Skip to main content

வேங்கைகளின் மண்.....!



வரலாற்றின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட பக்கங்களாய் வீரம் மிகுந்த சிவகங்கைச் சீமையின் சுதந்திரப்போர் அமைந்து போய்விட்டது. அந்த மண்ணைச் சேர்ந்த மக்கள்  உண்மைகளை சரியாக முன்னெடுத்து பொதுவெளிக்கு கொண்டு வரவில்லையா? இல்லை ஆதிக்க அரசியல் அந்த முயற்சிகளை எல்லாம் சாய்த்துப் போட்டுவிட்டதா என்ற கேள்விகள் எல்லாம் ஏதோ ஒரு சோகத்தை உள்ளுக்குள் பரவவிடுவதை தவிர்க்க முடியவில்லை.

வாழ்க்கையில் வெறுமையை நிறைய அனுபவித்து வாழ்ந்து கொண்டு உப்புக்காற்றையும், உறைக்கும் வெயிலையும் உடலில் வாங்கிக் கொண்டு கரடுமுரடான  செம்மண் பூமிக்குள் எப்போதும் வானம்பார்த்து வாழும் வீர மைந்தர்களை பதிவு செய்து கொள்வதில் வரலாற்றுக்கும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மைதான் போலும்....

சுதந்திரப்போராட்ட வரலாற்றை இந்திய தேசம் பக்கம் பக்கமாய் எழுதி நிரப்பிக் கொண்டு போனால் போகிறது என்று மிச்சமிருக்கும் உணவினை பிச்சைக்காரனுக்குப் போடும் எஜமானனாய் சிவகங்கைச்சீமைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறது. இந்த மண்ணின் மக்களும், இந்த மண்ணிலிருந்து மேலெழும்பி பிரபலமான மனிதர்களும் சிவகங்கைச் சீமையை எப்போதும் வெளி அரங்கில் பிரதிபலித்ததில்லை. அரசியல் பலம் பெற்றோரும், அதிகார பலம் பெற்றோரும், பண பலம் பெற்றோரும்  வாழ்வின் ஓட்டத்தில் தங்களின் சட்டைப் பைகளிலேயே கவனத்தை பெரும்பாலும் கொண்டிருந்த காரணத்தால் இந்த செம்மண் சீமையில் படிந்து கிடக்கும் இரத்தக்கறைகளை ஏறெடுத்துப் பார்க்க அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை.

வெள்ளையர்களை எதிர்த்து போர்முழக்கமிட்ட முதல் குரலுக்கு சொந்தக்காரர்களான இந்த மண்ணின் மைந்தர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. கருவேலங்காட்டுக்குள் அனல் பறக்கும் வெயிலுக்குள் அடர்த்தியான அந்த மண்ணின் காற்றில் பரவிக் கிடக்கும் அதிர்வுகள் ஏதேதோ கதைகளைச் சோகமாய்ச் சொல்லத்தான் செய்கின்றன.

வழக்கம் போல விடுமுறைக்குச் சென்ற என் கையில்  எதிர்பாராமல் கிடைத்த வேலு நாச்சியார் என்னும் புத்தகத்தை வரி விடாமல் இரவு பகலாய் வாசித்ததில் அங்கே சொல்லப்பட்டிருந்த புள்ளி விபரங்கள் எனக்கு வேலு நாச்சியாரைப் பற்றி எழுத உதவப் போகிறது என்பதை வாசிக்க தொடங்கிய மூன்றாவது கணத்தில் புரிந்து கொண்டேன். புத்தகத்தின் ஆசிரியர் சீமையின் எல்லா பகுதிகளுக்குள்ளும் சுற்றித் திரிந்து புதிய புதிய தகவல்களை நுணுக்கமாய் பதிவு செய்திருந்ததை வாசித்து வாசித்து என் கண்கள் பள பளக்கத் தொடங்கியிருந்தன. மனிதர்கள் எவ்வளவு வீரத்தோடும் போர்க்குணத்தோடும் மதிநுட்பத்தோடும் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற பிரமிப்பிலிருந்து வெளியே வரவே முடியவில்லை.

வீரமிகுந்த செம்மண் பூமியின் வரலாறு என்று ஏற்கெனவே காளையார்கோவிலைச் சேர்ந்த திரு. மு. சேகர் எழுதிய புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். அதையும் உள்ளடக்கி திரு. ஜீவபாரதி அவர்கள் எழுதியிருக்கும் இந்த புத்தகம் ஒரு கதை என்ற அளவில் தனது எழுத்து நடைக்குள் முடங்கிப் போய் தாக்கத்தை எதிர்ப்பார்த்த அளவு கொடுக்க முடியாமல் போனது மட்டுமே ஒரு குறையாக நான் பார்க்கிறேன்.

சிறுவயதிலிருந்தே சிவகங்கைச் சீமையின் வீரவரலாறும் எமது வீடுகளில் சோறோடு சேர்த்து எங்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. வேலு நாச்சியாரின் பிரதான அமைச்சராய் இருந்த முத்து தாண்டவராயன் பிள்ளையை பற்றியும் அவரின் மதி நுட்பம் பற்றியும், வீரம் பற்றியும் அவரது பேத்தி வாயிலாக கேட்டு விட்டு தன் பெரிய அப்பத்தா கிழவி சொன்னதாய் என் அம்மா சொன்னதை எல்லாம் கட்டுரையை வாசிக்கையில் என்னால் நினைவு கூற முடிந்தது.

ஏதோ ஒரு முடிச்சு சிவகங்கைச் சீமைக்கும் என் ஜீவனுக்கும் இருப்பதாய் நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனாலேதானோ என்னவோ என்னுடைய வலைப்பூவின் முகவரியும் மருதுபாண்டியானது போல....

இனி... 

நான் அறிந்த வரலாற்றின் மூலம் வேலு நாச்சியார் என்னும் பெண் வேங்கையை உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டிய பெரும் பொறுப்பு எனக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இதற்காய்  நான் எப்போது நேசிக்கும்  எல்லாம் வல்ல தென்னாடுடைய சிவனும், சிவகங்கை அரண்மனையில் குடி கொண்டிருக்கும் அம்மா இராஜ இராஜேஸ்வரியும் என் உடன் நின்று...... இந்த சிறுவனுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்....!

வரப்போகும் நாட்களில்..சீமைக்குள் செல்வோம்....!


தேவா . S



Comments

சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
தொடரை வாசிக்கக் காத்திருக்கோம்..
Kousalya Raj said…
//வெள்ளையர்களை எதிர்த்து போர்முழக்கமிட்ட முதல் குரலுக்கு சொந்தக்காரர்களான இந்த மண்ணின் மைந்தர்கள்//

இந்த ஒரு வரி செய்தி கூட தெரியாமல் தான் இன்றைய தலைமுறை இருக்கிறது. வீரம் , விவேகம் செறிந்த வேலுநாச்சியார் அவர்களின் வரலாறு படிக்கும் போது நமக்குள் சொல்ல இயலாத உணர்ச்சி மேலோங்குவதை உணரமுடியும்...

அவர்களை பற்றி தொடர்ந்து நீங்கள் எழுத போவதற்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள் !!

.....

அப்புறம் இந்த உடையார் தொடர் என்ன ஆச்சுன்னு தெரியலையே...!? :)
Anonymous said…
சிறப்பான தொடக்கம்! படிக்கக் காத்திருக்கிறோம்! நன்றி!
தொடருங்கள்.
நம் மண்ணின் வீரப் பெண்மணியின் கதையை எல்லோரும் அறியக் கொடுங்கள்.
அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...