Skip to main content

பார்த்த ஞாபகம் இல்லையோ....!


அந்தப் பெரியவரை அப்போதுதான் பார்த்தேன். 75 வயதுக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. தொள தொள பேண்ட்டுக்குள் இன்சர்ட் செய்திருந்தார். தலை மெல்ல ஆடிக் கொண்டிருந்ததைப் போலவே கைகளும் நடுங்கிக் கொண்டிர்ந்தன. வயிற்றுக்குM மேல் பேண்ட்டை தூக்கிப் போட்டிருந்தார். சூ, பேண்ட் ஷர்ட் என்று ஒரு ஒழுங்கு இருந்தது அவர் உடையில். 

சீக்கிரம் காசு கொடுங்க சார்....அடுத்து கஸ்டமர் நிக்கிறாங்கல்ல....ஆங்கிலம் கலந்து அந்த கவுண்ட்டரில் இருந்தவன் அந்த தாத்தாவை கொஞ்சம் அதட்டலாகவே சொன்னான். நான் மணியைப் பார்த்தேன்....நள்ளிரவு பன்னென்டு மணிக்கு அழைத்து வாழ்த்துச் சொல்லவில்லை என்ற  மஞ்சுவின் கோபத்தை சரிக்கட்ட பொக்கேயோடு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன். நேற்று பிறந்த நாள் கொண்டாடியவளுக்கு இன்று வாழ்த்துச் சொல்வது அதுவும் ஒரு காதலன் வாழ்த்துச் சொல்வது எவ்வளவு அவஸ்தையா இருந்திருக்கும் அவளுக்கு...!  நாட்கள்ள என்ன இருக்கு மஞ்சு என்று கேட்டதற்கு ஷேம் ஆன் யூ மேன்....லவ்வரோட பிறந்த நாள் கூட தெரியாம இருக்க நீ எல்லாம்...என்றுஅவள் போட்ட சண்டை முடித்த போது விடியற்காலை 3 மணி. இப்படி இப்படி இருக்க வேண்டுமென்று எவ்வளவு தீர்மானித்தாலும் 24 மணி நேரமும் துரத்தும் சாஃப்ட்வேர் உத்தியோகம் காதலை எல்லாம் கபளீகரம் செய்து விடுகிறது பலநேரங்களில்....

எத்தனை பேர் வாழ்த்துச் சொன்னாலும் தனக்குப் பிடித்தவர்கள் வாழ்த்துச் சொல்லாவிட்டால் அவ்வளவுதான்; அதுவும் உயிருக்கு உயிராய் நேசிக்கும் நான் எப்படி மறந்தேன்? எனக்கு என் மீதே எரிச்சல் வந்தது....

தாத்தா விலை 300 ரூபாய்தான் வாட் டாக்ஸ் எல்லாம் இருல்ல அது எல்லாம் சேத்து 325 ரூபாய்....கேஷ் கவுண்டரில் இருந்தவனும் என்னைப் போலவே பொறுமை இழந்திருந்தான். தாத்தா மறுபடி மறுபடி அவர் வாங்கிய பொருளில் இருந்த விலையை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்....அவருக்கு விற்பனை வரிபற்றி ஒன்றும் புரியவில்லை....

பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு மறுபடித் நடுக்கத்தோடு துலாவிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். எல்லாமே டாக்குமெண்ட்ரி படம் பார்ப்பது போல மெதுவாக நிகழ்ந்து கொண்டிருந்தது என் முன்னால்...மஞ்சு என் கண் முன் வர எனக்கு கோபம் வந்து கத்தியே விட்டேன்....

அவர்கிட்ட வேணும்னா பொறுமையா வாங்கிக்கங்க சார்...லெட் மீ பே அண்ட் ரஷ்....சம் ஒன் இஸ் வெயிட்டிங் ஃபார் மீ....

என் சப்தம் அந்தப் பெரியவரை ஒன்றும் செய்யவே இல்லை....கிட்ட தட்ட சயின்டிஸ்ட் ஐன்ஸ்டீன் போன்ற தோற்றத்தில் இருந்த அவர் பொறுமையாய் பாக்கெட்டைத் துலாவிக் கொண்டிருந்தார். முதுமை அவரை நிற்க விடாமல் தள்ளாடச் செய்து கொண்டிருந்தது.

ஒருவேளை காசு எதுவும் இல்லாமல் இருப்பாரோ.....முதல் முறையாய் எனக்குள் ஒரு பச்சாதாபம் எழுந்து என் கோபத்துக்குள் சதக்க்க்க் என்று குற்ற உணர்ச்சிக் கத்தியை சொருகியது....ச்ச்ச்ச்சே ஏண்டா கத்தினோம் என்று தோன்றியது.

கேஷ் கவுண்டர் ஆளே வெளியே வந்து பெரியவரின் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பணம் எடுத்து அதில் இருந்து 25 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை அவரது கையில் திணித்து விட்டு தேங்க் யூ என்று சொன்னான்...

பெரியவர் என்ன வாங்கினார் என்று அவசரத்தில் என்னால் கவனிக்க முடியவில்லை. மஞ்சுவிற்கு இந்த பூங்கொத்துப் ரொம்பப் பிடிக்கும் இதுவும் இந்த வயலட், மஞ்சள்,பிங்க், நிற பூக்களைக் கண்டால் அவள் துள்ளிக் குதித்து என்னைக் கட்டிக் கொள்வாள் கூடவே என் கவிதைகளையும் வைத்து சரிக்கட்டி கொள்ளலாம்.....


நீ என்றும் நான் என்றும்
யார்தான் இருக்கிறார்கள் இங்கு...
வாழ்த்துச் சொல்லவும்
வாழ்த்தைப்  பெற்றுக் கொள்ளவும்...?

***

நீ எதற்கு பிறந்த நாள்
கொண்டாட வேண்டும்...?
இந்த நாளல்லவா
கொண்டாடிக் கொள்ள வேண்டும்
நீ பிறந்தாயென்று....!

***

பணத்தைக் கொடுத்து விட்டு வெளியில் வந்தேன்....! குறுகலான அந்த புட் பாத்தில் சற்று முன் பார்த்த அந்தப் பெரியவர்  மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தார். மழை நீர் தேங்கிக் கிடந்தால் கீழே இறங்க முடியாமல் நானும் அவர் பின்னால் மெதுவாய் போய்க் கொண்டிருந்த போதுதான் கவனித்தேன்....அவருடைய கையிலும் ஒரு பூங்கொத்து இருந்தது....

இவர் யாருக்கு பொக்கே வாங்கிக் கொண்டு போகிறார்...? எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது...? பேரன் பேத்திகளுக்காய் இருக்குமோ  அப்படி இருந்தாள் யாராவது பிள்ளைகளோடு வந்திருக்கலாமே...யோசித்தபடியே அவருக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்த எனக்கு நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது....

ஷர்க்க்க்க்... ஷர்ர்க்க்... .ஷர்க்க்க்க்....

ஷரிக்க்க்.. ஷர்க்க்... ஷர்க்க்க்

ஷர்க்க்க்.. ஷர்க்க்க்க்.......ஷர்க்க்க்க்க்க்.....ஷ்ஷ்ஷ்ஷ்ட்

பெரியவர் நடப்பதை நிறுத்தி விட்டு மெல்ல என் பக்கம் திரும்பி....புன்னகைத்தார். அனுபவம் அவரது முகத்தில் சுருக்கங்களாய் படர்ந்து கிடந்தது. அவர் அணிந்திருந்த சட்டையும் காற்றில் அடர்த்தியா பறந்து கோண்டிருந்த அவரது முடியும் தும்பைப் பூ நிறத்தில் வெள்ளையாய் இருந்தன. அடர்த்தியான மீசை உதட்டைத் தொட்டபடி இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடித்திருந்த அயற்சி அவரது கண்களில் படிந்து கிடந்தது. எந்த வித பதட்டமும் இல்லாத அவரிடம் நிதானமும் அலட்சியமும் மிகுந்து கிடந்தது. என் அருகே அவர் வந்தார்.......

சாரி தம்பி.....அவர் என் கையைப் பிடித்த போது அவரது கண்கள் லேசாய் கலங்கிப் போயிருந்தது.

இல்லை...சார்.... எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க என்றேன்...நான் தழு தழுத்தபடி....

ஒரு கணம் போதும் எந்த ஒரு மனிதருக்குள்ளும் நாம் நம்மை ஊன்றிக் கொள்ள..., எல்லாம் ஒன்றிலிருந்து வந்து மனிதராய், விலங்குகளாய், தாவரங்களாய், அசையும், அசையா எல்லாமாய் ஆகி இருப்பது அப்போது விளங்கும். 

ஆன்மாவின் பாஷையை 
மெளனமே யுகங்களாய் பேசிக் கொண்டிருக்கிறது....
புரிதல்கள் எந்த திட்டமும் தீட்டுவதில்லை...
அவை ...நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்
மொட்டுக்களைப் போல சட் சட்டென்று
மலர்ந்து விடுகின்றன...
அன்பென்றால் என்னவென்றறிய...
அன்பு செய்தலைத் தவிர வேறு 
ஒரு வழியும் இல்லை நமக்கு...!

இரண்டு நிமிடங்களை விழுங்கிக் கொண்ட அந்த அழுத்தமான பேரமைதியை அந்தப் பெரியவர்தான் மெதுவாய்த் திறந்தார்....

இல்ல தம்பி அங்க கவுண்ட்டர்ல பணம் கொடுக்க நேரமாயிடுச்சே....நீங்க வேற அவசரமா இருந்தீங்க அதுக்குத்தான் சாரி கேட்டேன்...

முதுமையைப் போல ஒரு அற்புதமான விஷயம் இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. அதை அனுபவிக்காமல் இறந்து போய்விடுபர்கள் துரஷ்டசாலிகள். வாழ்க்கையின் மையம் என்று நம்மை நினைத்துக் கொண்டு வாழ்ந்து விட்டு.... மெல்ல மெல்ல காலம் நீ இந்த வாழ்க்கைக்கு அவசியம் கிடையாது என்று நம்மை புறந்தள்ளத் தொடங்கும் அந்த நாட்களை மெதுவாய் நாம் சுவைக்க வேண்டும். முதுமையில் பெரும்பாலும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நாமே நாமாய் இருக்க முடியும். நமக்குப் பிடித்த விசயங்களை நாம் செய்து கொண்டே இருக்கலாம். யாரும் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். நம்மை கொண்டு ஆவது ஒன்றும்  இல்லை என்று உலகம் நம்மை ஒதுக்கும் போதுதான் நிஜமாகவே நமக்கான வாழ்வு ஒன்று தொடங்குகிறது.....
நீ கூட ஏதோ பொக்கே வாங்கி இருக்கப் போல தம்பி.....நடுங்கிக்கொண்டே வெளிவந்த அந்த குரலை ரெக்கார்ட் செய்து மூர்க்கமாய் பேசுபவர்களிடமும், அவசர அவசரமாய் பேசுபவர்களிடமும் போட்டுக்காட்டி இதற்குப் பெயர்தான் நிதானம்....அறிந்தீர்களா....? என்று உரக்க கேட்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு.....

ஆமாம்...சார்....என்னோட காதலிக்குப் பிறந்த நாள்..இன்னைக்கு...அதான்....

நம் எதிரே பேசுபவர்களின் குணம் நமக்கு சட்டென்று வந்து விடுகிறது. ஒரு வித ரிஷப்டிவ் மனோநிலையில் இருக்கும் போது இது 100% சாத்தியமே...! நான் என்னைப் பெரியவரைப் போல உணர்ந்தேன்...

நானும் கூட பொக்கே என்னோட காதலிக்குதான் வாங்கி இருக்கேன்...கூறி விட்டு புன்னகைத்தார்....

எனக்கு சந்தோசமாயிருந்தது. வீட்டிலிருக்கும் அந்த பாட்டிக்கு எவ்வவு சந்தோஷமாயிருக்கும் இந்த பூங்கொத்தைப் பார்த்தால்.....வேரூன்றி படர்ந்து வியாபித்திருந்த அந்தக் காதல் எனக்கு காதலின் வேறு பரிமாணங்களைப் போதித்தது.

வாவ்... தட்ஸ் வெரி நைஸ் ....என்று சொன்னதை அவர் சட்டை செய்ய வில்லை....

என் மனைவிக்குப் பூங்கொத்து என்றால் எப்போதும் ப்ரியம். எங்களுக்கென்று யாரும் இல்லை.....எங்களுக்கென்று இருந்த ஒரே மகனும் ஒரு விபத்தில் இளம் வயதில் இறந்து போய்விட்டான். செடிகளை விற்கும் நர்சரி ஒன்று வைத்திருந்தேன் நான்....அதன் கூடவே பறவைகளையும் வாங்கி விற்று வந்தேன். எங்கள் வாழ்க்கை தனிமையால் நிறைந்தது. எங்கள் உலகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே....கூடுமான வரை அதிகமாய் மனிதர்களை நாங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை...

மரங்கள், அருவிகள்,மலைகள், ஆறுகள், பூக்கள், செடிகள், பறவைகள்....இவைதான் எங்கள் உறவு....

சொல்லிக் கொண்டே எங்கோ வெறித்துப் பார்த்து கொண்டிருந்தார்....

சார்..... வீடு எங்கன்னு சொன்னா போற வழியில நான் வேணும்னா இறக்கி விட்டுடுப் போகவா....? கேட்டேன்....

நான் வீட்டுக்குப் போகலை தம்பி.....என்னை பக்கத்துல இருக்கிற.....சிமிட்ரில இறக்கி விடமுடியுமா?...அட்ரஸ் சொன்னார்....

சிமிட்ரிலயா.....????????? கல்லறைக்கு எதுக்கு சார்....? எனக்குத் தொண்டை அடைத்தது....

போன மாசம் என் மனைவி இறந்து போய்ட்டா தம்பி......அவர் கண்கள் கலங்கி இருந்தன.....

சார்....???????? தழு தழுத்தேன்...

போன மாதம் ஒரு புதன் இரவு அவளுக்கு கைகால்கள் எல்லாம் வலிக்கிறதென்றாள். பிடித்து விட்டேன்....இரவு வெகு நேரம் அவள் உறங்கவில்லை. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். கம்பளையைப் போர்த்தி விட்டு, ஜன்னல்களை எல்லாம் அடைத்து வைத்தேன்...விடியற்காலையில் அவளுக்கு உறக்கம் வருகிறதென்று கூறி என் தோளில் தலை வைத்து என் கழுத்தினைக் கட்டிக் கொண்டாள்.....

அவளின் தலை கோதியபடியே உறங்கிப் போனேன்...அடுத்த நாள் எனக்கு மட்டுமே விடிந்தது...அவள் நிரந்தரமாய் உறங்கிப் போனாள்......

எவ்வளவு உயிருக்குயிரான கணவன் மனைவியாய் வாழ்ந்தாலும் யாரோ ஒருவரை முதலில் பிரித்து விடுகிறது காலம். தனது துணையின் மரணத்திற்குப் பிறகும் அவள் மீது கொண்டிருந்த காதலை ஒருவரால் தொடர முடியுமாயின்....அந்தக் காதலி அல்லது காதலன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி....

அந்தப் பெரியவர் என் தோளைத் தொட்டார்....மை சன்...வில் இட் பி பாஸிபில் டு ட்ராப் மீ இன் த சிமிட்ரி...?

இன்று வியாழக்கிழமை அவள் இறந்த நாள்....ஒவ்வொரு வியாழனும் அவளைப் பூங்கொத்தோடு வந்து சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறேன்....அப்படி நான் போகாத அன்று ஒன்று நான் இறந்திருப்பேன்...அல்லது எனக்கு சுயநினைவு இல்லாமல் போயிருப்பேன்....

....
....
...

காரை சிமிட்ரி நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தேன். பெரியவர் எதுவும் பேசாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தார்....

வாழ்த்துச் சொல்ல மறந்து போயிருந்த மஞ்சுவின் பிறந்த நாள் ஏனோ என்னை நெஞ்சுக்குள்  இம்சித்துக் கொண்டிருந்தது....



தேவா சுப்பையா...







Comments

அந்த பெரியவரின் காதல் நெஞ்சை தொட்டது! மனதை கவரும் எழுத்து! வாழ்த்துக்கள்!
suma.... said…
ரொம்ப சூப்பர் சார்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த