Skip to main content

Posts

முடிவில்லாத பயணம்.....!

அது ஒரு ஒற்றையடிப்பாதை, யாருமற்ற வெளி, கடும் கானகத்திற்குள் நான் நகர, நகர நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதை. எனக்கு ஏதோ ஒன்று வேண்டும், ஏதோ ஒன்றை நான் அடைய வேண்டும். இலக்கு எதுவென்று தெரியவில்லை ஆனால் எங்கோ நான் செல்ல வேண்டும். மனித சஞ்சாரம் அற்ற மரங்கள் அடர்ந்த பட்ட பகலிலும் இருளினைச் சுமந்த ஒரு பெருங்காடு. மனித தொடர்புகளைக் கடந்து நான் வந்து எத்தனை நாளானது, எவ்வளவு மணியானது என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆமாம். நவீனத்தின் எந்த ஒரு கருவியையும் என்னோடு நான் இணைத்துக் கொள்ளவில்லை. நானும் மானம் மறைக்க உடுத்தியிருக்கும் ஒற்றை நாலு முழ வேஷ்டியும், ஒரு சட்டையும் காலணியும் எனது உடைமைகளாக் தொற்றிக் கொண்டிருந்தன. அதுவும் கூட ஒரு கட்டத்தில் தேவையற்றுப் போகலாம். நிறைய பேசிவிட்டேன். நிறைய ஆனந்தித்து விட்டேன். நிறைய அழுது விட்டேன். நிறைய கொடுத்து, எடுத்து, ஏதேதோ செய்து, செய்து வாழ்க்கையின் மிகைப்பட்ட நுழைவுகளில் நுழைந்து நுழைந்து வெறுமைகளை கூலிகளாய் பெற்று நிறைவினை எட்ட முடியாமல் தோற்றுதான் போயிருக்கிறேன். உறவுகளில் சந்தோசம் இருந்தது ஆனால் அதைவிட ஒரு படி மேலாக சுயநலங்களும் போலி பகட்டுகளும்,...

இசையோடு இசையாக..தொகுப்பு 4 !

அயற்சியான நாட்கள், அழுத்தம் கொடுக்கும் நினைவுகள், புத்தியைப் பிழியும் சூழல்கள், மனிதர்களோடான சந்தோசங்கள், கோபங்கள், துக்கங்கள், சிரிப்புகள், அழுகைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகள், அலைக்கழிப்புகள், ஆர்வங்கள், பரபரப்புகள், குற்ற உணர்ச்சிகள், தற்பெருமைகள், தாழ்வு மனப்பான்மைகள், சாந்தங்கள், அமைதிகள், கனத்த மனோநிலைகள், ப்ரியங்கள், நட்புகள், காதல்கள்.... விரிந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நாளும் உப்பு மூட்டை சுமப்பது போல சுமந்து செல்கிறது. சுமையாய் நம்மைத் தூக்கிச் செல்கிறதே இந்த வாழ்க்கை என்று கருணை பொங்கும் போதே... நடு முதுகெலும்பு முறியும் படி படாரென்று கீழே " பொத் " என்று சுடும் வெயிலில் போட்டு விட்டு கை கொட்டி அதுவே சிரிக்கவும் செய்கிறது. வெறும் காலோடு சூட்டில் ஓடி வருபவனை ஒற்றை மரத்தின் நிழல் எப்படி வாரியணைத்து நிழலுக்குள் தஞ்சம் கொடுத்து குளுமையான காற்றைக் கொடுக்கிறதோ அப்படியான அதிர்வுகள் மிகுந்த சில மணி நேரங்களை விரித்துப் போடும் இந்த இரவை எப்படிக் காதலிப்பது என்று சொல்லத் தெரியாமல் வார்த்தைளைத் தட்டச்சு செய்து நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை அழகானது. சிலரு...

விடுமுறை நாளொன்றில்.....!

காலையில் கண்கள் விழித்த போதே மூளையைப் பற்றிக் கொண்ட ஒரு பரபரப்பை அட.. இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று உடனே அணைத்துப் போட்டேன். வழக்கமாய் காலையில் அரக்கனைப்போல எழுப்பி விடும் அலாரத்தை சமாதானமாய் பார்த்தேன் மணி 7 ஆக இன்னும் ஐந்து நிமிடம் என்று சாதுவாய் சொன்னது. படுக்கையில் புரண்டேன்....உடலெல்லாம் கடுமையான ஒரு வலி இருந்தது. மெல்ல கைகால்களை நீட்டி சோம்பல் முறித்து உடலை வளைத்து கோணி ஏதேதோ செய்து கொண்டிருந்தேன் ஆனால் சுத்தமாக படுக்கையில் இருந்து எழ மனதே இல்லை. பெட்சீட்டை எடுத்து காலில் இருந்து இழுத்து தலைவரை முக்காடு போல போர்த்தி காதுகளை இறுக்க அடைத்து ஜனவரி மாதக் குளிர் கண்ணாடி ஜன்னலைத் தாண்டி உள்ளே வந்தாலும் எனக்குள் செல்ல முடியாதவாறு தடையிட்டேன்... உறக்கம் முழுதாய் வரவில்லை இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு அப்படியே வெறுமனே படுத்திருப்பது சுகமாய் இருந்தது. தனியாக இருப்பது ஒரு மாதிரி கஷ்டம்தான் என்றாலும் அது ஒரு மாதிரி வலியோடு கூடிய சுகம்தான். சுகம் என்பதை விளங்கிக் கொள்ள மனம் ஒத்துக் கொள்ளாது. ஏனேன்றால் மனதுக்கு தனியே இருப்பது எப்போதும் பிடிக்காது. அது கூட்டத்திற்கு நடுவே நின்று ...

அரசியல் என்னும் ஆயுதம்....! ஒரு கனவுப் பார்வை..!

வித்துக்கள் எல்லாம் வெற்று வித்துக்களாய் எந்த வித திட்டமிடலும் இன்றி இந்த தேசத்தில் விதைக்கப்படுவதாலேயே...வாழ்வியல் தேவைகளை அவை எதிர் கொள்ளும் போது அதை நேருக்கு நேராய் சந்திக்கும் திராணிகளற்று மடங்கி மட்கிப் போகின்றன. கல்வி என்னும் கட்டாய வழிமுறையை மானுடரின் வாழ்க்கையில் உண்டாக்கி வைத்திருப்பதின் நோக்கம் இன்று சிதைந்து போய் கிடக்கிறது. கல்வியின் நோக்கம் மருவிப் போய் இன்று பொருள் ஈட்டும் ஒற்றை நோக்கை மட்டுமே எமது பிள்ளைகளிடம் புத்திகளில் புகுத்திக் கொண்டிருக்கிறது.  பொருள் ஈட்டும் தொழில்நுட்ப, அறிவியல், பொருளாதார, நிர்வாக தொடர்பான பாடங்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் எமது பிள்ளைகள், கல்லூரியை விட்டு வெளியே வரும் பொழுது ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய விற்பன்னராய்த்தான் வருகின்றனர்....தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் தேர்ந்தவர்களாக, கணிணி அறிவுடன், அறிவியல் பார்வைகளுடன் நுனி நாக்கு ஆங்கிலத்துடன்....எல்லாவகையிலும் பொருளாதார பலத்தை கூட்டவே தங்களது நகர்வுகளை அமைத்தும் கொள்கிறார்கள்.... ஆனால்.... அரசியல் கல்வி என்னும் மிகப்பெரிய விடயத்தை எம் பிள்ளைகள் தமது வாழ்க்கையின் எந...

விடியட்டும் ஒரு அரசியல் புரட்சி........!

இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....! சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....? மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம் ...

சரணாகதி....!

சில நேரங்களில் வாழ்க்கையின் போக்கு நமக்கு பிடிபடுவதில்லை.  திட்டமிட்டு செய்தேன் என்று சொல்வது எல்லாம் வாழ்க்கையின் போக்கோடு பொருந்தி நடக்கும் ஒரு சில செயல்களைத்தான் மற்றபடி ஒரு ஆற்றில் மிதக்கும் மரக்கட்டையைப் போலத்தான் வாழ்க்கையின் நகர்வு இருக்கிறது. வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெரிய புரிதல். இடமாக திரும்பி நகரவேண்டிய இடத்தில் இடதிலும், வலதாக திரும்ப வேண்டிய இடத்தில் வலதிலும் நகரவேண்டியது இயக்கத்தின் அலைதலைப் பொறுத்ததுதானே அன்றி..நம்மால் ஆனது என்று சொல்லுமிடம் மிகப்பெரிய பைத்தியக்கார மனதின் போலியான வேசம். சரணாகதி என்பது என்பதின் தூய தமிழாக நான் நினைப்பது ஒப்புக்கொடுத்தல். இந்த ஒப்புக் கொடுத்தல் என்னுமிடம் வேசம் போடும் இடம் அல்ல, மாய வார்த்தைகளைக் காட்டி வசீகரிக்கும் வித்தையல்ல, காரியம் ஆகவேண்டி காலைப் பிடிக்கும் யுத்தியும் அல்ல....ஒப்புக் கொடுத்தல் என்பது மிகப்பெரிய புரிதல். தான் எதைச் சார்ந்திருக்கிறோமோ அல்லது எவரிடம் நம்மைக் முழுதுமாய் அர்ப்பணிக்கிறோமோ அந்த செயலிலோ அல்லது மனிதரிடமோ நாம் வைக்கும் நம்பிக்கை. நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடேயே வாழும் வாழ்க்கை...

உடையாரின் அதிர்வலைகள்...12.02.2012

கொஞ்சம் நாளாகிதான் விட்டது உடையார் பற்றி எழுத ஆனால் வாசிக்காமல் இருக்கவில்லை தொடச்சியாக ஒரு நகரப் பேருந்து செல்லும் வேகத்தோடு ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பதும், பின் அந்த வாசிப்பில் லயித்துக் கிடப்பதும் என்று மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஒரு பரபரப்போடு தொடங்கிய முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனின் அதிரடியான ஆளுமை என்னவென்று புரிந்தது ஆனால் போகப் போக  ஒரு மனிதனின் மகா வெற்றிக்கு எத்தனை நல்ல மனிதர்களின் கூட்டு மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகள் தேவை என்று தெளிவாக உணர முடிந்தது. வெற்றிகளைக் குவித்து மிகப்பெரிய புகழுடன் இருக்கும் ஒரு பேரரசனுக்கு ஒரு கோயில் அதுவும் பிரமாண்டமாய் செய்ய வேண்டும் என்று தோன்றிய இடத்தை உற்று கவனிக்கையில்தான் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடிந்தது அதாவது  திருப்தியின் அளவு பொருளோ, புகழோ, அல்லது போகமோ அல்ல...திருப்தியின் உச்சம் என்பது தன்னை உணர்தல் என்று.... தன்னைச் சுற்றிலும் பல தொழில்களை செய்யும் மக்களைத் கொண்டிருந்த இராஜ இராஜசோழன் என்னும் சக்கரவர்த்தி அத்தனை பேரையும் கையாளும் விதத்தை எழுத்துச் சித்தர் வெளிப...