Pages

Wednesday, December 31, 2014

புத்தாண்டு....!


நிறைய எதிர்பார்ப்புகள் கனவுகளோடதான் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருது. எல்லாமே நல்லபடியா நடக்கணும்ன்ற ஆசையோட ஹேப்பி நியூ இயர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கை குலுக்கி சிறு புன்னகையோட இந்த டிசம்பர் 31ன எல்லோரும் கடந்து போக நினைக்கிறோம். நியூ இயர்க்கு என்ன ப்ளான்னு என்கிட்ட எப்பவும் நண்பர்கள் கேட்கும் போதும் எல்லாம் ஒரு புன்னகையோட  நான் கடந்து போயிடுறேன். ஏன்னா என்கிட்ட எப்பவுமே எதுக்குமே ப்ளான்ஸ் இருந்ததே கிடையாது. சரியோ தவறோ  கொண்டாட்டங்கள் மனித வாழ்க்கையோட ஆதாரமா இருந்து இந்த வாழ்க்கையோட அர்த்தத்தை சூசகமா தெரிவிக்கிறதாதான் நான் கருதுறேன்.

சுகமோ, துக்கமோ பிடிச்சவங்க பக்கத்துல இருக்கணும். மனசுக்குப் பிடிச்சவங்க இல்லாத சொர்க்கமும் நரகம்தான். மனசுக்குப் பிடிச்சவங்க கூட இருந்தா நரகமும் நமக்குச் சொர்க்கம்தான். எல்லா புது வருசத்தையும் விட நான் சென்னையில வேலை தேடிக்கிட்டு இருந்த  1998ம் வருசம் பொறந்த அந்த வருசத்தை மறக்கவே முடியாது. யாருமே இல்லாம தனியா மொட்டை மாடியில பசியோட படுத்துக்கிட்டு நட்சத்திரங்களைப் வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை சுத்தி சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக்கிட்டு இருந்தப்ப, நியூ இயரைக் கொண்டாட கூப்பிட்ட சில உறவுகளையும் நட்புக்களையும் நான் தவிர்த்துட்டு தனியா கிடந்த அந்த அடர்த்தியான புதுவருசம் எனக்கு வேறு மாதிரியான அனுபவத்தைக் கொடுத்துச்சு.

எல்லாம் இருந்தா எல்லாம் நாளுமே பண்டிகைதான் பாஸ். எதுவுமே இல்லைனா பண்டிகை நாளு கூட நமக்குச் சூன்யம்தான். இந்த வாழ்க்கை பொருளால் ஆனது மட்டும் கிடையாதுன்னு என் தத்துவ அறிவு சொன்னாலும் பொருள் இல்லேன்னா இங்கே குண்டூசியைக் கூட நம்மலால நகர்த்த முடியாதுன்னு ஆன்மீகத்தேடல்ல கிடைச்ச  சத்தியம் எனக்கு செவுட்டில அறைஞ்சு சொல்லிக் கொடுத்துச்சு. 1998 அந்த ஜனவரி ஒண்ணு 00:01க்கு பொறந்தப்ப ஒரே சத்தமா இருந்துச்சு... ஹாப்பி நியூ இயர்னு காது கிழியற மாதிரி இந்த உலகம் போட்ட சத்ததுல என்னை மறந்து தூங்கிட்டு இருந்த நான்.... தி.நகர், ரெங்கநாதன் தெருவோட கொண்டாட்டத்தை மொட்டை மாடியில இருந்து இருட்டுக்குள்ள என்னைப் பதுக்கிக்கிட்டு மெல்ல எட்டிப் பார்த்தேன்.

அப்போ எனக்குன்னு ஒரு அடையாளமும் கிடையாது. என்கிட்ட இருந்த ஒரே ஒரு அடையாளம் ஒரு கிராமப்புற கல்லூரியில கடைசி செமஸ்டர்ல பதினேழு அரியர்ஸ் எழுதி செகண்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணின பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரின்ற ஒரே ஒரு அடையாளம்தான். அது மட்டும்தான் நான் எனக்குன்னு சேத்து வச்ச சொத்து . அந்த டிகிரியும் கூட ஏன் படிச்சோம் எதுக்குப் படிச்சோம்னு தெரியாம படிச்சுட்டு வந்து சென்னையில கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் காலேஜ்ல ஜாயின் பண்ணி ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சு முடிச்சா இந்த வாழ்க்கைய ஜெயிச்சுடலாம்னு யாரோ ஒருத்தன் சொன்னதைக் கேட்டு பிஜிடிசிஏ படிச்சு முடிச்சுட்டு சென்னையை நான் உத்துப் பாத்தப்ப....

சென்னை என்னை கண்டுக்கவே இல்லை. 

ஒடுற வருசம் யாரையும் தனியா எங்கையும் நிறுத்தி வச்சுட்டு ஓடுறது  கிடையாது. அது எல்லோ மனுசங்களையும் சேத்து சுனாமி அலை இழுத்துட்டு ஓடுற மாதிரி பிடிக்குதோ பிடிக்கலையோ தரதரன்னு இழுத்துக்கிட்டுதான் போகுது. ஏதேதோ சூழல்கள், ஏதேதோ வெற்றிகள், அவாமானங்கள், பாராட்டுக்கள்....னு எல்லா விதமான உணர்வுகளுக்குள்ளயும் நம்மள போட்டு முக்கி எடுத்து அதை அனுபவமாக்கி நம்மை மரணத்துக்கு தயார்படுத்துறதுதான் காலத்துக்கு இந்த இயற்கை கொடுத்திருக்க ஒரு மிகப்பெரிய வேலை.

நல்லா விளங்கிக்கிட்டு நின்னு நிதானிச்சுப் பார்த்தா இதைத்தான் யுகங்களா மனிதர்களுக்கு காலம் மிகப்பெரிய பதிலா சொல்லிக்கிட்டே இருக்கறத நாம் உணர முடியும். 1998க்கு அப்புறம் ஒவ்வொரு புதுவருடமும் ஒவ்வொரு விதமா என்னை வந்து உரசிப்பார்க்க...அதே சென்னையில நானும் புதுவருசத்தைக் கொண்டாட என்ன என்ன வழிமுறைகள் இருக்கோ அப்டி அப்டி கொண்டாட ஆரம்பிச்சேன். பெரும்பாலும் புதுவருசக் கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறது ஏதோ ஒரு ஒப்பனர்தான். அந்த ஓப்பனர் யாரோ ஒரு நம்ம மனசுக்குப் பிடிச்ச உறவா சில பேருக்கு இருப்பாங்க, பலபேருக்கு வெறுமனே பாட்டில திறக்குற சாதரண ஓப்பனாராவும் அது இருக்கு. பொங்கி வழியும் மதுக்கோப்பைகள்லயும், வயிறு புடைக்கத் தின்று தீர்க்கும் உணவுப் பதார்த்தங்களயும், திருத்தமான அதிக விலை கொடுத்து வாங்கி போட்டுக்கிட்ட உடைகளிலும், அழகா செஞ்சுக்கிற ஒப்பனைகள்லயும் என்னோட புது வருசங்கள் கரைபுரண்டு ஓடிக்கிட்டு இருந்தப்பதான்...

ஒரு புதுவருசம் அன்னிக்கு ப்ளாட்பாரம் ஓரமா போத்திக்க போர்வை கூட இல்லாம தன் அம்மோவ நெஞ்சுக்குள்ள வெற்று உடம்போட ஒண்டிக்கிட்டு கிடந்த ஒரு ஏழைப் பிஞ்சு மேலவும் விழுந்துச்சு. மெரீனா பீச்ல வழக்கப்படி குமிஞ்சுக் கிடந்த நண்பர்கள் கூட்டத்துக்கு நடுவுல புதுவருசத்தைக் கொண்டாடித் தீர்க்க போய்கிட்டு இருந்த எனக்கு இந்த புதுவருட சந்தோசம் எல்லோருக்கும் கிடையாதுன்ற உண்மை உறைச்சப்ப யாருமே இல்லாம நான் தனியா நின்னுக்கிட்டு இருந்த அந்த புதுவருசம் என் புத்தியில ஏறி உட்கார்ந்துகிட்டு நர்த்தனம் ஆட ஆரம்பிச்சுது.

அதுக்காக அந்த பச்சைப்புள்ளைய பாத்துட்டு நான் ஒண்ணும் ஒடுங்கி உட்காந்து தத்துவத்துக்குள்ள போய் நின்னு வாழ்க்கையோட தீர்வ தேட ஆரம்பிக்கல..அது எல்லாம் புத்தர்களுக்கான வழிமுறைகள். என்ன மாதிரி சாதரண மனுசங்க... தோ வந்துட்டேன்டா மச்சான்னு சொல்லிட்டு அடுத்த செகண்ட் ஆக்ஸிலேட்டரைத் திருகி நியூ இயர் கொண்ட்டாட்டத்துக்குள்ள என்னை கரைச்சுக்கிட்டுத்தான் ஆகணும். ஒவ்வொரு புதுவருசம் பொறக்கும் போதும் எனக்குள்ள தப்பாம இந்த ரெண்டு காட்சிகளும் வராம இருந்தது கிடையாது. இதோ  மீண்டும் ஒரு வருடத்திற்காக உலகம் கொண்டாட்டத்தை தொடங்கிருச்சு, இந்த மிகப்பிரம்மாண்டமான வாழ்க்கையோட ஒரு சிறு துகளா நாமளும் அதை வேடிக்கைப் பார்க்க தொடங்கிட்டோம்...

இந்த வருடமும் பூக்கள் பூக்கும், மரங்கள் வீழும், மனிதர்கள்  பிறப்பார்கள் மரிப்பார்கள், சந்த்தோசமும் துக்கமும் சரியாய் பிசையப்பட்டு நமக்கு பரிமாறப்படப் போகிறது. வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ சொல்ல முடியாது. கொடுப்பதை வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்.

வாழ்க்கையோட புரிதலே....பட்டும் படாம சாட்சி மனோபாவத்தோட வாழ்ந்துட்டுப் போறதுதான் பாஸ். சரி தவறு இது ரெண்டுக்கும் நடுவுல மூணாவதா ஒரு பதில் எப்பவுமே இருக்கத்தான் செய்யுது பாஸ்..., அதே மனோபாவத்தோட கடந்து போன வருசங்களடோ வரப்போகுற வருசத்தையும் நாமாதானே சேர்த்து வைக்கனும்.

காலம் ஒரு போதும் தொடங்கவும் இல்லை..... எங்கேயும் முடியவும் இல்லை....!

என்னை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும்....


இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!
தேவா சுப்பையா...


Tuesday, December 30, 2014

பிசாசு....!


படத்தின் வரும் அந்தப் பாடல், உயிரை மீட்டும் அந்த வயலின் ஒலி, முதல் காட்சியிலேயே கதாநாயகனின் பிடித்த கையை விட்டு விட்டு ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....என்ற அழுத்தமான குரலோடு மரணிக்கும் கதாநாயகி, இறப்பதற்கு முன் ஸ்ரெட்ச்சரில் வைத்துக் கொண்டு வரும் போது காதலோடு அவள் கதாநாயகனைப் பார்க்கும் அந்தப் பார்வை, இறப்பதற்கு முன்பு அவளுக்கு ஏற்படும் அந்தக் காதல், இறந்து போன கதாநாயகியின் அப்பாவாய் நடித்திருக்கும் ராதாரவியின் உயிரை உருக்கும் நடிப்பு, அட்டகாசமான கேமரா, நேர்த்தியான இயக்குனரின் கதை சொல்லும் திறன் என்று எல்லாமே சூப்பர்தான் என்றாலும்....

இன்னும் அழுத்தமாய் இந்தக் கதையின் கரு கையாளப்பட்டிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது. இன்னும் இன்னும் வலி வேண்டும், இது எல்லாம் பத்தாது என்ற ஒரு மனோபாவம் இருப்பதால் அப்படித் தோன்றி இருக்கலாம். எந்த ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதும் போதும் அந்த திரைப்படத்தில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் பற்றியும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் நான் அளவு கோலாக வைத்துக் கொண்டு அந்தப் படைப்பை எப்போதும் அணுகுவதில்லை. அந்த படைப்பு என்னை என்ன செய்தது? நான் எப்படி உணர்ந்தேன் இந்த இரண்டில் மட்டும் நின்று கொண்டுதான் எழுதவே ஆரம்பிப்பேன். இந்தப்படமும் அப்படித்தான்.

என்னா சார் இப்படி ஒரு கதை? மரணம்தானே வாழ்க்கையின் இறுதி...? இங்கே மரணிக்கும் முன்பு அவளுக்கு ஒரு காதல் வந்து தொலைக்கிறதே இது என்ன சார் அவஸ்தை? ப்ப்ப்ப்ப்பா.....என்ற பெருங்கதறலோடு கதாநாயகனின் கையை விட்டு விட்டு இறந்து போகிறாளே அந்தப் பெண்...? அவளை நான் தீரத் தீரக் காதலிக்க வேண்டுமே? அவளோடு பேசிச்சிரிக்க வேண்டுமே..? அவளுக்காய் நான் கவிதைகள் பலவும் எழுத வேண்டுமே...? தினம் தினம் விடியலில் தேதிக் காலண்டரைக் கிழித்து அதன் பின்புறம் அவளுக்கென ஒரு கவிதை எழுதி படுக்கையிலேயே  அவளை வாசிக்கச் சொல்ல வேண்டுமே...? அயற்சியான தினத்தின் முடிவினில் மலரும் அற்புத இரவுகளில் அவள் கைகளை பிடித்து மடியில் வைத்துக் கொண்டு...

என் பேனாவிலிருந்து 
சொட்டிக் கொண்டிருப்பது 
வார்தைகளொன்றும் கிடையாது...
என் நெஞ்சுக்குள் தேங்கிக் கிடக்கும்...
அவஸ்தையான காதலடி அது...

என்று எழுதித் தீர்த்திருப்பேனே..! உறக்கம் கலைந்த பின்னிரவில் அவள் தலை கோதி முகத்தில் விழும் முடி ஒதுக்கி என் உதடுகளிலிருந்து ப்ரியத்தைப் பிழிந்தெடுத்து அவள் இமைகளின் மீது வைத்து ஒற்றியிருப்பேனே....? இப்படி இறந்து போனாயே பெண்ணே..? என் காதலை நான் யாரிடம் சொல்வது...?

காகிதத்தில் கவிதை எழுதி
உன் கல்லறையில் வைக்கத்தானா?
எனக்குள் கவிதைப் பூக்கள் பூத்தன?
உயிரை விட்டு விட்டு
நீ உயிராய் என்னுள் இருக்கிறாய்...
நானோ உயிரற்ற ஜடமாய்
நித்தம் உன் நினைவுகளோடு
எங்கே இனி உனைப் பார்ப்பது என்ற
என்ற புலம்பலோடு
மெளனத்தில் கரைந்து கொண்டிருக்கிறேன்....

என்றெல்லாம் எழுதித் தீர்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இறந்து போனவளின் ஒற்றைச் செருப்பை எடுத்து கதாநாயகன் பத்திரப்படுத்திக் கொண்டதற்கு காரணமாய் காதல்தான் இருக்க வேண்டும் என்று நானே நினைத்துக் கொண்டேன். காதலென்ற வார்த்தைக்குப் பதிலாக இரக்கம், பச்சாதாபம், என்று எதை எதையோ போட்டு நிரப்பிக் கொள்ள எனக்கு மனம் வரவில்லை. திகில் நிறைந்த ஒரு பேய் படமாயும் இது இருக்க வேண்டும் என்று கொஞ்சம் வேறு மாதிரி மெனக்கெட்டு இருக்கிறார் இயக்குனர். கதாநாயகனுக்கு உதவி செய்யும் பிசாசு இது... அந்த உதவி செய்யும் மனப்பான்மை காதலால் ஏற்பட்டதாய்த்தானிருக்க வேண்டும். தனக்கு உதவினான் என்று கைம்மாறு செய்துவிட்டு வேறெங்கோ போய் சுற்ற விருப்பமில்லை அந்தப் பெண்ணின் ஆவிக்கு...


அது அவனோடே வசிக்கிறது. அவனை பீர் குடிக்க விடமாட்டேன் என்கிறது, அவனுக்குப் பக்கத்தில் வேறு ஒரு நண்பனை படுக்க விடமாட்டேன் என்கிறது? பேயை ஓட்டுகிறேன் என்று அவனிடம் காசு பிடுங்க வந்தவர்களைக் கலங்கடித்து வீட்டை விட்டே ஓட வைக்கிறது, அவன்  அம்மாவை அடித்தவனை போட்டுப் போட்டுப் புரட்டி எடுக்கிறது, அவன் அம்மாவைக் காப்பாற்ற பக்கத்து வீட்டுக் கதவு தட்டி மருத்துவமனைக்கு கூட்டிப் போகச் சொல்கிறது. படம் முழுதும் கதாநாயகிக்கு ப்ப்ப்ப்பா என்ற ஒரே ஒரு வார்த்தையைத்தான் டயலாக்காய் பேசுகிறார். முதல் காட்சியிலேயே இறந்து விடுகிறார், இருந்தாலும் நம் அனைவர் நெஞ்சிலும் வலியாய் நிறைந்தும் நிற்கிறார். ஒரு சில ப்ரேம்களில் வந்தாலும் கூட வலுவாய் காதாபாத்திரங்களை மனதில் நிற்க வைக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனரை நாம் பாரட்டத்தான் வேண்டும். அதுவும் வெறுமனே ஒரு பிசாசு என்ற அளவிலான பயமாய் அது நெஞ்சில் நிற்காமல் ஒரு ஏக்கமாய், காதலாய் நம்மை அந்தப் பிசாசு படம் முடிந்தும் பின் தொடர்வதுதான் இந்தப் படத்தினால் நமக்கு ஏற்படும் அதி அற்புதமான ஒரு அனுபவம்.

ராதாரவியை ரொம்ப நாள் கழித்து லிங்காவில் பார்த்த போது எனக்கு அலுப்பாய் இருந்தது. விஜயகுமாரும், ராதாரவியும் போட்டிப் போட்டிக் கொண்டு லிங்கேஸ்வர மகாராஜாவைப் புகழ்ந்து கொண்டேயிருந்த போது எரிச்சலாய்க் கூட வந்தது, ஆனால் அந்த அலுப்பை எல்லாம் பிசாசு படத்தில் களைந்திருக்கிறார் ராதாரவி. மனுசன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் நடிப்பில். தன் மகளைப் பிசாசாய் இன்னொருத்தன் வீட்டில் பார்த்து விட்டு அவர் கதறும் கதறலை ஒரு பெண்ணின் தகப்பனாய் என்னால் சகித்துக் கொள்ளவே முடியவிலை.....! அம்மா... பவானி வாம்மா நம்ம வீட்டுக்குப் போயிடுவோம், சாமி, இன்னொருத்தன் வீட்ல ஏம்மா நாம தொந்தரவா இருந்துகிட்டு, நம்ம பேக்டரியிலயே நம்ம வீட்லயே நீ சாமியா இருடாம்மா....

என்று தவழ்ந்தபடியே ஓடி ஒளியும் பிசாசினை பார்த்து எந்த தகப்பனுக்கு பிசாசாய் எண்ணத் தோன்றும்? புகைக்கூண்டிற்குள் இருந்து அப்பாவின் மீது உள்ள பாசத்தில் கைகள் நீட்டி ராதாரவியின் கன்னத்தை அந்தப் பெண்ணின் ஆவி தொட்டுத் தடவிய அந்த காட்சியில் என்னை மீறித் தேம்ப ஆரம்பித்து விட்டேன்.  என்னை எப்போதும் கட்டியணைத்து என் கன்னத்தில் கை வைத்து உறங்கும் என்  பத்து வயது மகளின் நினைப்பு வந்து நெஞ்சைப் போட்டு பிசைய ஆரம்பித்து விட்டது. பெண் பிள்ளைகளுக்குத் தகப்பனாய்  இருப்பதென்பது ஒரு நெகிழ்ச்சியான, சுகமான வலி நிறைந்த ஒரு அனுபவம். நெஞ்சிலும், மாறிலும் தூக்கி வளர்த்த பெண்ணை இன்னொருவனின் கை பிடித்துக் கொடுத்து விட்டு யாரோ ஒருவன் போல விலகி நின்று அவளை ரசிக்கத் தொடங்கும் ரணம் மிகுந்த நாட்கள் எனக்கு இன்னும் ஒரு பத்து அல்லது பதிமூன்று வருடத்தில் வரப்போகின்றது என்பதை நினைத்தாலே....

அடிவயிறு கலங்குகிறது, சுவாசம் முட்ட, நெஞ்சில் ஒரு வலி வந்து மோதுகிறது.

ஓ...தகப்பன்களே....
எப்படியாப்பா உங்கள் பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்து விட்டு விருந்தாளியை போல அவள் புகுந்தவீடு சென்று அவளை யாரோ ஒருவனின் மனைவியாய் பார்த்து ரசித்து வந்தீர்கள்...? 
ஓ...தகப்பன்களே.....
எப்படி உங்கள் மகள்களின் குரல் கேட்காமல் அவள் இல்லாத வீட்டிற்குள் அவள் நினைவுகளோடு அவளைக் கட்டிக் கொடுத்த பின்பும் மீண்டுமொரு வாழ்க்கை வாழ்ந்தீர்கள்?
ஓ......தகப்பன்களே....
கண்ணீர் வழியும் விழிகளோடு
எப்பாடியப்பா நீங்கள் உங்கள் மகள்களுக்கு 
விடை கொடுத்தீர்கள்..?
சுமையை இறக்கி வைக்கிறேன் என்று உலகுக்கு நீங்கள் சொல்லி விட்டு
மகள்களைக் கட்டிக் கொடுத்த பின்புதானே ஐயா நீங்கள்...எல்லாம்
நிஜத்தில் சுமையைச் சுமக்க ஆரம்பித்தீர்கள்...?

ராதாரவி மகள் பவானிக்காய் கலங்கிய படியே அப்பாவிற்கு முதுகு வலிக்குதும்மா, வாம்மா நம்ம வீட்டுக்குப் போய்டலாம் என்று கலங்கிக் கொண்டிருந்த போது நான் திரைப்படத்திற்கு வெளியே வந்து விழுந்து என் மகளைப் பற்றி எண்ணித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். இந்தப்படத்திலும் இயக்குனர் மிஸ்கின் பிச்சைக்காரர்கள் சிலரைக் காட்டி அதில் சிலரை கண்கள் தெரியாதவர்களாக காட்டியிருக்கிறார். ஓநாயும் ஆட்டுக்குட்டியிலும் கண் தெரியாத சிலர்தான் படத்தின் மையம் என்ற எண்ணமும் எனக்கு வந்தது. இதிலும் குறிப்பிட்ட காட்சிகளில் கண் தெரியாத பிச்சைக்காரர்களைக் காட்டி இருக்கிறார். கண் தெரியாதவரக்ளை படத்துக்குப் படம் வைப்பதன் பின்னணியில் ஏதேனும் குறியீடு இருக்குமோ என்னவோ.. யார் கண்டது?

படத்தின் க்ளைமாக்ஸ் நம்ப முடியாததாய் இருந்தாலும் பேய் என்பதையே நாம் நம்பிக் கொண்டுதானே படத்தைப் பார்த்தோம், அதில் தன் வீட்டிற்குள் மகளைப் புதைக்காமல் ஐஸ் பாருக்குள் ராதாரவி பாதுகாத்து வைத்திருப்பதை நம்பினால் என்ன குறைந்து விடப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. பிசாசு என்று டைட்டில் வைத்ததாலேயே இதை ஒரு ஹாரர் மூவி மாதிரியும் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்ததிற்கு உட்படாமல் ஒரு காதல் படமாகவே வலியோடு சொல்லி இருந்தால்....இன்னும் நன்றாயிருந்திருக்கும் என்று எனக்கு படம் பார்த்து முடித்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்....

மொத்தத்தில் .....

எனக்கு இந்தப் பிசாசு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது.....!
தேவா சுப்பையா....


Saturday, December 27, 2014

எதுவமற்றதின் குரல்...!


யார் உருவாக்கினார் நியதிகளை?
நேற்றைய பகலைப் போலத்தானே
இருக்கிறது இன்றைய பகலும்
அதைத் தொடர்ந்து  வரும் இரவும்...
இருக்கிறது..
குளிரையும் வெப்பத்தையும்
தவிற வேறெதுவையும்
உமிழ்ந்திருக்கிறதா காலம்...?
சூரியனைச் சுற்றி வரச் சொல்லி
பூமியிடம் சொன்னது யார்?
சூரியனுக்கு அப்பாற் எத்தனை கோடி
பூமிகள் மொத்தமிருக்கும்...?
இருப்பதற்கு ஏன் இவ்வளவு சங்கடம்...?
அந்த குயிலுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை...,
மத்தியானத்திலிருந்து கூவி விட்டு
இப்போதுதான் பறந்து செல்கிறது...
நிசப்தத்தில் மிதந்து கொண்டிருக்கும்
அதன் சப்தத்தைப் போல...
எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கிறது
ஒரு இன்னிசையை காலமெப்போதும்...
காரம்பசுக்கள் கழுத்தின் மணி அசைய
வீடு திரும்பத் தொடங்கி விட்டன...
முதல் பனி ஒன்று மெல்ல
ஒரு புல்லின் நுனியில் வந்தமர்கிறது...
இந்த குளிர் இரவில்
யாரோ ஒரு வழிப்போக்கன்
எங்கிருந்தோ வாசிக்கிறான்
தன் புல்லாங்குழலை...
வெதுவெதுப்பான கனவுகளோடு
கம்பளியை இழுத்துப் போர்த்திக்
கொண்டு என்னோடு புரண்டு
கொண்டிருக்கிறது வாழ்க்கை...!
தேவா சுப்பையா....
Sunday, December 21, 2014

லிங்கா.....ஒரு பார்வை...!


சாதாரணமாய் தமிழ்த் திரைப்படங்கள் வெறும் திரைப்படங்களாய் வெளியான காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. தமிழ் நாட்டு அரசியலில் பெருந்தாக்கத்தைக் கொடுத்ததாலேயே இன்றைக்கு திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களின் வெளியீடும் அது குறித்த பார்வைகளும்  தற்போதெல்லாம் பெரும் அரசியலாக்கப்படுகின்றன. இந்த அரசியலின் உச்சம் சமீபத்தில் ரஜினி நடித்து வெளியான லிங்காவிற்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முதலில் லிங்கா வழக்கமான ஒரு ரஜினி படம் கிடையாது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இத்தனை சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ரஜினி நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லிங்காவில் தனது சூப்பர் மாஸுக்கு ஈடு கொடுக்கக் கூடிய காட்சிகள் ஏதும் இல்லாத கதைக்குள் தன்னைப் பொறுத்திக் கொண்டு நடித்திருப்பதன் மூலம் ரஜினி ரசிகர்கள்தான் உண்மையில் ஏமாந்து போய்... காரசாரமான பாட்சா போன்ற, படையப்பா போன்ற அதிரடியான சூப்பர் பழிவாங்கும் கதை இது இல்லையே என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும் ஆனால் இங்கே லிங்காவில் நடந்து கொண்டிருப்பதோ வேறு....

பட்டி தொட்டியெல்லாம் ரஜினி ரசிகர்களாலும், வழக்கமான அவரது பெண் ரசிகைகள், குழந்தைகள், குடும்பங்கள்பெரியவர்கள் என்று எல்லோரும் கைதட்டி ரசித்து படமும் வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் லிங்காவுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு அரசியலும் ஆங்காங்கே ஊடகங்களிலும், பெரும்பாலும் இணையத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. லிங்கா வழக்கமான ரஜினிப் படங்களைப் போல அதிரடி ஆக்சன் மூவியாய் இல்லை ப்ளாஷ் பேக் ரொம்பவே போரடிக்கிறது என்று எப்போதும் ரஜினி படங்களை பார்த்து விட்டு அவை எல்லாம் வெற்று மசாலாப் படங்கள் என்று விமர்சித்துக் கொண்டிருந்த நல்லவர்கள் எல்லாம் இன்று திடீரென லிங்கா  ரஜினி படம் போன்று இல்லவே இல்லை என்று தங்களின் விமர்சனங்களை ரஜினிக்கு எதிரான ஒரு அரசியல் அஸ்திரமாகவே பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர்.

அப்படி என்னதான் இருக்கிறது லிங்காவில்....என்றுதானே கேட்கிறீர்கள்...

சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவில் கோடையில் வறட்சியால் வாடிப் போய் குடிக்கவும், விவசாயம் செய்யவும் கூட தண்னீர் கிடைக்காமல் கிடக்கும் சோலையூர் கிராமம் மழைக்காலத்தில் வெள்ளக்காடாய் மாறி மூழ்கிப் போய் பெரும் அவலத்தை சந்திக்கிறது. அந்த ஊருக்கு வெள்ளைக்காரர்களால் நியமிக்கப்பட்ட இந்திய கலெக்டராய் லிங்கேஸ்வரனாகிய ரஜினி வருகிறார். ராஜா லிங்கேஸ்வரன் எனப்படும் அரச பரம்பரையான அவர் சோலையூரில் ஒரு அணை கட்டினால் மழைக்காலத்தில் வரும் வெள்ளத்தை தேக்கி வைத்து அந்த வறண்ட பூமியை விவசாய நிலமாய் ஆக்கலாமே என்று ஆசைப்பட்டு அதை வெள்ளைக்காரர்களிடம் முன் வைக்க அந்த கோரிக்கை ஏளனப்படுத்தப்பட்டு நிராகரிக்கப் படுகிறது.

அடிப்படையில் ஒரு பொறியாளரான லிங்கேஸ்வரன் தன் தந்தையின் கோரிக்கையை ஏற்று ஐசிஎஸ்ஸும் படித்து கலெக்டராகிறார். மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கலெக்டர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ராஜா லிங்கேஸ்வரனாய் நின்று தனது சொத்துக்களை எல்லாம் வைத்து அந்த ஊருக்கு அணை கட்டி வைக்கிறார்.  வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சியால் அந்த அணையை வெள்ளைக்காரர்கள்தான் கட்டியதாய் ஊரார் முன்பு ரஜினி பொய்யாய் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஊரார்கள் ரஜினியை ஏமாற்றுக்கார் என்று சொல்லி அவர் கட்டிய கோயிலையும் பூட்டி விட்டு ராஜா லிங்கேஸ்வரனாகிய ரஜினியை ஊரை விட்டே துரத்துகின்றனர்.


பிறகு அந்த அணையை ராஜா லிங்கேஸ்வரன்தான் கட்டினார் என்ற உண்மை தெரிந்த பின்பு மீண்டும் ராஜா லிங்கேஸ்வரனைத் தேடிப் போய் ஊரார் கூப்பிட ராஜா லிங்கேஸ்வரனாகிய ரஜினி ஊருக்குள் வர மறுக்கிறார். அந்தக் கோயிலும் பூட்டப்பட்டே கிடக்கிறது. பின்னாளில் இரண்டு தலைமுறைகள் கடந்து ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அந்த அணையை வலுவில்லாதது என்று கூறி அரசியல் செய்ய முற்படும் சோலையூரைச் சேர்ந்த எம்.பியை அணையைப் பரிசோதனை செய்ய வந்த ஒரு பொறியாளர் எதிர்க்க அவர் கொல்லப்படுகிறார். அணை உறுதியாய் இருக்கிறது என்று அவர் எழுதி ஒப்பிட்ட டாக்குமெண்ட் ஒரு பென் டிரைவில் அவர் கழுத்தில் தொங்குகிறது அதை அவர் சோலையூர் அணைக்கோயிலுக்குள் விட்டெறிந்து விட்டு, மரணிக்கும் முன்பு அந்த ஊர்ப் பெரியவரிடம் கோயிலைத் திறந்து பாருங்கள் என்று சொல்லி விட்டு மரணமடைந்து விடுகிறார்.

கோயிலைத் திறக்க ராஜாவின் வாரிசுதான் வரவேண்டும் என்பதால் ராஜாவின் ஒரே வாரிசாய் வாழ்ந்து வரும் அவரது பேரன் லிங்கேஸ்வரன் என்னும் லிங்காவை சோலையூருக்குள் கூட்டி வந்து கோயிலைத் திறந்து அதன் மூலம் ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அந்த அணை உடைக்காமல் காப்பாற்றப்பட்டதா? எப்படி காப்பாற்றப்பட்டது? என்பதைச் சொல்லும் படம் தான் லிங்கா….!!!!!

எல்லோரும் இந்நேரம் படம் பார்த்திருப்பீர்கள் என்றாலும் மீண்டுமொரு முறை கட்டுரைக்காக கதையை ரீகேப் செய்ய வேண்டியதாயிற்று. 64 வயது ரஜினி, அதுவும் தனது உடல் நலன் சரியில்லாமல் போய் உயிருக்காக போராடி, மீண்டும் ரஜினி நடிக்க வருவாரா? அவரால் நடக்கவாவது முடியுமா? என்றெல்லாம் ஊடகங்கள் எழுதின. அதுவும் ரஜினிக்கு உடல் நலன் சரியில்லாமல் இருந்த போது அவர் இறந்து போய்விட்டதாய் கூட போலிப் பரப்புரைகள் அப்போது நடந்ததால்தான் ரஜினி தன் ரசிகர்களுக்காய் ஒரு ஆடியோ டேப் பேசி வெளியிட வேண்டியதாயிருந்தது. ரஜினியின் நடுங்கும் குரலை ஆடியோ டேப்பில் கேட்ட அவருடைய ஒவ்வொரு ரசிகனும் அப்போது ஆடித்தான் போய்விட்டான். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் எல்லாவற்றிலும் பிரார்த்தனைகள் என்று அவர் உடல் நலன் இல்லாத போது எல்லோரின் மனதிலும் ரஜினி மீண்டு வருவாரா? அப்படி மீண்டு வந்தால் பழையபடி அதே வேகத்தோடு நடிக்க முடியுமா என்ற ஒரே ஒரு கேள்விதான் மிகுந்திருந்தது. 

அந்த கேள்விக்கான பளீச் பதில்தான் இந்த லிங்கா…..

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் ரஜினியைத் திரையில் அவ்வளவு வேகமாக இளமையாக யாருமே எதிர்பார்த்திருக்கவில்லைதான். 64 வயதில் இவ்வளவு உயிர்ப்போடு, 25 வயது இளைஞனாய் தன்னை திரையில் காட்டிக் கொள்ள ரஜினி எடுத்த பிரயத்தனம் கொஞ்சமும் சோடை போயிருக்கவில்லை. அறிமுகப் பாடலில் வழக்கம் போல ரஜினி அட்டகாசம் செய்து கொண்டிருந்த போது நிறைய பேருக்கு அவர் உடல் நலன் இல்லாமல் சிங்கப்பூர் போன போது பதிவு செய்து வெளியிட்ட ஆடியோ டேப்தான் நினைவுக்கு வந்திருக்கும். பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் ரஜினி தனது வழக்கமான வேகத்தோடு திரையில் பொருத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பறப்பார் என்று யாரும் யோசித்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். லிங்கா படத்தில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சினையாக நான் பார்ப்பது ரஜினி என்னும் இமேஜின் ஹெவி வெயிட் தான். ரஜினி என்னும் வலுவான பிம்பத்தையும் அதன் ஆளுமையையும் தாங்கிக் கொள்ள முடியாமல் ஒவ்வொரு பிரேமும் திணறிக் கொண்டிருப்பதாகத்தான் நான் உணர்ந்தேன்.

லிங்கா ரஜினி சந்தானம் அண்ட் கோவோடு சேர்ந்து சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவதும் பின் பெரிதாக ஒரு நெக்லசை அடிக்க திட்டம் போட்டு அதை செயற்படுத்துவதும் என்று திரைப்படத்தின் முதல் ஒரு மணி நேரம் கலகலப்பாய் நகர…..

லிங்கா ரஜினியை திட்டம் போட்டு தனது சொந்த ஊரான சோலையூருக்கு கூட்டிச் செல்கிறாரர் அந்த ஊரைச் சேர்ந்த அனுஷ்கா. அதன் பிறகுதான் மேலே சொன்ன அத்தனை நிகழ்வுகளும் ப்ளாஷ் பேக்காய் விரிகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவை காட்டும் சூப்பர் பீரியட் படமான லிங்காவை இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி கே.எஸ். ரவிகுமார் எடுத்து முடித்தார் என்பது ஆச்சர்யமான விசயம். அதுவும் மிகப் பிரம்மாண்டமான வெள்ளைக்காரர்கள் காலத்து விருந்து, அரண்மணை பிரம்மாண்ட அணை கட்டுவது போன்ற செட்டுக்கள் என்று ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தது சில நூறு பேர்களையாவது கட்டி மேய்க்க வேண்டிய சவால்களை எல்லாம் அனாயாசமாக சமாளித்திருக்கிறார் இயக்குனர்.

லிங்காவைப் பொறுத்த வரை இன்னொரு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் அது ஒரு வழக்கமான ரஜினி படம் கிடையாது என்பதுதான். வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு கிராமத்து மக்களுக்காக ஒரு இந்திய மகாராஜா தனது சொத்துக்களை எல்லாம் விற்று அணை கட்டிக் கொடுத்தார் என்ற கதையின் ஓட்டத்திற்குள் ஒரு ரஜினி தன்மையையும் கொண்டு வந்துவிட முடியாது என்பதை உணர்ந்து இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சூப்பர் ஸ்டாரைப் பாராட்டியே ஆகவேண்டும். படத்தின் மையக்கரு பேசும் ஒரு அரசியல் நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று தன் சொந்த செலவில் முல்லைபெரியாறு அணையைக் கட்டிய திருவாளர் பென்னி குயிக் அவர்களை பற்றி கொஞ்சம் யோசிக்கவும் சொல்கிறது. முழுக்க முழுக்க பென்னி குயிக்கின் செலவோடு மட்டும்தான் எழுந்து நிற்கிறதா இந்த முல்லைப் பெரியாறு அணை அல்லது அதில் வேறு சில முகம் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் இந்திய ராஜாக்களும், ஜமீன்ந்தார்களும் இருப்பார்களோ என்ற ஒரு பதட்டத்தையும் லிங்கா நம்மிடம் விட்டுச் செல்கிறது.

ராஜா லிங்கேஸ்வரனாய் ரஜினியின் பட்டையைக் கிளப்பும் கம்பீரமான நடிப்பைப் பார்க்கும் போது மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் மெலிதாய் நமது நினைவுகளுக்குள் எட்டிப்பார்க்கிறார். சற்றேறக்குறைய 32 வருடங்களுக்குப் பிறகு 64 வயதிலும் ரஜினியின் கம்பீரமும், வசன உச்சரிப்பில் இருக்கும் அழுத்தமும் கொஞ்சம் கூட குறையாமல் ப்ரஷாக எகிறிப்பாய்ந்து அடிக்கிறது. ப்ளாஷ் பேக்கின் தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கும் ரயில் சண்டைக்காட்சியில் கிராபிக்ஸ் நிறையவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் சண்டையில் சூடு அதிகம். லிங்கேஸ்வரனாக ரஜினி அடித்து தூள் கிளப்பும் அதே நேரத்தில் ரஜினிக்கு ஈடு கொடுக்கக் கூடிய சரியான வில்லன் இல்லாமல் போனது படத்தின் மிகப் பெரிய மைனஸ். மிகச் சாதாரண பார்வையாளர்களுக்கும் கூட நெருடலாய் இருக்கும் இந்த விசயம் எப்படி ரஜினி என்ற சிங்கத்தை வைத்து இயக்கிய இயக்குனருக்குத் தெரியாமல் போனது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

என்னதான் இளமையான கதாநாயகிகளை திரைப்படத்திற்காக தேர்ந்தெடுத்திருந்தாலும் ரஜினி கதாநாயகிகளை விட்டு சற்று விலகி நின்றுதான் நடித்திருக்கிறார். அதற்குக் காரணம் ரஜினியின் மெச்சூரிட்டி மற்றும் தற்போதைய வயது என்றாலும் திரையில் கதாநாயகிகளோடு நெருக்கமில்லாமல் இருப்பது படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் மந்தப்படுத்தவே செய்கிறது. சொத்துக்களை எல்லாம் கொடுத்து ஒரு அணையைக் கட்டி விட்டு அந்த அணையையும் தான் கட்டியது இல்லை என்று அறிவித்து விட்டு ஊராரால் விரட்டப்பட்டு ரஜினி சோலையூரை விட்டு வெளியேறும் காட்சியிலும், ராஜா லிங்கேஸ்வரன் சாதாரண மனிதனாய் வந்த விருந்தினர்களுக்கு உணவளிக்க அடுப்பூதிக் கொண்டிருக்கும் காட்சியிலும் நம்மை மீறி நமக்குள் ஒரு சோகம் பரவுகிறது. 

ரஜினியைக் கடந்து படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் படத்தின் வசனம். அதுவும் ரஜினிக்காய் வசனகர்த்தா மிகவும் மெனக்கெட்டு எழுதியிருப்பார் போல.. ரஜினி வாயைத் திறந்தாலே பட் பட்டென்று பட்டாசாய் வசனம் வெடிக்கிறது. சந்தானத்தின் வழக்கமான காமெடி ரஜினி என்னும் பிரம்மாண்டத்திற்கு முன்பு எடுபடவில்லை என்றாலும் அவ்வப்போது கை தட்டி ரசிக்கும் அளவில் இருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் உலகத்துக்காக எப்படி எப்படியெல்லாமோ இசையமைத்தாலும் ரஜினி என்று வந்து விட்டால் ரஜினி ப்ராண்ட்டுக்கு மாறி ஆக வேண்டிய கட்டாயம் பாடல்களில் தெரிகிறது. ஒரு மெலோடி, ஒரு அதிரடி டூயட், ஒரு தீம் சாங், ஒரு ரஜினி ஸ்டைல் பாஸ்ட் சாங், ஒரு சோகப்பாடல் என்று வித்தியாசம் காட்டியிருக்கிறார் இசைப்புயல்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளாகட்டும், ப்ளாஷ் பேக் காட்சிகளாகட்டும் எல்லாவற்றையும் ரஜினி என்னும் ஆளுமையோடு சேர்ந்து அட்டகாசமாய் நகர்த்தி அசத்திய கே.எஸ். ரவிகுமார் எப்படியாவது படத்தை முடித்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் சொதப்பலான ஒரு க்ளைமாக்ஸ் காட்சியினை வைத்திருப்பது என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களுக்கே கூட கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். வேறு மாதிரியாய் க்ளைமாக்ஸ் இருந்திருந்தால் இன்னும் அழுத்தமாய் ராஜா லிங்கேஸ்வரன் எல்லோர் மனதிலும் இருந்திருக்கக் கூடும்.

எப்படி பார்த்தாலும் லிங்கா ரஜினியின் ரஜினித்தனம் அதிகமில்லாத இன்னொரு மாஸ்டர் பீஸ் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை
என்றாலும் என்னைப் போன்ற ரஜினி ரசிகர்கள் ரஜினியை இன்னும் அதிரடியாய் பார்க்கும் ஒரு ஆசையுடன் தலைவரின் அடுத்த படத்திற்காக வழக்கம் போல காத்து கொண்டுதானிருக்கிறோம்.தேவா சுப்பையா…

Saturday, December 13, 2014

லிங்கா... த மாஸ் - 1


வேறு எந்த ஒரு நடிகனின் படமும், வாழ்க்கையும் இந்திய சினிமாவுலகில் ரஜினி அளவுக்கு அரசியலாக்கப்பட்டிருக்க முடியாது. எந்திரனுக்கு பிறகு சுமார் நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது லிங்கா வெளியாகி இருக்கிறது. இடையில் ரஜினிக்கு உடல் நலமில்லாமல் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் வேறு இருந்தது. இதற்கு இடையில் 64 வயதைக் கடந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் ரஜினி எப்படி ஈடு கொடுத்து நடித்திருப்பார்? அவரது சூப்பர் ஸ்பீடும், மாஸ் ஸ்டைலும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறதா? மொத்தத்தில் ரஜினி ரசிக தரிசனம் எனப்படும் அந்தப் பரவச நிகழ்வை லிங்காவும் கொடுக்குமா...? இன்னொரு ரஜினியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் அவரது ரசிகர்கள் யாரும் கிடையாதே..? ரஜினியில் தொடங்கி, ரஜினியில் ஆர்ப்பரித்து ரஜினியோடு அடங்கப் போகும் பெருங்கூட்டமல்லவா இது...?

வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரைக்கு தலைவர் தரிசனத்துக்காக நான் பார்க்கிங்கில் இருந்து காரை உருவிய போது மணி 2:40. சார்ஜா நேஷனல் பெயிண்ட்ஸில் இருந்து உறங்காத அந்த நகரத்தின் பரபரப்பில்லாத சாலையில் வழுக்கிக் கொண்டே சென்று துபாய் ஹயாத் கலேரியாவின் கார் பார்க்கிங்கில் காரைச் சொருகிய போது மணி 3:20. கடுமையான குளிரில் ஸ்வெட்டரோடும் தலையில் குல்லாவோடும் நிறைய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று அந்த விடியற்காலையில் எல்லோரும் ஒரு பரபரப்போடு தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் என்ட்ரன்ஸில் வைக்கப்பட்டிருந்த ரஜினியின் மினி கட்அவுட்டிற்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ரஜினி படம் பார்த்து கதையை ரசிக்க எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் பெரும்பாலானவர்களிடம் ரஜினியை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவலே என்னைப் போல இருந்ததைப்  பேச்சுக் கொடுத்து தெரிந்து கொண்டேன்.

அந்த அதிகாலையிலும் தியேட்டரில் விசில் பறந்தது. ரசிகர்கள் திரைக்கு முன் ஓடிப் போய் சூப்பர் ஸ்டாரின் பெயர் போட்டவுடன் ஆட்டம் ஆடினார்கள். ரஜினியை திரையில் காட்டப்போகும் அந்த பரவச நிமிடத்திற்காக நானும் உணர்ச்சிகள் பொங்க திரையை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்....எப்படி இருக்கிறாய் ரஜினி...? மீண்டும் திரையில் உன்னுடைய அட்ராசிட்டியைப் பார்க்க வேண்டும்... உனது நடையை, வசனத்தை உச்சரிக்கும் வேகத்தினை, அட்டகாசமான ஸ்டைலினை, அலட்சியமான சிரிப்பினை, குட்டிக் கண்களுக்குள் பரவிக் கிடக்கும் நெருப்பினை பார்க்க வேண்டும் என்ற யோசனையோடு திரையை மேய்ந்து கொண்டிருந்த போது....

ஓப்பனிங் பாடலுக்காக ரஜினி திரையை ஆக்கிரமித்த அந்த நொடியில் தன்னிலை மறந்து கத்தத் தொடங்கி விட்டேன்....தலைவா வா....வா...வா.....ஆஆஆ சூப்பர் ஸ்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று நான் போட்ட சப்தத்தையும் வாங்கிக் கொண்டு அதிர்ந்து கொண்டிருந்தது அந்தத் திரையரங்கு. வயதெல்லாம் ஒரு விசயமில்லை என்பதை தலைவர் திரையில் அடித்து சொல்லிக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல லிங்காவின் மேஜிக்கிற்குள் நான் சிக்கிக் கொண்டேன். ரஜினி படத்தை வெற்றிப்படமா தோல்விப்படமா என்று கேட்பவர்கள் எல்லாம் சரியான புரிதல் இல்லாதவர்கள் என்றே நான் சொல்வேன். ரஜினி படத்தைப் பார்க்காமல் கடந்து செல்பவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். இன்றைய தேதியில் ரஜினியை விட வேறு ஒரு மாஸ் என்டர்டெயினர் தமிழ் சினிமாவில் கிடையவே கிடையாது. திரைப்படம் ஆரம்பிக்கும் அந்த நொடியில் இருந்து படம் முடியும் வரை சலிப்பில்லாமல் பார்த்து விட்டு எழுந்து வரவைக்க ரஜினி என்னும் கலைஞனால் மட்டுமே முடியும்.

நிலைமை இப்படி இருக்கையில் படம் மொக்கை என்று எழுதி புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் கத்துக் குட்டி நடிகர்களின் மொன்னைப் பட்டாளங்களையும், ரஜினி எங்கே அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று பயந்து அவரது இமேஜை உடைக்க நினைக்கும் கபட ஓநாய்களையும் நினைத்தால் பாவமாய்த்தானிருக்கிறது. சூப்பர் ஸ்டார் கனவிலில் மிதந்து கொண்டிருக்கும் நடிகர்கள் கொஞ்சமாவது இன்டஸ்ட்ரியில் நிலைத்து நிற்க ஒன்று அவர்கள் ரஜினியின் ஸ்டைலினையும் அவர் உருவாக்கிய மாஸ்  ட்ரண்டையும் காப்பியடிக்க வேண்டி இருக்கிறது இல்லையென்றால் அவர் ஏற்கெனவே சப்பிப் போட்ட பழையப் படங்களை எடுத்து ரீமேக் என்று சொல்லி அதில் நடித்துப் பிழைப்பை ஓட்ட வேண்டியிருக்கிறது, நிலைமை இப்படி இருக்கையில் இவர்கள் ரஜினி படம் தோல்வியடைந்து விட்டது என்று கண்ணை மூடிக் கொண்டு சக்கரவர்த்தியாகிவிட்ட கனவினில் முச்சந்தியில் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருப்பது நல்ல காமெடியாக இருக்கிறது.

ரஜினியின் திரைப்படம் ரிலீஸ் என்று சொன்னால் வெறுமனே அவரது ரசிகப்பட்டாளங்கள் மட்டுந்தான் படம் பார்க்க தியேட்டர்களுக்குச் செல்கிறார்கள் என்று அர்த்தமா? ரஜினியின் திரைப்படத்தைக் காண்பதற்காக திரையுலகமே திரண்டு நிற்கிறது, அரசியல்வாதிகள் தங்களது நேரங்களை ஒதுக்கி வைத்து ரஜினியைத் திரையில் காண செல்கிறார்கள். சர்வ நிச்சயமாய் எல்லா குடும்பங்களின் விடுமுறை திட்டமும் லிங்காவை காணவேண்டும் என்பதாய் தானிருக்கும், இதை விட வேறு என்ன வெற்றி வேண்டி கிடக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

படு சாதாரணமான மொக்கைக் கதைகளில் கூட ரஜினி நடிக்கலாம். அந்தத் திரைப்படங்கள் எப்படி இருந்தாலும் ஓடத்தான் செய்யும். பாபா படமே கூட அதிக விலைக்கு விற்கப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய தனது லாபத்திலிருந்து ஒரு பகுதியை ரஜினி திருப்பிக் கொடுத்தார் என்பதுதான் வரலாறு. இன்னும் சொல்லப்போனால் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்திரைப்படங்களில் பாபாதான் வசூலை அதிகமாய் குவித்த படம் என்பது இன்று ஃபீடிங் பாட்டிலைச் சப்பிக் கொண்டிருக்கும் ஸ்கூல்பாய்ஸ்க்கு எல்லாம் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை.

தனது உடல்நலக் குறைவுக்குப் பிறகு மீண்டும் திரையில் விஸ்வரூபமெடுத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் அட்டகாசமான சூப்பர் பஸ்டர் மூவிதான் லிங்கா....! ஒவ்வொரு முறையும் தலைவரே தனது வெற்றியின் உயரத்தை நிறுவுவார் அதை உடைத்தெறிய வேறு ஒரு கொம்பனாலும் முடியாது, பின்பு தலைவரே அந்த உயரத்தைத் தகர்த்து மீண்டும் ஒரு டார்கெட்டை செட் செய்து வைப்பார். லிங்காவும் அப்படியே....தலைவரின் திரைப் பயணத்தில் இன்னுமொரு மைல் கல்...!

பரக்காஸ்.................டூட்ஸ்............ச்ச்ச்ச்சீர் அப்ப்......!!!!


லிங்கா விமர்சனம்..... எனது பார்வை விரைவில்....
தேவா சுப்பையா....


Thursday, December 11, 2014

ஆதியின் பாடல்....!பெயர்த்தெடுக்க முடியாத
பெரு மெளனமொன்று 
சடாரென்று முகமறைந்து 
அகம் நிறைத்து....
ஒற்றைப் புள்ளிக்குள் 
ஒடுங்கி எழுதிக் கொண்டிருக்கிறது
பிரபஞ்சத்தின்...
ஆதி பாடலொன்றை...,
திசைகளில்லா பயணமொன்றுக்கு 
சிறகுயர்த்தி எழும்புகிறது
செந்நாரை ஒன்று...
எங்கோ அடித்துப் பெய்கிறது மழை...!தேவா சுப்பையா...Tuesday, December 9, 2014

எப்படி ஜெயித்தாய் ரஜினி...?!


ரஜினிய ஏன் பிடிக்குதுன்னு சொல்ல குறிப்பிட்டு சொல்லும்படியான வார்த்தைகள் என்கிட்ட கிடையாது. சின்ன வயசுல இருந்து உள்ளுக்குள்ள பத்திக்கிட்ட நெருப்பு இந்த ரஜினி. ஏதோ படத்துல பிடிச்ச மாதிரி நடிக்கிறாங்க அதுக்காக அவுங்க ரசிகனா கண்மூடித்தனமா அவுங்கள ரசிக்கலாம் அப்டீன்ற அளவோட ரஜினிய ஒரு நாளும் என்னால நிறுத்திட முடியாது...! எட்டு வயசுல ராகவேந்திரா மந்த்ரத்தை எதிர்வீட்டு சுகுணா அக்கா கிட்ட எழுதி வாங்கி மனப்பாடம் பண்ணினது மூலமா ராகவேந்திராவ உள்ளுக்குள்ள கொண்டு வந்தது ரஜினி...., ஆன்மீகத்தை பத்தி விபரம் தெரிஞ்ச பிறகு புத்தகங்கள்ல படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலும் ராகவேந்திரர் படம் நடிக்கிறதுக்கு முன்னாடி அதாவது அடுத்த வாரிசு படம் நடிச்சு முடிச்ச உடனே எனக்கு எதுவும் வேணாம் நான் சாமியாரா போகப் போறேன்னு சொன்ன சூப்பர் ஸ்டார் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாவே தெரிஞ்சார்...

அப்போ ஒண்ணும் புரியலேன்னாலும் நிலையாமை நிறைஞ்ச இந்த வாழ்க்கையில ஒண்ணுமே இல்ல...டக்குன்னு ஒரு நாள் எல்லாம் முடிஞ்சு போயிடும்ன்ற விதையை எனக்குள்ள முதன் முதல்ல விதைச்சது சூப்பர் ஸ்டார்தான்....!

ஏன் சார் வருசத்துக்கு ஒரு படம் பண்ணீங்க அப்புறம் அதை ரெண்டு வருசத்துக்கு ஒரு படமா மாத்துனீங்க, அப்புறம் அது மூணாகி இப்போ நாலு வருசமாயிடுச்சு நீங்க நடிச்சு, இப்டி படம் கொடுக்குற கால இடைவெளிய அதிகரிச்சுக்கிட்டே போறீங்களேன்னு ரஜினி கிட்ட ஒரு பேட்டியில கேட்டப்ப அதுக்கு ரஜினி....


கண்ணா... வாழ்க்கையில ஓய்வெடுத்து உட்காருற நேரம்னு ஒண்ணு வரும், அப்போ நாம விரும்பினாலும் விரும்பலேன்னாலும் காலம் நமக்கு ஓய்வ கொடுத்துடும், அட என்னடா இது இப்டி ஓடிட்டு இருந்த நாம உக்காந்த்துட்டோமேன்னு சொல்லி வருத்தப்பட்டு பழக்கபட்ட மனசு ரொம்பவே நம்மள படுத்தி எடுத்துடும்.... அதனாலேதான் பிசியா இருக்கும் போதே சும்மா இருக்கறது எப்டீன்னு பயிற்சி எடுத்துக்குறேன்னு சொல்லி இருப்பாங்க...!!! நியாயமா யோசிச்சுப் பாத்தா தலைவர் சொல்லி இருக்க இந்த செய்திக்குப் பின்னால ஆழமான உண்மை இருக்கறது நமக்குப் பிடிபடும். எப்பவுமே நான், நான்னு சொல்லி வாழ்ந்துட்டு கடைசியில வாழ்க்கை நம்மள வீட்டுத் திண்ணை ஓரமா முதுமையில தூக்கிப் போட்டுட்டு அதுபாட்டுக்கு ஓடிட்டு இருக்கப்ப….நாம பிசியா இருந்த காலங்களும், நம்மள எல்லோரும் மையமா வச்சு பேசுன விசயங்களும், எல்லோரும் கொடுத்த மரியாதையும், இப்போ யாருமே கண்டுக்கவே மாட்டேன்றாங்களேன்னு சொல்லி ரொம்பவே நம்மள புலம்ப வைக்கும்….

கூட்டத்துக்கு நடுவுல இருக்கப்பவே தனியா இருக்கப் பழகிக்க, தனியா இருக்கும் போது பெருங்கூட்டத்தோட சல்லாபிக்கிறதா உணர்ந்துக்கன்னு ஆன்மீகத்துல சொல்லுவாங்க, அதைத்தான் தலைவர் அன்னிக்கு சொல்லி இருக்கார்னு அப்போ புரிஞ்சுக்கிட்டேன். ரஜினி தன்னோட ரசிகர்களுக்கு வெறும் நடிகனா மட்டும் தன்னை வரிஞ்சு காட்டிக்கவே இல்லை. ஒரு விழா மேடையில கூட அவர ஒப்பனையோட பார்க்க முடியாது. ஆன்மீகத்தோட உயரத்துல இருக்குற தலைவர் கிட்டதட்ட ஒரு குழந்தை மாதிரிதான். அவருக்குப் பொய்யா பேசவும் தெரியாது, ஆசைக்காக வாழவும் தெரியாது. யாராச்சும் அரசியல்வாதிங்க, இல்ல தத்துவ மேதைங்க, மருத்துவர்ங்க, அறிவியலார்கள்னு அவுங்க சொல்ற கருத்துக்கள சமூக பிரக்ஞை கொண்ட கருத்தா எடுத்துக்கிட்டு அதை பெரிசா பேசுர சோ கால்ட் அறிவு ஜீவிகளுக்கு ரஜினி சாரோட வாழ்க்கை முன்னேறத் துடிக்கிற தன்னம்பிக்கையோட போராடிக்கிட்டு இருக்க எல்லா இளைஞர்களுக்குமே மிகப்பெரிய பாடம்ன்றது புரியறதே இல்லை.

இன்னிக்கு தலைவர அவதூறு பேசுற நரம்பில்லாத நாக்குகளுக்கும், ஒளி இல்லாத கண்களுக்கும் அவரை சூப்பர் ஸ்டாரா மட்டுந்தான் தெரியும்….ஆனா அந்த சூப்பர் ஸ்டார்ன்ற சிம்மாசனத்துல அசைக்க முடியாத மன்னனா, ராஜாதி ராஜாவா நிரந்தர சக்கரவர்த்தியா உட்கார சிவாஜிராவ் கெய்க்வாட்ன்ற ஒரு சாதாரண குடும்பத்தச்  சேர்ந்த இளைஞன் என்ன என்ன செஞ்சான் எப்டி போராடினான்? எந்த ஒரு அதிகாரப் பின்புலமும் இல்லாம எப்டி அவனால இந்த உச்சாணிக் கொம்புக்கு வர முடிஞ்சுது…? யாரோ ஒரு ரானோஜி ராவ்க்கும், ரமாபாய்க்கும் பிறந்த இந்த சிவாஜிராவ் கெய்க்வாட்ட தேடி இந்திய தேசத்தோட மிக முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் ஏன் வர்றாங்க? இவ்ளோ பெரிய மாஸ் அவருக்கு எப்டி உருவாச்சு? இவ்ளோ ரசிகர்கள் எப்டி அவரைச் சுத்தி வந்தாங்க...?அப்டி வரவைக்க இந்த சிவாஜிராவால எப்டி முடிஞ்சுதுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா சிவாஜிராவ் டூ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அப்டீன்ற பயணத்தோட விபரம் என்னான்னு தெளிவா புரியும். புரிஞ்சுச்சுன்னா ச்ச்ச்சும்மா மெரண்டு போயிடுவோம்...!

இன்னிக்கு தேதி வரைக்கும் ரஜினி ஃபீல்ட்ல ரொம்ப வலுவா நிக்குறதுக்கு காரணம் யாரோ செஞ்ச உதவி கிடையாது, யாரோட கரிசனத்தாலயம் அவரோட படங்கள் ஓடுறதும் கிடையாது. தமிழ்நாட்டு ஜனங்க அவ்ளோ முட்டாள்தனமா படம் எவ்ளோ கேவலமா இருந்தாலும் ரஜினி நடிச்ச படம் அப்டீன்றதால அதை பார்த்து வெற்றியடைய வச்சுடவும் மாட்டாங்க. ரஜினியோட ஒவ்வொரு படமும் அவரோட உழைப்பு, அவரோட புதுப் புது யுத்திகள், அவரோட ஸ்டைல், ரசிகர்களுக்கு எது பிடிக்கும்னு யோசிச்சு படத்தைத் தேர்ந்தெடுக்குற தனித்தன்மை, எல்லாத்துக்கும மேல அவரோட அட்டகாசமான வேகம் நிறைந்த நடிப்பு இது எல்லாம் சேர்ந்துதான் அவரோட படங்கள வெற்றிப்படமா மாத்திருக்கு. 

இயல்பா வாழ்றது ஈஸி ஆனா இயல்பா இருக்குற மாதிரி அசாதாரணமான விசயங்கள திரையில நடிப்பா கொண்டு வர்றது கஷ்டம். திரையில தத்ரூபமா அழுதோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ சாதாரண வாழ்க்கயில நடக்குற விசயங்களப் பிரதிபலிச்சுட முடியும் அதை ஜனங்க நம்பி பாத்து அந்தக் காட்சிகளோட ஒன்றிப் போறது ஒண்ணும் பெரிய பிரமாதம் கிடையாது ஆனால் நம்ப முடியாத விசயங்கள திரையில நிகழ்த்திக் காட்டி அந்த மாயாஜாலத்தை மக்களை நம்ப வைக்க எல்லா நடிகராலயும் முடியாது. ரஜினி அந்த மாயாஜாலத்தை அனாயாசமா செய்றதுனாலதான் இன்னிக்கு வரைக்கும் அவர் சூப்பர் ஸ்டாரா இருக்காரு பாஸ்.  அவர் தீக்குச்சியைப் பாத்தாலே தீ பத்திக்கும் அது எப்டிடா பத்திக்கும்…அப்டீன்னு யாராச்சும் கேள்வி கேட்டா அந்த தீக்குச்சிய பார்த்தது ரஜினிடான்னு நாம சொல்லும் போது ஓ..ரஜினியான்னு கேட்டுட்டு அப்ப ஓக்கேன்னு சொல்லிட்டு மக்கள் நகர்ந்து போற அளவுக்கு  தன்னோட அசாத்தியமான திறமையினால ஒவ்வொரு படத்துலயும் ரஜினி பத்த வைக்கிறது எல்லாமே சரவெடிதாங்க…!

பாபா படம் தோல்வியடைஞ்சு போச்சுன்னு எல்லோரும் சொல்லி ஏதேதோ பேசிட்டு இருந்தப்ப சந்திரமுகி பட பூஜையில தலைவர் பேசின டயலாக் தான் தோத்துப் போய்ட்டமேன்னு சொல்லி மூலையில முடங்கிக் கிடக்குற அத்தனை மனிதர்களுக்கும் எனர்ஜி பூஸ்டர். கீழ விழுந்தா டக்குனு எழுந்துடுவேன் நான் யானை இல்லே….குதிரேன்னு அவர் எப்டி  சொன்னார்..? நாம எப்டி குதிரையா மாறுறது..? தலைவர் மட்டும் எப்பவும் ஜெயிக்கிற குதிரையா எப்டி இருக்கார்னு...? யோசிச்சுப் பாத்தா அவரோட கூர்மையான திட்டமிடல் என்னன்னு விளங்கிக்க முடியும். ஜெயிச்சு ஜெயிச்சு டயர்டாகிப் போன ஒரு மனுசனுக்கு எப்டி ஜெயிக்கிறதுன்னு யாராச்சும் சொல்லிக் கொடுக்கணுமா என்ன…? 


ரஜினி படத்தை ஓட வைக்க அரசியல் பேசுறார்னு சொல்லிட்டு தெரியுற ஓநாய்கள் கடைவாயில எல்லாம் காழ்ப்புணர்ச்சி எச்சில்தாங்க வழிஞ்சிட்டு இருக்கு….! ரஜினின்ற மனுசனே ஒரு மெகா ட்ரண்ட் அவருக்கு அனாவசியமான ஸ்டண்ட் எல்லாம் தேவையே கிடையாதுன்னு இந்த கத்துக்குட்டிப் பசங்க கிட்ட சொன்னா…ரஜினி தமிழ்நாட்டு உப்பை தின்னுதான் வளர்ந்தார்னு ஒரு குட்டிக் கதாகாலட்சேபம் பண்ணுவாங்க… ! உண்மைதான் அவர் தமிழ்நாட்டு உப்பைத் தின்னுதான் வளர்ந்தார் ஆனா அந்த உப்ப சும்மாவாடா கொடுத்தீங்க கடையெழு வள்ளல்களான்னு திருப்பிக் கேட்டா திருட்டுப்பய ராஜபக்க்ஷே மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு பல்லக் காட்டுவானுங்க…!

ரஜினி தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சார்னு இன்னொரு டாக்டரேட் கேள்வி கூட நம்மாளுங்க கிட்ட இருக்கு..! நியாயமா இந்தக் கேள்விய யார்கிட்ட கேக்கணும்ன்ற ஒரு காமன் சென்ஸ் இல்லாத கரப்பான் பூச்சிகள் எல்லாம் தன்னை முழு நேர நடிகரா வச்சிக்கிட்டு அப்பப்போ தன்னோட சமூகம் சார்ந்த கருத்துக்கள பேசிட்டு இருக்க தலைவர பாத்து கேக்க என்ன ரைட்ஸ் இருக்குன்னுதான் எனக்குப் புரியலை. கேட்டா அவர் ஒரு கட்சிக்கு சப்போர்ட் பண்ணி இருக்கார் ஒரு தேர்தல்ல, அப்புறம் நதிகள இணைக்கத் துட்டு தர்றேன்னு சொன்னார், காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார் அது எல்லாம் என்ன அரசியல் இல்லையா..? அது எல்லாம் போக வேற என்ன பிரச்சினைக்குப் போராடி இருக்கார்னு துருவி துருவி ரஜினிய கேள்வி கேக்குற டுபாக்கூர் பாய்ஸ் எல்லாம் அரசியல்ல முழு நேரமா இறங்கி மக்களுக்காக போராடுறேன்னு சொல்லிட்டு வாய்க்கரிசியை எடுத்து வாய்ல போட்டுக்கிட்டு போய்ட்டு இருக்க பொலிட்டீசியன்ஸ பாத்துதானே இந்தக் கேள்விகளை எல்லாம் கேக்கணும்...?


அரசியலுக்கு வர்றது பெரிய விசயம் இல்ல, அதன் ஆழம்தான் எனக்கு கொஞ்சம் கலக்கமா இருக்கு, அரசியல்ல வெல்ல யார் யார் தோளையோ மிதிச்சு நான் மேல போகணும்ன்றது எல்லாம் எனக்குத் தெரியாம இல்ல….எல்லாமே ஆண்டவனோட கையிலதான் எல்லாமே இருக்கு இன் ஷா அல்லாஹ் கடவுள் விரும்பினா அரசியலுக்கு வருவேன்னு கூட பேச ரஜினிக்கு மட்டும்தான் இந்த சுதந்திர இந்தியாவுல ரைட்ஸ் கிடையாது போல……! ரஜினி நாக்குல அரசியல் அப்டீன்ற வார்த்தை வந்துட்டாலே மக்கள் தலையில குல்லாப் போட்டு கல்லா கட்டிக்கிட்டு இருக்க ஒரு சில பேருக்கு தலை சுத்துது, வயிறு குழையுது, கிட்டத்தட்ட மெண்டல் மாதிரி ஆகி எங்க நீ வந்து பாரு அப்டீன்னு தலைவர்க்கு சவால் வேற விடுறாங்க….

இது எல்லாம் பாத்தா ச்ச்சும்மா காமெடியா இல்லை…!

தன்னை இதுவரையும் நூறு சதவீதம் ஒரு சூப்பர் நடிகரா நிலை நிறுத்தி வெற்றி பெற்றிருக்க சூப்பர் ஸ்டாரோட அரசியல் வருகை பற்றிய விமர்சனங்களை எல்லாம் அவர் அரசியலுக்கு வந்தபின் வைப்பதுதான் ஆகச் சிறந்த நாகரீகம்….!!!!

இதோ தலைவரோட லிங்கா ரிலீஸ் ஆகப் போகுது. ஒரு ரஜினி ரசிகனா என்ன என்ன ரசாயன மாற்றங்கள் உள்ளுக்குள்ள நடக்கணுமோ அது எல்லாம் எனக்கு ஆல்ரெடி ஆரம்பம் ஆயிடுச்சு…முதல் நாள், முதல் ஷோ.. தலைவர மெகா ஸ்கீரீன்ல பார்க்குற அந்தப் பரவசம்னு அதை எல்லாம் வார்த்தையில கொண்டு வர முடியாது….!!! லிங்கா ரிலீஸ் தலைவர் பிறந்த நாள் இந்த இரண்டும் கொடுத்த உந்துதல்தான் இந்தக் கட்டுரை. லிங்கா பாத்துட்டு அதை பத்தி ஒரு ரஜினி ரசிகனா என் கருத்தை பகிர்ந்துக்குவேன்…. அதுவரைக்கும் காத்திருங்கள் நண்பர்களே….!தலைவர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்….!!!!!!
தேவா சுப்பையா...
Saturday, December 6, 2014

வேங்கைகளின் மண்....6!
திருப்பா…. நமது காளையார்கோயில் வருகை ரகசியமாகத்தானே வைக்கப்பட்டிருக்கிறது… மீண்டுமொருமுறை கேட்டு மன்னர் முத்துவடுகநாதர் உறுதி செய்து கொண்டார்.

ஏன் தேவரே யாருக்கும் உங்கள் வருகை தெரியக்கூடாது என்பதில் இவ்வளவு உறுதியாய் இருக்கிறீர்கள்…? கெளரி நாச்சியாரைத் திரும்பிப் பார்த்தார் மன்னர் முத்துவடுக நாதர். சிறிது நேரம் மெளனமாயிருந்த மன்னர்…. கெளரி இப்போதுதான் ராமநாதபுரத்தில் கும்பினியர்களோடு நமது சீமை மறவர்கள் மோதி அவர்களைத் தோற்கடித்து விரட்டினார்கள். எல்லா பாளையக்காரர்களையும் அடக்கி ஒடுக்கி கட்டுக்குள் கொண்டு வந்த கும்பினியர்களுக்கு இது ஒரு பெரிய பின்னடைவுதான். இந்தத் தோல்வியை மனதில் வைத்துக் கொண்டு இனி வரும் நாட்களில் யாதொரு அசம்பாவிதத்தையும் வெள்ளைக்காரர்கள் நம் சீமைக்குள் நடத்தி விடக்கூடாது என்றுதான் அவர்கள் கூறிய சமரசத் திட்டதிற்கு நானும் ஒத்துக் கொண்டேன். இனி அவர்கள் சீமையை ஆக்கிரமிக்க முயலமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆக்கிரமிப்பு செய்வதும் அடுத்தவர் பொருளைக் கவர்தலும் திருப்தியின்மையிலிருந்து கிளைக்கும் நச்சு இயல்புகள். வெள்ளையர்கள் இந்த பூமியில் வாழும் வரை இந்த பூமி பிரிவினைவாதத்தாலும், சூழ்ச்சிகளாலும், அடக்குமுறையாலும் சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்…

அவர்களிடம் வீரமும் கிடையாது விவேகமும் கிடையாது. குறுக்கு வழியில் வெற்றி பெறுவது எப்படி என்று பயின்றே வெற்றியைச் சுவைத்த சோம்பேறிகள் அவர்கள். நாம் காளையார்கோயிலுக்கு இப்போது செல்வது என் அப்பன் காளீஸ்வரனைத் தரிசிக்கவும், போரினால் ஏற்பட்ட மன உளைச்சலை குறைத்து அமைதி பெறவும்தான் என்றாலும் நமது ஆன்மீகப் பார்வைகளும் தேடல்களும் இன்னதென்று வெள்ளையர்களுக்குப் புரியாது. வெள்ளையர்களைச் சுற்றி இருக்கும் நமது மண்ணைச் சேர்ந்த ஆட்காட்டிகள், கோள்மூட்டிகள், அடிவருடிகள் இதை வேறு விதமாக அவர்களுக்குத் தெரிவித்து நாம் வெள்ளையர்களை விரட்டியதற்காய் கொண்டாடும் வெற்றி விழாவாய் அவர்களுக்கு உணர்த்துவார்கள். முன் யோசனை இல்லாத கும்பினியர்கள் மேலும் வலு சேர்த்துக் கொண்டு நம்மிடம் மூர்க்கமாய் மீண்டும் போர் தொடுக்கக் கூடும்…..

ஒரு நாட்டு மன்னனின் பொறுப்பு என்பது படை நடத்தி வெல்வது மட்டும் கிடையாது. குடிமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு சுமூகமான இயங்கு தன்மைக்கு எதுவெல்லாம் சாத்தியமோ அதை எல்லாம் உருவாக்கிக் கொடுப்பதும்தான்…அதனால்தான் இந்த முறை நாம் காளையார்கோயிலுக்குச் செல்வதை எல்லோரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டாம் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தினேன்…

அப்படியானால் உங்களுக்குக் கூட கும்பினிப் படைகளைக் கண்டு பயம் உண்டு என்று கருதலாமா அரசே….கெளரி நாச்சியார் முத்துவடுகநாதரைக் கேட்க….

அல்ல….தேவி…அல்ல…பயம் ஒன்றும் கிடையாது. வெள்ளையரிடம் மிகக் கடுமையான பேரழிவு போர்க்கருவிகள் இருக்கின்றன. அவர்களின் முறைப்படி நாமும் அவற்றை எல்லாம் விலைக்கு வாங்கியோ அல்லது உருவாக்கியோ அவர்களை எதிர்கொள்ள இயலும் ஆனாலும் நமது வீரம் என்பது வேலும் வாளும் தானே….கண்ணே….

வேலும் வாளும் ஏந்திப் போர்களத்தில் கும்பினிப்படைகள் நம்மை எதிர்கொள்ள வந்தால்…. போர்க்களம் முழுதும் கும்பினியர்களின் தலைகளாகத்தான் உருண்டு கொண்டிருக்கும்…. ஹா…ஹா…ஹா... மன்னர் சப்தமாய் சிரித்ததைக் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த திருப்பனும், உதயணனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்….

பனங்காட்டிற்குள் குதிரைகள் செம்மண் புழுதி பறக்க சென்று கொண்டிருக்க……ஒரு பெரும் பனமரத்தின் பின்னால் அமர்ந்திருந்த குருக்கத்திச் சித்தர்……..அவர்கள் செல்வதைப் பார்த்து…. 

போய் வாரும் வேந்தரே….சென்று வாரும் அரசியாரே…..என்று சப்தமாய் கூறிவிட்டு…நிலை குத்திய பார்வையோடு வெளுத்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்….

                                                                    ***

திருக்கானப்பேர் என்னும் காளையார்கோயில் சீமையின் மிகமுக்கியமான நகரம். காளையார்கோயிலை அடுத்த கொல்லன்குடியில் தயார் செய்யப்படும் அத்தனை போர்க்கருவிகளும் காளையார்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சரிபார்க்கப்பட்டு கருவிகளின் கொட்டாரத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பது அன்றாடம் அங்கே நிகழும் ஒரு செயல். காளையார்கோயில் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும் மிகப்பெரிய வணிக நகரமும் கூட. காளையார்கோயிலைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை வியாபாரம் செய்யும் சந்தை மிகப்பெரிய பரப்பளவில் காளீஸ்வரர் கோயிலுக்கு நேர் பின்னால் அமைக்கப்பட்டிருந்தது. சிறு சிறு நகரங்களில் வாரம் ஒரு முறை கூடும் சந்தை காளையார்கோயிலில் எல்லா நாட்களிலும் இயங்கிக் கொண்டிருக்குமென்பதுதான் இன்னொரு தனிச்சிறப்பு. காய்கறிகளுக்கென்று ஒரு தனிப்பகுதி, பழங்களுக்கு தனி வரிசை, மளிகைப் பொருட்கள் விற்கும் அங்காடிகளுக்கென்று ஒரு தனி வரிசை, மீன்கள், இறைச்சிகள், கருவாடுகள் விற்க ஒரு தனிப்பகுதி என்று பரந்து விரிந்த அந்த சந்தையின் இன்னொரு பகுதியில் குதிரைகள், ஆடுகள், மாடுகள், கோழிகள், என்று பெரிய மற்றும் சிறிய விலங்குகளை விற்கவும் வாங்கவும் என்று மிகப்பெரிய பரபரப்போடு அந்த சந்தை எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்தது. இன்ன பிற சீமைகள் மற்றும் சோழ, சேர, தொண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் கூட வியாபார நிமித்தம் காளையார்கோயிலை வருடந்தோறும் முற்றுகையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தொண்டி துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வேற்று நாட்டுக் குதிரைகளும் இன்னபிற வாசனைப் பொருட்களும் உடனடியாக காளையார்கோயிலை அடைந்து வியாபாரமாகித் தீர்ந்து போயின. நிறைய வியாபாரிகள் வந்து செல்வதால் நிறைய நிறைய தங்கும் விடுதிகளும், உணவு வியாபாரம் செய்யும் உணவகங்களும், என்று காளையார்கோயில் இரவில் கூட உறங்குவதில்லை. காளையார்கோயிலுக்கு வரும் வெளியூர்க்காரர்கள் பருக கற்கண்டாய் இனிக்கும் குடிநீர்க் குளங்கள் காளையார்கோயிலைச் சுற்றிலும் நிறைய வெட்டப்பட்டிருந்தன. வந்தவர்கள் அத்தனை பேரும் காளையார்கோயிலை வாயாரப் புகழ்ந்து சிவகங்கைச் சீமையின் செழிப்பினைப் பற்றி பேசிய படியே சென்று கொண்டிருந்தார்கள்.


போரில் இறந்து போனவர்களின் சமாதிக்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மாலையத்தம் ஊருணியில் கைகால்கள் கழுவிக் கொண்டு மன்னர் முத்துவடுகநாதர் கெளரி நாச்சியாரோடு..... காளையார்கோயில் சன்னதிக்குள் நுழைந்தார்.....

யாருக்கும் அறிவிப்பு கொடுத்திராத காரணத்தால் மன்னரின் வருகை சீமையின் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.. ஆனால் மன்னர் வரும் செய்தியை ஒரு நாள் முன்னதாகவே கும்பினியர்களுக்கு தெரிவித்திருந்தனர் சீமைக்குள் தமிழர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு திரிந்த சில பிணந்திண்ணிக் கழுகுகள். வியாபாரிகளோடு வியாபாரிகளாய் கும்பினிப் படை காளையார்கோயிலுக்குள் ஊடுருவி காளீஸ்வரர் சன்னதியை சுற்றி வளைத்ததை அந்த பரபரப்பான நகரத்து இயக்கத்துக்கு நடுவே யாரும் உணர்ந்திருக்க வில்லை. கும்பினியர்களின் இன்னொரு படை மருதுபாண்டியர்களின் படையை மையமாய் வைத்து சிவகங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. காளீஸ்வரர் கோயிலை சுற்றி வளைத்த கும்பினிப் படைகளை வழி நடத்திச் சென்ற கர்னல் பான்சோர் என்ற குள்ளநரி கோயிலுக்கு வெளியே காத்திருந்தது.

காளீஸ்வரா....அங்கிங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே....!!! வாழ்க்கை என்ற ஒரு பொய்த்தோற்றத்தை அளித்து அந்த பொய்க்குள் மனிதர்களை உலவவிட்டு போலியான தேவைகளை உருவாக்கி ஆக்கி அழிக்கும் தீராத விளையாட்டு கொண்ட பெருங்கருணையே....!!! ஏன் இத்தனை அல்லல்கள்....இது எதுவுமே இல்லாமல் எப்போது நான் உன்னடி சேர்வது? எப்போது இந்தப் பிணி நிறை வாழ்வறுப்பது...? இந்த சிவகங்கைச் சீமையிலிருந்து உருவான வித்து நான்.....

நான் சுவாசிக்கும் இந்த காற்றும், என்னை உருவாக்கிய இந்த பூமியும், என்னை வளர்த்தெடுத்த என் சமூகமும், இன்று ஒரு அன்னியர்களால் ஒரு அசாதரணச் சூழலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது... என் அப்பனே....என் ஈசா....சம்போ மகாதேவா.....

எல்லா சூழ்ச்சிகளையும் அறுத்தெறிந்து எம் சீமை மக்களைக் காத்தருளும் வல்லமையை எனக்கு அருள்வாய்...! எப்போதும் வற்றிப்போகாத கண்மாய்களையும், நிமிர்ந்து நிற்கும் பயிர்களையும், பசியற்ற வயிறுகளைக் கொண்ட மனிதர்களையும் சீமை முழுதும் இருக்கச் செய்வாய்....

மன்னர் முத்துவடுகநாதர் கண்ணீர் மல்க...கெளரீ சிவபுராணம் சொல் என்று கெளரிநாச்சியாரைப் பார்த்து மென்மையாய்ச் சொன்னார்....

நமசிவாய வாழ்க....என்று தனது கணீர்க் குரலில் மன்னரோடு சேர்ந்துப் பாடத் தொடங்கினார் ராணி கெளரி நாச்சியார்....

கோயிலுக்கு வெளியே கும்பினியர் கூட்டம் கழுகாய் காத்திருந்தது. பான்சோர் என்னும் வெறிபிடித்த வெள்ளை நாய் கோயிலை ஒட்டி நின்று கொண்டிருந்த சிறு தேருக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்தான்.....(புரட்சி இன்னும் வெடிக்கும்...)
தேவா சுப்பையா...

Thursday, December 4, 2014

வேங்கைகளின் மண்...5!


இனி....


ஆடிக் கொண்டே இருந்த வீரமுத்தானந்தம் விடு விடுவென்று கொல்லன்குடி காட்டிற்குள் ஓட ஆரம்பித்தார். உச்சிவெயில் மெலிதாய் சாய ஆரம்பித்திருந்த அந்தப் பொழுதில் ஒரு மோனநிலையில் மெளனமாய் படுத்துக் கிடந்த காடு மெல்ல கண் விழித்து வீரமுத்தானந்தத்தின் ஓட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தது. கருவேல மரங்களும், சிறு ஈச்சைப் புதர்களும் மண்டிக்கிடந்த அந்தக் காட்டிற்குள், பூவரசு, மா, வேப்பம், உதயன், ஆலம், அரச மரங்களோடு பேய்ப் புளிய மரங்களும் நிறையவே இருந்தன. புளியமரத்தை மட்டும் ஏன் பேய்ப்புளியமரம் என்று சொல்கிறார்கள்...? இரவினில் எல்லா மரங்களும் ஏதோ ஒரு சீரில் நின்று கொண்டிருக்க புளியமரம் மட்டும் தலைவிரித்து நிற்கும் பிரம்மாண்ட பிசாசைப் போல இருக்கிறது. புளிய மரத்தின் வடிவத்தை உற்று நோக்கினாலே இது பிடிபடும். வளைந்து நீண்டு இருக்கும் கிளைகள் எல்லாம் கோரமாய் நீட்டிக் கொண்டிருக்கும் முரட்டுக் கரங்களைப் போல இருக்கும். ஆழமாய் வேரூன்றிய வயதான புளியமரம் தளர்ந்து போன ஒரு மூதாட்டியைப் போல கிளைகளைத் தாழ்த்தி கிடக்கும். 

கொல்லன்குடி காட்டிற்குள் எவ்வளவு புளியமரங்கள் இருந்தனவோ அதைவிட நான்கு மடங்கு அதிகமாய் பனை மரங்கள் இருந்தன. பனை மரத்தையும் தமிழர் வாழ்க்கையையும் பிரித்துப் போட்டு விட முடியாது. ஒவ்வொரு பனை மரமும் தன்னை முழுமையாக மனிதனுக்கு ஒப்புக்கொடுப்பதற்காகத்தான் விதையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு விழித்தெழுகின்றன. வீரமுத்தானந்தம் காடு மேடுகளைத் தாண்டி முழங்கால் வரை ஓடிக் கொண்டிருந்த ஒரு காட்டாற்றை பிளந்து கடந்து அந்த பனங்காட்டிற்குள் ஓடி அங்கே கள் விற்றுக் கொண்டிருந்த ஒரு பனை மரத்தடியில் போய் நின்றார். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்ற சித்தரைப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. கண்கள் இரண்டும் சிவந்து போயிருக்க நெஞ்சு வரை வளர்ந்திருந்த தாடியும் விரித்துப் போட்ட தலையும், இடுப்பில் கோவணமுமாய் நெஞ்சு நிமிர்த்தி இடுப்பில் கை வைத்து....மிரட்டும் விழிகளுமாய்…

டேய்ய்ய்ய்……கருப்பா….ஊத்துடா எனக்கு கள்ள  என்ற சித்தரின் சப்தம் கேட்டு அங்கே கள் குடிக்கக் கூடியிருந்த கூட்டம் திகைப்புடன் திரும்பிப் பார்த்தது. ஒரு வெட்டப்பட்ட பனை மரத்தின் தூரில் ஒற்றைக் காலைத்தூக்கி வைத்து இன்னொரு காலை அழுத்தமாய் தரையில் ஊன்றியபடி கர்ஜித்த சித்தரைப் பார்த்தவுடன் அங்கே கள் குடித்துக் கொண்டிருந்த கூட்டம் சித்தரை நோக்கி ஓடி வந்தது. 

"அடேய்...கொல்லங்குடிக்கு புறத்தாடி ஒரு காடு இருக்குல்ல.. அந்தக் காட்டுல நிறைய எருக்கஞ்செடியிருக்காமுடா, எங்குட்டுப் பாத்தாலும் எருக்கம், கருவிளை, காந்தளு பூவாத்தான் இருக்குமாம். அங்க ஒரு சாமியாரு சுத்துறாராம்டா... யாரு கண்ணுலயும் அவர காங்க முடியாதாம் எப்பவாச்சும் பனங்காட்டுக்குள்ள ஓடியாந்து கள்ளு விக்கிறவக கிட்ட டேய்ய்ய்......... கள்ளு ஊத்துடா பேப்பலேன்னு கத்துமாம் அந்த சாமி, சில பேரு அப்படி ஒரு சாமியாரு இல்லேன்னும் சொல்லுறாக; என்னிக்காச்சும் ஒரு நாளு பனங்காட்டுக்குள்ள போயி அந்த சாமிய பாத்துபுடனும்டா நாம…., சாமியாரு சுத்துற அந்த காட்டுக்குள்ள குருக்கத்திப்  பூ நிறைய நிறைய வெளைஞ்சு கிடக்காம்டா…..அதனால் சாமிய குருக்கத்திச் சாமின்னு சொல்லி எங்கப்பத்தா வானத்தை பாத்து கையெடுத்து கும்பிடும்டா….


கள் குடித்துக் கொண்டிருந்த வேலுச்சாமிக்கு சடாரென்று அவன் கூட்டாளிமார்கள் சிறுவயதிலிருந்து கதையாகச் சொன்ன அந்த சாமியாரின் நினைவு வந்தது…. திகிலாய் குருக்கத்திச் சித்தரான அந்த வீரமுத்தானந்தம் சாமியை பார்த்தபடி அங்கே கள் குடித்துக் கொண்டிருந்த கூட்டம் அவர் முன் மண்டியிட்ட்டது….

ஆதியில் நானிருந்தேன்…
அப்போ  எந்தச் சாதியில் நானிருந்தேன்....?
நாதியில்லாதவன் நான்…
பாதியாய் நின்னவன் நான்…
அடேய்…..ஆதியில் நானிருந்தேன்…
அப்போ எந்தச் சாதியில் நானிருந்தேன்….?

குருக்கத்திச் சித்தர் ஒரு கால் தூக்கி தடங் தடங்கென்று தரையில் ஓங்கி ஊன்ற அங்கே செம்மண் புழுதி பறந்தது. உடுக்கை அடித்துக் கொண்டே அவர் பாட கொல்லன்குடி காடு உடுக்கை ஒலியால் அதிரத் தொடங்கியது. சாமியின் கையில் ஒரு கொட்டாங்குச்சி கொடுக்கப்பட்டதும்….ஊத்துடா கள்ள…என்று கட்டளையிட்ட சித்தரை பணிந்தபடியே கள் அந்தக் கொட்டாங்குச்சியில் ஊற்றப்பட்டது. மடக் மடக் என்று கள்ளைக் குடித்த சாமிக்கு மீண்டும் மீண்டும் கள் கொடுக்கப்பட்டது. கள்ளை குடித்த சித்தர் அவர் நின்று கொண்டிருந்ததற்கு அருகே இருந்த ஒரு ஈச்சம் புதர் ஓரமாய் கால் மேல் கால் போட்டு தரையில் அமர்ந்தார். கள் குடிக்க வந்த கூட்டமும் கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களுமாய் இருபது முப்பது பேர்கள் சித்தர் சாமியைச் சுற்றி வட்டமாய் அமர்ந்தனர்.

எல்லோருக்கும் தரையில் கிடந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசத் தொடங்கியது சித்தர் சாமி. 

மண்ணுல வந்த பூமி இது….
மண்ணுல வந்த சாமி இது….என்று பாடிக் கொண்டே சாமி என்று கூட்டத்தை கை காட்டினார் சித்தர் சாமி. தமிழர் வரலாற்றில் இல்லாத புகுத்தப்பட்ட சாதிக்குள் அகப்பட்டுக் கொண்டு தாழ்த்தப்பட்ட இனத்தவராய் அடக்குமுறை செய்யப்பட்ட மனிதர்கள் அங்கே நிறைய இருந்தார்கள் அவர்கள் எல்லாம் சாமி என்று சித்தர் சாமி தங்களை கைகாட்டுவதைப் பார்த்து திகைத்தார்கள் ஒரு சிலர் ஐயா….நாங்களாயா சாமி…? எங்களயா சாமி சாமின்னு சொன்னீக…என்று ஏற்கெனவே குடித்திருந்த கள் போதை மிகவும் உணர்ச்சி வசப்பட வைக்க… பெருங்குரலெடுத்து அழுது அரற்றியபடியே….கேட்டனர்….

குருக்கத்திச் சித்தர் சப்தமாய் சிரித்தார். எங்கடா இருக்கு இங்க சாமி…? சுத்தி சுத்தி மனுசப்பயலுகளும், மிருகங்களுமா சுத்தி கிட்டு இருக்கீக…? எப்படா வந்துச்சு சாமி…? இருக்கறதுதானே சாமி..? ஏண்டா… மக்கா…? இருக்கறதுதானே சாமி….? சாமின்னா இருக்கணும்லா….டா சண்டாளப் பயலுகளா…. சாமின்னு சொன்னா அது இருக்கணும்லடா…? 

குருக்கத்திச் சித்தர் அதட்டிக் கேட்டார்.  கூட்டம் ஆமாஞ்சாமி….சாமின்னா அது இருக்கணும் என்று பதில் சொன்னது. ஆடு இருக்குது, மாடு இருக்குது, கோழி, கொக்கு, குருவி இருக்குது, புழு இருக்குது, பூச்சி இருக்குது, காடு இருக்குது, என்ன பெத்த அய்யாக்களா கடலு இருக்குது, மலை இருக்குது… வானம் இருக்குது, நிலா இருக்குது…..கூடவே மனுசப்பயலுக நாமளும் இருக்குறோம்….

எதுடா சாமி இப்ப சொல்லுங்க…? குருக்கத்தி சித்தர் கைய விரித்து வானத்தைப் பார்த்து ஹோ....... என்று கத்தினார். அந்தப் பாமரக் கூட்டம் புரிந்தும் புரியாமல் 'ஓ'வென்று ஒப்பாரி வைத்து அழுதது. குருக்கத்திச் சித்தர் அழும் கூட்டத்தைக் குரு குருவென்று பார்த்துக் கொண்டிருந்தார். உச்சியிலிருந்த சூரியன் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி வழுக்கிக் கொண்டிருக்க…

பாவி மக்கா….ஏன்டா அழுகுறீக….? இன்னும் அழுக வேண்டியது நிறைய இருக்கு. நம்ம சீமைய முழுசாப் பிடிக்க வந்துருக்காய்ங்கடா வெள்ளைக்காரங்க….அவைங்களால சீமை உருளப்போகுது… நம்ம சனமெல்லாம் மிரளப் போகுது….அப்ப அழுதுக்கங்கடா உங்க அழுகைய எல்லாம்….எக்காளமிட்டு சிரித்தபடி குருக்கத்திச் சித்தர் சொன்னதை கேட்டு கூட்டம் இன்னும் சப்தமாய் ஓலமிட…


அடிமருங்கி னரசிறைஞ்ச
     வாழியாள்வான் பெருந்தேவி
கொடிமருங்கி னெழில்கொண்டு
குழையல்வாழி குருக்கத்தி
கொடிமருங்கி னெழில்கொண்டு
     குழைவாயாயிற் பலர்பறிப்பக்
கடிமருங்கிற் புக்கலரே
     காண்டிவாழி குருக்கத்தி…..

என்று சப்தமாய் சங்ககாலப் பாடல் ஒன்றைப் பாடியபடியே பனங்காட்டிற்குள் சென்று குருக்கத்திச் சித்தர் மறைந்த அதே நேரத்தில்….

மன்னர் முத்துவடுக நாதரும் ராணி கெளரி நாச்சியாரும் காளையார் கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். மன்னரின் உத்தரவின் பேரில் அவரது காளையார்கோயில் வருகை வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. மன்னர் ஒரு குதிரையிலும், கெளரி நாச்சியார் ராணி ஒரு குதிரையிலும் ஏறி கொல்லன்குடி அரண்மணையை விட்டு வெளியே வந்து வழக்கமாய் எல்லோரும் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் கொல்லன்குடி காடு வழியே மாற்று வழியாக காளையார்கோயில் நோக்கி நகரத்தொடங்கினர்

சிறிது நேரப்பிரயாணத்துக்குப் பிறகு அந்தப் பனங்காட்டிற்குள் திருப்பணும் உதயணனும் முன்னே செல்ல அவர்களுக்குப் பின்னால் மன்னரும், அரசியும் செல்ல அவர்களுக்குப் பின்னால் மன்னரின் இரு மெய்க்காப்பாளர்களும் அவர்களுக்குப் பின்னால் மாணிக்கம் சேர்வையும், செல்லமுத்துவும் சென்று கொண்டிருந்தனர்......

எப்போதும் இல்லாத அளவு ஒரு பெரும் மெளனம் அங்கே நிலை கொண்டிருந்தது.....


(புரட்சி இன்னும் வெடிக்கும்...)
தேவா சுப்பையா....