Pages

Saturday, December 31, 2011

பாலகுமாரன் என்னுடைய குரு...!

பாலகுமாரன் தாக்கம் நிறைய இருக்கு நீங்க எழுதுற எழுத்துலன்னு நிறைய பேர் என்கிட்ட சொல்லவும் செய்றாங்க, மின்னஞ்சலும் செய்றாங்க. சில பேர் அதை மாத்திக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்றாங்க...!

என்கிட்ட கண்டிப்பா பாலகுமாரனோட தாக்கம் இருக்கத்தாங்க செய்யும். என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்து அப்டீன்றதோட ஆழத்தை நான் ருசிச்சு அனுபவிச்சது பாலகுமாரன்கிட்டதான். இன்னிக்கு வரைக்கும் அந்த ருசி மாறாம இருக்கு. ஆனா தயவு செஞ்சு பாலா சார் மாதிரி எழுதுறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க...

நிறைய பேர் அப்டி தான் எழுதுறதா நம்புறாங்க, வெளிலயும் சொல்லிக்கிறாங்க. ஆனா பாலா சார் மாதிரி ஒருத்தர்தாங்க இருக்க முடியும். அவருடைய தாக்கத்தை நாம நம்ம வழியில நின்னு சொல்லும் போது சில வார்த்தையாடல்களில் நமக்குள் நம்முடைய ஆஸ்தான குரு வந்து உக்காந்துடுவார்.

குரு அப்டீன்ற வார்த்தை ரொம்ப பெரிய வார்த்தை மட்டும் இல்லை இருக்குற அத்தனை வார்த்தைகளிலும் ரொம்ப புனிதமானதும் வலிமையானதும் கூட. ஒரு குரு எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. அவர் ஒரு தன்னிச்சையான நிகழ்வாத்தான் இருக்கிறார். வெளில இருந்து பேசுறவங்க வார்த்தைகளைப் பற்றி அவருக்கு கவலைகள் எதுவும் எப்போதும் இருப்பது இல்லை. இகழ்ச்சியோ, புகழ்ச்சியோ இந்த இரண்டின் பின்னணியில் என்ன இருக்கும் என்று ஒரு குருவிற்கு நன்றாகத் தெரியும்.

குரு என்ற வார்த்தைக்குக் மிகச் சரியான பொருள் வழிகாட்டி. ஆமாம் அவர் வழியைத்தான் காட்டுவார் நாம் தான் செல்ல வேண்டும். நம்மை கை பிடித்து அழைத்துச் சென்று இலக்கில் விட்டு விடுகிறேன் என்று சொல்பவன் மகா மோசடிக்காரன். இப்படி வழிகாட்டும் மனிதர்கள் தன்னைச் சார்ந்து இருப்பவர்களை மட்டுமில்ல சாரதவர்களையும் கூட மிக அதிகமாக நேசிக்கிறார்கள் ஆனால் அதை புறத்தில் காட்டுவது இல்லை.

புறத்தில் நேசத்தையும், அன்பையும் எப்போதும் வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை. செயல்களே அன்பை வெளிப்படுத்துகின்றன. வார்த்தைகள் பலன்களை எதிர்ப்பார்க்கின்றன. எந்த ஒரு குருவும் முகஸ்துதியை விரும்புவதில்லை மாறக தன் கருத்துக்களால் தாக்கப்பட்டு அவனின் அகத்தில் மாற்றம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்.

அந்த கவனிப்பு நேரடியான உடல் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் செயல்களை செம்மையாகச் செய்து அதன் விளைவுகளை அறிவுறுத்தலாக்கி உணர்வுகளாலும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஒரு குரு அதைக் குறைவில்லாமல் செய்கிறார். என் பாலகுமாரன் எனக்கு மட்டுமல்ல லட்சக்கணக்கான அவரின் வாசகர்களுக்கு அதைச் இடை விடாது செய்து கொண்டே இருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் போதே எனது வாழ்க்கைக்குள் வந்து விட்ட பாலகுமாரனின் எழுத்துக்கள், கல்லூரி முடித்து தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இங்கே தான் இந்த வழிகாட்டலை தனது எழுத்தின் மூலமாக புத்தி விழித்தெழும் தீட்சை எனக்குக் கொடுக்கப்பட்டது.

பாலகுமாரனை வாசிக்க, வாசிக்க வாழ்க்கைப் பற்றிய பார்வை மாறியது. உறவுகளைப் பற்றிய புரிதல் கூடியது. கடவுளைப் பற்றியும், ஆன்மீகம் பற்றியும் ஒரு வெளிச்சம் விழுந்தது. காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் ஒரு தெளிவு பிறந்தது. காமத்துக்கும் இறைநிலைக்கும் இருக்கும் தொடர்புநிலை விளங்கி அதிலிருக்கும் புனிதம் விளங்கியது.

பாலகுமாரன் எனக்கு குரு.

என்னை அவருக்குத் தெரியாது. அவரை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தது கிடையாது. இரண்டிற்கும் காலம் ஒரு அவசியத்தை வைக்கவில்லை. அவரைப் பார்க்கும் போது எழுத்தில் இருந்த படியே அவர் இருக்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கப் போவதுமில்லை. ஏனெனில் சூட்சுமமாய் கதைகளுக்குள்ளும், கட்டுரைகளுக்குள்ளும் நின்று ஓராயிரம் விசயத்தை பாலகுமாரன் பேசியிருக்கிறார். நேரே பார்க்கும் போது அப்படி பேச வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மனிதர்களுக்குள் தோன்றத்தான் செய்யும் ஆனால், அது கொஞ்சம் அல்ல நிறையவே நாடகத்தனமானது.

கடவுளைப் பற்றி பாலா கூறுகையில் புறம் நோக்கி கடவுளைத் தேடாதே உன்னை உற்று நோக்கு, நீ ஒரு சாட்சியாக நின்று கொள் என்று அடிக்கடி கூறுவார். காமத்தைப் பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று சமகாலத்தில் வக்கிரத்தை தூண்டும் எழுத்துக்கள் மிகுந்து விட்டன. பாலகுமாரனும் காமம் பற்றி பேசுவார். அது சரியான புரிதலைப் புலன்களைக் கடந்து புத்திக்குள் கொண்டு சேர்க்கும்.

" அவளும் அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அன்பாய் அவனைத் தழுவினாள் " என்று எழுதிவிட்டு அடுத்த வரியில் " போர் தொடங்கியது. படைகள் இலக்கினை நோக்கி முன்னேறின. தடுக்க முடியாமல் எதிரி படைகள் தடுமாறி நின்றன. தடுக்க, தடுக்க உக்கிரம் கூடிக் கொண்டே சென்றது. எதிரிப் படை இப்போது விட்டுக் கொடுக்க ஆரம்பித்தது....விட்டுக் கொடுத்தலின் உற்சாகத்தில் இன்னும் வேகமாய் முன்னேறியது படை...

கோட்டை கொத்தளங்களை எல்லாம் அடித்து நொறுக்கி உச்ச வெறியில் நகர்வு இருந்தது." என்று கூறிவிட்டு இடையில் ஒரு வரியில் " அவன் அன்பாய் அவளின் இடுப்பு வளைத்து காது மடல்களில் முத்தமிட்டான் " என்று கூறிவிட்டு மீண்டும் " போர் உச்சக்கட்டத்தை தொட்டிருந்தது எதிரிப்படை சரணாகதியில் தன்னை முழுதுமாய் இழந்திருக்க, சரணாகதிக்கு முன்னால் வெற்றி பெற இலக்கின்றி சரணாகதியை அனுமதித்து வெற்றி தோல்வியற்ற ஒரு பூரண அமைதி அங்கே நிலவியது. "

இப்படி காமத்தை வகைப்படுத்தி நளினமாய், நாகரீகமாய் எழுத எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் பாலகுமாரன். தியானத்தின் உச்சத்தில் என்ன நிகழும், தியானத்தின் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் சொக்கட்டான் போட்டு இழுத்துச் சென்றிருக்கிறது அவரின் எழுத்து. அப்பப்பா... ஒரு எழுத்துக்கு இவ்வளவு சக்தியா என்று இறுக அவரை மானசீகமாய் அணைத்து கால்களில் விழுந்து கண்ணீர் சொரிந்திருக்கிறேன்.

இயல்பை எழுதுகிறேன் என்று கபரே டான்ஸ் ஆடும் எழுத்துக்களை விட்டு தூரமாய் என்னை விலக வைத்தவர் பாலகுமாரன். இளைஞர்களின் வாழ்க்கையில் அவரின் எழுத்துக்கள் ஒரு வழிகாட்டும் சுடர். ஒரு இளைஞன் தன்னுடைய பதின்மத்தில் எல்லாவிதமான தடுமாற்றங்களையும், பதின்மத்தின் ஈர்ப்புகளையும் கடந்து வாழ்க்கைக்குள் நுழையும் தருணத்தில் பாலகுமாரனின் எழுத்துக்கள் சர்வ நிச்சயமாய் வழிகாட்டும்.

பாலா எழுதுவது போல தன் சொந்த வாழ்க்கையில் இருப்பது இல்லை மேலும் நான் அவர் வீட்டுக்குச் சென்றேன் அவர் அப்படி இல்லை, இப்படி இல்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும் அபத்தத்தின் உச்சமாய் அவர் இரண்டு திருமணம் செய்திருக்கிறார் அதனால் பிடிக்கவில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அது அவர் வாழ்க்கை, அவருக்கு ஏற்றார்போல் அவர் பார்த்துக் கொள்வார். அவர் எழுத்து நம்மை ஏதாவது செய்கிறதாம் நமக்கு உதவுகிறதா என்று பார்க்காமல் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்து வைத்து ஏன் நாம் பார்க்கவேண்டும்?

தெய்வங்கள் எல்லாம் இரண்டு திருமணம் செய்து கொள்ள அனுமதித்து அதைப் போற்றி வணங்கும் ஒரு தேசத்தின் மக்களும், மனிதர்களும் பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுரண்டிப் பார்ப்பது மிகப்பெரிய புரிதலின்மை.

பாலா எனக்கு குருவாய் இருக்கிறார் என்று அவரின் உருவத்தை அடையாளமாக நான் காட்டினாலும், பாலாவின் எழுத்து எனக்கு வழிகாட்டியாய் இருந்திருக்கிறது. அந்த எழுத்து என்னும் சூட்சுமம் எனது குரு.

என்றென்றும் சூட்சுமமாய் பாலாவை நான் நேசிப்பதும், அவர் தன் எழுத்தின் மூலம் என்னை ஆசிர்வதிப்பதுமென ஒரு ஏகலைவனாய் தூரமாய் ஒதுங்கி நின்று நான் இடைவிடாது கற்றுக் கொண்டிருக்கிறேன்....

இது ஒரு மானசீக நேசிப்பு...! புரிதல் நிறைந்த புலன்களைக் கடந்த உறவு...!

பாலகுமாரன் ஐயாவுக்கு எனது நமஸ்காரங்கள்...!


தேவா. S


Thursday, December 29, 2011

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...!ஒரு வித தாள கதியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை. எப்போதும் சுற்றியிருக்கும் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. வந்தவர்கள் எல்லாம் சென்று விட்டார்கள். இருப்பவர்களும் சென்று விடுவார்கள். நாளை நானும் இருக்க மாட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் எல்லாம் மாறும்.

காலங்கள் கடந்தும் ஏதேதோ ரகசியங்களை தன்னுள் அடக்கிக்கொண்டு எப்போதும் மெளனமாய் பார்த்துச் சிரிக்கிறது அந்த பிரமாண்ட வானம். மெளனமாய் சூரியனைச் சுற்றி வரும் இந்தப் பூமிக்குத் தெரியும் அதன் மூலமும் மூலத்தின் ஆழமும்.

வெற்றுப் பிண்டமாய் ஜனித்து விழுந்து யாரோ இட்டப் பெயரை நானென்று கொண்டு, ஐம்புலன்களும் சுவீகரித்த அனுபவத் தொகுப்புகளை நான், நான் என்று கூவிக் கூவி நான் கோபம் கொள்கிறேன்,காதல் கொள்கிறேன்,காமம் கொள்கிறேன், சிரிக்கிறேன்? ரசிக்கிறேன், நடிக்கிறேன், உரக்க, உரக்க சப்தமாய் பேசுகிறேன், உறக்கமும் விழிப்புமாய் மாறி, மாறி உணர்வுகளுக்குள்ளேயே வேடங்களிட்டுக் கொள்கிறேன். விடாமல் துரத்தும் இரவும் பகலும் கூடி மாற்றங்களை வயதென்று எனக்குப் போதிக்கின்றன.

நான் விரும்பி நகரும் பாதையென்று நினைத்துக் கொண்டிருப்பது எல்லாம் திணிக்கப்பட்டது அல்லது தீர்மானிக்கப்பட்டது. கடவுளென்று கூறி முட்டி, முட்டி வணங்கச் சொன்னது என் சூழல். வணங்கிய கடவுளைப் பார்க்க வேண்டும் என்று தேடிய போது சுக்கு நூறாய்ச் சிதறிப் போனது ஓராயிரம் கற்சிலைகள். கடவுளுக்காயும், வாழ்க்கைத் தேவைக்காயும் கோவிலுக்குப் போய் போய் அலுத்து திணறி நிற்கையில் உள்ளுக்குள் சூழ்ந்த வெறுமையை உற்றுக் கவனிக்கையில் உருவமாய் கடவுள் என்ற ஒன்று தனித்து இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மெல்ல புத்திக்கு உறைத்தது.

புத்திக்குள் உறைத்தது மனதின் கற்பனையா? இல்லை சத்தியத்தின் புரிதலா என்றொரு கேள்வி எழுந்தது. புத்தி கூறுவதை எல்லாம் கேட்கிறேன் என்று நான் பல தடவை இது போலக் கூறி மனதிடம் ஏமாந்து போயிருக்கிறேன். புத்தியோ, மனதோ எது என்ன சொன்னாலும் அதை புறந்தள்ளி விட்டு என் முன் நின்ற வாழ்க்கையை மட்டும் பார்க்க தீர்மானித்தேன். மிகப் பிரமாண்டமாய் வாழ்க்கை என்னைப் பார்த்துச் சிரித்தது.

வாழ்க்கை என்று சொன்ன உடனேயே அது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது என்பதும் விளங்கியது. என்னைச் சுற்றியிருக்கும் எவன் ஒருவன் பின்பற்றும் எந்த சித்தாந்தமும் எனக்கு உதவாது என்பதும் பிடிபட்டது. நான்....என்னும் இந்த உடலைச் சுமக்கும் சக்தி....இந்த பிரபஞ்சத்தில் நான் மட்டுமே...! எனக்கான வாழ்க்கையின் வழிகளில் தெளிவுகளை என்னால்தான் உணர முடியும். எனக்கான நகர்வை நானே தீர்மானிக்க முடியும்.

கடவுள் இல்லை என்று ஒரு கூட்டமும்.... இருக்கிறது என்று ஒரு கூட்டமும் முஷ்டிகளை மடக்கிக் கொண்டு, குரல் உயர்த்தி மாறி மாறி போட்டி போட்டு வாதங்கள் செய்வதையும் காண முடிந்தது. ஆமாம் இது காலங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதன் நாகரீகம், விஞ்ஞானம் என்றெல்லாம் பண் படும் முன் இது வேறு விதமாய் இருந்தது.

அதாவது உன் கடவுள் பெரியவரா? இல்லை என் கடவுள் பெரியவரா? என்பதிலிருந்து அதன் பரிணாம வளர்ச்சி என் மதம் பெரியதா இல்லை உன் மதம் பெரியதா என்று மாறி......பகுத்தறிவு கூடிப் போன காலத்தில் கடவுள் இருக்கிறார் என்று அடித்துக் கூறி ஒரு பிரிவும், இல்லை என்று உரக்க கூவிய படி இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர்.

இது ஒரு மிகப் பெரிய மடத்தனம் என்று என் புத்தி சொன்னாலும் இது தேவைதான் அல்லது இது இப்படித்தான் இயங்கும் என்பதும் தெளிவாகப் புரிகிறது. ஏனெனில் முரண் என்ற ஒன்று இருக்கும் வரைதான் இயக்கம் இருக்கும். அதே நேரத்தில் இயற்கையில் சமம் என்று எதுவும் கிடையாது. சமப்பட்ட இரு விசைகள் இயங்க முடியாது. அது நிலையாய்த்தான் நிற்கும்.. அதனால் சக்தி ஓட்டமாய் இருக்கும் வாழ்க்கை வெவ்வேறு அளவினாலான சக்திகளாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு சக்தி கடவுள் இல்லை என்று புத்திகளில் செல்களாய் துடித்துக் கொண்டிருக்கிறது வேறு சாராருக்கு கடவுள் உண்டு என்று.

இருக்கிறார் என்று சொல்பவர்களையும் இல்லை என்று சொல்பவர்களையும் நாம் மென்மையாய் கடந்து சென்று விடத்தான் வேண்டும். இரண்டு பேருமே பொய் சொல்கிறார்கள். இருவர் கூறுவதும் சத்தியம் இல்லை. இரண்டுமே நம்பிக்கை. இருவருமே நம்பிக்கையாளர்கள். ஒருவர் இருக்கிறது என்று நம்புவர் இன்னொருவர் இல்லை என்று நம்புவர்.

நான் உங்கள் முன் இருக்கிறேன் என்றால் அதற்கு நீங்கள் நம்பிக்கை வைக்கத் தேவையில்லை. நான் இருக்கிறேன் அல்லது இல்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடலாம். நம்பிக்கை என்று சொல்லும்போதே அது பார்க்காத விடயம் அல்லது காணாத விடயம் ஆகிறது. வாழ்க்கையில் நாம் வைக்கும் ஒரே நம்பிக்கை நமது மீதாகத்தான் இருக்க வேண்டும்.

வேறு எது மீது வைக்கும் நம்பிக்கையும் உங்களையும் என்னையும் குப்புறக் கவிழ்த்து விடும். உணர்ச்சிப் பூர்வமாக நம்பிக்கை வைப்பவர்கள் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பொய்த்து விடும் போது அப்படி நம்பியவனைக் குற்றம் சொல்லிப் புலம்புவார்கள்.

நான் இருக்கிறேன். என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நாம் ஆரம்பிக்கும் இடமே வாழ்க்கை என்னும் காரினை சாவி போட்டு முடிக்கி நாம் ஸ்டார்ட் செய்யுமிடம். எந்தக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் சென்று நாம் ஏன் மாட்டிக் கொள்ள வேண்டும். எந்த தத்துவக் குப்பைகளையும் ஏன் நாம் எப்போதும் சுமந்து கொண்டே திரிய வேண்டும்? என் இன்றைய உணவினை எந்தக் கற்பனைகளும் கொண்டு வந்து எனக்குக் கொடுக்கவில்லை. என் உணவிற்கான போராட்டத்தை நானே செய்கிறேன். என் வாழ்க்கையின் தரம் கீழே போவதும் மேலே வருவதும் எனது உழைப்பில் இருக்கிறது.

சில நேரங்களில் என் இலக்குகளை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது. அது கடவுளால் அல்ல. அல்லது வேறு எவராலும் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது அல்ல...! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சார்பு வாழ்க்கையில் பல சூழல்களால் எனது இலக்கினை அடையும் போக்கு தடைப்பட்டிருக்கலாம்.

அதற்காக விரக்தி அடைந்து கொண்டு.. ஓடவேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்டம் இப்படித்தான். எப்போதும் வெற்றியையும் தோல்வியையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நான் வெற்றிகளின் போது சந்தோசமாய் இருக்க அந்த வெற்றி தரும் சூழல் உதவுகிறது. தோல்வியால் நான் தனிமைப்படுத்தப்பட்டு விடுவேனோ என்ற பயம் இருப்பதால் அதைக் கண்டு மிரள வேண்டியிருக்கிறது.

பல வெற்றிகளையும் மனம் எளிதில் மறந்து போய் விடுகிறது. ஆனால் சில தோல்விகளை எப்போதும் எனக்கு எடுத்துக் காட்டி பயமுறுத்துவதின் பின்ணனியில் மரண பயமமே மிகுந்திருக்கிறது. தோல்விகளின் போது யாராவது ஆறுதல் சொல்ல வேண்டும், சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும் அவ்வளவே.... அது ஒரு இளைப்பாறுதல்... அந்த இளைப்பாறுதலில் சக்தி திரட்டி மீண்டும் இலக்கினைத் தாக்கி அழித்து வெற்றி கொள்ள வேண்டும்.

இப்படி நிதானித்துக் கொள்ள மனிதர்கள் தோள்களைப் பெரும்பாலும் கொடுப்பதில்லை. அப்படி கொடுப்பதற்கு லெளகீகம் இடம் கொடுப்பதில்லை. ஏனெனில் எல்லோரும் தன்னைக் காத்துக் கொள்ளும் ஓட்டத்தில் இருக்கிறார்கள். இப்படியான சூழல்களில் கடவுள் என்ற ஒரு கற்பனா மாய சக்தி ஆறுதலாய் இருக்கிறது. இதற்காக பல நேரங்களில் இந்த மாயா சக்தியை நான் தோள் சாயும் இடமாக நினைத்து சாய்ந்து இளைப்பாறி முழு மூச்சுடன் போராடி என் அளவில் வென்றிருக்கிறேன். இது ஒரு மாதிரி போலியாய் ஒரு ஆதரவை மனதளவில் வடித்துக் கொண்டு இளைப்பாறி மீண்டும் போராட நான் வைத்திருக்கும் யுத்தி.

மற்றபடி எப்போதும் கட்டுக்கள் கடந்த ஒரு சுதந்திர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தீராக்காதலோடுதான் நகர்ந்து கொண்டிருக்கிறேன். என் கண் முன் இருப்பது கடவுள் இல்லை. வாழ்க்கை. அந்த வாழ்க்கையை தீரத் தீர வாழ நான் யாரென்று முதலில் உணர வேண்டும். பொருளை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் எப்படி அதை அனுபவிப்பது? நான் என்னை அறிந்தால்தான் என் வாழ்க்கை சிறக்கும்.

நான் யாரென்று அறிய சப்தங்கள் எனக்கு உதவியதில்லை. அவை எப்போதும் என்னைப் புறம் நோக்கி வேறு மையத்திற்கு அழைத்துச் சென்று என்னை ஏமாற்றி விடும். என்னை உணர முடியாது. இதற்காகவே தனித்து அமர்ந்து என் பேச்சுக்களை நிறுத்தி மூச்சினை உற்று நோக்குகிறேன். சுவாசம் பார்க்க பார்க்க சிந்தனைகள் புறம் நோக்கிச் செல்வது தடைப்படுகிறது. புறம் செல்லாத சிந்தனைகள் மெல்ல புத்திக்குள் வலுவிழந்த ஒரு புலியாய் மெல்ல மெல்ல அயர்ந்து கால் நீட்டிப் படுத்துக் கொள்கின்றன.

சீரான வேகத்தில் பிராணன் உட்சென்று வெளி வருகையில் முதுகுத்தண்டு நிமிர்ந்து கொள்கிறது. உடல் நேராகிறது. ஒரு மாதிரி அப்பளத்தை நொறுக்குவது போல உள்ளுக்குள் ஏதேதோ உடைகிறது. மெளனமான சாட்சியாய் நான் என்னும் ஒரு உணர்வு மட்டும் எஞ்சியிருக்கிறது. செத்துப் போன நினைவுகள் இருந்த இடமே தெரியவில்லை.

இந்த நிலை ஒரு சிறிய அகல் விளக்கு மெலிதாய் எரியும் போது ஆடாமல் அசையாமல் எரிவதை ஒத்து இருக்கிறது. எனக்குள் ஏதோ ஒரு உணர்வு சட்டென்று தாயின் அருகாமையை உணரவைக்கிறது. பட்டென்று ஒரு தாயின் வாசத்தோடு கருப்பைக்குள் இருந்த கதகதப்பான சூழலை உணர முடிகிறது. நான் என்னும் உணர்வு சுகமாயிருக்கிறது. மிக பாதுகாப்பாய் இருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில் உடலின் சக்தி செலவாவது நின்று போய் எல்லா சுரப்பிகளும் தன்னைத் தானே சுத்திகரித்துக் கொண்டு உடலின் இரத்த ஓட்டம் சீராய் நகர்கிறது. இதயம் சீராய் துடித்து என் இரத்த ஓட்டத்தை சரியாய் நடத்த, நடத்த புத்திக்குள் பரவிக் கிடக்கும் பிராணன் சக்தியாய் மாறி ஒரு வலுவினை உடலுக்குக் கொடுக்கிறது.

நான் என்னும் உணர்வும் உடம்பும் தனித்தனியே பிரிந்து நின்று புற உலகின் பிரச்சினைகளை பார்க்கும் போது வெளியே ஒன்றுமே இல்லை. அவை வெறும் காலி பாத்திரமாய் மட்டுமே இருக்கிறது. பிரச்சினை என்பது வெளியில் இல்லை, நமது புத்தியில்தான் என்று உணர முடிகிறது.

மெளனத்தோடான நீண்டதொரு மெளன சம்பாஷனையில் எண்ணமற்ற இடத்தில் எனக்கு ஒரு தோள் கிடைக்கிறது. அந்த தோளாய் நானே இருக்கிறேன். பிரச்சினைகளின் சூட்சுமங்களை அறுக்கும் தெளிவுகள் மெல்ல மெல்ல எனக்குள் பிறக்க, பிறக்க மீண்டும் புத்திக்குள் ஓய்வாய் படுத்துக் கிடக்கும் சிந்தனைப் புலி சீறிக் கொண்டு எழுகிறது. மெல்ல விழிகள் திறக்கிறேன். சக்தி நிறைந்தவனாய் என்னை உணர்கிறேன்.

வாழ்க்கையின் அடுத்த நகர்விற்கு என்ன செய்ய வேண்டும் என்று என்னுள் காய் நகர்த்தி எனக்குள் திட்டமிடுகிறேன். மெல்ல தியானமென்ற நானே நானாய் இருக்கும் நிலை கடக்கிறேன். ஒரு வெள்ளைப் பேப்பரில் பென்சிலால் என்ன, என்ன செய்ய வேண்டும் என்று எழுதுகிறேன். ஆக்சன் பிளான் தயார் செய்து அதை செயற்படுத்த அந்தக் கணத்திலிருந்து தொடங்கி என் திட்டமிடலை நகர்த்துகிறேன்.

கடவுள் என்னை சோம்பேறியாக்கவில்லை, தியானம் என்னை முட்டாளாக்கவில்லை, தேடல் என்பது வெட்டிப் பேச்சு அல்ல, நான் என்ற அகங்காரம் கொண்ட கொக்கறிப்பு அல்ல....தேடலும் தன்னை உணர்தலும் வாழ்க்கையை முழுமையாய் வாழ்பவர்களுக்கான வழிமுறை. மிகக்கூர்மையாக ஒரு தானியம் பொறுக்கும் குருவியைப் போல எனக்கான வாழ்க்கையை கோப்பையிலிருக்கும் பழரசமாய் விரும்பி, அணு அணுவாய் ரசித்து அருந்துகிறேன்.

ஆமாம்...நான் வெற்று நம்பிக்கைகள் கடந்த தன்னம்பிக்கை கொண்ட வாழ்க்கையில் இருக்கிறேன். எது இருக்கிறதோ இல்லையோ....இப்போது என் கண் முன் எனக்கான வாழ்க்கை இருக்கிறது. ஒரு நிமிடமோ, ஒரு நாளோ அல்லது ஒரு வருடமோ .......

அது எனக்குத் தெரியாது ஆனால் இருக்கும் வரை தீரத் தீர என் வாழ்க்கையை வாழ்ந்தே தீருவேன்...! வெறும்அறிவை மட்டும் வைத்து கொண்டு வாழ்க்கையைத் தோற்க விரும்பவில்லை மாறாக அறிவால் வாழ்க்கையை வென்று அதை ரசிக்கவே விரும்பிகிறேன்.

ரசித்து ரசித்து அந்த ரசனை கொடுக்கும் நிறைவில் நிகழப் போகும் என் மரணம் கூட ரசனையானதுதான்....!

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா....!!!!!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா......!


தேவா. S


Wednesday, December 28, 2011

எழுத்துக்களால் ஒரு போர்....!ஆழமான எண்ணங்களும், தீராத வேட்கைகளும் கருத்து வடிவத்தில் இருந்து வெளிப்பட்டு எழுத்தாகிறது, வாய்ப்புக்களின் அடிப்படையில் பேச்சாகவும் அது உருக்கொள்கிறது. சக்தி வடிவமான எழுத்துக்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தை வரலாறு எப்போதும் தகர்த்தெறிந்து கொண்டே தனது நகர்வினை ஆக்கப்பூர்வமான விளைவுகளாய் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

சமூகம் என்ற கட்டமைப்பில் சேவைகள் அல்லது வழிகாட்டுதல்கள் காலம், காலமாக பல்வேறு தரப்பட்ட சமூகச் சூழல்களில், பல பரிமாணங்களில் மனிதர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. சமூக இயங்கு நிலையில் அறிவூட்டும் மனிதர்கள் எல்லோருமே ஒரு மேல் தளத்தில் நின்று கொண்டு தனக்கு கீழிருக்கும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு போதனையைச் செய்வதையும், சமூக விழிப்புணர்வு மற்றும் சேவை என்ற பெயரில் புறத்தில் செயல்கள் செய்து, மனிதர்களே...! பின்பற்றுங்கள் என்று அறைகூவல் விடுப்பதையும் தனது வழமையாக கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி காலம் கடந்து நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம். அவலங்கள் தீர்ந்து விட்டதா? நாம் பேசிய வார்த்தைகள் எல்லாம் மனிதர்களுக்குப் புரிந்து விட்டதா? அன்பையும் சகிப்புத்தன்மையும் போதிக்கும் தேசங்கள் கொன்றழித்த மனித உயிர்கள் எத்தனை கோடிகள்?

பின்பற்று என்று சொன்னவன்...முதலில் பின்பற்றினானா?

அயலானை நேசி, அயலானை நேசி, என்று கூறி மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன புனிதனை பின்பற்றுகிறேன் என்று கூறிக் கொள்ளும் ஏகாதிபத்திய அமெரிக்காதான் இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் முதல் பயங்கரவாதி என்பதை நீங்களும் நானும் மறுக்க முடியுமா? அன்பைப் போதித்த புத்தனையும், அகிம்சையைப் போதித்த மகாத்மாவையும் பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் இந்தியாவும், இலங்கையும் ஈழத்தில் போட்டிப் போட்டு அழித்த உயிர்கள் எத்தனை ஆயிரங்கள்...?

ஏன் இவர்கள் மன்னிக்கவும், மறக்கவும் அன்பைப் போதிக்கவும் அறியப் பெறாதவர்களா என்ன? தர்மம் என்று மானுடர்கள் கூறிக் கொள்வது யாதுமே தங்களின் வசதிகளைத்தானே அன்றி பொதுவான உண்மைகளை அல்ல...! ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மனிதனும் தங்களின் தர்மங்களை தாங்களே வரையறுத்துக் கொண்டு அவற்றுக்கு சட்டமென்ற பெயரிட்டுக் கொண்டு அவற்றை நிலை நாட்டவே முயன்று கொண்டிருக்கின்றன.

மனிதர்களிடம் கட்டளைகள் பிறப்பிப்பதும், இப்படி நீங்கள் இருக்க வேண்டும், அப்படி நீங்கள் இருக்க வேண்டும் என்று போதிப்பதற்குப் பெயர்தான் விழிப்புணர்வா? அல்லது மனிதர்களுக்கு அறிவுரைச் சொல்வதும் தன்னையே பின்பற்ற வேண்டும் என்பன போன்ற கண்ணுக்குத் தெரியாதா மனோவசியக் கட்டுக்களைக் கொண்டு கட்டுவதுதான் விழிப்புணர்வா..?

உண்மையிலேயே சமூகத்துக்கு சொல்லும் கருத்துக்களை முதல் நாம் பின்பற்றுகிறோமா?

...என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, எம்மைச் சுற்றி வாழ்க, ஒழிக கோசங்களும் நீங்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி செய்யக் கூடாது, இவர்தான் பின்பற்றப்பட வேண்டியவர், அறிவியல் உண்மை இது, ஆன்மீக உண்மை இது, இப்படியான பயன்பாடுகளை பின்பற்றுங்கள், அவர் தவறு செய்து விட்டார், இவர் இப்படி இயங்குகிறார்? உலகம் கெட்டு விட்டது வாருங்கள் போராடுவோம்....

என்றெல்லாம் இடைவிடாத சப்தங்கள், சப்தங்கள்....ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படியான கவனித்தல்களில் எமது மூளையின் செல்களை உலுப்பி விட்டு ஆழமாய் யோசித்து பார்க்கையில் " எல்லோருமே நல்லவர்களாய் இருக்கிறார்களே....? எல்லோருமே மனித நேயத்தைப் பற்றியும், சத்தியத்தையும், உண்மையைப் பற்றியும் பேசுகிறார்களே...? யார்தான் கெட்டவர்கள்" என்று எம்முள் எழுந்த கேள்விக்கு பதில்கள் கிடைக்காமல்...திணறத்தான் வேண்டியிருந்தது.

புறத்தில் மனிதத்தேவைகளை நாம் பூர்த்திச் செய்ய முயல்வதும், சமூக சேவைகள் மூலம் மனிதர்கள் ஒரு நல்ல நிலையை எய்தவேண்டும் எண்ணுவதும் நிஜமான புறத்தேவை அல்ல....அது ஒவ்வொரு மனிதனும் தனது தன்முனைப்பை (ஈகோ) சரி செய்து கொள்ள, தான் நல்லவன் என்று காட்டிக் கொள்ள, மேலும் தன்னை தானே திருப்திக் கொள்ளச் செய்யும் ஒரு நிகழ்வாகவே இன்றைய சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், இயக்கங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன என்பதை மனோதத்துவ ரீதியாக அறியவும் முடிந்தது.

கோடணு கோடி சூரியக் குடும்பங்களைக் கொண்ட இந்த அண்ட சராசரத்தில் இந்த எழுத்துக்களை எழுதிக் கொண்டிருப்பவன் ஒரு தூசு. தூசினை விட மிக நுணுக்கமான ஒரு துரும்பு. நான் என்னை திருப்தி செய்து கொள்வதற்காக உங்களுக்குப் போதிக்கிறேன் என்பதுதான் ஆழமான உண்மை என்றாலும் கூட....

மனிதர்களுக்கு புறத்தில் புகட்டும் பாடங்களால் மட்டுமே எந்த விதமாற்றத்தையும் உருவாக்கி விட முடியாது. மாற்றம் என்பது மனித மனங்களுக்குள் தன்னிச்சையாக நிகழ வேண்டிய ஒன்று. நாம் செய்யவேண்டியது எல்லாம் அப்படியான நிகழ்வு நிகழ எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் செய்வது. அப்படிச் செய்ய "தான்" என்ற அகங்காரம் தேவையில்லை, நான் திருத்தி விட்டேன் அல்லது திருந்த கூறிவிட்டேன் என்ற மமதை தேவையில்லை....மெளனமாய் மனிதர்களை சிந்திக்கவைக்க...உண்மைப் பொருளை உணரவைக்க, மனிதர்களின் உணர்வுகளை உள்நோக்கித் திருப்பி விட்டு....

தன்னைப் பற்றியும், தனது வாழ்க்கையைப் பற்றியும், எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்கிறோம்...? இடையில் ஏன் இவ்வளவு அல்லகள் என்பன போன்ற கேள்விகளை ஒவ்வொருவரும் தத்தம் புத்திகளுக்குள் தானே கேட்டுக் கொள்ளவேண்டும்...! இப்படி கேட்டு கேட்டு கேள்விகள் எல்லாம் மொத்தமாய் மறையும் போது பதிலாய் இவர்களுக்குள் பிறக்கும் உண்மையே ஒரு சரியான வழிகாட்டி.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது புத்திக்குள் ஒரு பறவை ஒன்று அக்னிக் குஞ்சாய் மெல்ல கண்விழித்து, பின் சிறகசைத்து, மெல்ல தத்தித் தத்தி வெளியே வந்து தடுமாறி நடந்து, பின் மெல்லச் மெல்ல சிறகடித்து எல்லைகளில்லா வானத்தில் பறக்க ஆரம்பித்தது.....

அந்தப் பறவைதான் கழுகு

கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு வலைத்தளமும் கழுகு குழுமமும் உருவாக்கப்பட்டதின் அடிப்படை நோக்கமே இதுதான். யாரும், யாருக்கும் நல்லது சொல்லி விட முடியாது. சூழலின் அடிப்படையில் நன்மை, தீமைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன....பொதுவான உண்மைகளை தத்தம் மனசாட்சிகளின் படி விளங்கிக்கொண்டு உதவுதலையும், தெளிவுகளை நோக்கி நகர்தலையும் உங்களின் இயல்பாக்கிக் கொண்டு சாட்சியாக நில்லுங்கள்....என்பதே கழுகின் கூற்றாக இருக்கிறது.

சமுதாயச் சிக்கல்களைத் தீர்க்க இந்தக் கணத்தில் நீங்களும் நானும் பொறுப்பான மனிதர்களாக மாறுவது இன்றியமையாததாகிறது. பொருள் இல்லாமல் அல்லல்படும் ஏழைகளுக்கு பொருளால் உதவுதல் என்பது ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை நாம் அறிந்திருக்கும் அதே நேரத்தில் அவர்களின் ஏழ்மைக்கு, தன்னைப் பற்றியும் தனது சமூக சூழல்கள் பற்றியும், கால ஓட்டத்தில் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் எப்படி தங்களை நிலை நிறுத்திக் கொள்வது என்பது பற்றியும் சரியான புரிதல் இல்லாமையே காரணம் என்பதையும் நாம் உணராமலில்லை...

நெப்போலியன் ஹில் என்னும் ஆங்கில எழுத்தாளர் தனது சக்ஸஸ் த்ரூ எ பாஸிட்டிவ் மென்ட்டல் அட்டிடியூட் என்ன்னும் புத்தகதில் ஒரு ஏழைத்தாய் தன் மகனான சிறுவனிடம் சொல்வது போலச் சொல்வார்....

" நாம் ஏழைகளாக இப்போது இருப்பதற்கு காரணம் கடவுள் அல்ல, நாம் இப்படி இருப்பதற்கு காரணம் நமது முன்னோர்கள் ஒரு போதும் செல்வந்தராய் வாழ ஆசையையும் அதற்கான உழைப்பையும் செய்ததே இல்லை. அதனால் இன்று நீ அப்படி ஆசை பட்டு உழைத்தால்....நாளை நாம் ஏழைகளாக இருக்க மாட்டோம்...."

இந்தப் புரிதலை தான் நாம் விழிப்புணர்வு என்கிறோம். செயல்களை செம்மையாக செய்யாமல் விதியை நொந்து என்ன பயன் என்று யோசித்துப் பாருங்கள்?

கல்வி இல்லாதா வீடு இருண்ட வீடு என்ற பாவேந்தர் கூறியிருக்கும் விடயத்தை கழுகு தனது மையக்கருத்தாய் கொண்டிருப்பதோடு கல்வி என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து படித்து காகிதங்களில் பட்டயம் பெரும் ஒரு நிகழ்வல்ல...கல்வி என்பது வாழ்க்கையினூடே நின்று எல்லா சூழல்களையும் கவனித்து உள்வாங்குதல் மற்றும் புதுப் புது விடயங்களைத் தேடி அறிதல் என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருக்கிறது.

கழுகு என்னும் சமூக விழிப்புணர்வு தளம் மற்றும் இதன் குழும உறுப்பினர்கள் யாரும் யாரையும் வலுக்கட்டாயப்படுத்தும் நிகழ்வுகள் இல்லாமல் அறிவுத் திணிப்புசெய்யாமல், ஆரவாரம் இல்லாமல் எம்மைச் சுற்றிலும் ஓராயிரம் மனிதர்களைச் மெளனமாய் சிந்திக்க வைத்திருக்கிறோம். இணையத்தை வாசிக்கும் எத்தனையோ மனிதர்களை நோக்கி எமது கருத்துக்கள் சென்று புத்திகளில் படிந்து கொண்டே இருக்கின்றன. இதன் மாற்றங்களையும் நாம் கவனிக்காமல் இல்லை...

கழுகு என்பது ஒரு அடையாளமே அன்றி அது ஒரு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் நிறைந்த ஒரு அடைபட்ட இடம் அல்ல. வெட்டவெளி வானில் எப்படி ஏகாந்தமாய் சிறகடித்து கழுகு பறக்கிறதோ அப்படியாக கழுகின் கருத்துக்களை பல்வேறு வடிவங்களின், பல்வேறு பெயர்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு மனிதர்கள் வழங்கலாம்...! அவர்கள் அனைவரையும் சேர்த்து உள்ளடக்கிய ஒரு உணர்வு திரட்சிதான் கழுகு...!

கழுகின் பக்கங்களை ஒரு முறை கண்களால் உரசிவிட்டுச் செல்பவர்களின் மூளைகளை எல்லாம் நெருப்பாய் கழுகு பற்றிக் கொள்ளத்தான் செய்யும். ஒன்று நாங்கள் செல்லும் வழிமுறை சரி என்று ஆதரித்து அதை பின்பற்றச் செய்யும் அல்லது இம்முறை தவறு என்று கூறி வேறு ஏதேனும் புதிய வடிவங்களில் சமூக விழிப்புணர்வையும் சேவைகளையும் மனிதர்களைச் செய்ய வைக்கும், செய்ய வைத்திருக்கிறோம்.

அறிவின் மாற்றங்களை யாராலும் சுட்டிக்காட்ட முடியாது அவை உணர்வுப் பூர்வமானவை. மாற்றங்கள உருவாவதற்கான காரணிகளை எம்மைச் சுற்றிலும் எதிர்ப்படும் மனிதர்களிடம் தவறாமல் நாம் விதைத்துக் கொண்டே இருக்கிறோம். செயலினைச் செய்து விட்டு விளம்பர பலகைப் பிடிக்கும் ஒரு மரபினை கழுகு கொண்டிருக்கவில்லை. நான் செய்தேன் என்று கூறுவதில் இருக்கும் அறியாமையை நாம் தெளிவாக உணர்ந்தே இருக்கிறோம்.

மாற்றங்களினால் விளையும் நன்மைகளின் பலன்களால் விடியப்போவது எமது சமுதாயத்தின் விடியல், பெறப்போவது எமது மக்களின் இன்னலில்லா வாழ்வு... என்ற மிகப் பரந்த நோக்கோடு சிறகு விரித்திருக்கும் கழுகு மற்றும் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்களை, மனிதர்களை மற்றும் அமைப்புக்களை யாராலும் எக்காலமும் அழிக்க முடியாது.

சமூக நீதிக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரும் கழுகின் பிம்பங்களே...! கழுகு என்னும் உணர்வு குழுமமாக நின்றும், குழுமத்திற்கு வெளியேயும் பரவிக் கொண்டுதான் இருக்கும், இது தனிமனித விருப்பமில்லை....நன்மமையை விரும்பும், ஒட்டு மொத்த சமுதாயத்தின் தேடல்...!

நாம் விதைக்க நினைக்கும் விதை சில நேரங்களில் வாங்கும் நிலத்திற்கு ஏற்றார் போல பல நேரம் முளைத்து செழித்தும், சில நேரம் கருகி வளராமலும் போய் விடும். வளர்ந்த செடிகளுக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு, முளைத்து வராத நிலங்களை நாம் சப்தமில்லாமல் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறோம்...

காலங்கள் கடந்தும் எம் மனிதர்கள் இச்செயலை இப்புவியெங்கும் செய்து கொண்டேதான் இருப்பார்கள்....என்பது மட்டும் உறுதி.....!

பல முறை கழுகு பற்றி பேசியிருந்தாலும், மீண்டுமொருமுறை கழுகு பற்றி பேச இந்த தமிழ்மண மேடை எனக்கு உதவியிருக்கிறது...அதற்கு எனது பிரத்தியோகமான நன்றிகளைத் தெரித்துக் கொள்வதோடு ....

நெஞ்சார்ந்த என் உறவுகளுக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்...!

கழுகு பற்றி அறிய இங்கே அழுத்தவும்...!

கழுகு விவாதக் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்...!


தேவா. S


Tuesday, December 27, 2011

உன்னால் முடியும் தம்பி....!ஒரு கட்டுரை எழுதி அதன் தாக்கம் மனசு முழுக்க இருக்கும் போது டக்குன்னு இன்னொரு டாப்பிக்குள்ள தாவிப் போறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. கொஞ்சமா பொட்டுக் கடலை வாங்கி வீட்டு வாசல்ல உட்கார்ந்து சாப்டாலும் அனுபவிச்சு சாப்பிடணும்.... பரக்கா வெட்டி மாதிரி லபக் லபக்க்னு அள்ளி வாய்ல போட்டுட்டும் போகலாம்... ஆனா அனுபவித்தல் அப்டீன்றதுலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யமே இருக்கு...

சந்தோசத்தை மட்டும் அனுபவிக்கணும் அப்டீன்னு ஒரு வரைமுறை எல்லாம் கிடையாதுங்க. கஷ்டத்தைக் கூட அணு அணுவா அனுபவிச்சுக்கிட்டே ஒரு சிங்கம் மாதிரி வரப்போற பிரச்சினைகளை எதிர் நோக்கி நேருக்கு நேரா.......அதை நாம சந்திக்கிற இடமே ரொம்ப தில்லான இடம்தான். வலிக்கும்தான்.... ஆனாலும்....பரவாயில்லைன்னு சொல்லிட்டு வா....பிரச்சினையே வா....நான் ரெடின்னு பிடறி மயிர் சிலிர்க்க நிக்கணும்....

கல்லூரி முடிச்சு அடுத்த கட்டம் அதாவது ஒரு வேலைக்கு போறதுக்கு முன் இருக்கும் காலங்கள் எவ்வளவு வலியானதுன்னு அதை அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும். நூறு பேருல இருபது பேர் நல்லா படிச்சு மெரிட்ல மார்க் வாங்கி சப்ஜக்ட் நாலேஜோட வேலைக்கு சேர்ந்துடுறாங்கன்றத ஒரு உதாரணமா வச்சுக்கிட்டு மிச்ச இருக்குற 80 பேர்களை பத்தி கவலைப்படாம இருந்துடாதீங்க....

அதுவும் என்னைய மாதிரி கிராமப்புற மாணவர்கள் பிளஸ் டூ வரைக்கும் தமிழ் மீடியம் படிச்சுட்டு, கிரமாப்புறத்துல இருக்குற ஒரு கல்லூரிக்குள்ள அடி எடுத்து வச்சு....நானும் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்டான்னு திமிரா ஒரு டெஸ்க்ல உட்கார்ந்து தலை நிமிர்ந்து பார்க்கும் போதுதான் எதித்தாப்ல புரபசர் ஆங்கிலத்திலேயே காச் மூச்சுனு ஒரு மாதிரியான தமிங்கிலீஸ்ல பாடம் நடத்தி அப்புறமா ஆங்கிலத்துல நோட்ஸ் கொடுக்கும் போது அதை எழுதக் கூட கை வராம தடுமாறி நிக்க வேண்டியிருக்கும்....! எழுதும் போதே ஒண்ணும் புரியாம இருக்கும் போது அதை புரிஞ்சு எப்டி படிக்கிறது?

பொட்ட தட்டுன்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி பொட்டை தட்டு தட்டி வார்த்தை வார்த்தையா மனசுல வச்சி, பக்கத்துல இருக்குற பேப்பர பாத்து காப்பி அடிச்சு, பிராக்டிகல்ல பாஸ் பண்ண டிப்பார்ட்மெண்ட் எச்.ஓ.டில இருந்து அட்டென்டர் வரைக்கும் பயந்து பயந்து வழிஞ்சு வழிஞ்சு ஒரு வழியா பட்டப் படிப்பை முடிச்சுட்டு வெளில வந்தா...

மிடில் கிளாஸ் மாணவர்களுக்கு எதிரா காலம் பொருளாதாரத் தேவையா விஸ்வரூபமெடுத்து நிற்கும். வீட்ல இருக்க பெரியவங்க எல்லாம் ஏதாச்சும் ஒரு வேலை வெட்டிக்குப் போப்பான்னு சொல்லிடுவாங்க அப்டி அவுங்க சொல்றதுக்கு காரணம் பையன் டிகிரி படிச்சுட்டான்ல.... எம்புட்டோ கஷ்டப்பட்டு நாம படிக்க வச்சுட்டோம்னு ஒரு மலைப்பு அவுங்களுக்கு....

ஒரு கிராமப்புற மாணவனுக்கு இங்க ஆரம்பிக்குதுங்க வாழ்க்கையோட சவால்..! நல்ல நேரத்துக்கு சரியா வழிகாட்ட ஆள் இருந்தா சரி அடிச்சு பிடிச்சு அவன் ஏதோ ஒரு கரையை அடைஞ்சுடுவான். இல்லையின்னா ஏதோ ஒரு வேலையை பக்கத்துல இருக்குர கடை கண்ணியில சேந்து பாத்து அவன் படிச்ச படிப்பை எல்லாம் மாசம் வாங்கப் போற அந்த வருமானத்துக்கிட்ட அடகு வச்சுட்டு கேரியர் அப்டீன்ற தன்னோட வாழ்க்கைத் தரத்தையும் அப்புடியே பொசுக்கிக்கிடுவான்...! உதாரணமா என் கூட காலேஜ்ல படிச்ச பசங்க நிறைய பேரு ஒரு குறிப்பிட்ட வேலைகளையே தேடிக்கிட்டு ஒரு மட்டத்துக்குள்ளேயே ஒரு வட்டத்துல மாட்டிகிட பெரிய காரணமா இருந்தது என்னனு தெரியுங்களா?

நகரத்து வாழ்க்கையில் வந்து ஒரு பேப்பரை பார்த்து ஒரு வேலைக்கு அப்ளை பண்ணி இன்டர்வியூக்கு போயி அதுல ஜெயிச்சு மேல வர்ற அளவுக்கு அவனுக்கு தன்னம்பிக்கையை அவன் படிச்ச கிராமப்புற சூழலும், கல்லூரிகளும் கொடுக்காததும் ஒரு காரணம்... நகரத்துல இயங்கிக்கிட்டு இருக்குற கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தேவையான நுனிநாக்கு ஆங்கிலம் தெரியாததும் ஒரு காரணம்.

சென்னை மாதிரி ஊர்ல வளரக்கூடிய பிள்ளைகளின் சூழலும், பெற்றோர்களின் வசதியும் எப்டியோ அவர்களை ஒரு மாதிரியான சம கால வாழ்க்கைக்குப் பயிற்றுவித்து கொஞ்சம் தன்னம்பிக்கையாவே வச்சுதான் இருக்கு. கிராமப்புற கல்லூரியில படிச்சு முடிச்சுட்டு நகரத்துக்கு வர்ற பையன்கள் நகரத்துல இருக்குறவங்கள முதல்ல மனோதத்துவ ரீதியாவே எதிர் கொள்ள முடியறது கிடையாது.

இதுக்கு முக்கிய காரணமா எனக்கு ஆங்கிலம் சரியா பேச வராது அப்டீன்ற ஒரு குற்ற உணர்ச்சியும், படிச்சு வளரும் போதே வறுமையையும் வீட்டுச் சூழலையும் மனசுக்குள்ள ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுக்கிட்டு அந்த மனோநிலையிலேயே தங்களின் படிப்புக்களை முடிப்பதுன்ற மாதிரி காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ப்ரஷ் கேன்டிடேட்டா சென்னைக்கு வேலை தேடி வர்றவங்கள அவுங்கள மாதிரியே வேலை தேடி வந்து கொஞ்சம் கஷ்டம் நஷ்டம் பட்டு ஒரு வேலையில இருக்கவங்க ஆதரிச்சு தானே அவுங்களை மோட்டிவேட் செய்யணும்...? ஆனா பெரும்பாலும் அப்டிசெய்ய மாட்டாங்க,

....எவ்வளவு மட்டம் தட்டணுமோ அவ்வளவு மட்டம் தட்டி, அவுங்க கத்துக்கிட்ட ஆங்கில அறிவையும் நகரத்து பகட்டையும் வச்சுக்கிட்டு அவுங்க மேல பாய்வாங்க..., நீ ஏன் இது படிச்ச? அது படிச்சு இருக்கலாம்ல? ரொம்ப கஷ்டம்டா உனக்கு வேலைக்கிடைக்கிறதுன்னு எல்லாம் சொல்லி ஏற்கெனவெ நொந்து நூடுல்ஸா இருக்கவன இன்னும் டேமேஜ் பண்ணுவாங்க...

இந்த உலகத்துல ஜெயிச்சவங்க அத்தனை பேரும் தன்னை மாதிரியே இன்னொருத்தன் வர்றதுதான் வெற்றின்னு நினைச்சு அவுங்க என்ன வழிமுறைகளைப் பின்பற்றினாங்களோ அதையே அடுத்தவன் செய்யாமல் இருந்திருந்தா..... நீ வேஸ்ட்டுடான்னு ஒத்தை வார்த்தையில் சொல்லிட்டுப் போய்டுவாங்க. இப்டி சொல்றவங்களாச்சும் பரவாயில்லை ஒரு வகையில் சேத்துக் கிடலாம் ஆனா இன்னும் சில பேர் புதுசா வேலை தேடுறவங்க கிட்ட பேசக் கூட மாட்டாங்க, ஏதாச்சும் அறிவுரை சொல்லி நல்லதா வழிகாட்டிட்டா அவுங்க பேங்க் பேலன்ஸ் கொறைஞ்சு போயி அவுங்க கவுரமும் போயிடும் பாருங்க..

நான் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தப்ப, கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் படிச்சுட்டு சிங்கப்பூர்ல நல்ல வேலை பார்த்துகிட்டு இருந்த சொந்தக்கார புண்ணியவான் ஒருத்தர் எங்க அப்பாகிட்ட சொல்லி, ஒங்க பையனையும் சேத்து விடுங்க..... ஒழுங்கா கம்ப்யூட்டர் படிச்சு முன்னுக்கு வரட்டும்னு சொன்னதுக்காக என்னையை கொண்டு போய் தி.நகர்ல இருக்குற கம்ப்யூட்டர் சாப்ட்வேர் காலேஜ்ல பிஜிடிசிஏன்னு ஒரு கோர்ஸ் இருக்கு இதை படின்னு சேத்து விட்டுட்டாங்க...

கெமிஸ்ட்ரி படிச்ச கழுதை அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஏசி ரூமும், கூட படிக்கிற பட்டணத்து நாகரீக பொம்பளைப் புள்ளைகளையும் பெருசா நினைச்சுகிட்டு கம்ப்யூட்டர் படிக்க ஆரம்பிச்சுது.....! படிச்சு முடிச்சுருச்சு கழுதை என்ன பண்ணும் அடுத்து? கம்ப்யூட்டர் படிக்க சேத்து விட்டப்ப அது கேள்வி கேட்டு இருக்கணும்? இல்லை யாரச்சும் புத்தி சாலிங்க கேள்வி கேட்டு இருக்கணும்.... கெமிஸ்ட்ரில பட்டம் வாங்கினவன் ஏன் கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணனும்னு ......கேக்கலையே...கேக்கவும் தோணலையே!!!?

கம்ப்யூட்டர் கோர்ஸ்ல டிப்ளமோ வாங்கிட்டு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம சென்னை மெளன்ட்ரோட்ல வேலை தேடி அலைஞ்சு இருக்கேன்.! எத்தனையோ பேரு மட்டம் தட்டி பேசி இருப்பாங்க...? எத்தனை இன்டர்வியூல கம்யூனிகேசன் ஸ்கில் சரி இல்லைனு சொல்லி திரும்ப விரட்டி இருப்பாங்க....தெரியுமா?

திமிரா காலேஜ் முடிச்சுட்டு என்னைய மாதிரி வெளில வர்ற எல்லாப் பயலுகளையும் வாழ்க்கை சட்டைய பிடிச்சு தர தரன்னு இழுத்துட்டுதாங்க போகும்....! யாராச்சும் ஒருத்தன் இல்ல ரெண்டு பேரு கண்ணுக்கு எட்டுன தூரத்துல இருப்பாங்க அவுங்க நமக்கு ஆறுதலா பேசி மோட்டி வேட் பண்ணுவாங்க..அப்டி இருக்கவங்களை நாம சந்திக்கிறது கூட நம்ம லக்குதானுங்க...

உலகம் கைய மடக்கிக்கிட்டு நம்ம மொகரைக்கட்டையில குத்துறப்ப நாம நம்ம வீட்டை பாத்து அழுகமாட்டாம நின்னமுன்னா, வீடு சொல்லும் நீதான் டிகிரி படிச்சு இருக்கேல்ல.......அப்புறம் என்ன பயம்..? வேற என்னாத்த நீ படிச்சு கிழிச்ச? ஒனக்கு தண்டக்கருமாந்திரமாத்தான் நான் மூணு வருசமா அழுதிருக்கேனான்னு சொல்லும்....

நமக்கு பிடிச்சதை எதையும் செய்ய விடாம அவுங்களுக்குப் பிடிச்சதையா நமக்கு சொல்லிக் கொடுத்துட்டு.....நாக்கப் புடுங்குற மாதிரி கேள்வியும் கேப்பாங்க...! ஆக மொத்தம் எல்லா சூழலும் சேந்து நையப்புடைக்க....

சராசரியா ஒரு பி.ஏ, பி.எஸ்ஸி, பி.பி.ஏ, பிகாம் படிச்சுட்டு சென்னை மாதிரி ஊருகளுக்கு வர்ற கிராமப்புற பட்டதாரிகள் எல்லாம் திருவல்லிக்கேனியில ஏதாச்சும் ஒரு மான்சன்லயோ இல்லை தி.நகர்க்குள்ள ஏதாசு ஒரு வீட்டுல சைட் போர்சன்லயோ உக்காந்து கிட்டு ஹிண்டு பேப்பர்ல மார்க் பண்ணி பண்ணி ஒவ்வொரு இன்டர்வியுலயா போயி ....சாரி யுவர் கம்யூனிகேசன் ஸ்கில் ஹேஸ் டு பி இம்ப்ரூவ்ட்னு ஒரு பச்சை தமிழன் அங்க லாடு லபக்தாஸ்னு ஒரு போஸ்ட்ல ஒக்காந்து கிட்டு நம்மகிட்ட சொல்லி செம்படிச்சு திருப்பி விடுவான்....

காலக்கெரகம்தானே.....ஓரளவுக்கு இங்கிலீஷ் பேசுனா போதாதா துரைமாருகளா? இன்டர்வியூக்கு வர்ற பையன எப்டி மோல்ட் பண்ணலாம், அவன் புத்திசாலித்தனம் எப்டி இருக்கும்? எந்த ஊர்ல இருந்து வர்றான், அவனுக்கு கேப்பபிளிட்டி இருக்கான்னு எல்லாம் பாக்குறது கிடையாது. வெளிநாட்டுக்காரங்க வந்து போற இடங்களுக்கு ஆங்கிலம் தெரிஞ்சு இருக்கணும்னு ஒரு கட்டாயம் வச்சிக்கிடலாம் ஆனா....நம்மூர்ல இருக்க லண்டன்காரய்ங்க எல்லாம் நெல்லு அரைக்கிற மில்லுக்கு வேலைக்குப் போகணும்னா கூட.....ஸ்ட்ராங்க் கம்யூனிகேசன் ஸ்கில் வேணும்னு கேட்டுத்தொலைக்கிறாய்ங்க...

டெக்னிக்கலா படிச்சுட்டு அதுவும் ஐ.டில ஃபீல்ட்ல இருக்குற புள்ளைங்க எல்லாம் சீக்கிரமே சம்பாரிக்க வேற ஆரம்பிச்சு நல்ல நிலைக்கு டக்குனு போயி பீட்டர் மாமா, பீட்டர் மாமி ஆயிடுறாங்க... இவுங்களை பாத்து வேற நம்ம கிராமத்துப் புள்ளைங்க கடுமையா மெரண்டு போக ஆரம்பிக்குதுங்க... ஆரம்பத்துல மெரண்டு மெரண்டு தனக்குன்னு ஒரு பிளாட்பார்ம் கிடைச்ச உடனே இவுங்களூம் பீட்டர் மாமா ஆயிடுறாங்க....

ஆங்கிலம் என்பது அறிவு அல்ல அது ஒரு மொழி. சூழலின் அடிப்படையில், பழக்கத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற உண்மையை ஒவ்வொரு நிறுவனமும் உணர்ந்து அதற்காக இளைஞர்களை நிராகரித்தலை உடனே நிறுத்துதல் வேண்டும்.

நகரத்தில் படித்து, படித்த பெற்றோர்கள் மற்றும் விவராமான சூழலில் வளரும் பிள்ளைகளோடு போட்டி போட வரும் கிராமத்து இளைஞர்களை தொழில் நிறுவனம் நடத்துபவர்களும், கன்சல்டன்ஸி வைத்திருப்பவர்களும் பார்க்கும் கண்ணோட்டத்தில் மாறுபாடுகள் வேண்டும். ஒரு நகரத்து மாணவனோடு எந்த விதத்திலும் பொருத்திப் பார்த்து ஒரு சமமற்ற போட்டியை நடத்துதலை தவிர்க்க வேண்டும்.

நகர்ப்புற சூழலில் வாழும் பணக்கார யுவன்களூம் யுவதிகளும் தங்களின் வாழ்க்கை மிகவும் மேம்பட்டது என்ற ஒரு தலைக்கனத்தோடு தன்னோடு உடன் பயில வரும் அல்லது வேலை செய்யவரும் கிராமப்புற இளைஞர்களை அணுகும் போக்கை விட்டு விடத்தான் வேண்டும். எல்லாமே சுகமாய் எளிதாய் கிடைத்து நீங்கள் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறீர்கள்... ஆனால்

ஒரு கிராமப்புற மாணவன், வயலில் தன் தகப்பனுக்கு சோறு கொடுத்து விட்டு, வீட்டில் அம்மா பீய்ச்சிய பாலை பால் பண்ணையில் கொடுத்து விட்டு, வெறும் காலோடு ஓடி சோ கால்ட் நீங்கள் நாகரீகம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்க்கை தளத்திற்கு வருகிறான் என்பதை உணருங்கள்.

ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டலில் அரை குறை ஆங்கில அறிவோடு வேலைக்குச் சேர்ந்த என்னை அந்த பிரமாண்ட வரவேற்பரை பணி ஆரம்பத்தில் ஒரு ரவுடியாய் மிரட்டியது, உன் உச்சரிப்பு சரி இல்லை, உன் ஆங்கிலம் கேவலமாய் இருக்கிறது? நீ எந்த கான்வென்ட்டில் படித்தாய்? உன்னை யார் வேலைக்குச் சேர்த்தது? என்பது மட்டுமில்லாமல்....

யூ ஆர் நாட் பிட் பார் திஸ் ப்ரண்ட் ஆபிஸ் ஜாப்.......நாட் ஒன்லி திஸ்... அன்ட் தேர் இஸ் நோ அதர் ஜாப் அவைலபிள் இன் திஸ் ஹோட்டல்னு லாக் புக்கிலேயே எழுதி விட்டுச் சென்றது இந்த உலகம். காலத்தின் போக்கில் எல்லாம் மாறிப் போக அப்படி பேசியவர்களை எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக என் கண் முன்னாலேயே துரத்தப்பட்டார்கள். அறிவு என்பது நமது தெளிவேயன்றி அது ஒருக்காலமும் அகந்தை ஆகக்கூடாது...., அந்த தெளிவைக் கொண்டு நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் தெளிவைத்தான் காட்ட வேண்டும்.

வாழ்க்கையின் எல்லா காலக்கட்டங்களிலும் ஒருவருக்கு வழிகாட்டும் போது கர்வமற்று அதைச் செய்யுங்கள், தவறுகளை அன்பாய் சுட்டிக் காட்டுங்கள், இந்த பூமியில் எந்த மனிதரையும் காயப்படுத்தி விடாமல் கவனமாய் ஒரு விலை உயர்ந்த கண்ணாடிக் குடுவையைப் போல அவர்களைப் பாவியுங்கள்..

...என்று கேட்பதோடு மட்டுமில்லாமல் வேலை வாய்ப்புக்களுக்காய் நகரம் நோக்கி வரும் கிராமப்புற மாணவர்களை ஆங்கில அறிவில்லை என்று ஒதுக்கி விடாமல் அவர்களின் திறமை மற்றும் புரிந்து கொள் தன்மை, மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றின் அடிப்படையில் வணிக நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....என்ற வேண்டுகோளையும் இந்தக் கட்டுரை வைக்கிறது!

நாளைய இந்தியாவை ஊக்குவிப்புக்களால் உருவாக்குவோம்....!
தெளிவான சமுதாயத்தின் சரியான வழிகாட்டிகளாவோம்...!

எழுக எம் இளைய இந்தியா...!

தேவா. S

Monday, December 26, 2011

வானம் பார்த்த பூமி....!காலத்தின் ஓட்டத்தில் எல்லாமே நிகழ்ந்தேறி விடுகிறது. ஆமாம் எந்த வித கலை, இலக்கிய பாரம்பரியமும் இல்லாத நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பதைப் போல. புத்தங்கள் வாசித்ததை விட வேறு பெரிய இலக்கிய ஞானம் எனக்குக் கிடையாது. ஒரு கதை, மற்றும் கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எந்த வித இலக்கிய மரபுகளும் தெரியாமல்....

தமிழில் தட்டச்சு செய்யலாம் என்பதை அறிந்து ஆங்கில விசைப்பலகையை தட்டிய போது தவழ்ந்து வந்த என் தாய்த்தமிழைக் கண்டு, அந்த வியப்பிலேயே என் எண்ணங்களை எழுத்தாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பாமரன் நான். அதுவும் பதிவுலகம் என்றால் என்ன என்று தெரியாமலேயே கூகிளுக்குள் நுழைந்து பார்க்கையில் ஏதோ பிளாக் ஸ்பாட் என்று ஒன்று உள்ளது இதில் நாம் ஒரு வலைத்தளம் தொடங்கலாம் என்று அறிந்து 2006லேயே வலைப்பூவைத் தொடங்கி விட்டு அதில் எப்படி எழுதுவது என்று தெரியாமலேயே 4 வருடங்களை ஓட்டியும் விட்டேன்.

எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு காரணமாய் என் குருக்கத்தி கிராமம் இருந்தது. அது என்ன உங்கள் ஊர் உங்களை எழுதச் சொன்னதா என்று புருவம் உயர்த்துகிறீர்களா?

ஆமாம்...

21 ஆம் நூற்றாண்டின் இந்த நவீன நகர்தலுக்கு நடுவேயும் இன்னமும் 200 வருடங்களுக்குப் பின் தங்கிய அதே நேர்த்தியோடு பேருந்து வசதியில்லாமலும், ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டுமானாலும் கூட சற்றேறக்குறைய ஒரு 6 கிலோமீட்டர்கள் முன்பெல்லாம் நடந்தும் சென்று தற்போது சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று அருகில் இருக்கும் கொல்லங்குடி என்னும் இன்னுமொரு சிற்றூரின் கதவுகளைத்தான் நாங்கள் தட்ட வேண்டும்.

அப்பாவின் பணி நிமித்தமாக எனது வயது எட்டு மாதமாயிருக்கும் போதே நாங்கள் வந்து தற்போது முழுதாய் செட்டில் ஆகி இருக்கும் ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தாலும்....குருக்கத்தி என்ற அந்த குக்கிராமத்தில்தான் என் உயிர் முடிச்சு இருப்பதாக எப்போதும் நான் உணர்ந்திருக்கிறேன்.

50 வீடுகள் கூட இருக்குமா என்று தெரியாது அதற்குள்ளாகவேதான் இருக்கும். ஊருக்குள் இருக்கும் ஒரே ஒரு கண்மாய்தான் அந்த ஊரில் வசிக்கும் ஒரு 200 பேருக்கு ஜீவாதார மூலம்.. என்றால் அந்தக் கண்மாய்க் கரையில் இருக்கும் குருக்கத்தி ஐயா கோவில் என்னும் ஒரு பனை ஓலை முடைந்த கூரையோடு கூடிய ஒரு மண் மேடைதான் அந்த மக்களின் காவல் தெய்வம்...!

வானம் பார்த்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு இனிமையானதும் கூட.... என்றுதான் சொல்வேன். அது ஒரு இயற்கை சார்ந்த வாழ்வு....என்ற ரீதியில் மேகம் கருக்கையில் அதை பார்த்து சந்தோசப்படுதலும், பெய்யும் மழையை தேக்கி கண்மாயில் வைக்க அதன் கரையை உயரப்படுத்துதலும், சேற்றிலும் சகதியிலும் கிடந்து மரம், மட்டை, ஆடு, மாடு, புல்,முள் என்று சுற்றிலும் விரிந்து கிடக்கும் புன்செய் நிலங்களும், காட்டு வேலிக் கருவை மரங்களும்தான் அந்த மண்ணில் இருப்பவர்களின் வாழ்க்கை.

வயல்வெளிகளுக்குள் ஊடுருவிச் செல்லும் போது கருவேலம் மற்றும் பனை மரங்களினூடே ஆங்காங்கே மிகப்பெரிய கிணறுகளையும் அதன் பக்கத்திலேயே கிணற்று நீரை பகீரதப் பிரயத்தனம் செய்து மேலே கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கும் டீசல் மோட்டர்களையும் அதைத் தொடர்ந்த பரந்த பொட்டல் வெளிகளில் கடலை, கம்பு, மிளகாய் என்று விதைக்கப்பட்டிருக்கும் விளை நிலங்களையும் காணும் போது அந்த செம்மண் சூட்டோடு சேர்ந்து நமது கண்களும் சிவந்துதான் போய் விடும்.

ஆறு என்ற ஒன்றும் உண்டு... அதில் எப்போதாவது தண்ணீர் வருவதும் உண்டு. முல்லைப் பெரியாற்று நீர் ஆங்காங்கே போய் விட்டு போனால் போகுது போ என்று சிவகங்கை மாவட்டத்தின் உள்ளே சுருண்டு கிடக்கும் என் குருக்கத்திக்கும் அவ்வப்போது ஓரிரு துளிகளை கொடுத்து எங்கள் தொண்டைக் குழிகள் வரண்டு போய் விடாமல் இருக்கச் செய்வதும் உண்டு.

பிள்ளைகள் படிக்க இந்த நவீன யுகத்தில் கூட ஒரு பள்ளிக்கூடம் இல்லாத என் குருக்கத்தி 1947க்கு முன்பு எப்படி இருந்திருக்கும், என்று யோசித்துப் பார்க்கையில் டக் என்று கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

அடிச்சு பிடிச்சு எங்க அப்பா அந்த கிராமத்துக்குள்ள இருந்து படிச்சு ஒரு கவர்மென்ட் வேலைக்கு வந்துட்டாங்க...அதோட தொடர்ச்சியா நாங்களும் நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழத் தொடங்கிட்டோம்...அப்பா பிடிஓ ஆகிட்டாங்க...நாங்க எல்லாம் ஆளுக்கொரு திசையா பிரிஞ்சு துபாய், சிங்கப்பூர்னு வாழ்க்கையோட வேறு பக்கத்துக்கு வந்து உக்காந்துட்டோம்...

நவீனத்தின் நாக்குகளை எல்லாம் தொட்டுப் பார்த்து சுவைத்துப் பார்த்து அதன் உச்சம் என்னவென்று சொக்கட்டான் போட்டு நாங்கள் விளையாட தொடங்கி இருக்கும் இந்த காலத்திலும் கூட எங்க குருக்கத்தி இன்னமும் அப்டியேதாண்ணே இருக்கு...!!!!

சந்ததிகளை உருவாக்கிகிட்டே இருந்த அந்த மண்ணுல காலப்போக்குல மழை, தண்ணி எல்லாம் இல்லாமப் போக பொழப்பு தலைப்பு இல்லாம எங்கூரு சனமெல்லாம் திருச்சி, மெட்ராசுன்னு பொழப்பு தேடி போயிட்டாங்க...! ஊருல இருக்குற நிலமெல்லாம் விதைக்கவும், அறுக்கவும் ஆளுக இல்லாம கட்டாந்தரையா கண்ணீர வடிச்சுகிட்டே பக்கத்துல இருக்குற கருவை மரங்க கிட்ட அந்த்தக்காலத்து கதைகள மெளனமாவே சொல்லிக்கிட்டு கிடக்குங்க...!

போன போக்குல, நவீனமும் நாகரீகமும் ஒரு முரட்டு அரக்கனா நின்னு எல்லாத்தையும் முழுங்கிப் போட்டுறுச்சு....மண்ணொட மக்க மாருக அத்தனை பேரும் குருக்கக்திய இன்னிக்கு தேதிக்கு முழுசா மறந்தே போயிட்டாங்க..

இந்த இணைய உலகத்துல பகிர்ந்திக்கிற அளவுக்கு நிறையவே ரகசியங்கள் குருக்கத்திய சுத்தி புதைஞ்சு கிடக்குதுன்றது ரெண்டாவதா இருக்கட்டும்.... ஆனா சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி அப்டீன்ற குக்கிராமத்த வெளில கொண்டு வந்து காட்டணும் அப்டீன்ற ஒரு எண்ண உந்துதல்லதான் இந்த வலைப்பூக்கள் பக்கமே நான் வந்தேன்...

6 பொம்பளைப் புள்ளைகளையும், 1 ஆம்பளைப் புள்ளையையும் எங்கய்யா அந்த மண்ணுக்குள்ள நின்னுதான் காப்பாத்தி இருக்காங்க...! மழை தண்ணி இல்லாம போன காலத்துல ஆத்துப் பாசனமும் இல்லாத நேரத்துல (முல்லைப் பெரியாறு ஆறு தமிழகத்துக்கு வராத காலங்கள்) மர மட்டைகள எல்லாம் மனுசப்பயக வெட்ட ஆரம்பிக்க, ஆரம்பிக்க மனுசனுக்கு மழை வெளையாட்ட காட்ட ஆரம்பிச்ச நேரம்... 1850 வாக்குல எங்க பாட்டையா எல்லாம் பர்மா பக்கம் போயி இரங்கூன்ல கடை கண்ணி வச்சி ஊர்ல இருந்த புள்ளைக் குட்டிக எல்லாம் பொழைக்க காசு பணம் அனுப்பி இருந்து இருக்காங்க...

அந்த காலத்துலதான் கொடுமையான பஞ்சம் அப்போதைய ஒருங்கிணைந்த இரமாநாதபுரம் மாவட்டத்துல தலை விரிச்சு ஆடி இருக்கு. எங்கப்பத்தா சொல்லும் ...காசு இருக்குமப்பு ஆனா வயித்துப் பசி ஆத்த நெல்லு, புல்லு கிடைக்காது. ஒரு வேள நெல்லுச் சோறுதான் சாப்பிடுவோம், அதுவும் போகப் போக கொறஞ்சு ஒரு மாசத்துக்கு ரெண்டு தவணைதேன் நெல்லுச் சோறு சாப்பிடுவோம்.. மத்தபடிக்கு கம்பு, கேப்பை (கேழ்வரகு ) கூழுதேன் குடிப்போம்....

அம்புட்டு பஞ்சத்துலயும் அஞ்சாறு புள்ளைக் குட்டியள வச்சுகிட்டு நாங்க பொழச்ச பொழப்பு இருக்கே அப்பு..அதச் சொன்னா....அம்மூரு கம்மா நெறஞ்சு போகுற அளவுக்கு கண்ணுத் தண்ணி இருக்குமப்பு, அம்புட்டு கஷ்டம்....அப்புறந்தேன் ஆத்து தண்ணி அப்போ, அப்போ வரயில ஏதோ நெல்லுப் புல்ல விதைச்சு பொழைச்சு வந்தோம்....

காசு கண்ணி இல்லாத மக்க எல்லாம் நடந்தே தஞ்சாவூர் சீமைக்கு கருதடிக்க போயிருவாக...செல பேரு ஆட்டுக் கிடைய பத்திக்கிட்டுப் போயிருவாக....! ஊரே வெறிச்சோடிப் போயித்தேன் கெடக்கும்...! எங்குட்டுப் பாத்தாலும் பெரிய மனுசகள்ள இருந்து புள்ளைக் குட்டிய வரைக்கும் பசி...பசி..பசிதேன்....! நல்லா இருக்குற ஆளுகள பாத்து எல்லா சனமும் வேற ஒண்ணும் வேணாம் ஒரு கை சோறு போடுங்கய்யான்னு கேக்குறத என் காதால கேட்டு இருக்கேன்..., ஒரு மனுசனுக்கு எம்புட்டு கஷ்ட நஷ்டமும் வரலாமப்பு ஆன வவுத்துக்கு மட்டும் கஷ்டம் வரவே கூடாது....

அம்புட்டு கஷ்டத்துலயும் நம்ம கெணத்து தண்ணி முழுசா வத்தலப்புன்னு பெருமையா தண்டட்டி ஆட எங்கப்பத்தா சொல்லும்...! எந்த அடிப்படை வசதியும் இல்லாம இன்னமும் இருக்குற குருக்கத்தி கிராமத்துக்குள்ள இருந்து இந்த இணையத்தை எட்டிப் பிடிச்சு அப்பன், பாட்டன் முப்பாட்டன் பொறந்த ஊரை பத்தி எழுதுறத என் வாழ்க்கையோட பெரும் பேறாத்தான் நான் நினைக்கிறேன்.

"மருதுபாண்டிய ராசா செஞ்ச தேர் ஓடலையாமப்பு....அப்போ எங்க பெரிய அய்யா (அப்பத்தாவோட முப்பாட்டன்) நல்ல கவி பொனைவாராம், எப்பவும் காவிய கட்டிகிட்டு சடா முடியோட வேலிக்காத்தானுக்குள்ள கண்ண மூடிக்கிட்டே ஒக்காந்து இருப்பாராம்....அவரை கூட்டியாந்து கவிபாடச்சொல்லி தேர ஓட்டுனா ஓடும்னு மந்திரிமாருக யாரோ சொல்ல, காளையார்கோயில்ல இருந்து ராசா இவர கூட்டியாரச் சொன்னாராம்....

எங்க பெரியய்யா வீரமுத்தானந்தம் போயி தேரை பாத்து அதுல இருந்த என்னமோ சிக்கல சரி பண்ணச் சொல்லி...ஒரு கவியைப் பாடி தேர இழுக்கச் சொன்னதும் தேரு கட கடன்னு ஓட ஆரம்பிசுடுச்சுப்பு....! ராசா சந்தோசப்பட்டு ஒரு யோகியா இருக்குற உமக்கு என்ன கொடுக்கறதுன்னு தெரியலை என்ன வேணும்னாலும் கேளும்ன்னு சொல்லி இருக்காரு...

அப்போ அவரு நிஷ்ட (தியானம்) செஞ்ச நம்மூரு இருக்க லக்குல (இலக்குல) எல்கை வரைஞ்சு இந்த குருக்கத்திப்பூ வெளஞ்சு கிடக்குற எடத்தைப் பூரா என் சந்ததிக எல்லாம் வாழறதுக்கு ஒரு கிராமமாக்கிக் கொடுங்க ராசன்னு கேட்டு இருக்காரு....

ராசாவும் அப்படியே எழுதி கொடுத்துட்டாக...

அந்த கம்மாக் கரையில இருக்குற பனை ஒலை மட்டைக முடைஞ்சு கூரை போட்டு சாணம் மொழுகி இருக்குற மண் திண்ட என்னான்டு நீ நெனைச்ச....? அதுல வீரமுத்தானத்தம் ஐயா உசுரோட எறங்கி இருக்காகப்பு......"ன்னு அப்பத்தா அன்னைக்கு என்கிட்ட சொன்னப்ப அந்த லாந்தர் வெளக்கு வெளிச்சதுல அவுங்க கண்ணு அவ்ளோ பளீர்னு பிரகாசமா இருந்துச்சு ஆனா எனக்கு அதோட அர்த்தம் அப்போ புரியலை....

காலப் போக்குல தெரிஞ்சுகிட்டேன் வீரமுத்தானந்தம் என்னும் குருக்கத்தி ஐயா அங்க ஜீவ சமாதி அடைச்சு இருக்காங்க....! அதோட மட்டும் இல்லாம என்னைய படமா வச்சு எவனும் கும்பிடக் கூடாதுன்னும் கண்டிச்சு சொல்லி இருக்காங்க...! ஊருக்குள்ள கோயிலு, கீயிலு எவனாச்சும் கட்டினாலோ, அல்லது நான் அடங்கி இருக்குற இந்த எடத்தை எடுத்துக் கட்டி கோயிலா ஆக்கினாலோ, கல்லு வச்சு கட்டினாலோ, என்னைய கும்பிட்டாலோ அவன் குடும்பத்தை அழிச்சே புடுவேன்னு கடுமையா சொல்லி இருக்காரு....

நாயி, நரி, பூனை, கழுதை, ஊரு சனம் அம்புட்டுப் பேரும் பொதுவா இருந்துக்கிடுங்க....சாமி, கோயில்னு இந்த ஊருக்குள்ள ஒண்ணும் வரக்கூடாதுன்னு தீர்மானமா சொல்லிட்டு.....வீரமுத்தானந்தம் ஐயா அங்க ஜீவசமாதி அடைஞ்சுட்டாங்க.....

காலப்போக்குல ஊருச்சனம் அவரை இன்னிக்கு கும்பிட ஆரம்பிச்சுட்டாலும்... இன்னமும் குருக்கத்திக்குள்ள ஒரு சின்ன பிள்ளையார் கோயிலு கூட கிடையாதுன்றது ஒரு ஆச்சர்யமான உண்மை தானுங்க....

ஐயா கோயிலுன்னு சொல்லி பொங்கல் அன்னிக்கு விமர்சையா பொங்கல் வச்சு கொண்டாடினாலும் அங்க இருக்கறது ஒரு சாணம் மொழுகின மண் திண்டும் பனை ஓலை முடைஞ்ச கூரக் கொட்டகையும்தான்....!(இப்போ சமீபத்துல அங்க சிமிண்ட் போட்டு இருக்கறதா அப்பா சொன்னாங்க...)

ஆமாங்க, பொறந்த ஊர்னு சொல்லிக்கிறதுல பெருமை ஒண்ணும் இல்லையின்னாலும்.... அந்த ஊரும் பாட்டன் முப்பாட்டானுக சுவாசித்த காத்தும், அவுங்க வாழ்ந்த வாழ்க்கையும் அதிர்வுகளா அங்கதான் சுத்திகிட்டு இருக்கும்....அந்த மண்ணுல பல தாதுப் பொருட்களா விரவிக் கிடந்துதான் தாய், தகப்பனோடோ ஜீவ சத்தா நான் ஆகி இருப்பேன், அதனால அந்த்த மண்ணோட ஈர்ப்பு எனக்குள்ளே இருக்கறதும் இயல்புதான்னு வச்சுக்கோங்களேன்..!

இன்னிக்கும் குருக்கத்தி ஒரு குக்கிராமம்தான்..., கரண்ட் வசதி வந்ததே 1990கள்ல தான்... கடகண்ணி ஒண்ணும் கிடையாது, இரைச்சல் கிடையாது.... எப்படி பார்த்தாலும் நானும் மண்ணைச் சேர்ந்த கிரமத்தான் தான்னு சொல்றதோட மட்டும் இல்லை.... இன்னும் ஒரு பத்து வருசத்துக்குள்ள வருசத்துல அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாய வாழ்க்கைய வாழப் போறதுதான் என் லட்சியமும் கூடங்க......!

ஏதேதோ ஆசைகள் இருந்தாலும் நவீன யுகத்தில் எல்லாமே புது புது தொழில்நுட்பங்கள் எல்லாம் வந்துட்டாலும் மனிதம் ரொம்ப நீர்த்துப் போனதோட மட்டும் இல்லாம, மனிதர்கள், மனிதர்களோட இணைஞ்சு வாழும் ஒரு இயற்கையோட இயைந்த வாழ்க்கை முறை இப்போ தொலைஞ்சு போயிதான் இருக்கு.

நாகரீகப் பெருக்கம் அறிவு வளர்ச்சின்னு சொல்லிகிட்டு மனுசன் தன்னை தனித்தனியா கூறு போட்டுக்கிடுறதை என்னால ஏத்துக்கிட முடியலை. மாமா, அத்தை, பங்காளி, அங்காளி, மச்சினன், மாப்பிளை, சின்னம்மா, பெரியம்மான்னு ஜனக்கட்டுகளோட கல்யாணம், சாவுன்னு சொல்லி ஒண்ணா சாப்பிட்டு, சிரிச்சு, சண்டை போட்டு, உரிமைய கொடுத்து, உரிமைய கேட்டு, திமிரா ஒரு ரத்த பாசத்தோட வாழ்ந்த வாழ்க்கை இன்னிக்கு தொலைஞ்சுதான போச்சு...! இன்னமும் குத்துயிரும் குலை உயிருமா இந்த ஒரு வாழ்க்கை முறையும், அங்க அங்க சில கிராமங்கள்ள இருந்தாலும்....

மனுசங்க கிட்ட சுயநலம் கூடிக் கூடி போட்டி பொறாமையில உறவு முறைகள் நீர்த்துப் போயிகிட்டுதான் இருக்கு....! ஆயிரம்தான் நகரத்து வாழ்க்கையில் சில சுகங்களை நாம அனுபவிச்சாலும், நம்ம ஊரு வயக்காட்டுல கருக்குன்னு ஒரு முள்ளு குத்தி அதை பிடிங்கிப்போட்டு அந்த வலியை அனுபவிக்கிற சுகத்தை பட்டணத்து வாழ்க்கை கொடுத்துடுச்சுனு சொல்லிர முடியாது..., சுகம்ங்கறது உடம்புக்கு மட்டும் கிடைச்சா அது மிகப்பெரிய வலியா மாறிடும்ங்க, சுகம் மனசுக்கு கிடைக்கணும் அதுதான் நிஜமான சந்தோசம்.

இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு எல்லோரும் சொல்லுவாங்க...ஆனா அக்கரையிலயே அக்கரை பச்சைதான்னு நான் அடிச்சு சொல்லுவேன். தன்னை ஒரு விவசாய நாடா வரிஞ்சு கட்டிகிட்டு அடையாளம் காட்டிக்கிற நம்ம நாட்டோட உயிர்துடிப்பே கிராமங்கள்லதான் இருக்குன்னு மகாத்மா காந்தி சொன்னத இப்போ இருக்குற மக்களும் புரிஞ்சுக்கல அரசியல்வாதிகளும் புரிஞ்சுகல...

ஏதேதோ திட்டங்கள தீட்டி இலவசங்கள அறிவிக்கிற அரசுகள் எல்லாம் விவசாயம் நலிவுறாம இருக்கறதுக்கு என்ன என்ன செய்யலாம்னு ஒரு விழிப்புணர்வை கொடுக்கறதும் கிடையாது, படிச்சு முடிச்சு பட்டணத்து வேலைக்குப் போறது மட்டும் முன்னேற்றம் இல்லை படிச்சு முடிச்சு விவசாயம் செய்றதும் முன்னேற்றம்தான்னு இளைஞர்களுக்கு புரிய வைக்கிறதும் கிடையாது... (புரிஞ்சு இருந்த்தா எதுக்கு வெளிநாட்டுக்கு வந்து இருக்கப் போறோம்...???!!!!)

பாட்டன் முப்பாட்டன்னு செஞ்சுகிட்டு இருந்த ஒரு தொழில் விவசாயம். அது நம்ம அப்பாங்க காலத்துல இருந்து தடம் மாறிப் போயி இன்னிக்கு அதோட தொடர்ச்சியா நம்மள்ள நிறைய பேரு விவசாயம் செய்றது எல்லாம் ஒரு பிற்போக்குத்தனம்னு புரிஞ்சுகிட்டு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வந்து ஒக்காந்துட்டோம்....

கீழை நாடு, கீழை நாடுன்னு சொல்லி சொல்லியே நம்மள கீழ அமுக்கப்பாக்குற, அல்லது கீழ அமுக்கிப் போட்டு இருக்கும் மேலை நாட்டு நாகரீகத்தைதான் நாம உசத்தியா பாக்குறோம்...ஆனா அதை விட உயர்வான நமது கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும், பண்பாட்டையும் மெல்ல மெல்ல மறக்க ஆரம்பிச்சுட்டோங்கிறது வேதனையான விசயம்தான்....

போன தலைமுறை வரைக்கும் கூட்டம் கூட்டமா, நம்ம பாட்டன், முப்பாட்டன்னு, நம்ம சொந்தகிராமங்களை மையப்படுத்திதான் வாழ்க்கைய வாழ்ந்து இருக்காங்க....ஆனா சடார்னு 1960களுக்குப் பிறகு சொந்த கிராமங்களை எல்லாம் விட்டு வெளியே வந்ததோட மட்டும் இல்லாம திரும்ப அந்த கிராமங்களுக்கே நாம போறதே இல்லை என்பது வலிக்கக் கூடிய கனமான உண்மை என்ற ஒரு செய்தியை ஒரு வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒரு குற்ற உணர்ச்சியோடு கனத்த மனதோடுதான் எழுதுகிறேன்....

இன்னும் வரப்போகிற சந்ததிகளுக்கு எல்லாம் நம் சொந்தக் கிராமங்களின் மதிப்பினை எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். தலை முறைகள் கடந்த நமது மூதாதையர்களின் வாழ்க்கைகள் அங்கே மண்ணோடு மண்ணாக கலந்து கிடக்கின்றன அவற்றை நாம் விட்டு விடக் கூடாது....

இலைகளையும் கிளைகளையும் எங்கெங்கோ நாம் பரப்பினாலும் நமது வேர்கள் நம் சொந்த மண்ணை விட்டு விடக் கூடாது என்ற என் ஏக்கத்தை இந்தக் கட்டுரைக்குள் விதைத்து கட்டுரையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறேன்.


தேவா. S


Thursday, December 22, 2011

தேடல்.....22.12.2011!

என் நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடக்கும் ஒற்றை வார்த்தையும் உணர்வாயிருக்கையில் ஓராயிரம் தரம் மூளை உச்சரிக்கும் அந்த மந்திரமும் ஆதியில் சப்தமான உச்சரிப்புகளாய் எம்மிடம் இருந்து, இருந்து உச்சரிப்புக்களை கடந்து மெளனமான மனதின் உச்சரிப்புக்களாக சப்தங்களை உடலுக்குள் இறைத்துக் கொண்டேதான் இருந்தது....ஒரு கட்டத்தில் அதுவும் நின்று போய் சுவாத்தினூடே பரவி மூளைகளுக்குள் எண்ணங்களைப் பரப்பும் பிராணனே அதுவாகிப் போனது.....

பிராணனே அதுவாகிப் போனதால் உடலின் தாது உப்புக்களும் அதுவாகிப் போய் உடலின் வேண்டிய, வேண்டாத எல்லாமாய் நிறைந்து போனபோது தனித்தே ஒரு மந்திரமும் இல்லை தனித்த ஒரு இறையும் இல்லை என்று எனக்கு விளங்க வைத்தது அது....வார்த்தைகளைக் கடந்து இப்பிரபஞ்சம் எங்கும் நிறைந்து கிடக்கிறது என்பதையும் உணர வைத்து,

அதுவே அன்பாயும், இன்பமாயும், துன்பமாயும், பார்க்கத் தகுந்ததாயும், பார்க்க விரும்பாததாயும், வெற்றியாயும், தோல்வியாயும், நண்பனாகவும், எதிரியாகவும், சொல்லில் கொண்டு வரக்கூடிய அத்தனையாயும், சொல்லவொண்ணா பொருட்களாயும், பொருண்மை நிறைந்ததாகவும், சூட்சும அதிர்வுகளாகவும் விரவிப் பரவி கிடக்கிறது....என்று உணர்ந்த தருணத்தில்....

தடுமாறித் திகைக்கையில் உருவமற்ற ஒரு பேர்வாழ்வின் இடையே நகரும் அணுத்துகள் கூட்ட இயக்கத்தின் தோற்றமாய் மானுட வாழ்க்கையும், அந்த மானுடத்தின் அனுபவச்சேரல்கள் கூடி ஜனித்த உருவற்ற ஆனால் உருவத்தை ஆட்டிவிக்கிற மனமும் தோன்றி, மனதைப் பிடித்துக் கொண்டு ஓராயிரம் கற்பிதங்களையும், கற்பிதங்களின் இடைக்கால சொரூபங்களை நம்பி அந்த இயக்கத்தில் நகரும் இடைக்கால எல்லா நிகழ்வுகளையும் நாம் உணர முடிந்தது....

தேடலைத் தொடங்கிய கணம் எதுவென்று யோசித்து, யோசித்து மூளை மடிப்புக்களில் பொதிந்து கிடந்த அந்த பேருண்மையை நோக்கி உள்ளுணர்வாய் பயணித்த போது உண்மையில் தேடித் தேடியே நான் களைத்தேன். நேற்றா, கடந்த மாதமா? கடந்த வருடமா? 20 வயதா? 10 வயதா பால்யப் பருவமா? இல்லை பெற்றவளின் கருப்பையினுள் உணர்வாய் உந்திக் கொண்டு கண் மூடி மோன நிலையில் கால் உந்தி நீர்க் குடத்துக்குள் மிதந்து திரிந்த காலங்களா?

கேள்வியின் விடைகளை தெரிந்து கொள்ள கேள்வியை நிறுத்த வேண்டும் என்றறியாது பயணித்துப், பயணித்து கேள்விகள் அறுந்து வெறுமனே கிடந்த பொழுதில் பிறந்தது அந்த தேடல் தொடங்கிய இடம். ஒன்றுமில்லாமல் இருண்டு கிடந்து, ஏதோ ஒரு கணத்தில் வெடித்துச் சிதறி இந்த அண்டம் வெளிப்பட்டு பரந்து விரிந்ததே அப்போது தொடங்கியது எமது தேடல் என்று...., அது எதை ஒத்தது என்றால்...

தாயின் கருவறையில் கருவாய் கெட்டிப்பட்டு பிண்டமாய் இருந்து ஆனால் இல்லாமல் இருந்து, வளர்ந்து மெல்ல மெல்ல உணர்வாய் நின்று உணர்வுகள் கூடக் கூட கால்கள் உதைத்து, கைகள் ஆட்டி, ஒரு கணத்தில் நான் இருக்கிறேன் என்ற ஒரு உணர்வு அழுத்தமாக, அந்த அழுத்தத்தை கருப்பைக்கு கொடுத்து கருப்பை வாய் பிளந்து உள்ளிருக்கும் நீர் அகன்று தாயின் கர்ப்பம் விட்டு வெளிப்பட்டு இம்மண்ணில் வந்து விழுந்து வீறிட்டு அழுது கத்தி கை கால்கள் உதைத்து கர்ண கொடூரமாய் வெளிப்பட்டோமே அதை ஒத்தது....

தாய், தந்தையருள் சத்தாய் இருந்து சத்திலிருந்து வித்தாய் மாறி, வித்திலிருந்து வெளிப்பட்டு யாம் வெடித்து விழுந்தது சத்தியமெனில் மூல உண்மையான அண்டத்திலிருந்து இந்தப் பெருவெளி வெடித்து எல்லாமாய் விரவியிருப்பதும் சத்தியமே...! அது சத்தியமெனில் நான் என் கண் முன்னால் காணும் யாவும், நானும் மூல உண்மையில் ஒன்றாய் இருந்ததும் சத்தியமே.....

யாவும் ஒன்றென அறிந்த பின் அவர் பாராட்டும் பேதங்களையும், நடை முறை வாழ்க்கை செயல்பாட்டு தன்மைக்கு விளங்கியோர் கூறிய கருத்துக்கள் எல்லாம் மதமாகிப் போன முரட்டு நிகழ்வுகளும், மதங்களின் அடர்த்தியால் நம்பிக்கைகளும், நம்பிக்கைகளால் நான் வேறு... நீ வேறு என்ற நிலையில், இருந்தது ஒன்றுதான், இருப்பதும் ஒன்றுதான், இருக்கப் போவதும் ஒன்றுதான் என்ற சத்தியம் மறந்து போனதும் காலத்தின் போக்கில் நடந்தேறியே விட்டது.

பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும், அளவுக்கேற்பவும்தான் அர்த்தங்கள் விளங்கும், வாங்கும் தன்மைக்கேற்ப சத்தியத்தின் பொருள் உணரப்படும் என்பதால் மாறுதல் அல்லது மாற்றுதல் என்பதும் ஆன்மீக ரீதியாக சாத்தியமற்றதாகிறது. ஒரு மனிதனின் அனுபவம் என்பது ஒரு சமகாலத்தில் ஏற்படுவது மட்டுமே என்றால் ஒரு ஆன்மாவின் அனுபவம் என்பது ஜென்மங்களைக் கடந்தது என்பதை அறிக.

அந்த ஆன்மா அதன் இயல்பிலேயே நகர்ந்து, நகர்ந்து அனுபவக் கோர்வைகளை மட்டுமே தாங்கி ஒரு உடலாய் ஏற்படும் அனுபவத்தின் விளைவை வேறு விளைவாய் நகர்த்திக் கொண்டேதான் செல்கிறது. இது ஒரு இயங்கு தன்மை.. ஆன்மா என்ற வார்த்தை கொஞ்சம் மதம் சம்பந்தமான உணர்வுகளை உங்களுக்குள் கிளறி விடச் செய்யும் என்று எனக்குத் தெரியும்....பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்...ஆன்மா என்பதை சக்தி என்று கொள்ளுங்கள்...

சக்தி இடைவிடாமல் ஆடிக் கொண்டும் இயங்கிக் கொண்டுமிருக்கிறது. அந்த சக்தி ஒரு அனுபவத்தால் ஏற்படும் விளைவினை காட்டவும்தானே செய்யும். நியூட்டனும், இராபர்ட் ஹூக்கும் ஒரு கணம் உங்கள் புத்திகளுக்குள் கூட வந்து செல்லலாம்....! வரட்டும். உள்ளது அழியாது... இல்லாதது தோன்றாது. அவர்களும் பேரண்டத்தின் பகுதிகளே...பேரண்டத்தின் உண்மைகள் எல்லோருக்குள்ளும் உள்ளது.... ஆனால்...

தேடித் தேடி ஓடும் போதும், ஆடிப்பாடி அலையும் போதும் அது தெரிவதில்லை. பெரும்பாலான உண்மைகளும், விஞ்ஞான ரீதியான கண்டு பிடிப்புகளும் நிகழ்ந்தேறியிருப்பது மனிதனின் மனம் ஓய்வு நிலையில் இருக்கும் போதுதான். ஆர்கிமிடிஸ் எப்போது மிதவை விதியை கண்டறிந்தார் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை...

மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய அந்த ஒற்றை வார்த்தைக்கு வருகிறேன்...

உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் ஒற்றை வார்த்தை, அந்த ஒன்றிலிருந்து எல்லாமே ஆனதை ஒவ்வொரு நொடியும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. உடல் கடந்த உணர்வானவன் என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

ஐம்புலன் என்னும் கட்டுக்களை உடைத்தெறிந்து ஒரு உத்வேகத்துடன் நகர அது உதவுகிறது. பூமியைச் சுற்றி பரவிக் கிடக்கும் காந்தக் அதிர்வுகளை அது தகர்த்தெறிகிறது, சூரியனின் ஆளுமை, மற்றும் பூமியைச் சுற்றிச் சுழலும் கிரகங்களிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்கள் அதன் பலன்களை எல்லாம் நொறுக்கிப் போடுகிறது...

உடலாலும், மனதாலும் வாழ்க்கை நடத்துபவர்கள் எல்லாம் கட்டங்களுக்குள் வாழ்க்கையை நகர்த்திப் பார்த்து, கிராகாச்சார பலன்களையும், அவற்றின் நகர்வுகள் எனப்படும் பெயர்ச்சி பலன்களையும் பார்த்து அந்தக் கோள்களின் ஆதிக்கத்தால் மனம் கைப்பற்றப்பட்டு அந்த மனதின் குழப்பமான சிந்தனைகளால் புத்தி சாதுர்யம் அறுபட்டு, செயல்களில் தெளிவின்மை ஏற்பட்டு.....தெளிவில்லாத செயல்களால் மோசமான விளைவுகளைப் பெற்று, எல்லாம் என் நேரம், என் காலம், என் ஜாதகம் கிரகப்பலன் என்று நகர்ந்து கொண்டிருக்கையில்....

சிவம்...........(யாதுமானது)

என்ற மூன்றெழுத்து மூல உண்மையை மூளையில் இருத்தி அதையே சுவாசமாக்கி உடல் கடந்த அண்டப் பெருவெளியை ஆளும் எல்லாமான சிவமாய் யாம் நின்று எல்லா கட்டுக்களையும் பொடிப்பொடியாக்கி போடத்தான் செய்கிறோம்...

உடல் கடந்தவன், மனம் கடந்தவன், எல்லாமே தானாய் உணர்ந்தவன், அன்பே வடிவானவன், எப்போதும் நிலையாமையை புத்திக்குள் தேக்கி வைத்து எல்லா காரியங்களிலும் அடுத்தவர் நலனையும் நினைப்பவன், கட்டிடத்துக்குள் கடவுள் தேடா பராக்கிரமசாலி, ஏதோ ஒரு பொருளை மட்டும் மட்டுப்படுத்தி பேரியக்கமாய் பார்க்காத ஞானவான், இன்னமும் தானே தன்னுள் கிடந்து சுற்றிக் கிடக்கும் பொருட்களின் தன்மை உணர்ந்த மனிதம் ததும்பும் அத்தனை பேரும் இத்தகைய கட்டுக்களை உடைத்தவர்களே...

தேடலாய்த் தொடரும் எனது நெடுந்தூர ஜென்மாந்திரப் பயணத்தில் ஆழமாய் மூழ்கிக் கிடக்கிறேன் அவ்வப்போது தூக்கத்திலிருந்து விழித்தெழும் குழந்தையின் அழுகையாய் இது போன்ற கட்டுரைகளை எழுதுவதும் அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது....அந்த நிகழ்வும் பேரியக்கத்தின் தேவையுமாகிறது.

தேடலில் தொலைக்கும் தூரங்களை எல்லாம் இது போன்ற வெளிப்பாடுகள் குறைப்பதில்லை மாறாக கூட்டத்தான் செய்கிறது என்ற சத்தியத்தையும் கூறி தற்போது வலுக்கட்டாயமாக கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.

ஓம் நமசிவாய.....!


தேவா. S


Tuesday, December 20, 2011

காட்டுப் பூக்கள்...!சுத்த சரீரங்களை
சுரமாகக் கொண்ட
வாசகன் விரும்பும்
மெல்லிசையல்ல எமது எழுத்துக்கள்...!
அவை கர்ண கொடூரமான
கரடு முரடுகளைச் சுமந்த
கேட்கவொண்ணா சப்தங்களால் ஆனா
முரட்டு ராட்சசனின் கர்ஜனைகள்!

நளினங்களை கூட்டிக் கழித்து
விழிகளுக்கு விருந்து கொடுக்கும்
ஓவியங்களை எப்போதும்
நாம் சமைப்பதில்லை....,
மாறாக...
புலன்களைக் கடந்த
புத்திகளுக்குள் ஜனிக்கும்
கோணல் மாணல் கோடுகளை
கோரமாய் வெகுண்டெழச் செய்து
விரும்பத்தகா பிரமாண்டங்களாக்கவே
முயன்று கொண்டிருக்கிறோம்..!

அழகியலைப் பட்டியலிடும்
கூட்டத்தில் யாம் எப்போதும்
வரிசையில் நிற்பதும் கிடையாது
உயரங்களில் இருப்பதாலேயே
எல்லோரையும் அண்ணாந்து
பார்ப்பதும் கிடையாது...!

வாழ்க்கையை எழுத்தாக்கையில்
வசீகரம் எதற்கு...
வசீகரமாகவே எல்லாம் இருந்து விட்டால்
வாழ்க்கைதான் எதற்கு...?

ஆமாம்...

இது கரடு முரடான பாதைதான்
காட்டருவி கொட்டும்
கடக்க முடியா வழிமுறைதான்
ஆனால் மறுத்து நகர்ந்தாலும்
இயற்கை என்பது இயல்புதானே?
இல்லை என்றாலும்
இருப்பு என்பது நிஜம்தானே...?

அதனால்....

அக்னியில் கோடுகள் கிழித்து
முற்கள் தைத்த வார்த்தைகளால்
எமது முதுகெலும்பின் நீட்சிகளை
உடைத்து எப்போதும்
இராட்சச வடிவங்களில்
வார்த்தைகளை கோர்க்கிறோம்...
காட்டுப்பூக்கள் எல்லாம்
என்ன கடவுளுக்காகவா பிறக்கின்றன...?
அவை பூக்கின்றன.... மடிகின்றன...
அவ்வளவே...!


தேவா. S
Saturday, December 17, 2011

கடவுளின் காதல்...!

என்னை யாரென்று...
அவளுக்குத் தெரியாது!
அவளிடம் நான் பேசியது கூட இல்லை;
புகைப்படத்தில்தான் என்னை அவளும்
அவளை நானும் பார்த்திருக்கிறோம்....
என் இயல்புகளை அவள் அறிந்ததில்லை
அவளின் இயல்புகளை நானறிந்ததுமில்லை
எங்களிடம் தினசரி பகிர்தல்கள் இல்லை;
பொய்யான புரிதல்கள் இல்லை;

எப்போதும் புகைப்படங்களில் மட்டுமே
புன்னகைகளை பரிமாறிக் கொள்வோம்...
அவள் வாழ்க்கையை அவள் வாழ்கிறாள்
என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்...
அவளை காதலிப்பதாக நானும்
என்னை காதலிப்பதாக அவளும்
எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை
என் கவிதை வரிகளில் பல நேரம்
அவள்தான் பவனி வருவாள்
என்பது கூட அவளுக்குத் தெரியாது;

பரிட்சையம் இல்லாத இந்த உறவினை...
மனம் காதலென்கிறது;
புத்தி கடவுள் என்கிறது;
அவ்வளவுதான்...!


தேவா. S

Friday, December 16, 2011

விலக்கப்பட்ட கனி...!


விலக்கப்பட்ட கனியை
புசித்து முடித்திருக்கையில்
வக்கிர புன்னகையை
மெலிதாய் துடைத்துக் கொண்டான்
சாத்தானுக்குள் இருந்த கடவுள்..!

மறுக்கப்பட்டதின் விதிகளை
படைப்புகள் எப்போதும்
அத்துமீறும் என்பதாலேயே
மீறலுக்காய் மறுத்து வைத்த
பாவ பரிமாற்றமாய் மாறிப் போனது
பிரபஞ்சத்தின் மைய முடிச்சு...!

எட்டாவது படிக்கையில்
எதிர் வீட்டு ஜெயஷ்ஸ்ரீ அக்காவுக்கு
முத்தம் கொடுத்த
பக்கத்து வீட்டு அண்ணனுக்குள்
ஒளிந்திருந்து...
அது எட்டிப் பார்த்தது;

கீதா டீச்சரிடம் சேட்டைகள்
செய்த முருகேசன் வாத்தியாரின்
மூளைக்குள் பிடிவாதமாய்
சம்மணக் காலிட்டு..
அமர்ந்திருந்தது;

நெரிசலான பேருந்தில்
ஒரு பெரியம்மாவை
இடித்துப் பார்த்த தடியனுக்குள்
கம்பீரமாய் நின்று கொண்டும்;
நாடார் கடையில் சாமான் வாங்கையில்
செல்வி அத்தையின் இடுப்பை
முறைத்துப் பார்த்த
பொட்டணம் போடும் கணேசனின்
விழிகளில் கள்ளத்தனமாய்...
எட்டிப் பார்த்தும்...

ஆதியில் விலக்கப்பட்டதாய்
கற்பிதம் கொண்ட ஒன்று
எப்போதும் பல் இளித்து
இருப்பினைக்காட்டி விட்டு ....
இல்லை....இல்லை...இல்லை
என்று பொய்யாய் கை விரித்து
கட்டுப்பாட்டு விதிகளுக்குள்
கபடமாய் ஒளிந்தே கொள்கிறது!

திருமண பந்தமென்ற
ஒப்பந்தங்களின் போது
கடவுள் முகமூடியை...
சைத்தான்கள் அணிந்து கொண்டு
விலக்கப்பட்டதை விழுங்குவதற்கு
நியாய பதாகைகளையும்
தூக்குவதுமுண்டு...!..!

என்னதான்...
ஒழுக்கத் துணிகளை
இறுக்க இறுக்க கட்டிக் கொண்டாலும்
புத்திக்குள் வந்து
ஆடை விலக்கிப் பார்க்கும்
ஆதி உணர்வினை காதலென்று
மார்க்கெட்டிங்க் செய்து விட்டான்
இல்லாத ஒரு கடவுள்...!

நிஜ உணர்வுகளை மடக்கிப் போட்டு
வண்ண வண்ண வர்ணம் தீட்டி
புனிதம் என்ற போர்வை போர்த்தி
நாளும் நடக்கும்
நல்லொழுக்க நாடகங்களின்
ஓரங்களில் ஒட்டிக் கிடக்கும்
காமமே பிரதானாமாய்...
சுற்றிக் கொண்டிருக்கிறது
எப்போதோ இல்லாமல் இருந்த
இந்த முரட்டு பூமி....!

தேவா. S
Thursday, December 15, 2011

மேகமாய் வந்து போனவள்....!
இப்போது எல்லாம் உன் நினைவுகளோடு வாழப் பழகி விட்டது எனக்கு. குறைவில்லாத அந்த நாளின் இன்ப உணர்வுகள் நித்தம் என்னை தொட்டிலில் ஒரு குழந்தையைப் போல போட்டு எப்போதும் சீராட்டுகிறது. முதன் முதலாய் உன்னை பார்த்த அந்த காலை ஏழு மணியில் மெலிதான ஒரு ரெடிமேட் சிரிப்போடு உன்னை உமா என்று என்னிடம் அறிமுகம் செய்து கொண்டாய். ஒரு வாரம் விடுமுறையிலிருந்து திரும்பி வந்த நான் என் முதல் ஷிப்டுக்காக உள்ளே நுழைகையில் சற்றும் உன்னை நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை..

வரவேற்பாளன் உத்தியோகத்தில் ஒரு வருடமாய் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த அன்றைய தினம் உன் அறிமுகத்தோடு அட்டகாசமாய் வரவேற்றது அந்த நான்கு நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பரை. புன்னகையோடு நகர்ந்து விட்ட உன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் நான் பேசாமலேயே இருந்தேன். பெண்களைக் காணாதவனாய் நான் இருக்க சென்னை என்னை மட்டும் இல்லை வேறு யாரையுமே அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு விடாது.

ரங்கநாதன் தெருவின் பரபரப்புக்கு நடுவே நான் தங்கி இருந்தது எனக்கு வரமா அல்லது சாபமா என்று கூட நான் பலமுறை நினைத்திருக்கிறேன். கல்லூரி முடித்து ஒருவன் அடுத்த கட்ட வேலைக்காக நகரும் பருவம் என்பது இளமையை ஒரு கூலியைப் போல சுமந்து கொண்டு திரியும் பருவம். உத்தியோகம் சம்பாத்தியம் என்று ஒரு பரபரப்பு உடலுக்குள் மத மதவென்று அலைந்து கொண்டிருக்கையில் பற்றிக் கொள்ளும் ஒரு நெருப்புதான் காதல்.

கல்லூரியின் காதல்களில் ஒரு பதட்டமும் பயமும் இருக்கும் ஏனென்றால் அங்கே வாழ்க்கை என்னும் பொருளாதயப் பேருலகு தொடங்கி இராது. வேறு ஒருவரின் சம்பாத்தியத்தில் வரும் அந்த ஒரு துணிச்சல் போலியானதுதான்...பயந்து பயந்து....ஈர்ப்பில் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து நகர்கையில் செமஸ்டர், அரியர்ஸ், பாஸ், பெயில், சொந்தம், பந்தம், மரியாதை என்று பல சுமைகள் சுற்றி நின்று கொண்டிருக்கையில் அது எப்படி ஒரு சுதந்திரக் காதலாக இருக்க முடியும்....?

சம்பாதிக்கும் போது வரும் காதலில் இருக்கும் திமிரின் அளவு அதிகம் என்றாலும் அது சுகமானது. ஏனென்றால் கல்லூரி தாண்டி வெளி வந்து மீசை திருத்தி, நடை, உடை பாவனை மாறி ஒரு ஆண் பூரணத்தை நோக்கி நகரும் ஒரு மிடுக்கான வேளை அது. இப்போது அவன் எப்படி இருந்தாலும் அவன் அவனுக்கு கதாநாயகன் தான்....எதிர்ப்படும் எத்தனை வயது பெண்ணாய் இருந்தாலும் பார்க்க லட்சணமாய் இருந்தால் இவனுக்காகவே வந்து பிறந்தவள் என்ற மமதையை மனம் சொக்கட்டான் போட்டு சொல்லிக் கொடுக்கும்.....

ரெங்கநாதன் தெருவினை விட்டு வெளியே வேலைக்காக வரும் போது மனசு விசிலடிக்கும், மணியடிக்கும், இறக்கை முளைத்து சிறகடிக்கும், ஒவ்வொரு பெண்ணின் முகத்தையும் பார்த்து ஒரு குறு குறுக்கும் சிரிப்போடு நகர்ந்து, நகர்ந்து இவளா? அவளா? இல்லை அதோ.......அவளா...? என்று விழிகளால் தூண்டில் போட்டு சுடிதார்களுக்கு மார்க் போட்டுக் கொண்டே செல்லும்....

காதலின் கன பரிமாணங்களை சென்னையும், சென்னை நகரத்து வெயிலும், பாண்டி பசாரை சுற்றி வரும் கிறக்கமான நிமிடங்களும், சுற்றி இருக்கும் எல்லா விமன்ஸ் காலேஜ்களும் குறையில்லாமல் சொல்லிக் கொடுக்க, என்னைப் போன்ற கிராமப்புற இளைஞர்களுக்கு அது பம்பர் குலுக்கல்தானே....ஹேய் யா.....ஹவ் ஆர் யூ......மேன்......? ஐயம் ஃபைன் டூட்.........? வாட்ஸ் அப்.....? வாட்ஸ் யுவர் வீக் என்ட் ப்ளான்யா....? என்று ஆங்கிலம் வேறு மூர்க்கமாக புத்திக்குள் ஏறிக் கொண்டு ஒரு கலாச்சார மாற்றம் சட்டென நிகழ்ந்து விட....

பிறகென்ன கதாநாயகனேதான்....கூடவே இன்ஸ்ட்டால்மென்டில் காசு கட்டிக்கலாம் என்று சொல்லி வாங்கிக் கொண்ட ஒரு பைக்கோ அல்லது வேலைக்காக கம்பெனி கொடுத்த ஒரு பைக்கோ இருந்து விட்டால்...நல்ல ஒர் செல்லுலார் போனோடு செமையாய் செட்டில் ஆகிவிட முடியாதா என்ன? அவ்வளவுதான் மிச்சத்தை சென்னை பார்த்துக் கொள்ளும் என்ற ரீதியில்....

வீக் எண்ட்களின் இரவு பதினோரு மணிகளில் கிழக்கு கடற்கரைச் சாலைகளிலோ அல்லது மேற்கு சென்னையின் ஏதோ ஒரு இருட்டு தார்ரோட்டிலோ, இல்லை குண்டும் குழியுமான வட சென்னை ரோடுகளுக்குள்ளோ........என்று ஏதோ ஒரு திசையில் பறக்க வேண்டியதுதானே.....

அப்படித்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது அதிரடியாய் உமாவை நான் காணும் வரை. அன்று உமா என்னிடம் பேசாமலேயே பர்ஸ்ட் ஷிப்ட் முடித்து சென்று விட்டாள்....அடச்சே குறைந்த பட்சம் என் பெயரைக் கூட கேட்கவில்லை. அன்று முழுதும் என் தலை பரபரவென்று இருந்ததும், அப்படி அவள் பேசாமல் சென்றதே எனக்குள் அவளைப் பற்றிய கிறக்கத்தை அதிகப்படுத்தியதும்.....எங்கே கொண்டு விட்டது தெரியுமா?

ஸ்பென்சர் பிளாசாவின் உள்ளே இருக்கும் கேஃப் காபி டேல தான்ன்னு நீங்க நினைச்சு இருந்தா ஐயம் சாரி....தி.நகர் நார்த் உஸ்மான் ரோட்ல போத்தீஸ் பக்கதுல ரைட்ல வளைஞ்சீங்கன்னா வெங்கட் நாரயணா ரோடு டச் பண்றதுக்கு முன்னாடி ஒரு மலையாளியோட ஸ்நாக்ஸ் பார்லதான் அது கொண்டு போய் விட்டுச்சு....!!!

ஒரு மழை வர்ற மாதிரி இருந்த சென்னையின் மாலை 5 மணி வாக்கில ஆளுக்கொரு பட்டர் பிஸ்கெட்டை கடிச்சுகிட்டு டீயை ஒரு உறிஞ்சி உறிஞ்சி குடிச்சுக் கிட்டு இருந்தோம்.....சரியா அது உமாவுக்கு நாலாவது ஷிப்புன்னு நினைக்கிறேன் அவ குனிஞ்சு டீ குடிக்கிறப்ப என்னை வெறுப்பேத்தனும்னே அவ முன் நெற்றியில வந்து விழுந்த அந்த ரெண்டு முடியும் என்னை அவகிட்ட ஐ லவ் யூன்னு உடனே சொல்ல வச்சுது....

" யூ.....யூ.....நான் உன்னை நல்ல ப்ரெண்டாதான் நினைச்சு பழகினேன்...என்னை போய் இப்டி சொல்லிட்டியே .....யூ டாமிட்...நான் ஒண்ணும் நீ நினைக்கிறமாதிரி பொண்ணு இல்லை....கெட் லாஸ்ட்....."

அப்டீன்னு சொல்லிட்டு அவ போயிருந்தான்னா அது எனக்கு சப்பை மேட்டர்.....பட் அவ எதுவுமே சொல்லாம 5 வது ஷிப்பையும் குடிச்சுட்டு அந்த டீ தொண்டைக்குழியில இறங்கும் போதே ஐ டூ லவ் யூ மகேஷ்னு சொன்னப்ப......எனக்கு தலைகால் புரியலைன்றத புரிஞ்சுகிட்டு வெளில மழை அடிச்சு பெய்ய ஆரம்பிச்சுது.....

மணி ஏழு ஆனபோதுதான் உமாவுக்கு வீடுன்னு ஒண்ணு இருக்கு அவுங்க அப்பா, அம்மா, தங்கைனு ஒரு குடும்பம் இருக்குதுன்னு அவ செல் போன் சிணுங்கி ஞாபகப்படுத்திச்சு....! அவ அயனாவரம் போகணும்...நான் பைக்ல போலாம்னு நினைச்சா ம்ம்ம்ஹும் விடுவேனான்னு மழை தம் கட்டிப் பெய்தது...

' ஏய் ஆட்டோ...' ன்னு மரியாதை இல்லாம கூப்பிட்டாலும் சென்னை மாதிரி ஊருங்கள்ளதான் ' இன்னாபா' ன்னு சொல்லி பக்கத்துல வந்து மரியாதையா கேப்பாங்க...தெரியாத புது ஊர்க்காரங்கள அவுங்க ஆப்படிக்கிறது வேற விசயம் ஆனா ரூட் தெரிஞ்சா நீங்கதான் சென்னையில ராஜா...!

ஆட்டோ நகர...நகர....குளிர் அதிகமாக ரெண்டு பக்கம் ரெக்ஸின் சீட்டையும் எடுத்து விட்டாச்சு. ஐ லவ் யூ சொன்ன முதல் நாளே இவ்ளோ நெருக்கமா உமா கூட உட்கார்ந்து போவேன்னு நான் சத்தியமா நினைக்கலேன்னு சொல்ல நினைச்சேன்...அவ என்கிட்ட சொல்லியே விட்டாள்..உங்க கூட இவ்ளோ நெருக்கமா...ப்ளா..ப்ளா..ப்ளா....! மனிசனோட மனசு எல்லாமே ஒரே மாதிரிதான் திங்க் பண்ணும் போல....

அந்தக் குளிருக்கு அவளோட கைகளை இருக்கமா பற்றிக் கொள்ளும் அனுமதிய அவ கொடுத்து இருந்தாலும் எனக்கு அதுவே பயமாத்தான் இருந்துச்சு....! என்னாதான் ஹீரோத்தனமா பேசினாலும் மொத மொதல்லா ஒரு பெண்ணோட அருகாமை கொடுத்த பயம் ரொம்ப பதட்டமானதுதான்...! எக்மோர்ல உமாவை இறக்கி விட்டுட்டு 23C ல ஏத்தி பத்திரமா போய்ட்டு வாம்மானு விட்டுட்டு நான் அங்க இருந்து ட்ரெயின் பிடிச்சு....

மாம்பலம் வந்து நார்த் உஸ்மான் ரோட்ல அனாதையா நின்ன என் பைக்க குற்ற உணர்ச்சியோட எடுத்து உதையும் போது....பிறை தேடும் இரவிலேன்னு......என்னோட செல்போன் ரிங்க ஆரம்பிச்சுது....உள்ளுக்குள் உமா பாடலாய் என்னை தேட ஆரம்பிக்கும் முன்பே

போன எடுத்து பேசும் போது ஆயிரம் தடவை சொல்லிட்டா...பத்திரம்டா....பத்திரம்டா...பாத்து போடா...ன்னு...!அட நீ போன வைச்சுரு தாயி....பேசிகிட்டே போனா நான் எங்க பத்திரமா போறதுன்னு சொல்லிட்டு போனை மடக்கிப்போட்டேன்....

மெரீனா பீச்சுக்கு மட்டும் போகாம சென்னையையின் எல்லா பாகத்தையும் உமா கூட சுத்தினதுக்கு இரண்டு காரணம் ஒண்ணு அவுங்க அப்பா செகரட்ரியேட்ல வேலை பாத்தது, ரெண்டு அவுங்க சின்னமா மகன் அதாங்க உமவுக்கு தம்பி பிரசிடன்ஸி காலேஜ்ல படிச்சது.....

எனக்கு கவிதையே எழுத வராது. உமா கவிதாயினி...சிரித்துக் கொண்டே ஏதோ நாலு வரியைச் சொல்லுவாள். எனக்கு ஆரம்பத்தில் புரியாமல் இருந்துச்சு போகப் போக கவிதைய ரசிக்க கத்துக்க மகேஷ்னு சொல்லி அவள் வாங்கிக் கொடுத்த ' இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல' அப்டீன்ற வைரமுத்து எழுதின கவிதைப் புத்தகம், இதோ அந்த செல்ஃப்ல இன்னும் வச்சு இருக்கேன் பாருங்க...

உன்னோடு நானிருக்கையில்
எவ்வளவு திமிராய்
உன் கேசம் கலைக்கிறது
இந்தக் காற்று...?

செல்லமாய் ஒரு பெசண்ட் நகர் கடற்கரைக் காற்றை கவிதையா முறைத்திருக்கிறாள்....! உமாவை கடைசி வரை நான் வர்ணிக்கப் போறது இல்லைங்க....வர்ணித்து பார்த்து அழகு என்று யோசிக்கவே முடியாமல் நான் இருந்ததற்கு காரணம் அவளின் எல்லா செயல்களிலும் நான் லயித்துக் கிடந்ததுதான்..!

ஆயிரம் சொல்லுங்க..நரகத்துல நாம் வாழ்ந்தாக் கூட...சரியான ஆளு கூட வாழணுங்க...அப்பதான் அது சுகம். சொர்க்கத்துல இருந்தாலும் சிடு மூஞ்சிங்க கூட இருந்தா அந்த சொர்க்கம் கூட நரகம்தான்..

காதலை எனக்கு காதலாய் பார்க்கச் சொல்லிக் கொடுத்தவள்......, ஏதேதோ சூழல்கள், மற்றும் முரட்டுத் தந்தையின் வ்றட்டுப் பிடிவாதம், அம்மாவின் கெஞ்சல் மற்றும் அழுகை இவற்றுக்கு நடுவே என்னோடான காதலை ஜெயிக்க வைக்க முடியாமல் அவள் கண்ணீர் விட்ட நாட்கள் எனக்கு இரணமானவை என்று நான் உஙக்ளிடம் சொல்லத் தேவையில்லை...

எனது 25 வயதில் 23 வயது உமாவின் நுனி நாக்கு ஆங்கிலமும், தமிழ்ப் புலமையும் தாண்டி அவளின் கம்பீரமும் என் மீதான அதீத காதலும் அவள் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பினை வைத்திருந்தன.....! உமா வெள்ளை வெளெரென்று இருக்கமாட்டாள் அவள் ஒரு புது நிறம்தான்...

என்றாலும் எனக்கு பிடித்த அழகு என்பதையும், நான் விரும்புவதைப் போல இரு புருவ மத்தியில் குங்குமம் இடுபவள் என்பதையும், அழகுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதற்கு ஏற்றார் போல ஒரு நாள் கூட அவள் அதிக மேக் அப்பில் குளித்துக் கொன்டு வருபவளில்லை என்பதையும்,இயல்பான உதடுகளை லிப் கார்ட் போடுவதோடு விட்டு விடுபவள் என்றும் அவள் என்னை விட்டு பிரிந்து போன பின்புதான் எனக்குப் புரிந்தது....!

வெறுப்பாய் சண்டையிட்டு நாங்கள் பிரியவில்லை....உடல் ஈர்ப்புகள் கடந்த ஒரு காதலை சுகித்தவர்கள் என்ற நிறைவோடு அவளின் சுற்றங்களின் சந்தோசத்திற்காக அவளின் சந்தோசச் சானலை திருப்பி வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று நாங்கள் இருவருமே முடிவெடுத்தோம்...! ஆனால் அது அவளுக்கு சந்தோசமாய் இருக்காது என்று அவள் சொன்ன போதிலும், சந்தோசமாய் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தித்தேன்.

வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யாவிட்டால் இறந்து விடுவதாய் சொன்ன வழக்க்காமான தமிழ் அப்பா, அம்மாவை நாங்கள் ஏமாற்றி ஓடிப் போய் வேறு எங்கோ இருந்து திருமணம் செய்து கொண்டு அவர்களின் இறப்பைக் கடந்த ஒரு வாழ்க்கையை வாழ நான் முயலவில்லை, அவளும்தான்..

எனது வீட்டில் முரண் இருந்தாலும் ஒத்துக் கொள்வார்கள்...ஆனால் உமாவின் வீட்டில் பிடிவாதம் கடுமையாய் போய் அவளது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்து உயிருக்குப் போராடி மீண்டெழுந்தார்....! சாதி என்னும் சாக்கடை எங்களுக்குள் முதன் முதலாய் எட்டிப் பார்த்து இரண்டு பேரும் வேறு, வேறு சாதி அதனால் என்னால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று ஒரு பிரஸ்டீஜ் பத்மநாதனாய் என் காலில் விழ வந்த உமாவின் அப்பா எனக்கு பாவமாய் தெரிந்தார்.....

அவ்வளவுதான்..... ஒரு அழுத்தமான முத்தத்துக்குப் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம்....! நான் சென்னையிலிருந்து நகர்ந்து பெங்களூர் வந்து விட்டேன்....வருடங்கள் கடந்து விட்டன...இதோ எனக்கு 29 வயது ஆகிவிட்டது....

எனக்கும் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.....! வாழ்க்கை நகர்ந்து கொண்டுதான் இருக்கும் ஆனால் நினைவுகளும், சுகமான அனுபவங்களும், நிஜமான காதல்களும் எப்போதும் நம்மைச் சுற்றிப் பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டுதானே இருக்கும்....

உமா என்னை பற்றி நினைப்பாளா என்று தெரியவில்லை.......பட்...........ஷி வாஸ்.....வெரி இன்ட்ரஸ்டிங்..... & கிரேட்...!

ரொம்ப நேரம் உங்ககிட்ட பொலம்பிட்டனாங்க......சரி விடுங்க....ஊர்ல இருந்து அம்மா போன் பண்றாங்க ஏதாச்சும் பொண்ணு மேட்டராத்தான் இருக்கும்.......அப்புறம் பார்க்கலாங்க......டேக் கேர்...பை....!

ஹலோ.......அம்மாவா........? ம்ம்ம்ம் சொல்லுங்கம்மா...பொண்ணா?...... சரி போட்டோவ மெயில் பண்ணுங்கம்மா.......


தேவா. S


Monday, December 12, 2011

ரஜினி என்னும் வசீகரம்...!என் அன்புள்ள ரஜினி,

காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. எந்த கணத்தில் என் வாழ்க்கையினுள் நீ நுழைந்தாய் என்று இது வரை என்னால் கணக்குகள் கூட்டி அறிய முடியவில்லை. சுவாசத்தைப் போல என்னுள் நீ நுழைந்தாய் என்பது மட்டும் உண்மை. ஏதோ ஒரு உன் சினிமாவை பால்யத்தில் நான் கண்டிருக்கலாம், அப்போது உன் வசீகரத்தின் வல்லமை என்னுள் நுழைந்திருக்கலாம். எதைச் சொல்ல ரஜினி ? உன்னிடம் எனக்கு என்ன பிடிக்குமென்று....

மிகச் சிறிய கண்கள்தான் அதில் இவ்வளவு வசீகரம் இருக்கமுடியுமா என்ன? அன்பையும், கோபத்தையும், ஆக்ரோஷத்தையும், காதலையும், அந்த இருவிழிகளுக்குள் கணத்துக்கு கணம் நீ கொண்டு வருவாயே...? எல்லோருக்கும் கண்களையும்... உனக்கு மட்டும் நெருப்பையும் வைத்து படைத்து விட்டானா இறைவன் என்று பல முறை நான் ஆச்சர்யப்பட்டதும் உண்டு.

எப்படித்தான் வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது நீ நடித்த நடிப்பையும்.....நடந்த நடையையும்....!

ரஜினி.....உனது மறுபெயர் அட்டிட்யூட் எனப்படும் மனப்பாங்கு. உன்னை வெறுமனே ஒரு நடிகனாய் உன் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்கிறது......அல்ல...ரஜினி அல்ல...

உன் வாழ்க்கையும், நீ சென்ற உயரமும், உன்னை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு உத்வேகம், வாழ்க்கையின் உயரத்தை தொட உள்ளுக்குள் இருண்டு கிடக்கும் ஒவ்வொரு மனதிற்கும் ஏற்றி வைக்கும் வெளிச்சம். சினிமா என்பது ஒரு வசீகரம் அந்த வசீகரத்தின் மூலம் உன்னை ரசித்தவர்களுக்கு எல்லாம் ஒரு உற்சாக உள்ளம் வெகு எளிதாக புகுந்தது என்பதை எப்படி மறுக்க ரஜினி...?

எது இருக்கிறதோ அதை நீ அழகாக செய்தாய், உலகம் உன்னைச் சுற்றி சுழன்றது. வார்த்தைகளை யாரோ கோர்த்துக் கொடுக்க அதை நீ உச்சரிப்பாய்...உன் ரசிகர் கூட்டம் நீ உச்சரித்த வார்த்தைகளை ஓராயிரம் முறை திரும்ப திரும்ப உச்சரித்து ஒரு மந்திர உச்சாடனமே நடத்தும்....!

வெள்ளை நாயகர்கள் வெள்ளித்திரையில் வெற்றி வாகைகள் சூடிய போது கறுப்பு மனிதர்களுக்கு எல்லாம் கொஞ்சம் அல்ல நிறையவே மனதில் கஷ்டங்களோடு நாமெல்லாம் அப்படி வர முடியுமா என்ற கனவு மட்டும் இல்லை ரஜினி....அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையும் கூடவே இருக்கத்தான் செய்தது......

நீ சினிமாவுக்குள் வரும் வரை.....!!!!!

நீ திரைக்குள் வந்தாய் வெண்மை இருண்டது.....! வெள்ளையாய் இருந்த மனிதர்கள் நானும் ரஜினி மாதிரி கருப்பாய் ஆக முடியாதா என்று புலம்ப ஆரம்பித்தார்கள். கருப்பு என்னும் நிறம் அன்று ஏறியது அரியணையில்.....நீ சராசரியை சாய்த்துப் போட்ட சரித்திர புருசன் என்பதை நீ ஒத்துக் கொள்ளமாட்டாய்...எங்களைப் போன்ற ரசிகர்களையும் சொல்ல விடமாட்டாய்...நீ எப்போதும் சிகரம்தான் ரஜினி....!

முப்பது நாள் படம் சேர்ந்தாற் போல ஓடி விட்டால் முதலமைச்சர் கனவு காணும் தமிழ் சினிமா உலகமே உன்னைப் பார்த்து மூர்ச்சையாகித்தான் நிற்கிறது. நீ......ஒரு வியாபார நடிகன் என்று எல்லோரும் சொன்னாலும், நீ எத்தனையோ மனிதர்களுக்கு வாழ்க்கை கொடுத்த கடவுள் என்றுதான் நாங்கள் சொல்வோம்....

படத்தை எடுத்த தயாரிப்பாளர், டைரக்டர் மட்டுமல்ல...தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் மனிதன் முதல் போஸ்டர் ஒட்டும் வரை....கட் அவுட் வைப்பவன், பேனர் வைப்பவன் என்று எல்லோரின் வாழ்க்கைக்கும் நீ ஒரு வரப்பிரசாதி என்பதை நீ அறிவாயா ரஜினி..! நீ அறிந்தாலும் அதை ஒத்துக் கொள்ள மாட்டாய்....நீங்கள் படம் பார்க்கிறீர்கள் நான் உயர்ந்தேன் என்று சொல்லிவிட்டுப் போக உனக்கு மட்டும்தான் தெரியும் ரஜினி....

நீ அரசியலுக்கு வந்திருக்கலாம் என்று உன்னைச் சுற்றியிருந்த கோடாணு கோடி பேர் ஆசை பட்ட போதிலும்,நீ அதையும் அனாயாசமாகத்தான் தாண்டி வந்தாய்.....நீ அரசியலுக்கு வரவில்லை என்றவுடன் உன்னை விட்டு நகர்ந்தா போய்விட்டது உன் ரசிகர் கூட்டம்...? இல்லையே....ஒவ்வொரு ரஜினி ரசிகனும் இடைப்பட்ட வயதில் கண்டிப்பாய் உனக்கு ரசிகனாய் ஆகியிருக்க மாட்டான்...அப்படி ஆகி இருந்தால் அவன் உனக்கு ரசிகனாயிருக்கமாட்டான்....

உன்னை ரசிக்கும் அத்தனை கோடி பேரும் சிறுவயதில் இருந்து உனக்கு ரசிகர்கள் ரஜினி...! நீ அரசியலுக்கு வா....வராமல் போ...அதுவெல்லாம் இரண்டாம் பட்சம்...உன் ரசிகன் உன் ரசிகன் தான்..! உன்னை ஆதரித்தும் விமர்சித்தும் பல பேரின் கல்லாக்கள் களை கட்டியிருக்கிறது ரஜினி. உனக்கு பிடிக்கும் என்பதைப் பார்த்து பல கடவுள்கள் எங்களுக்குப் பரிட்சையப்பட்டுப் போனார்கள்....பல வழிமுறைகள் எங்களுக்கு பழக்கப்பட்டுப் போனது...

நீ இமயமலைக்குச் சென்றாய்....கோடாணு கோடி ரசிகர்கள் இமயமலையை நோக்கி திரும்பினார்கள். நீ தியானம் என்று உச்சரித்தாய்...உன் ரசிகன் தியானம் என்றால் என்ன என்று தேடி ஓடினான்....! எனக்காக வந்து வேலை செய் என்று ஒரு நாளாவது நீ உன் ரசிகனைக் கேட்டு இருக்கிறாயா.....? இல்லையே.....உன் பிறந்த நாளுக்கு கூட வரவேண்டாம் உங்கள் வேலைகளை செவ்வனே செய்யுங்கள்....உங்கள் தாய் தகப்பனை பாருங்கள் என்றுதானே சொல்லியிருக்கிறாய்....

நான் நடிகன், நடிக்கிறேன் அவ்வளவுதான் எனது தெளிவுகளை அவ்வப்போது நான் கூறுவேன்..உங்களுக்குப் பிடித்து இருந்தால் செய்யுங்கள் என்றுதான் நீ அடிக்கடி கூறுவாய். வாழ்க்கையின் ஓட்டத்தில் நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாது... என்று நீ அடிக்கடி சொல்வாய்....உலகம் குழம்பும் ஆனால் அதுதான் உண்மை என்று தெரியாமல் புலம்பும். நாளை எதுவும் நடக்கலாம்...என்று நீ கூறுவது சத்திய வார்த்தை என்று உன்னை உயிராய் நேசிக்கும் எங்களைப் போன்ற ரசிகர்களுக்குத் தெரியும்.

வாழ்கையில் ஜனனம், மரணம் என்ற இரண்டும் நியதி. உனக்கு உடல் நலன் சரியில்லை என்றவுடன் ஒரு சினிமா நடிகன், மற்றும் ரசிகனுக்கும் உள்ள உறவையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு அழுத்த ஒரு நாளாவது உனக்காக வருந்தாமல், நீ நலம் பெற வேண்டும் என்று எண்ணாமல் ஒரு ரசிகன் கூட இருந்திருக்க முடியாது.....வெறும் சினிமா என்னும் செல்லுலாய்டு தாண்டி.....எல்லோரின் மனதிலும் இரத்தமும் சதையுமாய் நிறைந்தவன் நீ....!

அடிக்கடி உன்னை விமர்சிப்பார்கள்...ஏதேதோ சொல்லி! ஆனால் அவை எல்லாம் உன்னை விமர்சிக்கும் சக்தி அல்ல ரஜினி...., அப்படி விமர்சித்து விமர்சித்து அவர்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் யுத்தி....! நீ அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்றில்லை ரஜினி..ஆனால் ஒரு வேளை நீ வந்தாலும் அன்றும் உன் பின் தான் நாங்கள் அணிவகுத்து நிற்போம்....!

உனக்கு 62 வது பிறந்தநாள்....!!! கோடாணு கோடி ரசிகர்கள் ஏதேதோ செய்து கொண்டாடி வருகிறார்கள்...! ஏதேதோ விழாக்கள்.....பட்டி மன்றங்கள்.....தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்..தலைவர்கள் வாழ்த்துக்கள்....! தமிழ்நாடு திமிறிக் கொண்டு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது...உனக்கு வாழ்த்துச் சொல்ல....

நீயோ எங்கோ ஒரு மூலையில் அமைதியாய் இந்த நாளையும் கடந்து போய்க் கொண்டிருப்பாய்....! நீ என்ன செய்தாய் எங்களுக்கு என்று ஒரு கூட்டம் கேள்விகள் கேட்கும் அவர்களுக்கு எல்லாம் தெரியாது சூட்சுமமாய்....என்ன என்ன மாற்றங்கள் நீ செய்தாய் என்று...! அது மட்டுமல்ல ரஜினி நீ செய்யும் உதவிகளையும் அருட் கொடைகளையும் சொல்லிவிட்டா நீ செய்கிறாய்.....யாரிடமும் சொல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டுத்தானே நீ செய்கிறாய்,....

எது எப்படியோ ரஜினி, இந்த உன் பிறந்த நாளுக்கு என்னால் முடிந்தவரை எழுத்துக்களை உனக்காக கோர்த்து இருக்கிறேன்...வாழ்த்துக்களாக...அவ்வளவுதான்....

மற்றபடி உன்னை தெய்வம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்......ஆனால் நீ ஒரு மிகச்சிறந்த மனிதன் என்று மார்தட்டிச் சொல்வேன்.....!

வாழ்த்துக்கள் ரஜினி....!!!!!

ப்ரியமுள்ள ஒரு
ரசிகன்

தேவா. S

பின்குறிப்பு: அன்பின் மிகுதியால் ஒருமையில் எழுத வேண்டியதாயிற்று...!Wednesday, December 7, 2011

போதி தர்மன் பேசுகிறேன்...!


நான் போதி தர்மன்....! உங்களோடு எதுவும் நான் பேசவில்லை...! என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்....

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாய் நான் பிறந்திருந்தேன். என்னை ஜனிப்பித்து வெளிக் கொணர்ந்த பூமியில் படர்ந்து கிடந்த போதி மரத்தின் நிழலிலும், பரவிக் கிடந்த காற்றிலுமிருந்து என்னுள் புகுந்து கொண்ட வழிமுறைதான் பெளத்தம். பெரும்பாலும் நான் பேசுவது இல்லை. இப்போது கூட என்னுள்ளேயே நான் ஸ்பூரித்துக் கிடக்கும் என் அந்திமத்தில் நானே நானாய் என் எண்ணங்களூடேதான் நகர்கிறேன்.

இல்லாமல் சுழலும், எல்லாமாயிருக்கும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பூமிப் பந்தின் மூலமும் சரி, அதைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் பேரண்டமும் சரி கருத்துக்கள் அற்றது. விளக்க வேண்டிய அவசியங்களுமற்றது. எல்லாம் இயல்பாயிருக்க மனிதன் மனத்தோடு பிறந்தான். மனம் மதத்தைப் படைத்தது. மதம் கடவுள்களைப் படைத்தது. கடவுளர் இல்லை என்று சொன்ன இடத்தில் புத்தன் பிறந்தான். புத்தனால் இயல்பு பிறந்தது. வாழ்க்கையின் இயங்கு தன்மை விளங்கியது.

இயல்பில் இரு. தேவையானதை அறி. அறிந்ததை தெளி. தெளிந்ததைப் புரி. நகர்ந்து கொண்டே இரு. நகர்கிறேன் என்று எண்ணாதே. வந்ததும், இருப்பதும், செல்வதும் இயக்கத்தின் நிகழ்வு. வார்த்தைகளுக்குள் உன் அனுபவங்களைக் கொண்டு வராதே. உன் அனுபவம் உன்னுடையது. அதை விவரித்து கூறுகையில் அது வேறு செய்தியைத்தான் எப்போதும் சொல்ளும்.

நான் புத்தம் என்ற மதத்தையோ கோட்பாட்டையோ வெறுமனே ஏற்றவன் அல்ல. புத்தரை விளங்கியவன். புத்தரின் அமைதியை என்னுள் கடந்து போக அனுமதித்தவன். வாழ்க்கையின் ஓட்டத்தில் தெளிவுகளைக் காலங்கள் தோறும் புத்தர்கள் உணர்த்திதான் சென்றிருக்கிறார்கள். யாரும் எதையும் நிறுவ இங்கு வரவில்லை. நிறுவியவர்கள் புத்தர்களும் அல்ல...

நான் அரசரின் புதல்வன். செல்வம் நிறைந்த சீமான் என்று என் தற்கால இருப்பு நிலை கொடுத்திருப்பது ஒரு போலி நிகழ்வு. நிஜ நிகழ்விற்காகத்தான் நான் மெளனித்து இருந்தேன். என் மெளனத்தை விளங்கிக் கொள்ள புத்தனை விளங்கினேன் என்று கூறியவர்களாலேயே இயலவில்லை.

எனக்குள் ஏதேதோ அற்புத நடனங்கள் நிகழ்ந்தன. என் ஜீவ இருப்பும், பிரபஞ்சத்தின் மூல இருப்பும் அசையாமல் எல்லாவற்றுள்ளும் விரிந்து கிடக்கையில் என்னை ஏதேனும் சொல்லச் சொல்லி என் கூட இருந்த கூட்டங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டே இருந்தன.

நான் பேசுவேன். உங்களால் கேட்க முடியாது. நான் பாடுவேன் என் பாடல் உங்களுக்குப் புரியாது. நான் உங்களிடம் ஏதேதோ கூறுவேன் ஆனால் அதனால் உங்களுக்கு எந்தப் பலனும் இராது என்பதால்தான், நான் எதுவுமே கூற விரும்பியது இல்லை.

என்னை காண வரும் அத்தனை பேரும் என்னை ஒரு பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாக காண வருவார்கள்..இல்லையேல்...ஒரு பெளத்த குருவாக காணவருவார்கள்....இல்லையேல் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுக்கும் குருவைக் காண வருவது போல வருவார்கள்...

நான் ஒரு வெற்றுப் பாத்திரம். என்னிடம் ஒன்றுமில்லை என்பதை உணர்தலே அவர்களின் தெளிவின் பிறப்பிடம். என் ஆழமான புரிதலை அவர்களுக்குள் நிறைக்க முடியாமல் பல நேரம் போராடி போராடி அந்த போரட்டத்தில் என் அறியாமையை விளங்கி மீண்டும் சலனமற்று போயிருந்திருக்கிறேன்.

காலி பாத்திரங்கள் நிரப்பப்படலாம், ஆனால் என்னைத் தேடி வருபவர்கள் எல்லோருமே நிரம்பிக் கிடக்கிறார்கள். வெள்ளைப் பக்கமாய் நான் வருகிறேன் என்று சிலர் வந்தார்கள். ஏதோ சொல்லி அவர்களுக்குள் நான் எழுதிவிடுவேன் என்றும்....மற்றவகளுக்கு ஏதேதோ கூறி நான் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணுவேன் என்றும் நம்புகிறார்கள்...

மாற்றங்களை மனிதர்கள் விரும்பும் வரை....எதையோ ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கும் வரை.... என்னிடம் இருந்து ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கப்போவது இல்லை. இந்தக் கணத்தில் எல்லாம் நிரம்பிக் கிடக்கிறது....இந்த தருணத்தில் சந்திரன் ஒளி வீசுகிறான்....இந்தக் கணத்தில் பூக்கள் அழகாய் மலர்ந்து இருக்கின்றன.....இந்தக் கணத்தில்....யாரோ எங்கோ ஒரு தாலட்டுப் பாடுகிறார்கள்.....இந்தக் கணத்தில் ஒரு மெல்லிய காற்று வீசுகிறது....

இந்தக் கணத்தின் சக்கரவர்த்தி நான்....என்னிடம் எதிர்காலத்திற்கு ஏதோ வேண்டும் என்று வரும் பைத்தியக்காரர்களை நான் என்ன சொல்லி மாற்ற முடியும்....?

நான் சலித்து எடுத்த தங்கம் அல்ல.... ! நான் தங்கத்தின் மூலமான இயல்புநிலையிருக்கும் ஒரு வஸ்து....என்னிடம் மிகுந்திருப்பது இயற்கையின் இயல்புகள்...! அவற்றை ரசிப்பது கடினமதான் ஆனால் அதுதான் மூல உண்மை என்று உணர்கையில் மட்டுமே புத்தன் உங்களுக்குள் பிறப்பான்....

நான் போதி தர்மன்.....! உங்களோடு நான் பேசவில்லை...என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்....


(இன்னமும் பேசுவார்....)


தேவா. S

Tuesday, December 6, 2011

டிசம்பர் 6....!மதமேறிப் போன
மிருகங்கள் வடித்து வைத்த
இரணத்தைக் வருடந்தோறும்
கிளறிச் செல்கிறது
இந்த டிசம்பர் 6...!

நம்பிக்கை என்ற
பெயரில் மிருகங்களின்
வெறியாட்டத்தை பொறுத்துக் கொண்ட
தியாக நாளாய் எப்போதும்
இரணங்களை மறைத்துக் கொண்ட
புனிதனாய் புன்னகை செய்கிறது
இந்த டிசம்பர் 6!

கடவுளைத் தேடி
பயணிக்கையில் இடையில்
மனிதன் மிருகமாய் மாறி
சீரழிந்த ஒரு கறுப்பு தினத்தின்
கறையை அழிக்கவே முடியாமல்
இன்னமும் இடிந்தே கிடக்கிறது
என் சகோதரர்களின் நம்பிக்கை!

கடவுளை மனதுக்குள்
வைக்கத் தெரியாதவர்கள்
அரசியலுக்குள் அழைத்தின் கோரமா?
இல்லை...
கடவுளென்றால் யாரென்று அறியாத
விலங்கு மனத்தின் அகோரமா?

விடை தெரியா கேள்வியோடு
விடியலைத் தேடும் மனிதனாய்
மனதுக்குள்ளேயே பிரார்த்திக்கிறேன்...
இறைவா...என்றாவது ஒரு நாள்
மனிதர்களின் மனதில்
பூ பூக்கச் செய்து...
அன்பால் உயிர்த்தெழச் செய்
மனித நேயத்தையும்...
இடிந்து போன நம்பிக்கையையும்....!


தேவா. S


Monday, December 5, 2011

தனுஷின் கொலை வெறி...!

பாட்டன் முப்பாட்டன்னு எத்தனையோ காலத்துக்கு முன்னாடி எல்லாம் எப்டி, எப்டியோ எழுதி வச்சுட்டுப் போன இலக்கியங்களும், செய்யுளும் குவிஞ்சு கிடக்குற ஒரு இனம். 54,000 வருசத்துக்கு முன்னாடி இருந்தே முத்தமிழ வச்சுகிட்டு கோலேச்சிக்கிட்டு இருக்குற ஒரு தேசிய இனம், சுத்தி சுத்தி போர் தொடுத்து எல்லா நாட்டையும் வென்று நாங்க தமிழங்கடான்னு சொல்லிட்டு வந்த ஒரு வீர மரபு...

கம்பனையும், இளங்கோவடிகளையும், வள்ளுவனையும், வச்சுகிட்டு நெஞ்சு நிமித்திகிட்டு திரிஞ்ச மக்க இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்காங்கன்னு கேக்குறீங்களா...?

வொய் திஸ் கொல வெறி..... கொல வெறிடின்னு பாட்டு பாடிகிட்டு சந்தோசமா தன் தாய்மொழிய கொன்னுகிட்டு இருக்காங்க. நவீனம், மாற்றம், மண்ணாங்கட்டி எல்லாம் எங்க வந்து விடியும் தெரியுங்களா தமிழனுக்கு அது அவன் பேசுற மொழியிலதான் வந்து விடியும். ஒரு பாட்டுன்ற விதத்துல இசையும் ராகமும் சரிதான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம், அதுவும் அந்த இசை கூட தமிழகத்து டப்பாங்குத்து இசைய ஒட்டியே வர்றதால, ஆனா வரிகள்....?

இது ஒரு உதாரணம் மட்டும்தான் இது மாதிரி ஓராயிரம் பாட்டு இருக்குது தமிழனோட தலைவிதிய நிர்ணயிச்சுக்கிட....! ஒரு பக்கம் ஏழாம் அறிவு படத்தை பாத்துபுட்டு நிஞ்ச நிமித்திகிட்டு நாங்க எல்லாம் யாரு தெரியும்ல....உலகத்துக்கே குங்பூ சொல்லிக் கொடுத்த தமிழங்கன்னு வீராப்பா சொல்லிக்கிறாய்ங்க...

இன்னொரு பக்கம் இந்த வொய் திஸ் கொல வெறி...கொல வெறிடின்னு ஒரு நாய் கடிச்சு இழுத்துட்டுப் போய் பாதியில போட்ட தேங்காமட்டை மாதிரி ஒரு பாட்டுக்கு வரிகள எழுதி கேக்குற மனுசன் இசைய ரசிக்கிறானா இல்லை வரிகள ரசிக்கிறானான்னே தெரியாம, தெருத் தெருவா இந்தப் பாட்டை பாட வச்ச பாடல் குழுவினர்களுக்குத் தெரியாது நாம ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஆரம்பிச்சு வச்சு இருக்கோம்னு....

நல்ல தமிழ்ல அழகான மெட்டுப் போட்டு பாட்டு எழுதினா மருவாதை கொறஞ்சு போயிடுமோ என்னமோ தெரியலை. ஏய்யா இப்புடி செஞ்சீருன்னு தனுஷ் அண்ணன் கிட்டயும் அவுங்க சக தர்மினிகிட்டயும் கேட்டம்னா அவுங்க பளீச்சுன்னு சொல்லுவாங்க ஏண்ணே இப்புடி எழுதுனாத்தேன் பிரபலம் ஆகும் அதேன் எழுதி பாடுனோம்னு ..! நெசம்தானே தெருவுக்குத் தெரு, இந்த பாட்டு பிரபலம் அடைஞ்சது மட்டும் இல்லாம வட இந்தியாவையும் ஒரு கலக்கு கலக்கிக்கிட்டு இருக்குன்னு நேத்திக்கு தொலைகாட்சியில சொல்லுறாங்க...

இந்தப் பாட்டை பகிர்ந்துக்கிற, பாராட்டுற அல்லது மீண்டும், மீண்டும் பாடணும்னு நினைக்கிற அம்புட்டு பேருக்கும் தெரியுமா நம்ம தாய்மொழிக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை இந்தபாட்டுக்கள் எல்லாம் செஞ்சுகிட்டு இருக்குன்னு...!

தமிழ் நாட்ல நீங்க படம் வெளியிடப் போறீங்க, தமிழர்கள் படம் பார்க்கப் போறாங்க அப்புறம் எதுக்கு இந்த கொலைவெறி பாடலுங்க?

ஏற்கெனவே ஆங்கில மோகம் கொடிகட்டிப் பறக்கிற ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவங்க நாமன்னு உலகத்துக்கே தெரியும்...! சென்னை மாதிரி நகரங்கள்ள எல்லாம் வெளிநாட்டுக்காரங்க வருவாங்க இல்லை வேறு சுற்றுலாத் தளங்களுக்கு வெளிநாட்டுக்காரங்க வருவாங்க அதனால விளம்பரப் பலகைகள் எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வச்சுக்கிடுறாங்கன்றதுல ஒரு அர்த்தம் இருக்கு....

ஆனா சின்ன சின்ன கிராமங்கள்ள இருக்குற கடைகள்ள கூட கூல்ட்ரிங்க்ஸ் கிடைக்கும்னு தமிழ்ல்ல எழுதி வச்சு இருக்கறது ஆங்கில மோகத்துனாலதானங்க? சமீபத்துல ஒரு நண்பர் என்கிட்ட சொன்னார் நீங்க பேசும் போது அதிகம் ஆங்கிலம் கலந்து கலந்து பேசுறீங்க, வேலையிடத்துல அதிகமா ஆங்கிலம் பேசுறதால அந்தப் பழக்கம் வருது ஆனா தமிழங்க கிட்ட பேசும் போது அப்புடி பேசுறது தப்புன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னாரு...

ஆங்கிலத்துல முழுசா யாருகிட்ட பேசணுமோ அவுங்க கிட்ட பேசுங்க ரெண்டு தமிழங்க சேந்து ஆங்கிலத்துல பேசிக்கிற மாதிரி ஒரு அயோக்கியத்தனம் எதுவும் கிடையாது...! பழக்கம்ங்க ஐயான்னு அப்புடீன்னு நீங்க சொல்ற மன்னிப்பை ஏத்துக்க முடியாது, பழக்கமா இருந்தாலும் தவறை கஷ்டப்பட்டுதான் நீங்க திருத்திக்கணும்னு..

கொஞ்சம் கொஞ்சமா என்னோட மூளைக்கு அந்த உண்மை உரைக்க ஆரம்பிச்சுது. தமிழ்ல்ல பேசுறதுன்னா தூய சங்ககால தமிழ்ல பேசறதுன்னு ரொம்ப பேரு நினைச்சுகிட்டு பாதி ஆங்கிலம், பாதி தமிழ் பேசுறது ஒரு கலாச்சாரமா கொண்டு போய்கிட்டு இருக்காங்க ஆனா நம்ம பேச்சுத் தமிழ்லயே ஆங்கலத்தை கலக்காம பேசவும், எழுதவும் முடியும்ன்றத வசதியா மறந்து போய்டுறோம். அப்புடி நாம செய்றது கஷ்டமா இருந்துச்சுனாலும் அதை நாம் செஞ்சுதான் ஆகணும்....

ஏன்னு கேட்டீங்கன்னா ஒரு மொழி அழிஞ்சு போறது இந்த மாதிரியான கலப்பட பேச்சு வழக்குகளாலதான், மெல்ல மெல்ல வேற்று மொழி முழுதுமா நம்ம மொழிய ஆக்கிரமிச்சு அது பற்றின தடயங்களே இல்லாத அளவுக்கு ஆக்கிடும். பல ஆபத்துக்கள் நம்ம மொழிக்கு பல விதத்துல வந்துகிட்டே இருக்கு. இப்ப கூட சிறு வியாபரிகள் செய்யும் தொழில்களை எல்லா வெளிநாட்டு நிறுவனங்களும் நடத்தலாம்னு ஒரு ஆபத்தான அறிவிப்பை இந்திய அரசு தெரிவிச்சு இருக்கு (ஏன் ஆபத்துன்னு வேற கட்டுரையில பேசலாம்). அப்படி வரப்போற ஆபத்துல பெரிய ஆபத்து மொழிக்கும் கலாச்சரத்துக்கும் வரப்போற ஆபத்துதான்...

ஏற்கெனவே நமக்குத் தெரியாமலேயே ஒராயிரம் சீர்கேடுகளை நம்ம மொழிக்கு நாம செஞ்சுகிட்டு இருக்கையில, மக்கள அதிகமா பாதிக்கிற ஊடகங்கள் குறிப்பா இந்த சினிமாத்துறை அதாவது தமிழ் மொழியில படத் தலைப்பு வச்சா வரி விலக்கு தருவாங்கன்னு சொல்லிட்டு தமிழ்ல பேரு வச்சு பிரயோசனப்பட்டுகிட்டு இப்ப வரி விலக்கு இல்லைன்னு சொன்ன உடனே ஆங்கிலத்திலேயே பேரு வைச்சுகிட்டு இருக்காங்களே அந்த சினிமாத்துறை துரைமாருகதான்....

எல்லாத்தையும் வெளங்கிக்கிட்டு, இந்த மாதிரி வொய் திஸ் கொலை வெறி மாதிரி பாட்டுக்களைப் போட்டு தமிழ் மொழிய கொல்லாம இருந்தாச் சரிதான்...

என்னவோ போங்க நான் சொல்றத சொல்லிப்புட்டேன்....

மாடு வந்துடுச்சு கட்டுனா கட்டுங்க கட்டாட்டி போங்க....!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!

தேவா. S

பின்குறிப்பு: இம்புட்டு பேசுற உன் வலைப்பூ பேரே ஆங்கிலத்துல இருக்குன்னு நிறைய பேரு கேட்டுப்புட்டாங்க சாமியோவ்...! அறியாத பருவத்துல செஞ்சுபுட்டேன்.. சீக்கிரமே அதையும் மாத்திடுவோம்...!

Sunday, December 4, 2011

வெளிச்சம்...!

தெரியாது...
என்ற வார்த்தையோடு
ஒரு உரையாடலை
நான் முடித்துக் கொள்ள
நினைக்கையில்
ஏன் தெரியாது
என்று கேட்டு
எப்போதும் யாராவது
தொடங்கி விடுகிறார்கள்
அர்த்தமற்ற வார்த்தைகளின்
அணி வகுப்புக்களை!

அறிந்திராத பக்கங்களை
எல்லாம் நுனி மடக்கி
யாராவது வாசிக்கச் சொல்கையில்
வேண்டாம் என்று...
உதடு பிரிக்கும் முன்பு
மனம் அவற்றை...
எட்டி உதைத்து நிராகரித்து
தூர தள்ளிதான் விடுகிறது..!

முக ஸ்துதிகளின்...
நச்சு முனைகளை
ஒடித்து குப்பையில் எறிந்து
மெல்ல சுருண்டு ஒதுங்கி
ஒடுங்கிக் கொண்டு
ஜன்னலரோப் பேருந்தில்
வேடிக்கைப் பார்க்கும்
முகமற்ற பயணியாய்
எப்போதும்
பயணிக்கிறது மனது!

அறிவின் கனத்தை
கழுத்தில் மாட்டிக் கொண்டு
ஆணவ இரைச்சலோடு
வருபவர்களை
எல்லாம் தூர நிறுத்தி
திருப்பி அனுப்பி
புன்னைகையோடு வரும்
மனிதர்களை மட்டும்
சேர்த்துக் கொண்டு
வார்த்தைகள் இல்லாமல்
என்னோடு வாசம் செய்யுங்கள்
என்ற கட்டளையை
கண்களால் இட்டு பகிர்தலாய்
நகர்கிறது என்
இருட்டு பொழுதுகள்!


தேவா. S