Skip to main content

அன்புள்ள அப்பாவிற்கு...

Taken @ குருக்கத்தி























அன்புள்ள அப்பாவிற்கு,

தேவா எழுதிக்கொள்வது...

செல்வ சிரஞ்சீவி ராஜ ராஜஸ்ஸ்ரீ அருமை மகன் சுப்பையாவிற்கு என்றுதான் தாத்தா உங்களுக்கு எழுதும் கடிதங்களைத் தொடங்கி  இருப்பார்கள்.  நீங்கள் தாத்தாவிற்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மரியாதைக்குரிய மகாகனம் பொருந்திய ராஜராஜஸ்ஸ்ரீ தகப்பனார் அவர்களுக்கு சுப்பையா எழுதிக் கொள்வது யாதெனில் என்று தொடங்குவீர்கள்.  என் வார்த்தைகள் அன்புள்ள அப்பா என்ற எட்டு எழுத்துகளுக்குள்ளும் நாம் தலைமுறைக் காதலை, அன்பை நேசத்தை தாங்கி வருவதாக நான் உங்களிடம் பல முறை கூறி இருக்கிறேன்...இப்போதும் அப்படித்தான்...

நிற்க....!!!!

நலமா அப்பா? நாங்கள் நலமாயிருக்க முடியாது என்பதை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் இல்லாமல் எப்படி அப்பா நாங்கள் நலமாயிருக்க முடியும்? எல்லாமாய் இருந்த உங்களை ஒரே ஒரு கணத்தில் வாழ்க்கை எங்களை விட்டுப் பிரித்து விடும் என்று கற்பனைக் கூட செய்து பாத்திருக்கவில்லை அப்பா. உங்களுக்கு நீண்ட நெடிய ஆயுளையும், நிலையான செல்வத்தையும் கொடுக்க வேண்டிதான் எங்களின் பிரார்த்தனைகள் எல்லாம் இருந்திருக்கிறது. பின்னதை எங்களுக்கு நீங்கள் உருவாக்கி வைத்து விட்டீர்கள், முன்னதை கடவுள் பறித்துக் கொண்டுவிட்டான். 

65 வயதில் அப்படி ஒரு விபத்து உங்களுக்கு நேரும் என்பதை நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. இதோ இந்த வரிகள் கூட நீங்கள் எங்களோடு இல்லை என்பதை நம்பமுடியாமல்தான் நகர்கிறது. எத்தனை இரவுகள் அப்பா உங்களின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நான் உறங்கி இருக்கிறேன்...எத்தனை பகல்கள் அப்பா உங்களின் மார்பில் தலை சாய்த்து விளையாடி இருக்கிறேன். எத்தனை முறை அப்பா என்னை கோபப்பட்ட அடுத்த நொடியில் நீங்கள் அன்பாய் அரவணைத்து இருக்கிறீர்கள்...? 

நான் கல்லூரி முடித்த இரண்டு மாதத்தில் நீயே உன் வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள். நீ ஜெயிக்கிறாயோ தோற்கிறாயோ எது நடந்தாலும் அது உன்னால் நிகழ்ந்தது என்று பொறுப்பேற்றுக் கொள். எத்தனை காலம் ஒரு தகப்பனும், தாயும் பிள்ளைகள் உடன் வரமுடியும் என்று அன்று நீங்கள் கன்றை முட்டி விரட்டிய பசுவாய் என்னை இந்த சமூகக் காட்டுக்குள் தள்ளி விட்டீர்கள்...! வாழ்க்கை எளிதானது ஆனால் எல்லா மனிதர்களும் எளிதானவர்கள் இல்லை, நீ எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படுகிறாய் இங்கே நீ உறவு என்று நினைக்கும் எந்த உறவும் நீ அவர்களுக்குப் ஒரு கணம் எதிர்நிலைப்பாடு எடுத்தாலோ அல்லது அப்படியான சூழலில் உன்னைக் கண்டாலோ உன்னை தூக்கி எறிந்து விட்டு தங்களின் வழி நடந்து சென்று விடுவார்கள். இருந்தும் இல்லாமல் வாழக் கற்றுக்கொள் என்றெல்லாம் நீங்கள் சொன்னது எல்லாம் என் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் போது உங்களின் கால்களைக் கட்டிக் கொண்டு நான் கதறவேண்டும் என்று தோன்றுகிறது...

நீங்கள் எங்கே அப்பா போனீர்கள் என்னை விட்டு விட்டு...?

அப்பா....அம்மா சரியாக உணவருந்துவதில்லை. யாரிடமும் பேசுவது இல்லை. இதோ நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்து சரியாக இரண்டரை மாதங்களை காலம் விழுங்கிக் கொண்டு விட்டது. 40 வருட உங்களின் துணை  உங்களின் பிரிவை எதிர்கொள்ள முடியாமல் திசைக்கு திசை வெறித்துப் பார்த்துத் திணறிக் கொண்டிருக்கிறது. அம்மாவின் இரவும், பகலும் நீங்கள்தான் அப்பா. உங்களைத் தவிர அம்மாவுக்கு வேறு எதுவுமே தெரியாது. அம்மாவின் தேவைகள் எதுவென்றே அம்மாவுக்கு தெரியவில்லை அப்பா....அது எல்லாவற்றுக்கும் உங்களை சார்ந்தே வாழ்ந்திருந்திருக்கிறது. சடாரென்று வாழ்க்கை அவளின் அமைதியைப் பிடுங்கிக் கொண்டு விட்டதை எதிர்கொள்ள முடியமால் தவித்துக் கொண்டிருக்கிறாள். எங்களின் குஞ்சுச் சிறகுகளை வைத்துக் கொண்டு தாய்க் கோழியை அரவணைக்க முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருக்கிறோம் அப்பா...!

அம்மா பாவம்...அவளுக்கு ஒன்றும் தெரியாது அவள் என்ன பேசினாலும் கேட்டுக் கொள் என்று அடிக்கடி சொல்வீர்களே அப்பா...! அம்மா இப்போதும் புரியாதவளாய்த்தான் இருக்கிறது அப்பா....

நீங்கள் இல்லை இல்லை .....இல்லை வேறு ஒரு நிலைக்குச் சென்று விட்டீர்கள் என்று எத்தனை சொல்லியும்.....இன்னமும் நீங்கள் மீண்டும் வருவீர்கள் இல்லையேல் நான் அவரிடம் செல்வேன் என்று புரியாமலேயே பேசிக் கொண்டிருக்கிறது அப்பா....! அம்மாவின் மீது நீங்கள் கொண்டிருந்த காதலை யாரும் யாருக்கும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. கடைசி நிமிடம் வரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அதைச் சொல்லுமே அப்பா...! எல்லாவற்றுக்கும் அம்மாவையும் எங்களையும் அனுசரித்து வாழச் சொன்னீர்கள் 

ஆனால்...

நீங்கள் இல்லாமல் போனாலும் நாங்கள் அனுசரித்து வாழவேண்டும் என்ற சூழலைக் கொடுத்துச் சென்றது என்ன அப்பா நியாயம்..? எப்படி அப்பா இறந்தீர்கள்..? அபோது என்ன அப்பா நினைத்தீர்கள்....காலம் இந்த இரண்டு கேள்விக் கத்திகளால் எங்களின் இதயத்தை அறுத்துக் கொண்டேதான் அப்பா இருக்கும்....! உங்களின் அலைபேசி எண் இன்னும் இருக்கிறது அப்பா....எடுப்பதற்கு நீங்கள் இல்லை...? நீங்கள் மடிப்பு கலையாமல் அடுக்கி வைத்த உங்களின்  உடைகள் இருக்கின்றன..? உங்கள் எல்லா உடைமைகளும் அப்படியே இருக்கின்றன....., பார்த்து பார்த்து நீங்கள் கட்டிய வீடும், நட்ட செடிகளும், மரங்களும் செழித்து வளர்ந்து சிரிக்கின்றன அப்பா, நீங்கள் வைத்த பலா மரம் தன் முதல் காயை கொடுத்து அதுவும் பழுத்து விட்டது  அப்பா,

கடைசியாக நீங்கள் வண்டியை எடுக்கும் போது வாசலில் இருந்த செடியொன்றை இறுக்கப் பிடித்து நெருக்கமாக கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறீர்கள்..அந்த கட்டு இருக்கிறது அப்பா, நீங்கள் போட்ட முடிச்சு இருக்கிறது அப்பா...நீங்கள் குளித்து விட்டு  வைத்துச் சென்ற சோப்பும், ஏன் உங்கள் விபத்து சூழலில் உங்களுடன் இருந்த  உங்கள் இருசக்கர வாகனமும் வீடு திரும்பி விட்டது அப்பா....

நீங்கள் எங்கே அப்பா போனீர்கள்...?

ஆறு வருடம் முன்பு நான் ஊருக்கு வரும் போது ஒரு வாட்ச் வாங்கி வந்தேன். அதை ஒரு வருடம் நீங்கள் கட்டிக் கொள்ள வில்லை. " சைஸ் பெரிசா இருக்குடா தேவா... அதான் கட்டல"  என்று நீங்கள் சொன்னீர்கள்..., அம்மா சொன்னது எங்கே கட்டினால் அது பழசாய்ப் போய்விடும்,  தம்பி வாங்கிக் கொடுத்தது என்று அப்படியே வைத்திருக்கிறார் என்று....பிறகொருநாள் அதை அளவு சரியாக்கிக் கட்டிக் கொண்டீர்கள். எல்லாம் முடிந்து இரண்டாம் நாள் உங்களுக்கு விபத்து ஏற்பட்ட இடத்துக்கு எதிரே இருந்த பெட்டிக்கடைக்காரர் உங்களின் செருப்பையும், உடைந்து போன அந்த வாட்சையும் கொண்டு கொடுத்த போது...

எப்படி அப்பா இந்த வாழ்க்கையை புரிந்து கொண்டு நகரச் சொல்கிறீர்கள்...? இது என்ன வாழ்க்கை அப்பா....? எல்லாமே போய்விடும் என்று தெரிந்தும் பற்று கொண்டு வாழும் பைத்தியக்கார வாழ்க்கை...உடைந்து போன அந்த கடிகாரம் கூட ஓடிக் கொண்டிருக்கையில் என் உயிரான அப்பா இல்லையே என்று நினைக்கும் போது நெஞ்சு வெடித்துதான் போகிறது. தம்பிகள் இருவரும் சின்னப்பிள்ளைகள் என்று எனக்கு எனது 6 வயதில் அவர்கள் பிறந்த போது சொன்னீர்கள். நீங்கள் இறப்பதற்கு இரண்டு நாள் முன்பும் எனது 37 வது வயதிலும் 31 வயது ஆன தம்பிகளை சின்னப் பிள்ளைகள் நீதான் அனுசரித்து நடக்கவேண்டும் என்றீர்கள்...ஒரு தகப்பனாய் பிள்ளைகளுக்குள் எப்படி பாசத்தை விதைப்பது என்பதை நீங்களும், அம்மாவும் பல சூழல்களில் சரியாய் செய்ததால்தான்..

நானும், தம்பிகளும், அக்காவும் எங்களைச் சுற்றி என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் உருவாக்கி வைத்திருக்க்கும் அந்த நேர்கோட்டுப் பாசப்பிணைப்புக்குள் நின்று கொண்டு தவிக்கிறோம். மரணம் என்பதை தத்துவார்த்தமாக நான் விளங்கி இருக்கிறேன் அப்பா. அறிவு கழிந்த ஞானம் ஏதேதோ எனக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. இப்போது அப்படி இல்லை அப்பா....

மரணம் என்பது நீங்களும், நமது மூதாதையர்களும் இருக்கும் ஒரு இடம். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதால் அந்த இடத்திலும் எங்களைப் பார்த்துக் கொள்வீர்கள் என்று ஒரு லெளகீகத் துணிச்சலும் உள்ளுக்குள் பிறக்கிறது அப்பா....! வாழ்க்கையில் எங்களை போராளிகளாய் நிற்க வைத்த உங்களுக்கு எங்களின் மரணத்திற்குப் பிறகு எப்படி அதை சமாளிப்பது என்று சொல்லி கொடுக்காமலா போய் விடுவீர்கள்....?

எப்போது இந்தியா வந்தாலும் விமான நிலைய வாசலில் யார் இருக்கிறார்களொ இல்லையோ நீங்கள் இருப்பீர்கள்...! கட்டியணைத்து உச்சி முகர்ந்து நீங்கள் வரவேற்கும் இடம்.....கிளையை வேர் கட்டியணைத்து மகிழ்வதை ஒத்தது அப்பா...! கடந்த மே 22 ஆம் தேதி அந்த பிரதோஷ நாள் என்னால் மறக்கவே முடியாது...

தம்பி ஆம்புலன்ஸ்க்குள் இருந்து என்னிடம் கதறி இனி உங்களை காப்பாற்ற முடியாது என்று சொன்ன இடத்தை விட கொடும் துயரம் ஒன்று இந்த வாழ்க்கையில் எனக்கு நிகழ்ந்து விடுமா என்ன ...? சென்னை விமான நிலையத்ததை தொட்ட அந்த 23 ஆம் தேதியின் அதிகாலை கர்ண கொடூரமானது. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் நோக்கிய எனது அன்றைய பயணம்தான் நரகம்.

எல்லாம் முடிந்த பின் பைத்தியக்காரனாய்....என்னை பெற்ற தகப்பனை, எனக்கு கை பிடித்து வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்த  குருவை, தன் உயிர் கொண்டு என் உயிர் உருவாக்கிய கடவுளை, ஆரம்பப்பள்ளியிலிருந்து கல்லூரி வரை அட்மிஷனுக்காக  உடன் வந்த அப்பாவை வாழ்க்கையை எதிர்த்து வாழ்வதை விட அனுசரித்து வாழ்வதே சிறந்தது என்று சொல்லிக் கொடுத்த அப்பாவை...., குருக்கத்தி என்ற குக்கிராமத்தில் 1947ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஊராட்சி ஒன்றிய ஆணையராய் பணி புரிந்து தன்னின் ஆளுமையை விஸ்வரூபமாக்கிக் காட்டிய, எதிரிகள் என்று யாரும் இல்லாமல் எல்லோரையும் அன்பால் கட்டுப்படுத்தி வைத்திருந்த ....

உங்களை ஐசியூவில் உயிரற்று பார்த்த போது...ஸ்தம்பித்துப் போனேன்...!!!!! .இந்த வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை எனக்குப் புரிந்தது. நிதர்சனமற்ற வாழ்க்கைக்கு நடுவே நிகழும் அபத்தங்கள் விளங்கியது. பின் தலையில் அரை இஞ்ச் அளவு ஏற்பட்ட ஒரு காயம் மூளை வரை தொட்டுப்பார்த்து மூளைச் சாவடையச் செய்து...ஒரு உயிரை, ஒரு வாழ்க்கையை, ஒருவரின் கனவுகளை ஒரு கணத்தில் பறித்துச் செல்ல முடியுமெனில்....இங்கே என்ன அர்த்தம் இருக்க முடியும்...? இந்த வாழ்கையில் என்ன நிதர்சனம் இருக்கிறது....?

எனக்குள் எழுந்த கேள்விகளை எல்லாம் நீங்கள்தான் கேட்டுக் கொண்டிருந்தீர்கள் அப்பா....! நெஞ்சில் கை வைத்து எழுப்பினேன்..., கை பிடித்து கதறினேன், தலை தடவி உசுப்பினேன்...அப்பா...!!!! நீங்கள் ஆழமான உறக்கத்துக்கு சென்று விட்டிருந்தீர்கள் அப்பா....! இனி  எழமாட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன் அப்பா... 

இதோ எல்லாம் முடிந்து விட்டது. 

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நான் பார்த்த அத்தனை உறவுகளும் உங்களை இறுதியாய் அனுப்ப வந்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை ஒரு அனுபவம்...ஒரு இக்கட்டான சூழல், அதில் உங்களின் உதவி என்று....நீங்கள் அதிர்ந்து கூட இதுவரை பேசி இருக்காத உங்களின் குணத்தைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மயானத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு உங்களின் அருகில் நான் மட்டும் தனியே நின்று கொண்டிருந்தேன் அப்பா.. எல்லோரும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் தம்பிகளுக்கு மொட்டை அடித்த இடத்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். எனக்கு ஏற்கெனவே மொட்டை அடித்து முடித்திருந்தார்கள். அந்த இரவு எட்டரை மணி...அந்த எரியூட்டு மேடை....உங்களுக்குப் பின்னால் இருந்த பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் உங்களின் முகம் பார்த்துக் கொண்டிருந்தேன்...நானும் நீங்களும் மட்டுமே இருந்தோம்.

" என்னைப் பெத்த அப்பா, என் உயிரே, என் செல்வமே....என் தெய்வமே....ஏம்பா...? ஏம்பா இப்டி...? எப்டிப்பா நீங்க சாகலாம்? ஏம்பா இப்டி நடந்துச்சு. ரோடு ஓரமா வண்டிய நிறுத்திட்டு இருக்கும் போது வந்து ஒரு வண்டி ஏம்பா மோதணும்...? என்ன நடந்துச்சுன்னே தெரியாதே அப்பா உங்களுக்கு..., ஒரு நிமிடம் எங்க வாழ்க்கைய தலை கீழா மாத்திடுச்சே அப்பா...அப்பா....அப்பா...."  உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தேன். நீதிகளும், கதைகளும், தத்துவங்களும், புரிதலும், தெளிவும்...நாய்க்குட்டியாய் எனக்குள் வால் சுருட்டிப் படுத்துக் கொள்ள எதோடும் தொடர்பு படுத்த முடியாத ஒரு உண்மை...என்னை எரித்துக் கொண்டிருந்தது.

யாரும் இங்கே யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாது. வலியை வாங்கித்தான் ஆக வேண்டும். ஆறுதல்கள்..எல்லாம் மிகப்பெரிய இழப்பை சரி செய்ய முடியாது. நடு நெஞ்சில் கத்தி இறக்கிய காலத்தை நான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தேன். பிரமாண்டமாய்  மீசை முறுக்கி என் முன் காலம் நின்றிருக்க...உங்களைப் பார்த்தேன்....

சலனமில்லாத உறக்கமாய் அது தெரிந்தது அப்பா...! நான் உங்கள் தலையில் கை வைத்து சிவபுராணம் சொன்னேன்....! ஆன்மா வேறு நிலைக்கு பயணித்திருக்கு தகவலை உங்களின் சூட்சும மனதிற்கு எடுத்து சொன்னேன். என்னால் அதற்கு மேல் அழ முடியவில்லை. அழவும் திரணி இல்லை. வாழ்க்கையில் எல்லாம் கற்றுக் கொடுத்திருந்த நீங்கள்...

மெளனமாய் மரணத்தைப் போதித்துக் கொண்டிருந்த கடைசி மணித்துளிகள் அவை.....! நான் கடைசியாய் உங்களின் அடர்த்தியான மீசையை முறுக்கிப் பார்த்தேன்....நான் கடைசியாய் உங்களின் நெஞ்சின் மீது என் கை வைத்துப் பார்த்தேன்....நான் கடைசியாய் உங்களின் தலையில் கை வைத்து வருடினேன்....முகம் மட்டுமே தெரிந்திருக்க முகத்தோடு என் முகம் வைத்தேன்....., கடைசியாய் உங்கள் கன்னத்தில் என் உதடு பதிய அழுத்தமாய் முத்தமிட்டேன்...உங்களின் முகத்தோடு முகம் வைத்து வெகு நேரமிருந்தேன்..

எத்தனை இரவுகள் அப்பா...
உங்களை கட்டியணைத்து
உறங்கி இருப்பேன்...?
இதோ நான் கட்டியணைக்கும்
இந்த இரவொன்று...
கடைசி இரவென்று தன்னை
அறிவித்துக் கொள்கிறது அப்பா...

எத்தனை விசயங்களை
உச்சரித்த உதடுகள் அப்பா...
இதோ பேசுவதற்கு இனிமேல்
வாழ்க்கை மட்டுமே இருக்கிறது என்று..
அவை மூடிக் கொண்டன அப்பா...

கம்பீரத்தையும் கருணையும்
ஒன்றாக்கிய விழிகளப்பா உங்களது
இதோ இனி  பார்ப்பதற்கென்று
தனித்த விழியொன்றும் தேவையில்லை
என்று இமைகள் அடைத்து
இருள் உலகிற்குள் சென்று
வெளிச்சம் தேடிக் கொண்டிருக்கின்றன அப்பா...

எத்தனை கம்பீரமானவர் அப்பா...நீங்கள்..! அத்தனை கம்பீரத்தோடு இந்த வாழ்க்கையை விட்டு கம்பீரமாய் முறுக்கிய மீசையோடு சென்று விட்டீர்கள். கடைசிவரை யாரையும் எதிர்பார்க்காமல், நான் இருந்தேன்...நான் வாழ்ந்தேன்..நான் சென்றேன் என்று...உங்கள் இறுதி வரை வாழ்ந்து சென்று விட்டீர்கள் அப்பா....

இதோ மீண்டும் இந்த வாழ்க்கை எங்கள் முன் நின்று கொண்டு, எங்களிடம் ஏதேதோ நாடகம் ஆடுகிறது. நான் நிலையானவன் என்று மறுபடியும் மார் தட்டுகிறது. மீண்டும் ஏதேதோ தடுமாறல்கள், சறுக்கல்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்று இந்த வாழ்க்கை மீசை முறுக்குகிறது அப்பா....

அப்படியாய் வாழ்க்கை மீசை முறுக்குகையில் நீங்கள் வந்து என் மனக்கண் முன் உங்களின் கம்பீர மீசை முறுக்கி.....அற்ப வாழ்க்கை...பட்டும் படாமல் இருந்து வா என்று இப்போதும் அதட்டுகிறீர்கள்....

வாழ்க்கை முழுதும் இப்படி நீங்கள் வரப்போவது உறுதி அப்பா.....! 

இதோ கொஞ்ச காலம்...நாங்களும் வந்து விடுவோம்....உங்களை விட சிறந்தது என்று ஒன்றும் இல்லை இங்கே....! உங்களை விட அன்பு செய்ய யாரும் எமக்கு இங்கு இல்லை! உம்மை விட நேசம் கொண்டவர்கள் யாருமில்லை எம்மைச் சுற்றி...

இதோ கொஞ்ச காலம் வந்து விட்டோம்........அப்பா.. வந்து விட்டோம்....காத்திருங்கள்...! 





இப்படிக்கு
ப்ரியமுள்ள மகன்
தேவா சுப்பையா....




Comments

Unknown said…
கண்ணீர் மட்டும் எட்டி வழிந்தோடுகிறது
வாசிக்கும் ஒரு ஒரு வரியிலும்
வாழ்க்கையை புரிய வைக்கிறது
அப்பா எப்போதும் உங்களுடன் இருக்கிறார்...
என்ன சொல்லுறதுனு தெரியலை அண்ணே....
எனது ஐந்து வயதிக் தந்தையை இழந்தவன் நான்.
//எந்த சுகங்கள் எல்லாம் எனக்கு மறுக்கப்பட்டன?
தந்தையின் கைவிரல் பற்றிக் கடற்கரை மணலில்
கால் தோய நடக்கும் சுகம்.//

என்று எழுதியவன் நான்.

உங்கள் சோகம் புரிகிறது தேவா!
உருக்கமான கடிதம் தேவா.. மூன்று மாதங்களுக்கு முன் அப்பாவை இழந்தவன் நான்.. ஓரளவுக்குமேல் படிக்க முடியவில்லை.

அவர் நினைவுகளுடனே மீண்டு வாருங்கள்...
நம்மை தவிர நம்மை யாராலும் சமாதனப் படுத்த முடியாது ....
உள்ளிருந்து பீரிட்டு கொட்டி தீர்த்துவிட்ட இந்த எழுத்து அந்த சமாதானத்தை உங்களுக்கு தரட்டும் தேவா ........

எல்லோரும் ஒருநாள் மரணத்தை தழுவ தான் போகிறோம் நாம் தலுவாவிட்டாலும் அது நம்மை இழுத்து அனைத்து கொள்ளும் அது வரை அன்பை நேசத்தை பாசத்தை தழுவுங்கள் .அதுவும் உங்களை தழுவட்டும் ........

மனம் கனத்து செல்லுகிறேன் பதிவை உள்வாங்கியத்தில்
Unknown said…
எதார்த்தம் புரிந்த மனிதர் நீங்கள். வாழ்வை தொடர்ந்து நகர்த்துங்கள். இந்த எழுத்தும் மாற்றம், நிலையாமையின் எடுத்துக்காட்டுகளே. அடுத்த தலைமுறைக்கு இன்னும் நிறைவாய் நாம் என்ன விட்டுச்செல்லப்போகிறோம்...?
ராஜி said…
அப்பாவை நேசிப்போரின் மனதை நெகிழ வைக்கும் பதிவு.
யாரும் இங்கே யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாது. வலியை வாங்கித்தான் ஆக வேண்டும்.
Saraswathi Ranganathan said…
Very touching one. This is the first time I come across your blog. you got the art of expressing the pain you feel.

அண்ணா...
அப்பா உங்களுடன் கூடவே இருப்பார் அண்ணா... அம்மாவுக்கு ஆறுதலாய் இருங்கள்...

எழுத்தில் உங்கள் வேதனை, வலி எல்லாம் ஆழமாய் தெரிகிறது. படிக்கும் போது கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை...

dheva said…
ப்ரியமான உறவுகளும், அன்புமே எப்போதும் நம்மை இறுக்கப் பிடித்துக் கொண்டு வழி நடத்துகிறது.


நன்றிகள் @ சிவா தம்பி

நன்றிகள் @ அருண் தம்பி

நன்றிகள் @ சென்னைப் பித்தன் ஐயா

நன்றிகள் @ பாலாசி

நன்றிகள் @ கே.ஆர்.பி. செந்தில்

நன்றிகள் @ கோவை மு. சரளா

நன்றிகள் @ ராஜி

நன்றிகள் @ ஜீவன் சுப்பு தம்பி

நன்றிகள் @ சரஸ்வதி ரங்கநாதன்

நன்றிகள் @ சே. குமார் தம்பி
கொட்டித் தீர்ப்பதும் மனதுக்கு அவசியம்தான்...காலம் மருந்திடும் என்ற நம்பிக்கையுடன் ...
அப்பா எங்கேயும் போய்விடவில்லை.... எப்போதும் உங்களுடனே தான் இருக்கிறார்......

அம்மாவுக்கு உங்கள் ஆறுதலும் அரவணைப்பும் நிச்சயம் தேவை.....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த