Skip to main content

அப்பா...!


ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது.........

100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது நமது உபோயோகம் மட்டும்தானன்றி மற்ற மனிதரை கீழ்தள்ளி உன்னை பெரிய பகட்ட்டான மனிதன்என்று காட்ட அல்ல.........அந்த குரல் கூறியிருக்கிறது என்னிடம்.......

உரக்க பேசும் அவசியமற்ற இடங்களில் எல்லாம் ஏன் குரலில் ஏற்றம் கொடுத்து பேசுகிறாய்? சப்தமாய் உரக்க பேசும் இடங்களில் சலமனற்றும் பேசாதே... சக்தி என்பது பணம் இல்லை ஆனால் பணத்தை விட பலமடங்கு மேலானது பணத்தை சம்பாரிக்க முடியும்,.ஆனால் ஆற்றலை நினைத்தாலும் பெற முடியாது என்று அது நாம் பேசும் சக்தி விரையமட்டுமின்றி.....அவசியமில்லாமல் ஓடும் மின்விசிறி அணைப்பதிலிருந்து மின் குழல்கள் அணைப்பது என்று மட்டுமில்லாமல் தண்ணீர் சேமிப்பு எனபது போல மிகைப்பட்ட வழிகளில் சக்தி விரையம் செய்கிறோம்........

என்று வரையறைத்து ஆற்றலை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறும் அந்தக் குரல்......

நேரம் என்பது நமது மானம்.......சொல்லிய நேரத்தில் சொல்லிய மனிதரை சந்தித்தலும், நேரப்பயன்பாடுகளை திட்டமிட்டு பயன்படுத்தலும் எப்போதும் உயர்வு என்று அந்த குரல் கூறியிருக்கிறது. மணிக்கணக்காய் தொலைபேசியில் வெட்டியாய் உரையாடிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதின் நோக்கமும் பயன்பாடுகளும் சொல்லிக் கொடுத்திருக்கிறது அந்தக் குரல்........

வீட்டுக்கு வாங்கும் எந்த பொருளும் அவசியத்தின் பேரிலா அல்லது மன உந்துதலின் பேரிலா என்று ஆராயச்சொல்லியுமிருக்கிறது. பெரும்பாலும் நமது தேவைகளை டி.வி விளம்பரங்களும், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் வாங்கியிருக்கிறார்களே என்று ஏதோ தேவையை நமக்குள் நாமே உருவாக்கிக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிக்கும் அபாயத்தின் பின்னணியில் நம்முடைய பொருள் விரயம்தான் என்றும் படித்து படித்து சொல்லியிருக்கிறது அந்தக் குரல்...........

குரல்....குரல்........குரல்........யார் அது.............?

' அப்பா '

என்னுள் சூட்சுமமாய் நிறைந்திருக்கும் மூலக்கடவுளே, என்னை உருவாக்கி இன்னும் இவன் தந்தை எந்நோற்றான் கொல் என்ற வார்த்தைகளை கேட்க காத்திருக்கும் என் குருவே........!உம்மிடம் பெற்ற பிச்சைகள் எல்லாம் எமக்கு வாழ்வின் வழிகாட்டும் அக்னியாய் ஆகிப்போனது தகப்பனே...! என் ஆசானே...!

ஆறாம் அறிவினை உலுக்கிவிட்டு ஏழாம் அறிவினை எட்டிப்பிடிக்க வழிகள் பகின்ற கடவுளே....உம்மை விடுத்து எதைப் பற்றி நான் பேச.......

அது ஒரு அவசர காலை.....நான் பள்ளிக்கும் நீங்கள் அலுவலகத்திற்கும் கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பு நேரம்..ஏதோ ஒரு கவனத்தில் எனக்காக அம்மா குடிக்க வைத்திருந்த பாலை நான் கவனமில்லாமல் கொட்டிவிட......உச்சகதியில் நீங்கள் என்னை கண்டித்ததை நான் இன்னுமே மறக்கவில்லை. கவனம் தவறுதலைப் பற்றியும் புத்தியை கூர்மையாக வைத்தலைப் பற்றியும் நீங்கள் கூறியதையும் கேட்காத மனது உங்களின் கோபத்தின் மீது வெறுப்பு கொண்டது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை..........

மாலை பள்ளிவிட்டு வந்து நான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன்......அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்த நீங்கள்......தம்பி..என்ன பண்ற வீட்டுப்பாடமா? என்று செல்லமாக கேட்ட போதும் என் கோபம் வலுவானது.......காலையில் அப்படி திட்டிவிட்டு இப்போது என்ன நடிப்பு? என்பதுதான் என் கோபத்தின் மையக்கரு.......நான் உங்கள் கையைத் தட்டிவிட்டு மீண்டும் என் கோபத்தை தொடர்ந்தேன்...

என் 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை தள்ளிவிட்டு என்னை துக்கிக் கொன்டு போய் வெளியில் நின்ற சைக்கிளில் அமர வைத்து தலை கோதி....தம்பி, அப்பா காலையில் கோச்சுகிட்டது டீ கொட்டினதுக்கு......மேலும் இனிமே கொட்டக்கூடது கவனமா இருக்கணும்ன்றதுக்கு..அவ்ளோதான் ஆன உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குமே....! அது அப்பவே முடிஞ்சு போச்சு...இனிமே நீயும் செய்யமாட்ட....ஆனா அதுக்காக அப்பா மேல இன்னுமா கோபமாவா இருக்கறது?

' எந்த மனிதரிடமும் அவரின் குறிப்பிட்ட தவறான செயலுக்கு கோபப்படு...ஆனால் மனிதர்களை நேசி...' இதைத்தானப்பா அன்று சொன்னீர்கள்.....

ஆமாம் அப்பா ......நான் ஒரு முட்டாள்தான். நிச்சயமாய்....! பதின்மத்தில் நான் நுழைந்திருந்த காலகட்டம். எல்லா பதின்ம வயதினரையும் போல என்னையும் ஆட்டிவித்தது ஹார்மோன் மாற்றங்களால் என்னுள் இருந்த அகங்காரப் பேய் இல்லை என்றால் ஏதோ ஒரு கோபத்தில் உங்களிடம் கேட்டிருப்பேனா என்ன சாதித்திவிட்டீர்கள் நீங்கள் என்று உங்களிடம்....

இன்னும் கூட பேருந்து செல்லா நம் குக்கிராமத்தில் 1947 வாக்கில் பிறந்து பியுசி வரை படிக்க நீங்கள் பட்ட சிரமங்களை கணக்கில் கொள்ளாமல் 21 வயதில் பியூசி முடித்த கையோடு வேலைக்கு சேர்ந்த நீங்கள் 25 வயதுக்குள் 4 அக்காள்களையும் ஒரு தங்கச்சியையும் திருமணம் முடித்து வைக்க தாத்தாவிற்கு எவ்வளவு உதவியிருப்பீர்கள்?

வாலிபக்கனவுகள் எல்லாம் மறைத்துக் கொண்டீர்களா இல்லை வாலிபக்கனவுகள் உங்களின் சூழல் கண்டு ஓடி ஒளிந்து கொண்டதா அப்பா? நீங்கள் எப்படி சராசரிக்குள் வருவீர்கள்? ஊராட்சி ஒன்றிய அலுவலக்த்தில் கிளர்க்காக சேர்ந்து அந்த அலுவலகத்தின் உச்சபதவியை நீங்கள் அடைந்த பின்னரும் அகந்தையற்று இருந்தது எனக்கு பாடமாக இப்போது தெரிகிறது.....

கல்லூரியில் தங்கி படிக்கும் செலவுகளுக்காக உங்களிடம் பணம் கேட்பேன். அது ஆயிரம் ரூபாயாகத்தானிருக்கும் அதில் 500 ரூபாயை 10ம் இருபதுமாகவும் 50 ஆகவும் என் முன்னாலேயே நீங்கள் பல முறை எண்ணி கொடுத்து விட்டு மீதிப்பணத்தை மணி ஆர்டர் செய்கிறேன் தம்பி என்று என் முகம் நோக்கி சொல்லிய தருணத்தில் அந்தப் பணத்தை மிஸ் யூஸ் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் திண்ணமாக விதைப்பீர்கள்.

பின்னாளில் அம்மாவிடம் நீங்கள் பேசிக் கொண்டிருந்தது எதேச்சையாக என் காதில் விழ....நான் ஸ்தம்பித்துப் போனேன். ஆமாம்.....மொத்தமாக பணம் கொடுத்தால் அப்பாவிடம் பணம் நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் என் செலவுகள் என்னையறியாமல் விஸ்தாரம் அடையும் என்ற காரணத்தால், கொடுக்க வேண்டிய பணத்தை எண்ணி எண்ணி கொடுத்து .. என்னை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு ராஜ தந்திர யுத்திதானே அப்பா அது.......

உங்களிடம் பணம் இல்லாமல் இல்லை இருந்திருக்கிறது ஆனால் என்னை மறைமுகமாய் நீங்கள் பயிற்றுவித்தது எண்ணி அப்போது ஆத்திரமும் இப்போது ஆச்சர்யமும் வருகிறது.......

ஒரு தந்தை எப்போதும் அவரது பிள்ளைகளின் ரோல் மாடல். நீங்களும்தான். நீங்கள் இல்லை என்று சொல்லுமிடமும் ஆமாம் என்று சொல்லுமிடமும் கன கம்பீரம்தானே அப்பா..! உங்களின் முறுக்கிய மீசைக்குப் பின்னால் வீரம் இருந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் ஆண்மை இருந்தது. தாத்தா இறந்து போன போது அழாத என் அப்பா, அப்பத்தா இறந்த போது அழாத என் அப்பா, அக்காவை திருமணம் முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும் போது அழாத என் அப்பா...அழுதே பாத்திராத என் அப்பா.........


வெளி நாட்டு வேலைக்காக முதன் முதலில் நான் வருவதற்காக திருச்சி ஏர்ப்போட்டுகு வரும் போது எப்போதும் பாசத்தின் உச்சத்தில் இருக்கும் அம்மா அழுதது வழமையில் ஒன்று. வழி நெடுகிலும் வயல்வெளிகள் எனக்கு விடை கொடுத்துக் கொண்டே வர....வாழ்க்கயின் ஓட்டத்தின் மும்முரத்திலும் நாம் பயணித்த வண்டியின் வேகத்திலும், என் இரத்ததின் அதிவேக ஓட்டத்தால் ஏற்பட்ட முறுக்கிலும் நான் இறுமாந்து ஏதேதோ பேசினேன்........உங்களின் பேச்சுக்கள் கன கம்பீரமாய் எனக்கு தன்னம்பிகை ஊட்டியதோடு குடும்பச்சூழலையும் விலாவாரியாகவே சொன்னது.......

யெஸ்.......கலக்கமின்றி தோளில் கை போட்டு பேசிக் கொண்டே வந்தீர்கள்.....! அம்மா, தம்பிகள் எல்லாம் அழுதாலும் அப்பா உறுதியானவர்......என்ற எண்ணம் எனக்குள் இறுகிப்போயிருந்தது....ஏர்போர்ட்டும் வந்தது..!

அந்த 2002 பிப்ரவர் 5 ஆம் தேதியின் காலை 8 மணி என்னை வாழ்க்கையின் வேறு பக்கத்திற்கு கூட்டிச் செல்லத் தயாராய் இருந்தது....!

காரில் இருந்து இறங்கும் வரை நான் உணரவேயில்லை என் ஊரையும், என் மக்களையும், என் காற்றையும் விட்டு நான் போகப்போகிறேன் என்று.. எனது உடைமகள் தள்ளு வண்டியில் வைக்கப்பட்டது.....இதோ எனது நேரம் வந்து விட்டது.....நான் ஏர்போர்ட்டுக்குள் செல்ல வேண்டும்...வண்டியை தள்ளிக் கொண்டு... நகர்ந்த நான்......ஒரு கணம் திரும்பி உங்கள் முகம் பார்க்கிறேன்......

முறுக்கிய மீசையோடு.....என் அப்பா.......எப்போதும் கலங்காத என் தகப்பனா இது....?

கண்கள் சிவந்து....கேவிக்கேவி .......அழுதபடி.....அப்ப்ப்.....பா........என்னுள் நிறைந்திருக்கும் பேரிறையே....கேவிக்கேவி....அழுதபடி தள்ளு வண்டியை விட்டு விட்டு......ஓடி வந்து கட்டியணைத்து....உங்கள் கண்ணீரையும் என் கண்ணீரையும் ஒன்றாய் கலக்கவைத்த அந்தக் கணம்.....என் வாழ்வின் மிகக் கொடுமையானதுதான்.......

ஒரு நாள் கூட அழாத நீங்கள் என்னை கட்டிப்பிடித்து நான் பெத்த மகனே உடம்ப பாத்துக்கோப்பா.....எதுக்கும் கவலைப்படாத..மாரநாட்டு கருப்பை மனசுல வச்சுக்க அப்பா இருக்கேன்.........என்று அன்று நீங்கள் கொடுத்த உத்வேகம்தானப்பா இன்று என் திமிர், என் பணம், என் வாழ்க்கை என் வசதிகள்...

ஒவ்வொரு முறை போனில் பேசும்போதும்.....டிசிப்ளின் முக்கியம் பா...பணம் செகண்டரி என்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.......நேற்று பேசும்போது கூட.... ! வாழ்வின் தருணங்கள் இன்று மாறிபோய்கிடக்கின்றன அப்பா....வெகு தூரம் வாழ்க்கை என்னை கூட்டி வந்து விட்டது....

ஆனாலும் பிச்சைக்கரனப்பா நான்....! உங்களிடம் பெற்ற பிச்சை அப்பா என் வாழ்க்கை....!

நீங்கள் சொல்வதை மறுத்த போதெல்லாம் வாழ்க்கை என்னை செவுட்டில் அறைந்து இருக்கிறது. ஏற்றபோதெல்லாம் பூச்செண்டு கொடுத்திருக்கிறது. நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான் தனியாக நில்...உன்னால் உன்னை முன்னேற்று....என்பது.....

அப்பாவுக்கு வயசாயிடுச்சு தேவா... சீக்கிரமா சேமிக்கிர வரைக்கும் சேமிச்சுட்டு எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊரப்பாக்க வந்துடுப்பா.......அடிக்கடி நீங்கள் சொல்வது..இப்போதெல்லாம் இதுதான்...!

வந்துவிட்டேன்...அப்பா இதோ வந்து விட்டேன்...9 வருடங்களில் ஏதேதோ நிகழ்த்தியிருக்கிறது காலம் நமது வாழ்க்கையில் ஆனால் நான் இன்னும் உங்கள் கைபிடித்து நடக்கும் சிறுவன் தான் அப்பா....

எனது எழுத்துக்களை நீங்கள் வாசிப்பது இல்லை..நான் பதிவுகளெழுதுவதும் உங்களுக்குத் தெரியாது......200வது பதிவு மட்டுமல்ல அப்பா என் அறிவிலிருந்து வெளிப்படும் எல்லாமே நீங்கள் இட்ட பிச்சை அப்பா...

என் குருவே! என் வழிகாட்டியே! நான் எழுதின மற்றூம் இனி எழுதப் போவன அத்தனையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்..........


தேவா. S

Comments

அப்பாவைப்பற்றியான ஊர் அற்புத கட்டுரை...
//அப்பாவுக்கு வயசாயிடுச்சு தேவா... சீக்கிரமா சேமிக்கிர வரைக்கும் சேமிச்சுட்டு எல்லாத்தையும் முடிச்சுட்டு ஊரப்பாக்க வந்துடுப்பா.......அடிக்கடி நீங்கள் சொல்வது..இப்போதெல்லாம் இதுதான்...!
///

எல்லா அப்பாவும் சொல்வது தேவா. நல்ல உணர்வுபூர்வமான பதிவு
வாழ்க்கையில் ஒவ்வொரு உறவுகளை பற்றி சிறப்பாக விளக்கிருக்கிறீர்கள். இன்று தந்தை. வாழ்வில் நம்மை செதுக்கும் இரு முக்கிய சிற்பிகள் அம்மா, அப்பா!
//பணம் என்பது நமது உபோயோகம் மட்டும்தானன்றி மற்ற மனிதரை கீழ்தள்ளி உன்னை பெரிய பகட்ட்டான மனிதன்என்று காட்ட அல்ல......//

சபாஷ் ....எனக்கு பிடித்த வரிகள் அண்ணா
//வாழ்வில் நம்மை செதுக்கும் இரு முக்கிய சிற்பிகள் அம்மா, அப்பா!//

ஆமா அண்ணா! உண்மை.

ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு கணம் நிதானித்துக் கண்மூடி நினைத்துப் பார்த்தால் கண்ணீர் வருவதைத் தடுக்க முடிவதில்லை. முயல்வதுமில்லை.

உணர்வுமிக்க ஒரு உன்னத படைப்பைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!!!
ஏற்கனவே உங்கள் அப்பாவை பற்றி எழுதிய பதிவை நான் மறக்கவில்லை இப்போது மீண்டும் இந்த பதிவை நான் எப்போதும் மறக்க போவது இல்லை அப்பா செய்வது ஒவ்ஒன்றும் நமக்கு பாடம் அவர் செய்வது எல்லாம் சரி என்று பின்பு தான் உணர்வோம்...அம்மாவுக்கு 100 மதிப்பெண் கொடுத்த நீங்கள் அப்பாவிற்கு 200 மதிப்பெண் கொடுத்துஇருப்பதிலே தெரிகிறது அவரின் பாசம்...மேலும் இந்த பாடல் இந்த பதிவுக்கு சிறப்பை சேர்க்கிறது
Kousalya Raj said…
முதலில் வாழ்த்துக்கள் இருநூறாவது பதிவுக்கு...!!

இரு நூறு என்பது வெறும் எண்ணிக்கைதான்... இதை அடைவது என் போன்றோருக்கு வெகு சுலபம் தான்...ஆனால் இங்கே இருப்பதை அனைத்தும் வெறும் எழுத்துகளோ, வெறும் பதிவுகளோ இல்லை...

ஒரு படைப்பாளியால் படைக்கப்பட்ட அரிய படைப்புகள்...
விஜய் said…
அண்ணா,
ஐ லவ் யு சோ மச் அண்ணா ... :( :(
எனக்கு நிஜமா தெரியல அண்ணா, இப்போ உங்க அப்பாவ எனக்கு அதிகம் பிடிக்குதா?, இல்லை உங்களை அதிகம் பிடிக்குதான்னு ?... நீங்க எழுதி இருக்கிற விதம் கலங்க வைக்குது அண்ணா , ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க பதிவ படிக்கிறேன், தேவா அண்ணா தேவா அண்ணா தான்....

நீங்கள் கொட்டி இருக்கிற ஒவ்வொரு எழுத்தும் உங்கள் உணர்வையும் , எனக்கான பாடத்தையும் சொல்ல தவறவில்லை அண்ணா, வாழ்க்கைல இந்த மாதிரி சத்தமில்லாமல் கடந்து போகிற தருணங்கள் ஆயிரம், அத்தனையும் கவனிக்கதவரவில்லை நீங்கள் என்பதையும் , கற்று இருக்கிறீர்கள் என்பதையும் உங்க எழுத்தும் வாழ்கையும் மீண்டும் ஒருமுறை எனக்கு கற்பிதம் செய்து இருக்கிறது அண்ணா.உண்மையை சொல்ல பயமொன்றுமில்லை, உண்மை என்பதிற்கு மறைமுக பொருளே பயமொன்றுமில்லை என்பதை நானறிவேன் அண்ணா...

நீங்கள் சிறுவயதில் கற்றுகொண்ட பாடங்கள் இன்று புரிகிறது அண்ணா வலை பத்தகத்தால், எவ்வளவு அழகா உங்கள் பாடங்களையும், கோபம், சிரிப்பு, அகம்பாவம், என அத்தனை உணர்வுகளையும் படிக்கிற எங்களுக்கு கண்முன் நிறுத்தி இருக்கிறீர்கள், நிஜமா உங்களுக்கு வாழ்த்து சொல்லியே ஆகணும் அண்ணா, கொஞ்சம் கர்வமும் , பெருமையாவும் இருக்கு அண்ணா நீங்க என் அண்ணா என்ற மிதப்பில் ....

இப்படி பாசத்திலும், கற்ற பாடத்தையும், கற்றுக்கொண்டு ,அப்பாவிற்கு நன்றி சொல்ல நேரமில்லாமல், நன்றி சொல்ல முடியாமல், அழகாய் உணர்வை வெளிப்படுத்த முடியாமல், சேற்றில் வேலை செய்யும் மகனுக்கும், இவ்வளவு அழகாய் அப்பாவின் மீது வைத்து இருக்கும் பாசத்தை வெளிபடுத்த தெரியாமல் தவிக்கும் அத்தனை மகன்களின் உணர்வாய் இதோ ஒரு சமர்ப்பணம் அனைத்து அப்பா என்ற பெயரில் நடமாடும் உண்மை கடவுள்களுக்கு ...


ஐ லவ் யு சோ மச் எவர் அண்ணா ...
Kousalya Raj said…
நூறாவது பதிவு அம்மாவிற்காக, இந்த இருநூறாவது அப்பாவிற்காக...!

உங்கள் உணர்வுகளை சொல்லி என்னையும் கண் கலங்க வைத்து விட்டீர்கள்.

//நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான் தனியாக நில்...உன்னால் உன்னை முன்னேற்று....என்பது.....//


உங்களை செதுக்கியவை எல்லாம் உங்கள் அப்பாவின் வார்த்தைகள் என்பதை உணரமுடிகிறது...இருவரில் யார் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரியவில்லை...மிகவும் நெகிழ்ச்சியான பகிர்வு...தனி தனியாக சொல்வதை விட மொத்த பதிவும் ஒரு பொக்கிஷம்.
விஜய் said…
ஐ லவ் யு சோ மச் எவர் அண்ணா ...
Kousalya Raj said…
உங்களின் அனைத்து பதிவுகளையும் முடிந்த வரை படித்துவிட்டேன் என்று சொல்லிகொள்வதில் பெருமை படுகிறேன்...நீண்ட நாளாக உங்களது எழுத்துகளை வாசிப்பவள் என்ற உரிமையில் சில வரிகள் உங்கள் படைப்புகளை பற்றி இங்கே சொல்ல விழைகிறேன்.

அதில் ஒரு சில காதலை பற்றிய அற்புத உணர்வுகளின் சங்கமங்கள்...சில அனுபவங்களின் வாயிலாக எழுதப்பட்டவை, அவையும் தனது சுய புராணம் பற்றியதாக இல்லாமல் பிறர் பாடம் பயிலும் அளவில் தான் இருந்தன.

சில ஆன்மிகம் பற்றிய தேடல்கள், இதில் பிற பெரியவர்களின் மேற்கோள்களை சொல்லி அதில் தனது தேடல் எது, என்ன என்பதை மிக ஆழமாக அதே நேரம் நம்மையும் யோசிக்க வைக்கும் விதத்தில் எழுதப்பட்டு இருக்கும். தனது கருத்துதான் சரி என்று எந்த இடத்திலும் முன்னிலை படுத்தாமல் இருப்பது பதிவுகளின் மதிப்பை அதிகரிக்கத்தான் செய்தன.

உங்களது படைப்புகள் புத்தக வடிவில் வரவேண்டும் என்பது ஒரு வாசகியாய் என்னுடைய நீண்டநாள் கோரிக்கை, விருப்பம்.
Ramesh said…
' எந்த மனிதரிடமும் அவரின் குறிப்பிட்ட தவறான செயலுக்கு கோபப்படு...ஆனால் மனிதர்களை நேசி...'

அற்புதம்... உடனே இதை நான் ட்விட்டர்ல போடலாம்னு இருக்கேங்க...

//கண்கள் சிவந்து....கேவிக்கேவி .......அழுதபடி.....அப்ப்ப்.....பா........என்னுள் நிறைந்திருக்கும் பேரிறையே....கேவிக்கேவி....அழுதபடி தள்ளு வண்டியை விட்டு விட்டு......ஓடி வந்து கட்டியணைத்து....உங்கள் கண்ணீரையும் என் கண்ணீரையும் ஒன்றாய் கலக்கவைத்த அந்தக் கணம்.....என் வாழ்வின் மிகக் கொடுமையானதுதான்.......
//

கண்முன் நிறுத்திவிட்டீர்கள் அந்தக் காட்சியை.. எனக்கும் கண் கலங்கி விட்டது.. தேவா..

இந்தப் பதிவை நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு படித்துக் காட்டுங்கள் தேவா.. நிச்சயம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்ததாய் உணர்ந்து மகிழ்வார்...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் தேவா...
Kousalya Raj said…
உங்கள் படைப்புகள் சராசரியாக, சாதாரணமாக இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று இன்றே தெரிந்து கொண்டேன்...ஒரே காரணம் உங்கள் அப்பா...அப்பாவிற்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்...!!
Ramesh said…
http://twitter.com/#!/rameshkmscct
vasan said…
விமானநிலைய‌த்தின் பிரியாவிடை ப‌டித்த‌ போது க‌ண்க‌ள் ப‌னித்த‌து, இத‌ய‌ம் வ‌லித்த‌து.
'த‌ந்தை", எல்லா த‌ந்தைகளும், ம‌க‌ன்க‌ள் அப்ப‌டியேவா? அல்ல‌து, எல்லா ம‌க‌ன்க‌ளுக்கும் த‌ந்தைக‌ள் அப்ப‌டியா?
இந்தப் பதிவைப் படித்தவுடன் தேடிச்சென்று படிக்கத் தோன்றியது பாரதியாரின் இந்தக் கவிதை தேவா. இதை இங்கு பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா??


பூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப்
பதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே - இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளி லெல்லாம் - மனம்
போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.
சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன்.

இன்பத்தை இனிதென வும் - துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவு முடையான்; - தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் எற்ற முறவே,
வன்புகள் பல புரிவான்; - ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே - பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்.

வயது முதிர்ந்து விடினும் - எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை; மூப்பு மில்லை - என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான்.

துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;
அன்பினைக் கைக் கொள் என்பான்; - துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
இன்பமிகத் தருவதில் இன்ப முடையான்.


Extracts from Bharathiyar's ”கண்ணன்- என் தந்தை”.
அண்ணே நானும் எங்க அப்பா அழுது பார்த்தது இல்ல.
விமான நிலையத்துல ஊர விட்டு போறோம்னு நான் கண்கலங்க, எங்க அப்பா அழுதத அன்னைக்குத்தான் பார்த்தேன். சிவந்த கண்கள்ல வந்த கண்ணீர துடச்சி விட்டுட்ட உடம்ப பார்த்துக்கோ, இப்போ நீ எப்புடி இருக்கியோ அப்புடியே திரும்பி வா, அதாண்டா எனக்கு வேணும்னு ஒரே வார்த்தைல சொல்லி அனுப்பினாங்க. அந்த வார்த்தைதான் இன்னைக்கு வரைக்கும் என்னைய வழி நடத்துது.

பதிவ படிச்சு மனசு கலங்கிப்போச்சு....
Unknown said…
அப்பா !!!!!!
@ Sameer

எனக்குக் கூட அதைப் படித்தவுடன் கண்ணீர் வந்தது. பரோடால என்னை விட்டுட்டு எங்க அப்பா போனபோது நான் அழுத அழுகையை அது நினைவு படுத்தியது. என் அப்பாவும் அழுததை என்னால் உணர முடிந்தது. மகன் மகள் என்று வித்தியாசம் பெரிதாக இல்லையென்றாலும் ஒரு பெண்ணைத் தனியாக ஒரு ஊரில் விட்டுவிட்டுச் செல்வதை எண்ணி எவ்வளவு .... என்பதை உணர்கிறேன்.
200 க்கு வாழ்த்துக்கள் அண்ணே
WISHES FOR YOUR 200TH POST DHEVA..

May ur thoughts grow leaps and bounds and fill our hearts with feels of ecstasy and eternity. Thankyou..
Sugumarje said…
அற்புதம் தேவா... என் தந்தையையும் நினைவூட்டினீர்கள்... வாழ்த்துக்கள்...
@தேவா

//அகங்காரப் பேய் இல்லை என்றால் ஏதோ ஒரு கோபத்தில் உங்களிடம் கேட்டிருப்பேனா என்ன சாதித்திவிட்டீர்கள் நீங்கள் என்று உங்களிடம்....//

நீயும் உங்க அப்பா கிட்ட இப்படி கேட்டு இருக்கியா? உன்னையும் என்னையும் நிக்க வச்சி செருப்பாலே அடிச்ச கூட தப்பு இல்லை. அது எவ்வளவு தப்பான வார்த்தை சொல்லி நான் பல நாள் பீல் பண்ணி இருக்கேன். இப்பவும்.. :(
//
..முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது நமது உபோயோகம் மட்டும்தானன்றி மற்ற மனிதரை கீழ்தள்ளி உன்னை பெரிய பகட்ட்டான மனிதன்என்று காட்ட அல்ல.........அந்த குரல் கூறியிருக்கிறது என்னிடம்.//

உண்மைதான் அண்ணா .. பகட்டு என்பது தேவையற்ற ஒன்று . பணமோ இல்லை இன்ன பிறவோ . தன்னிடம் இருப்பது பயன்பாட்டிற்கு உதவ வேண்டுமே தவிர அடுத்தவரைக் காயபடுத்தவோ அல்லது வீண் பந்தாவிர்க்கோ பயன்படுத்தக்கூடாது ..
இந்தமாதிரி பதிவு எழுதி என்னைய மாதிரி ஆளுங்கள உணர்ச்சிவசப்பட வைக்குறதே உங்க வேலையாப்போச்சு..... என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க உங்க மனசுல.....மனசுல இருக்குறத்தான எழுதுறீங்க......... மீண்டும் நன்றிகள்.
விஜய் said…
அய்யயோ,
அண்ணாவோட 200 வது பதிவுக்கு வாழ்த்து சொல்லாம போய்ட்டனே,
எனது அத்தனை பதிவிலும் வாசகர்கள் விட்டுசென்ற அத்தனை பின்னூட்டமும் என் அண்ணாவிற்கு சமர்ப்பணம், அண்ணாவிற்கே சொந்தமானவை, ..

விட்டு சென்ற வார்த்தைகள் யாவும் சத்தமின்றி இதயம் துலைக்கவேண்டும் என்ற உக்தியை உன்னிடம் (உங்களிடம் ) இருந்தே கற்றுகொண்டேன், அனைத்தும் உனக்கே(உங்களுக்கே ) அண்ணா ..

நிறையா பதிவ எழுதணும், நான் அருகே இருந்து கர்வம் கொள்ள வேண்டும் என் அண்ணன் என்று ...

வாழ்த்துகளுடன்
தம்பி ..விஜய்
விஜய் said…
I love you so much anna..
சொல்ல முடியாத பல உணர்வுகளை இந்த பதிவு தூண்டி விட்டது. ஆனால் இக்கணத்தில் அதை சொல்ல முடியவில்லை.

வாழ்க்கை கட்டிடத்தில் நாம் எத்தனை உயரங்கள் சென்ற போதிலும், அதன் அடித்தளமாய் என்றும் இருப்பவர்கள் பெற்றோர்களே!
200 பதிவு எழுதுவது பெரிய விசயம். அதிலும் அந்த 200 சொல்லவொன்னா உணர்வுகளை எழுப்புமானால் அவற்றின் படைப்புத்திறன் எப்படிப்பட்டவை?
உங்கள் பதிவுகள் என்றென்னும் அனுபவங்கள், உணர்வுகள், நிகழ்வுகள் தாங்கி நிஜ வாழ்வில் மறுபக்கத்தை சுட்டியுள்ளது.

மென்மேலும் இதுபோல் பல எழுதி சிறக்க மனமார வேண்டுகிறேன்!
//கண்கள் சிவந்து....கேவிக்கேவி .......அழுதபடி.....அப்ப்ப்.....பா........என்னுள் நிறைந்திருக்கும் பேரிறையே....கேவிக்கேவி....அழுதபடி தள்ளு வண்டியை விட்டு விட்டு......ஓடி வந்து கட்டியணைத்து....உங்கள் கண்ணீரையும் என் கண்ணீரையும் ஒன்றாய் கலக்கவைத்த அந்தக் கணம்.....என் வாழ்வின் மிகக் கொடுமையானதுதான்.......//

உண்மைலேயே எனக்கும் கலக்கமா இருக்கு அண்ணா , இந்த வரிகள் படிக்கும் போது ஒரு சிலிர்ப்பு வருது .. அதுவும் இல்லாம நான் கொஞ்சம் நாளுக்கு முன்னாடி அப்பா அப்படின்னு கற்பனை பண்ணி ஒண்ணு எழுதிருந்தேன் .. ஆனா இத படிக்கும் போதுதான் தெரியுது நான் எழுதினது எவ்ளோ உண்மை அப்படின்னு ..!!
//வந்துவிட்டேன்...அப்பா இதோ வந்து விட்டேன்...9 வருடங்களில் ஏதேதோ நிகழ்த்தியிருக்கிறது காலம் நமது வாழ்க்கையில் ஆனால் நான் இன்னும் உங்கள் கைபிடித்து நடக்கும் சிறுவன் தான் அப்பா....///

எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியல .. ! உண்மையான வலி .!!
@தேவா

மாப்ஸ்!! எதோ கவிதை எழுதி இருப்ப கமெண்ட் போட்டு இருக்கவங்கள எல்லாம் கலாய்ச்சிட்டு போலாம் வந்தேன்... ஆனா கண்ணு எல்லாம் கலங்கிடுத்து மாப்ஸ்! எங்க அப்பாவும் இப்படி தான் என்னை வளர்த்தாரு...
@தேவா

//மொத்தமாக பணம் கொடுத்தால் அப்பாவிடம் பணம் நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் என் செலவுகள் என்னையறியாமல் விஸ்தாரம் அடையும் என்ற காரணத்தால், கொடுக்க வேண்டிய பணத்தை எண்ணி எண்ணி கொடுத்து .. என்னை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு ராஜ தந்திர யுத்திதானே அப்பா அது//

எங்க வீட்டுல ரிவர்ஸ். புள்ளை கஷ்டப்படகூடது சொல்லி எங்க அப்பா எதுவும் காட்டிக்க மாட்டாரு. ஆனா அந்த நோட்டு கத்தை சொல்லும் அவரு எத்தை பேரு கிட்ட கடன் வாங்கி இருக்காரு சொல்லி.. :(
@ஜீவன்பென்னி

//இந்தமாதிரி பதிவு எழுதி என்னைய மாதிரி ஆளுங்கள உணர்ச்சிவசப்பட வைக்குறதே உங்க வேலையாப்போச்சு..... என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க உங்க மனசுல...//

ஆமாம். நீ போய் காதல் கவிதை, ஆன்மிக கட்டுறை இப்படி எதாவது எழுது. இல்லைனா பாட்டி, தாத்தா, அம்மா, சாவ போற பாட்டி இப்படி எதாவது எழுது. சும்மா டாடி பத்தி எல்லாம் எழுதி... பீல் பண்ண வைக்க கூடாது... :))
Jay Key said…
அப்பாவை பற்றிய அழகான பதிவு.. நினைவுகளை மீண்டுமொருமுறை திரும்பி பார்க்க வைக்கிறது தங்களுடைய பதிவு...

அழகு..
ஹாய் தேவா அண்ணா !...

நான் சந்திரசேகரன். உங்கள் தம்பி விஜயோடு பணிபுரிபவன். விஜயின் நண்பன். உங்கள் பதிவை
முதல் முறை படிக்கின்றேன். இதுவரை அவர், உங்களுடைய பதிவை படிக்கச்சொல்லி சுட்டியதில்லை.
நானும் அவருடைய பதிவை தவிர வேறு எவருடைய பதிவையும் படித்ததில்லை.

இந்த முறை உங்களுடைய "அப்பா" என்ற பதிவிற்கான இணைப்பை எனக்கு அனுப்பினார்,
இந்த பதிவை படித்ததும் அவருக்கு ஏற்பட்ட உணர்வு, எனக்கும் ஏற்படும் என்ற நம்பிக்கையில்....

அவரது நம்பிக்கை பலித்தது. எனக்கும் அழுகையை தந்தீர்கள். அது ஏக்கத்தில் வந்த அழுகை,
இதே போல் அப்பா எனக்கு இல்லையே என்று எண்ணி, இல்லை இல்லை...
என் அப்பா இது போல் இல்லையே என்று எண்ணி. ஆம், என் தோளில் கைபோட்டு பேசும் அளவிற்கு
எனக்கும் அப்பாவிற்கும் உறவு அமையப்பெறவில்லை. ஆனாலும் உங்களுடைய பதிவு, என்னையும்
ஒரு நிமிடம் கண்கலங்க வைத்துவிட்டது.

எழுத்துக்கு சக்தி உள்ளது என்பதை, உங்களை போன்றோர்களின் எழுத்துக்களை ஆழ்ந்து
படிக்கும்பொழுதுதான் தெரிகிறது...

இன்று முதல் உங்களுக்கும் நான் ரசிகன்...
நேரம் கிடைக்கும்பொழுது தவறாமல் உங்களுடைய பதிவுகளை படிப்பேன்.

உங்கள் புதுரசிகன்!...
சந்திரசேகரன்.
கோவம் வருகிறது.... நான் நடை பழகி என் கைபிடித்து நடத்தி செல்லும் காலம் வரும் முன்னே என்னையும் மண்ணையும் விட்டு பிரிந்த என் அப்பா மீது....
தேவா,
படித்து முடிக்கையில் கண்கள் கலங்கி விட்டன. மிக அருமையாக அன்பையும், பாசத்தையும் வார்த்தைகளில் கொட்டியிருக்கிறீர்கள்..
இருநூறுக்கு வாழ்த்துக்கள் தேவா.
தேவா....

இந்த கட்டுரை படிக்கும்போதும்., முடித்தப்பின்னும் ஒற்றை கேள்விதான் மிச்சம் உள்ளது.

அப்பா எப்படி இருக்கிறார்கள் தேவா?.அம்மாவும்...

நல்ல பதிவு தேவா...

எப்போதாவதுதான் வலைத்தளம் வருவேன்., ஆனால் எப்போதும் என் அன்பு அதே உள்ளன்போடு...

அப்பாவிற்கு என் வணக்கங்கள்
200 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!! :-))

நீங்கள் எட்டிய தூரம் எல்லாம்
கிட்ட இருந்தே பார்க்கா விடினும்
உமக்கு கிட்டிய பெருமையெல்லாம்...
கொண்டவனாகிய சிவனுக்கும்
கொடுத்தவனாகிய தந்தைக்கும்....
கொட்டிக் கொடுத்தாலும்...
கோடி பணம் தான் கொடுத்தாலும்
தேவாவைப் போல் தீர்க்கமாய்
ஒரு பிள்ளை கிடைக்குமோ....
என்று சொல்லும் வண்ணம்...
பெற்றதில் அவர்க்குப் பெருமை என்றால்
உம்முடன் இருப்பதில் எமக்குப் பெருமை...!

உங்க அப்பாவின் வழிநடத்தலில்... ஆண்டுகள் பல கடந்தாலும்... அதை அப்படியே உள்வாங்கி... அறத்தோடும், அன்போடும், நேர்மையோடும், விவேகத்தோடும்... நீங்க வாழும் விதம்.. மனதைத் தொட்டது... ஆயிரம் பேர், வாழ்த்து சொன்னாலும் அப்பாவின் ஆசீர்வாதத்திற்கு ஈடாகாது... உங்கள் அப்பாவின் பரிபூரண வாழ்த்துக்களும், ஆசீர்வாதமும் உங்களுக்கு அமையட்டும்...!


ஒரு இடத்தில்...
அகங்காரம் தலை தூக்க...
அப்பாவின் அறிவுரைகள் உமைத் தாக்க....
என்று சொல்லிருக்கிங்க.. ஹ்ம்ம்ம்... சொன்ன விதம் ....என்ன சொல்ல?

நிறைய நேரங்களில்.. நானும் நினைச்சிருக்கேன்.. இந்த அம்மா, அப்பாவுக்கு அட்வைஸ் பண்றதா விட்டா வேற வேலையே இல்லியான்னு... ஆனா... வாழ்க்கை பாதையில் அவை ஒவ்வொன்றும்... வழிகாட்டிகள்-னு உணர்ந்திருக்கேன்...
எப்பவும் போல்... உணர்வைப் பகிர்ந்திருக்கீங்க... :-))))
க ரா said…
அண்ணா ! அப்பா !!!!!! நன்றி
ஹேமா said…
அப்பா...அப்பா...அழுது ஒய்ந்த பிறகும் சொல்ல எதுவுமில்லாமல் நகர்கிறேன் தேவா.வாழ்த்துகள் !
Anonymous said…
200 வது பதிவிற்கு வாழ்த்துகள் !! இன்னொரு மகா காவியம் !! வர்ணிக்க வார்த்தைகளுக்கு பஞ்சம் என்னிடம் !!

கலங்க வைத்துவிட்டீர்கள் !!

ரசிகை
இல்லாத என் அப்பாவை எண்ணி அழுகிறேன். இருந்த போது அருமை தெரியவில்லை .என் அப்பா தான் என் முதல் ஆசிரியர் . உயர் கல்வியில் கூட ஆங்கில கட்டுரை எழுத உதவிக்கு வந்தவர் ஹைமிங் ...இருக்கவேண்டும் மனப்பாடம் செய்ய என்று கற்றுத்தந்தவர்.

பிறக்க இருக்கும் இனிய வருடத்தில் எண்ணங் கள் யாவும் ஈடேர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
Mahi_Granny said…
அம்மா, மகள், இப்போ அப்பா . பாசக்கார தேவா தான் . இருநூறுக்கு வாழ்த்துக்கள்.
படிக்க படிக்க கண் கலங்குதுங்க தம்பி
அப்பா,ஒரு மனித வாழ்வின் மிக முக்கியமான நபர்.அவ்வளவு சுருக்கமாக அவரை சொல்லிட முடியாது.

உங்களது எழுத்து எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது.நிறைய...

நான் நாடுவிட்டு வந்த அந்த நாளை நினைவு படுத்திவிட்டது...

அந்த கணத்தில் என் அப்பாவும்,கேவி அழுத காட்சி,அத்துனை எளிதில் கடந்து போகக்கூடியதல்ல..

கனத்த இதயத்துடன் கடந்த நேரம் அது,..

வாழ்த்துக்கள் தேவா அண்ணா..

அன்புடன்
ரஜின்
ஆர்வா said…
பொதுவாக மகன்கள் தாயைத்தான் நேசிப்பார்கள். தந்தையை அவ்வளவாக இல்லை.. ஆனால் நீங்கள் உங்கள் தந்தையை நினைவு கூர்ந்தவிதம் உங்கள் தந்தையின் மீது ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது..
அருமை தேவா.
உங்கள் 200 வது பதிவை படித்து கண்ணீர் விட்டேன். நான் எனது மகன்களுக்காக பட்டது அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் தேவா.
டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் தேவா.

மிக அறுமையான படைப்பு. உண்மை.
vasu balaji said…
அருமை தேவா. வாழ்த்துகள்.
மரா said…
ரொம்ப அருமையான இடுகை.அப்பா எல்லாருக்குமே வாழ்க்கைல ஒரு முக்கியமான கதாநாயகர்கள் தான். இக்கட்டுரையை அறிமுகப்படுத்திய தம்பி அப்துல்லாக்கும் உங்களுக்கும் நன்றி.
//எந்த மனிதரிடமும் அவரின் குறிப்பிட்ட தவறான செயலுக்கு கோபப்படு...ஆனால் மனிதர்களை நேசி...' இதைத்தானப்பா அன்று சொன்னீர்கள்.....//

அருமை. அப்பா, அம்மாவை நலம் விசாரித்ததாக சொல்லவும்.

200 பதிவிற்கு வாழ்த்துகள்.
அருமை தேவா. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
Kumky said…
கலங்கடித்துவிட்டீர்கள்...

அற்புதமான இடுகை.

வாழ்த்துக்களும், அப்பாவிற்கு வந்தனங்களும் தேவா.
butterfly Surya said…
அருமை. I love Appa
Unknown said…
ஒரு உணர்வான படைப்பிற்கு

என்ன சொல்ல

!அப்பா!....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த