Pages

Sunday, February 8, 2015

தலைமுறைகள்...!

யாதொரு தொந்தரவுமில்லாத ஒரு ஓய்வு நாளில், வெகு நாட்களாய் காத்திருந்து தரவிறக்கம் செய்த பாலுமகேந்திரா என்னும் மகா கலைஞனின் கடைசித் திரைஓவியத்தை ஓட விட்டுத் திரைக்கும் விழுந்திருந்தேன்...

இது பாலுவின் கடைசித் திரைப்படம், பாலுவே நடித்திருக்கும் திரைப்படமும் கூட. இந்த இரண்டு புள்ளிகளுக்கும் நடுவில் நின்று கொண்டுதான் படத்தைப் பார்க்க ஆரம்பித்திர்ந்தேன். அது திரைப்படமா அல்லது எங்கோ நடக்கும் நிகழ்வுகளை நாம் வேடிக்கைப் பார்க்கிறோமா என்று எண்ணுமளவிற்குத்தான் பாலுவின் எல்லா படங்களுமே திரைப்படங்களுகென்றே இருக்கும் செயற்கைத் தன்மைகளை எப்போதும் உறிஞ்சிக் கொள்கின்றன. " திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே....என்ற திருத்தாண்டகப் பதிகத்தோடு தலைமுறைகள் ஆரம்பித்தது.... 

பாலுமகேந்திராவின் மகனான சசி தனது அப்பாவின் விருப்பத்திற்கு எதிராய் காதலித்து தமிழ்ப் பேசத் தெரியாத பெண்ணான ரம்யா ஷங்கரை மணக்கிறார். இருவருக்கும் ஆதி என்றொரு மகன் பிறக்கின்றான். தமிழில் பேசிக் கொள்ளாத  பெற்றோர்கள், நகரத்தின் ஆங்கில மோகம் சூழ்  வாழ்வு இதற்கிடையில் வளரும் ஆதித்தியாவிற்கு இதனால் தமிழ் பேசவே தெரியாமல் போகிறது. மீண்டும் காலத்தின் ஓட்டத்தில் கிராமத்துக்கு வரும் தனது பேரப்பிள்ளைக்கு தமிழே பேசத் தெரியவில்லையே என்று எண்ணி வருந்தி பேரப்பிள்ளைக்கு தமிழ் சொல்லிக்  கொடுக்கிறார் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான தாத்தா பாலுமகேந்திரா. கதைச் சூழலின் படி நகரத்திற்கு மீண்டும் செல்லாமல் தாத்தாவோடு தங்கி விடும் அந்த பட்டணத்து பிள்ளைக்கும் தாத்தாவுக்கும் இடையே இருக்கும் உறவுதான் கதை.

ஆச்சாரமான தமிழ் பேசும் கிராமப்பின்னணி கொண்ட ஒரு பரம்பரையின் அடுத்த தலைமுறையான ஆதி தத்தித் தத்தி தமிழ் பேசுவதை பார்க்கும் போது நமக்கும் மனசை என்னவோ செய்யத்தான் செய்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தில் மொழி என்பதை வெறுமனே சக மனிதரைத் தொடர்பு கொள்ள மனிதர்கள் செய்து வைத்துக் கொண்ட ஏற்பாடு என்று பெரும்பாலும் தற்போதைய பெற்றோர்கள் கருதி விடுகிறார்கள். ஆங்கிலம் பேசும் பிள்ளைகளைப் பார்த்து பெருமையடைகிறார்கள். அதை உயராக நினைக்கிறார்கள். தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசும் சூழலில் நமது பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்களே, அவர்களை நமது தாய்மொழியில் பேச வைப்பது நமது கடமை அல்லவா  என்பதை எல்லாம்  அவர்கள் வசதியாய் மறக்கிறார்கள். இது நம் சமூகத்தில் குறிப்பாக தமிழர் வாழ்வில் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக கேடு.

தாய் மொழி என்பது வெறுமனே ஒரு மொழி அல்ல. அது பண்பாட்டோடு தொடர்புடையது. ஒவ்வொரு மண்ணிற்கும் ஒரு உணர்வு. ஒவ்வொரு உணர்விற்கும் ஒரு செயல். ஒவ்வொரு செயலும் நம்முள் ஆழப்பதியும் விதை. விதைக்கேற்றார் போல குணம். குணத்திற்கு ஏற்றார் போல வாழ்க்கை என்று மொழி என்பது நமது ஜீன்களின் மூலம் நமக்குள் கடத்தப்பட்ட ஒரு பண்பு. தாய்மொழியை நமது மூன்றாம் தலைமுறைக்கு நாம் பயிற்றுவிக்காமல் அதை அவர்கள் அறியாமலேயே நம்மால் வளர்த்து விட முடியும் ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விசயத்திற்கும் பழக்கத்தால் ஏற்பட்ட ஒரு விசயத்திற்கும் இடையே சிக்கிக் கொள்ளும் பிள்ளைகள் மனோதத்துவ ரீதியாய் வலுவில்லாத பிள்ளைகளாக, தன்னம்பிக்கை அற்ற சந்ததியினராக தன்னை இன்னாறென்று சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாக....

மொழியை மறந்து தங்களை யாரோ ஒருவராக மாற்றிக் கொண்டு வாழத் தொடங்குகிறார்கள். தமிழ் வாழ்க என்று நாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தால் நமது மொழி வாழ்ந்து விடுமா என்ன? நாம் தமிழில் பேச வேண்டும், நமது உறவுகளும் பிள்ளைகளும் தமிழில் உரையாடிக் கொள்ள வேண்டும், பேசுவதாலும் எழுதுவதாலும், புதிய புதிய ஆக்கங்களைத் தமிழில் உருவாக்குவதாலும் மட்டுமே நமது மொழி வாழும். நம் பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலத்தை பேசிக் கொண்டிருந்தால் பிறகெப்படி வாழும் தமிழ்? தமிழே வாசிக்க, பேசத்தெரியாத பிள்ளைகளுக்கு எப்படித்  தெரியும் பழந்தமிழரின் உயரிய வாழ்வு? தொல்காப்பியனையும், திருவள்ளுவனையும், கம்பனையும், இளங்கோவடிகளையும் யார் அறிமுகம் செய்து வைப்பது நமது பிள்ளைகளுக்கு....

தமிழறியாத நம் பிள்ளைகள் எப்படி அறிவர் நமது வீரமிகு வரலாற்றையும், தொன்மைமிகு பண்பாட்டையும்....? 

நான் இத்தகையவன் என்று நெஞ்சு நிமிர்த்தி நடக்க என் மூதாதையரின் சீரிய வாழ்வு எனக்கு திடத்தைக் கொடுத்தது..., என் பாட்டன், பாட்டிகளின் ஆளுமையும், உலகம் மொழியறியாத காலத்தில் கவி செய்து விளையாடிய அவர்களின் அறிவுத் திறன் எனக்கு என் பாரம்பரியத்தப் பற்றிய தன்னம்ம்பிக்கையையும் பெருமையையும் கொடுத்தது. " ஆறுவது சினம் என்றும் அது போதித்தது, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கவும், காறி உமிழவும் அது எனக்குச் சொல்லிக் கொடுத்தது. என் பிள்ளைகளுக்கு எது தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.......? அவர்கள் நவீன உலகத்தில் பணம் சம்பாரிக்கும் இயந்திரங்களாய் இருப்பார்கள், நுனி நாக்கு ஆங்கிலத்தில் உலகத்தின் அத்தனை விசயங்ங்களையும் பேசத் தெரிந்தவர்களாய் இருப்பார்கள்....ஆனால்.....உன் தாத்தா பெயர் என்ன? உன் முப்பாட்டன் என்ன செய்து கொண்டிருந்தான்...? உனது சொந்த ஊர் எது...? உனக்கும் உன் மொழிக்கும் ஏதாவது தொடர்புண்டா? உன் இனத்தின் அடையாளம் என்ன ? அதன் பெருமைகள் என்ன...? என்றெல்லாம் கேட்டால்....தட்டுத் தடுமாறி சிறகில்லாமல் தள்ளாடி விழும் சிறு பறவையைப் போல தடுமாறிதானே விழுவார்கள்...?

தலைமுறைகள் படம் மேலே நான் சொன்ன இத்தனையையும் இத்தனை விரிவாய் பேச வில்லை, ஆனால் இப்படி என்னை எழுத வைத்திருக்கிறது.  பாலு மகேந்திரா தனது பேரப்பிள்ளை யாரோ ஒருவனாய் வளர்வதைப் பார்த்து பக்கம் பக்கமாய் அந்தப் படத்தில் வசனங்களை  வைக்கவில்லை....ஆனால் எத்தனை வலுவான சொற்களாலும் சொல்ல முடியாத செய்தியினை  மிகப்பெரிய தாக்கமாய் போகிற போக்கில் நம் மீது ஏற்றி வைத்து விடுகிறார். தமிழ் படிக்க வேண்டிய அவசியத்தினை மையப்படுத்தி நகரும் அதே வேகத்தில் பாரம்பரியம் என்ற பெயரில் இன்னமும் நாம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் சாதீயத்தின் செவுட்டில் மீதும் பொளேர் என்றும் அவர் அறையவும் தயங்கவில்லை.

படம் பார்த்து முடித்தவுடன் நம் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க வேண்டும், என்னதான் நாகரீகம் நம்மை வந்து முழுதுமாய் விழுங்க முயன்றாலும் நமது மொழியை விட்டு விடக் கூடாது என்று அந்தத் திரைப்படத்தின் மூலம் சொல்ல முயன்றது நமக்கு விளங்கினாலும்...., பாலுமகேந்திரா தனக்கே தெரியாமல் இன்னொரு விசயத்தையும் இந்தத் திரைப்படத்தில் வலுவாய் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கிறார்....அது என்ன தெரியுமா?

அதுதான் பாலுமகேந்திராவின் அந்திமம். 

வாழ்வில் தானுணர்ந்த எல்லா உணர்வுகளையும் கேமராவிற்குள் கொண்டு வந்து திரையில் பதிவு செய்ய முயன்ற அந்த கலைபிரம்மா தனது அந்திமத்தை, மரணத்தை எதிர் கொள்ளும் தனது வயோதிகத்தை, தன் வாழ்வின் கடைசி காலத்தில் தனக்குள் இருந்த ஏக்கங்களை, தன்னைச் சுற்றி படிந்து கிடந்த அந்த சோகமிகு பேரமைதியை, தனது தனிமையினை......., இந்தக் கதையோடு மிருதுவாய் சொல்லியும் சென்றிருக்கிறார். படம் பார்க்கும் வரை தமிழ் பேசாத ஒரு பேரப்பிள்ளைக்கு  தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஒரு தாத்தாவின் கதையாய் தெரிந்த எனக்கு....

திரைப்படம் முடிந்த பின்பு மரணத்தின் நிழல் படிந்து கிடந்த, தனது அந்திமத்தை சொல்லிச் சென்ற பாலுமகேந்திரா தான் நினைவில் பிரம்மாண்டமாய் வியாபித்து நின்றார். நெரிசல் இல்லாத ஒரு கிராமத்து வீட்டில் காலையில் எழுந்து குளித்து, சாமி கும்பிட்டு, காலை உணவருந்தி விட்டு.... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இந்தத் திரைப்படத்தில் வரும் பாலுவின் கதாபாத்திரத்தை போல எத்தனையோ தாத்தாக்களும், பாட்டிகளும் சாய்வு நாற்காலிகளில், ஏறுவெயில் நெற்றியில் பட கண்ணை மூடி உறக்கம் போன்றொரு மயக்கத்தில் கிடப்பதை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். வீட்டுத் திண்ணைகளில், கொல்லைப் புறத்தில் அல்லது வீட்டின் ஏதோ ஒரு மூலையில் ஓடி ஆடி உழைத்த மனிதர்களின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் சுருண்டுபடுத்துக் கொள்கிறது. 


அந்திமம் அடுத்து உனக்கு ஒன்றுமில்லை சாவைத் தவிர என்று சப்தமாய் அவர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்க....இப்படியான வயசாளிகள் தங்கள் மூளைகளில் படிந்து கிடக்கும் பழைய நினைவுகளை தூசு தட்டிக் கொண்டேயிருப்பார்கள். சுகமான நினைவுகளை ஓடி ஆடி வாழும் போதே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்....அந்த நினைவுகளை மீட்டெடுத்தபடியே.... மிக அகலாமாய் திறக்கப் போகும் மரணத்தின் வாசலுக்குள் உற்சாகமாய் செல்லக் காத்திமிருப்பர்கள்...

பாலுமகேந்திராவின் தலைமுறைகள் அவரது பத்தோடு சேர்ந்த பதினோறவாது படமல்ல...., மரணத்தின் கதவினை எட்டி உதைத்து திறந்து தன் இனிமையான நினைவுகளை மெளனமாய் கர்ஜித்தபடியே அவர் வாழ்ந்து முடித்தபொக்கிஷ வாழ்வின்  மிகப்பெரிய  அடையாளம் ...!!!!!


தேவா சுப்பையா...

2 comments:

-'பரிவை' சே.குமார் said...

அருமையான படம் அண்ணா...
நானும் பார்த்தேன்...
படத்தை உள்வாங்கி அழகாய் எழுதியிருக்கீங்க.

VELU.G said...

நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்

present sir