
காவிரி ஆறுன்னு சொன்னா எங்களுக்கு கல்யாணை ஓடை கால்வாய் தான். ஆத்துல தண்ணி வந்துருச்சுடோய்ய்ய்ய்ய்ய்னு..... கத்திக்கிட்டு துண்ட எடுத்து வீட்டுக்குத் தெரியாம இடுப்புல சுத்திக்கிட்டு மேல சட்டையப் போட்டு மறைச்சுக்கிட்டு பயலுகளோட ஓடிப்போயி எல்லோரும் தாவுற சந்தோத்தை இன்னொரு தடவ தாவித்தான் காட்ட முடியுமே தவிர எழுத்துல கொண்டு வர்றது கஷ்டம்...
பழைய மதுக்கூர்ல இருந்து மதுக்கூர்க்குள்ள தண்ணி உள்ள வந்துச்சுன்னா சுப்பையன் ஓட்டல்ல கொல்லப்புறமா ஆத்துக்குள்ள வீசி எறிஞ்ச எச்சி எலைய எல்லாம் துடைச்சு அள்ளிக்கிட்டு செத்த, குப்பை எல்லாம் வாரி அடிச்சுக்கிட்டு போகும். தண்ணி வந்த ரெண்டு நாளைக்கு குளிக்கப்புடாதுடா... ஆத்துலதான் தண்ணி இல்லையேன்னு சொல்லிட்டு உள்ளயே அசிங்கம் பண்ணி வச்சு இருப்பாய்ங்கன்னு பசங்க குசு குசுன்னு ஒருத்தன் காதுல மாத்தி ஒருத்தன் சொல்லி பள்ளிக் கூடத்துக்குள்ளயே ஆத்துல தண்ணி வந்த விசயத்தை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடிகிட்டு இருப்போம்.
ஆறுன்னு சொன்னா எங்க ஊருக்குள்ள வர்றது ஒரு சின்ன கால்வாய்தான்னு வச்சுக்கோங்களேன். ஊரச்சுத்தி அம்புட்டு குளம் இருக்கு, பெரிய ஏரி ஒண்ணு இருக்கு. தஞ்சாவூர் ஜில்லான்னா சொல்லவா வேணும்....மோட்டர் போட்டு இறைச்சாக் கூட அப்போ எல்லாம் கிட்டன்ஸ்ல தண்ணி இருக்கும்....அதனால தோப்புக்கு தோப்பு மோட்டர் பம்ப் வேற இருக்கும். இப்டி எவ்ளோதான் இருந்தாலும் ஓடுற ஆத்த பாக்கும் போதே அந்த தண்ணிக்கு உசுரு இருக்குன்ற மாதிரி தோணும்....
கால மட்டும் சரியா வச்சி நிக்கலேன்னா தண்ணி இழுத்துக் கொண்டு போயி கடல்ல விட்றும்டான்னு நல்லா நீச்ச தெரிஞ்ச பசங்க எல்லாம் பயமுறுத்த வேற செய்வாங்க. எங்க வீட்டப் பொறுத்த வரைக்கும் ஆத்துக்கு குளிக்க போகக்கூடாதுன்னு கண்டிசன் போட ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு எனக்கு நீச்சல் தெரியாது, இரண்டாவது ஆத்துல பொணத்த வெட்டி மெதக்க விடுவாங்கன்னு ஒரு பயம் வேற.....
அடிதடி வெட்டுக் குத்துக்கு எல்லாம் சளைச்ச மாவட்டம் இல்ல தஞ்சாவூர் மாவட்டம். ஆனாலும் எதைச் செஞ்சாலும் கமுக்கமா கருவம் வச்சு செஞ்சுப்புடுவாங்க. அப்போ எல்லாம் ஆத்துல அடிக்கடி பொணம் வரும்னு சொல்லி நான் கேள்விப் பட்டு இருக்கேன். அதாவது ஆளக் காலி பண்ணிட்டு தலைய மடக்கி வச்சு தலைவாணிய கட்டி ஆத்துல விட்டுருவாங்கன்னு சொல்வாங்க. தாவித்தாவி இழுத்துக்கிட்டு போற தண்ணியில குளிக்கிற சுகத்துல லேசா இந்த பயம் வேற உள்ளுக்குள்ள இருக்கத்தான் செய்யும்.
ஒரு கரையில ஆம்பளைங்களும் எதித்த கரையில பொம்பளைங்களும் சங்கோஜம் இல்லாம குளிக்கிறது எல்லாம் நம்மூர்ல சாதரணம்னு வச்சுக்கோங்களேன்...! அப்டியே தண்ணில பாஞ்சு விழும் போதே முதுக திருப்பி எதித்த கரையில துவட்டிக்கிட்டு இருக்க கூட்டாளி மேல தண்ணி அடிக்கிறது, அப்புறம் காலை சம்மணம் போட்டுக்கிட்டு மூக்கை பிடிச்சுக்கிட்டு தண்ணில முங்குறது, அப்டி நாம முங்குனதுக்கு அப்புறம் தண்ணி மேல ஜும்னு எந்திரிச்சு வரும்ன்றதுனால அதுக்குப் பேரு புள்ளையார் முக்குளின்னு சொல்லுவாங்க...
புள்ளையார்னு சொல்லும் போதே மனசு ச்ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு எங்கயோ பறக்குது. ஆமாங்க புள்ளையார் சதுத்தி வந்துருச்சுன்னா...புள்ளையார் சதுத்தி அன்னிக்கு மத்தியானம் பக்கத்து வீட்டு பாலு அண்ணா கூட சைக்கிள்ல பின்னாடி ஏறிகிட்டு ஒரு இரும்பு வாளியோட ஆத்துக்கு போவோம். அந்தண்ணாவோட வாளி சைக்கில் ஹேண்டில் பார்ல இருக்கும். ஆத்துக் கரையோரமா இருக்குர களிமண்ண களைக்கோட்டுன்னு சொல்லுவாங்களே.. சின்ன மம்பட்டி மாதிரி இருக்குமே அதுல அள்ளி வாளில எடுத்துக்கிட்டு... அப்டியே ஆத்துல குளிச்சுட்டு....ஆத்துல இருந்து திரும்பி வர்ற வழியில நிறைய அருகம்புல் எல்லாம் பறிச்சுக்கிட்டு ஒரு மூணு மூணரைக்கு வீட்டுக்கு வந்துடுவோம்....
எங்க சைட்ல எல்லாம் புள்ளையார கடையில வாங்குறத ஒரு மாதிரி அவமானமா நினைப்போம். ஏன்னா எங்க வீட்ல எப்பவுமே எங்க அம்மாதான் புள்ளையார் செய்வாங்க....களிமண்ண குழைச்சு கும்பம் மாதிரி வச்சு தட்டி தட்டி அழகா ஒரு பிரமாண்டப் புள்ளையார அவுங்க செய்றத எங்க தெருவுல இருக்க எல்லோருமே ஆச்சரியமா ஒரு மேஜிக் ஷோவ வேடிக்கை பாக்குற மாதிரி பார்ப்பாங்க....! புள்ளையார் செஞ்சு அதுக்கு பூண்டு பல்லுல தந்தம் வச்சு.... குண்டு மணி தெரியுங்களா உங்களுக்கு....? அந்த குண்டு மணிய எடுத்து கண்ணு வச்சு... தலையில வெளக்குமாத்து குச்சிய வைச்சு அழகா பெரிய கிரீடம் பண்ணி, நாலு கை, பெரிய தொப்பை வச்சு அழகா காலை மடக்கி உட்கார்ந்து இருக்கமாதிரி செஞ்சுடுவாங்க...., துணைக்கு ஒரு குட்டி மூஞ்சுறு வேற.. அதுக்கும் குண்டு மணிதான்.. கண்ணு.... அதோட முன் நெற்றியில மூணு கோடு போட்டு பட்டை எல்லாம் போட்டு விடுவோம்...
செமையா காஞ்சு பிள்ளையாரும், மூஞ்சுறும் ரெடி ஆனவுடனே. புள்ளையார் வயித்துல ஒரு எட்டணா காயின வச்சு....சாமிப்படத்துக்கிட்ட கொண்டு போய் வச்சுட்டு...சாயங்காலமா, சக்கரைக் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை, லட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம், சுண்டல், ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், வெத்திலைப் பாக்கு...ஊதுபத்தி எல்லாம் வச்சுப் படைச்சு...
' பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.....'
அப்டீன்னு கணீர் குரல்ல அப்பா பாட....கூடவே முடிக்கும் போது சங்கத் தமிழ் மூன்றும் தான்னு நாமளும் புள்ளையார கெஞ்சிக் கேட்டுக்கிட்டு இருக்கையிலயெ... மனசுக்குள்ள அந்தப் பூரணக் கொழுக்கட்டை இனிச்சுக்கிட்டு இருக்கும். பூரண கொழுக்கட்டையில இருக்குற வெள்ளையான மாவை ஓப்பன் பண்ணிட்டு பூரணத்தை மட்டும் சாப்பிடுற சுகமே தனிதான்....
புள்ளையார் சத்தி அன்னிக்கு நைட் எந்திருச்சு நான் புள்ளையாரப் பார்ப்பேன்.. ஜீவனோட உக்காந்துட்டு இருப்பார். ஆமாம்.... ஆத்து மண்ணா இருந்து ஒரு உருவமா மாறி ஜீவனோட எங்க வீட்டுக்கு வந்த ஒரு புது ஆள்தானே.... புள்ளையார நெனச்சுக்கிட்டே தூங்கிடுவேன். புள்ளையார் எப்பவுமே ஒரு சமரசமான சாமானியனின் கடவுளாத்தான் நான் எப்பவுமே நினைச்சு இருக்கேன் அதாவது வீட்ல அம்மோவாட கடைசி தம்பி.. வயசுல கொஞ்சம் எல்லா மாமாவை விடவும் கம்மியா இருந்துட்டு நமக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணுவாரே.... எங்க வேணும்னாலும் கூட்டிட்டுப் போய் எது கேட்டாலும் வாங்கித் தருவாரே... அது மாதிரி ஒரு உறவாத்தான் புள்ளையார நான் பாத்து இருக்கேன்...
மூணு நாள் வீட்டுக்குள்ள இருந்த ஆள மறுபடி கொண்டு போயி தண்ணியில போடணும்னு அம்மா சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும். மறுபடி வாளிக்குள்ள புள்ளையார வச்சு ஆத்துக்கு சைக்கிள் கேரியர்ல வச்சு தூக்கிட்டு போகும் போது மனசு ரொம்ப வலிக்கும்....ஏம்மா..ஏம்மா. வச்சுக்கலாமேம்மானு அம்மாகிட்ட கேட்டா.. .அட..அப்டி எல்லாம் செய்யக்கூடாது அப்டி வச்சுகிட்டா அது தப்புன்னு அம்மா சொல்லும் போது கண்ல இருந்து கண்ணீரே வந்துடும்....
மறுபடி எங்க இருந்து புள்ளையாருக்கு மண்ண எடுத்தேனோ அங்கேயே .....போய் புள்ளையாரப்பா எங்கள காப்பாத்துன்னு தண்ணியில புள்ளையாரப்பாவ கரைக்கும் போது ச்ச்சே.... எவ்ளோ கம்பீரமா இருந்தப்பா நீன்னு தேம்பித் தேம்பி அழத்தோணும்....
அப்போ எல்லாம் தெரியாது. ஏதோ ஒரு நிலையாமையக் கத்துக் கொடுக்கத்தான் இப்டி மண்ல எடுத்து செஞ்சு வச்சு பூஜை பண்ணிட்டு மறுபடி மண்ணுலயே கரைக்கிறதுனு எனக்குத் தெரியாது. மனுச வாழ்க்கையும் அப்டிதானுங்களே.. ஆரவாரமா வந்து ஆரவாரமா அடங்கிப் போயிடுறோம். இடையிலதான் அலங்காரம், அது இதுன்னு எல்லாம்....!
புள்ளையார் சத்தின்னா அதுல கத்துக்குற பாடம் இதுதான்னு புரியாம ஏதேதோ செய்றவங்கள பாத்தா சிரிப்புதான் வருது.. இப்போ எல்லாம்...! நாளைக்கு புள்ளையார் சத்தி....எங்கூரு ஆத்துல தண்ணி இல்ல இப்போ.... அதோட மட்டும் இல்லை.. இப்போ எல்லாம் யாரும் புள்ளையாரு மண் எடுத்து செய்றதும் இல்ல... எல்லாரும் கடையில வாங்கிட்டு...பக்கத்துல கிணத்துல தூக்கிப் போட்றாங்க...! நிறைய பேர் புள்ளையாரை தூக்கிப் போடாம எடுத்து வச்சுட்டு... வருசா வருசம் அதையே எடுத்துக் கும்பிடவும் செய்றாங்க..
நான் இப்போ சிலை செய்றதும் இல்லை, வாங்குறதும் இல்லை ஆனா மனசுக்குள்ள
' பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.....'
எனக்குள்ள நானே சொல்லிக்கிறது....! சங்கத் தமிழ தந்தாலும் சரி தரலேன்னாலும் சரி....நான் நிலையாமைய உணர்ந்துட்டேன் அம்புட்டுதான்...!
அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா.....!
தேவா. S
Comments
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
// எனக்குள்ள நானே சொல்லிக்கிறது....! சங்கத் தமிழ தந்தாலும் சரி தரலேன்னாலும் சரி....நான் நிலையாமைய உணர்ந்துட்டேன் அம்புட்டுதான்...!//
வாழவின் நிலையாமைத் தத்துவத்தை விளக்கியுள்ள விதம்
மிகவும் அருமை!