண்மையை சொன்ன விதம் ரொம்ப அருமை. தேடும் இடம் திரும்பும் வீடாய் இருக்குமா.....?
வீடு திரும்ப வேண்டும் = வீடுபேறு அடைய வேண்டும்.

:-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல