Skip to main content

தேடினேன் தேவ தேவா...!


இரண்டு மூன்று நாட்களாகவே மனதை ஏதோ செய்து கொண்டிருக்கிறது எனக்கு. அது ஒரு மாதிரியான பரவசம், ஆர்வம், இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு நிலைக்குள் என்னை தள்ளி விட்டிருந்தது. ஆமாம் பாலகுமாரன் சார் பேஸ்புக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறார் இப்போது. நண்பராக முயற்சி செய்தேன். அவரது கணக்கில் நண்பர்கள் நிறைந்திருப்பதால் உங்களால் அவரை பின்பற்ற மட்டுமே முடியும் என்று பேஸ்புக் சொல்லி என்னை அவரது ஃபாலோயர் ஆக்கியது. உண்மைதான் நான் என் குருவோடு எப்படி நண்பராக முடியும். பின்பற்றுபவனாய்த்தான் இருக்க முடியும். 

இன்றைக்கு நேற்றா நான் அவரைப் பின்பற்றுகிறேன். என்றைக்கு பதின்மத்தின் இறுதி முடிந்து வாலிபத்தில் அடி எடுத்து வைத்தேனோ அன்றிலிருந்து அவரைத்தானே பின்பற்றுகிறேன். இரண்டாவது சூரியன் என்னும் புத்தகத்தை என் 20 வயதில் தட்டுத் தடுமாறி வாசிக்கத் தொடங்கினேன். கதையின் ஓட்டத்தில் கரைந்து கிடக்கும் வாழ்க்கையின் போக்கும் எப்படி எங்கே நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டு முறைகளும், இதை எல்லாம் கடந்த ஒரு உள்நோக்குப் பார்வையையும் அவரின் கதைகள் எல்லாம் கொண்டிருந்தன. அவை வெறும் கதைகளாக மட்டும் எனக்குள் பதியவில்லை. அவை அத்தனையுமே வாழ்வியல் பாடங்கள்.

இரண்டாவது சூரியனுக்கு அடுத்து கை வீசு அம்மா கை வீசு  படித்தேன். பிறகு அசுர வேகத்தில் பாலாவின் புத்தங்களை படிக்க ஆரம்பித்தேன். கல்லூரி முடித்து அடுத்து என்ன செய்வது என்று தடுமாறி நின்ற போது அவரே எனக்குத் துணையாயிருந்தார். அவரே எனக்கு ஒரு வழிப் பாதையைக் காட்டினார்....இரும்புக் குதிரைகளாய் உணர்வுகளுக்குள் ஓடினார். மெர்க்குரிப் பூக்களாய் ஜொலித்தார். ஆலமரத்தடியிலும் அரச மரத்தடியிலும் அமர்ந்தேனோ இல்லையோ அவரின் ஆலமரமும் அரசமரமும் எனக்கு பெருநிழலைத் தந்தன. அரசமரம் நாவலில் அவர் இறப்புக்கு பிறகு இருக்கும் இரு சூட்சும ஆத்மாக்களைப் பற்றி மெலிதாய் சொல்லி இருப்பார். அந்தக் கதையை படித்த போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏனென்றால் ஆரம்பமும் முடிவும் தேடிக் கொண்டிருக்கும் மனித மனதில் அப்படியான ஒன்றே இல்லை என்ற ரீதியில் சொல்லப்படும் கருத்துக்கள் எப்படி பிடிபடும்?

என்னை கால்கள் இல்லாமல் நடக்கப் பழக்கினார் என் குருநாதர் பாலகுமாரன். மனம் இன்றி நினைக்கப் பழக்கினார். சிறகுகள் இன்றி பறக்கப் பழக்கினார். பாலகுமாரன் நாவல் அடுத்தது எப்போது வரும் என்று சென்னை தி.நகர் பஸ்டாண்ட் எதிரில் இருக்கும் பெட்டிக் கடையில் காத்துக் கிடப்பேன். வந்த உடனே பத்து ரூபாய் கொடுத்து வாங்கி வாசித்து என் வாழ்க்கையை என் இருப்பை உறுதி செய்து கொள்வேன். பாலகுமாரன் எனக்கு மட்டுமல்ல தமிழகத்தில் தடுமாறிக் கொண்டிருந்த பல இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றப்பட்ட அருள் தீபம் அவர். பாலாவை வாசித்து அவரின் எழுத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்களுக்கு.....

நவீன இலக்கியவாதிகளின் கபடி ஆட்டங்கள் எல்லாம் பிடிக்காது. இலக்கியம் தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கு வாழ்க்கை தெரியவேண்டும். எப்படி வாழ்வது என்று புரியவேண்டும். என் குருநாதர் எழுத்துச் சித்தர் ஐயா பாலகுமாரன் எங்களுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்தார். எது கடவுள் என்ற தெளிவைக் கொடுத்தார். சக மனிதரை எப்படி நடத்த வேண்டும் என்று வழிகாட்டினார். உள்ளுக்குள் உற்று பார்....சுற்றி நிகழ்பவை  எல்லாவற்றையும் வேடிக்கைப் பார் என்று சொல்லிக் கொடுத்தார். தமிழ் படிக்கத் தெரிந்த தேடல் நிறைந்த அத்தனை பேருக்கும் அவர்தானய்யா குரு. அவர் சொல்லித்தான் நான் பட்டினத்தாரைப் படித்தேன். அவர் சொல்லித்தான் நான் பட்டினத்தார் சமாதிக்குச் சென்றேன்....

அவர் சொல்லித்தான் திருவொற்றியூர் ஒற்றீஸ்வரரையும், வடிவுடையம்மனையும் ஓடிப் போய் வணங்கி அன்பில் திக்கு முக்காடினேன். மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயிலுக்கு போ என்றார், போனேன்.  கண் மூடி கோயிலின் மூலையில் அமர்ந்து அந்த அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டேன். கபாலி கோயிலுக்கும், பார்த்தசாரதி கோயிலுக்கும், முண்டகன்னி அம்மன் கோயிலுக்கும் புரிதலோடு போய் வந்தேன். ஒரு களி மண்ணைப் பிசைவது போல உருட்டி உருட்டி உள்ளுக்குள் அவரின் எழுத்துக்கள் என்னை உருவாக்கின. முண்டகண்ணி அம்மன் கோயிலில் அமர்ந்து கண் மூடிய போது குதிரைகளின் சப்தமும், கோயில் கிணற்றின் உள்ளே அமர்ந்திர்ந்த பெண் தெய்வமும் புத்தியில் சுடராய் எரிந்தன. எனக்குள் ஒடுங்கினேன். நான் என்ற எண்ணம் ஒரு பெரும் நோய் என்று உணர்ந்தேன். என் பாலகுமாரன் தான் அதற்கெல்லாம் காரணம்.

தென் கோடியில் இருக்கும் சுசீந்தரம் தாணுமாலயன் கோயிலுக்கு சென்று அங்குலம் அங்குலமாய் நான் அனுபவித்து அங்கே இருந்த அத்தனை சிற்பங்களையும் செதுக்கிய சிற்பிகளையும் உள்ளுக்குள் பாலகுமாரனின் எழுத்துக்கள் அடையாளப்படுத்த கை குவித்து நீர் பருகும் தாகக்காரனாய் பருகிக் கொண்டேன். ஆமாம்...பாலாவை நான் படிக்காமலேயே போயிருந்தால் எப்படி எனக்கு இத்தனை அனுபவங்கள் புரிதோடு கிடைத்திருக்கும்? தன் முனைப்பு இல்லாமல் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? எல்லா இக்கட்டான சூழலிலும் நான் ஒரு சாட்சி என்று எப்படி எண்ணியிருக்க முடியும்?

எனக்கு என் பாலகுமாரன் நேரடி பரிச்சயம் இல்லாதவர். நான் ஒரு ஏகலைவன். தூரத்தில் நின்று அவரிடம் கற்றுக் கொண்டவன். மானசீகமாய் தினமும் அவரோடு நிறைய பேசுபவன்.  மீண்டும் மீண்டும் அவருடைய புத்தகங்களை படித்ததேயாயினும் மீண்டும் படித்துக் கொண்டிருப்பவன். அதிலிருந்து மீளமுடியாமல் லயித்துக் கிடப்பவன். இப்போது கூடப் பாருங்கள் உடையார் புத்தகம் ஆறு பாகமும் வாங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகி விட்டது. இரண்டு வருடமாய் உடையாரின் சாம்ராஜ்யத்துக்குள் என் குருநாதரின் கையப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது 5வது பாகத்தின் இறுதியில் இருக்கிறேன். உடையார் ராஜராஜத்தேவர் பஞ்சவன் மாதேவியோடு படையெடுப்புக்கு கிளம்பி விட்டார். ராசேந்திர சோழன் மதுரைக்கு அருண்மொழியோடு சென்று விட்டார். போர் துவங்கப் போகிறது. கோயில் வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சோழ தேசமெங்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

உடையார் ஐந்தாம் பாகத்தில் நான் பிரமிப்போடு சோழ தேசத்திற்குள் என் குருநாதரோடு அலைந்து கொண்டிருக்கிறேன். உடையாரை வாசிக்கும் போதே புரிந்து விட்டது என் குருநாதர் பாலகுமாரன் தான் சோழ தேசத்தின் பிரம்மராயராய் இருந்திருக்க வேண்டும். கிருஷ்ணன் ராமன் என்னும் அந்த அந்தணர்தான் இப்போது பாலகுமாரனாய் பிறந்து சோழர் வரலாற்றில் கட்டப்பட்ட ஒப்பற்ற பெருங்கோயில் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை என்னைப் போன்ற சாமனியர்களுக்கு எழுத்தின் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

வெறுமனே இது எனது மனதின் கற்பனை அல்ல. நான் அப்படி விஸ்தரித்துப் பார்க்கவும் இல்லை. இது என் உள்ளுணர்வு. இது சரியா தவறா என்பது எனக்குத் தெரியாது...ஆனால் பாலகுமாரன் ஐயாவுக்கு அது தெரியும். உடையாரை எழுதி முடித்து விட்டு இப்போது அவர் ராசேந்திர சோழனையும் இந்த சமூகத்திடமும் இனி வரப்போகும் தலைமுறைகளிடம் இரத்தமும் சதையுமாய் உலாவ விடப்போகிறார். பாலா சாரின் பிறப்பின் அவசியத்தை இந்த இரண்டு புதினங்களும் நியாயப்படுத்தப் போகின்றன. தஞ்சை பெருங்கோயிலைப் போன்று உடையாரும், கங்கை கொண்ட சோழனும் காலங்கள் கடந்து தமிழர்களின் கைகளில் தவழப்போகின்றன. இது உறுதி. ஏனென்றால் இது யாரோ ஒரு தனிமனிதரின் விருப்பம் அல்ல. இது பிரபஞ்சத்தின் விருப்பம். சனாதான தருமம் என்னும் சத்தியம் தனக்குத் தானே செய்து கொண்டிருக்கும் ஒரு ஏற்பாடு.

பாலா சாரை பேஸ்புக்கில் பார்த்து ஒரு கருத்து கூட அவரது நிலைத்தகவல்களுக்கு என்னால் இட முடியவில்லை. நான் ஸ்தம்பித்து நின்றேன். குருவின் அருகாமையில் ஆனந்தித்து இருந்தேன். புலன்களால் அவர் எனக்கு பரிச்சயமில்லையே அன்றி....ஆன்மாவால் என்னை இருகத் தழுவிக் கொண்டவர் அவர். அவரைச் சுற்றி நிறைய என்னைப் போன்ற வாசகர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் பாலா சார் வெறுமனே ஒரு பிடித்த நாவலாசிரியர் மட்டும் அல்ல. அவர் வழிகாட்டி. குரு. அவரைச் சூழ்ந்திருப்பது வெறும் வாசகர் கூட்டம் அல்ல......அது அன்பு நிறைந்த தேடல் கொண்ட  கூட்டம். 

பாலா சாருக்கு நான் வெகுநாட்கள் முன்பு எழுதிய ஒரு கவிதை ஒன்றை பேஸ்புக்கில் மின்னஞ்சல் செய்தேன்.  எனக்கு ஒரு திருப்தி கிடைத்தது. குருவின் பார்வை பட்டாலே போதும்தானே.....ஒன்றும் கருத்து கூற வேண்டாம். எதுவுமே பகிரவேண்டாம். அருட்பார்வை போதும் அல்லவா...அவரின் பார்வை என் மீது பட்டது. நான் திருப்தியானேன்.

எல்லோரிடமும் பேசுகிறீர்கள்...ஐயா.. ! எனக்கு உங்களிடம் அறிமுகம் செய்து கொள்ளவே ஒரு மாதிரி இருக்கிறது அப்பா...என்னை ஆளாக்கியது நீங்கள். உங்களின் கருத்துக்கள் என்னை செப்பனிட்டன.  நான் எப்படி உங்கள் முன் வந்து உங்களால் நான் இப்படி ஆனேன் என்று சொல்வேன். அப்படி சொன்னால் அது மட்டுப்பட்டதாகி விடாதா....? நான் என்னைப் பற்றி எதையோ உங்களிடம் பகிர வந்ததாகி விடாதா....அதனால் நான் தூரமாய் நிற்கிறேன் ஐயனே...! என்னை எப்போதாவது ஒரு முறை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் விழிகளுக்குள் என் பிம்பம் ஒரு முறையாவது விழ வேண்டும் அது போதும் எனக்கு.... என்று எனக்குள் புலம்பினேன்.....

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

நான் மூர்ச்சையாகிப் போய்க் கொண்டிருக்கிறேன் ஐயா. எதுவுமே வார்த்தைகளாய் பரிமாறிக் கொள்ளாமல் உங்களை பற்றியே அல்லும் பகலு நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சென்ற இடம் பார்த்த மனிதர்கள் என்று உங்களின் அனுபவங்களை நீங்கள் பகிரும் ஒவ்வொரு நொடியும் நான் சொக்கிப் போய் சாஸ்வதமான உங்கள் அன்பில் திக்குமுக்காடிக் கிடக்கிறேன்...!

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
இது தகுகோ.. இது முறையோ.. 
இது தருமம் தானோ....

நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்களா? என்னோடு பேச மாட்டீர்களா...? வாஞ்சையோடு இந்தச் சிறுவனைக் கட்டியணைத்து கடைத்தேற்ற மாட்டீர்களா? நான் உங்கள் நினைவுகளோடு அலைந்து கொண்டிருக்கிறேன்....நீங்கள் வேறு ஏதேதோ பேசுகிறீர்களே.. யார் யாருடனோ பேசுகிறீர்களே....புன்னகைக்கிறீர்களே.....என்னை ஏறெடுத்தும் பார்ப்பதிலையே ஐயா..? இது தகுமோ....இது முறையோ ...இது தருமம் தானோ என்று உள்ளுக்குள் பெருங்குரலெடுத்து கதறி அழுதேன்.

நீங்கள் என்னை பார்ப்பீர்கள் உங்கள் கருணை என் மீது மழையாய் பொழியும். உங்கள் பாதங்களை தொட்டுப் பார்க்காவிட்டலும் தூரத்திலிருந்து நான் பார்ப்பேன்...

என்றெல்லாம் பேசிகொண்டு இன்று காலை அலுவலகம் வந்தேன்.  பேஸ்புக்கை திறந்து பார்த்த போது உங்களின் நிலைத்தகவல் கண்ணில் பட்டது...

"தேடினேன் தேவா தாமரைப் பாதமே. வாடினேன் வாசு தேவா வந்தது நேரமே.....ஞானவாசல் நாடினேன் வேணுகானம் பாடினேன் 
காலகாலமாய் உனை......."

வாசித்து வாசித்து ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனேன். கூத்தாடினேன். உங்களுக்குள் ஏதோ ஒன்று தோன்றி இருக்க வேண்டும். உங்கள் மனதில் இந்தப் பாடல் வரிகள் ஓடிய கணத்தில் தேவா என்று ஒரு முறையாவது சொல்லி இருப்பீர்கள் தானே....போதும் ஐயா.. அது போதும்....உங்கள் கருணை அளப்பரியது. சாதரணமாய் வாழ்க்கையை எடுத்து நகர்பவர்களுக்கு இது ஒரு தற்செயல் நிகழ்வு..ஆனால் எனக்குத் தெரியும். நீங்கள் சூட்சுமமாய் எல்லாம் உணரக் கூடியவர். உங்கள் கருணை என்னைப் போன்றவர்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் எப்போதும் வழிகாட்டிக் கொண்டே இருக்கிறது.

கால காலமாய் தேடிய இடம் எதுவென்று உணர முடிகிறது. சூட்சுமமாய் எல்லாம் விளங்க வைத்த ஒரு குருவின் அருகாமை என்னைச் சுற்றி வெளிச்சத்தைப் பரப்பி இருக்கிறது. அவரின் கருணையும், அன்பும், அருகாமையும் சர்வ நிச்சமயாம் என்னைக் கடத்தேற்றும். வெறுமனே வாசித்து நகர்ந்து விட முடியாத சுவாசம் பாலகுமாரன் ஐயாவின் எழுத்துக்கள் அவரின் பெருங்கருணையிலிருந்து இன்னும் நிறைய எழுத வேண்டும். தலைமுறைகள் கடந்தும் என்னைப் போன்ற சிறுவர்களை கைப்பிடித்து அந்த எழுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…


பாலகுமாரன் ஐயாவின் பாதங்களுக்கு என் அன்பு முத்தங்கள்...!!!!!!!



தேவா சுப்பையா...



Comments

Unknown said…
அன்பு வணக்கம்
ஐயாவுக்கும்

உருகி உருகி அன்பால் குருவின் ஆசியை பெற்ற தேவா அண்ணாவுக்கும்

வார்த்தைகள் வரவில்லை
சந்தோசம் சந்தோசம் சந்தோசாம்
திரு. பாலகுமாரன் பற்றி உருகி எழுதியிருக்கிறீர்கள் அண்ணா....
அருமை.
பதின்ம வயதில் பாலகுமாரன், அதுவும் ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் என பாலாவின் பாதை விருப்பமானவர்க்கு ஈடு இணையற்றது.. வாழ்த்துகள் பகிர்வுக்கு தேவா :)
நான் அந்த வயதில் ’சுஜாதா’ பின்னால சுத்திகிட்டு இருந்தேன். :-)

யப்பா ..உஸ்...பொருமையா 2 கப் காஃபியோட படிச்சு முடிச்சேன்.

அவரோட பழைய நாவல்களை நினைவு வைத்து சொன்னது அருமை :-)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த