Skip to main content

Posts

Showing posts from January, 2012

வழிப்போக்கன்....!

ஒன்றை எழுதி தீர்ப்பதற்குள் பிராணன் போய் விட்டுதான் மீண்டும் வருகிறது. மூளையின் நரம்புகளுக்கு இடையில் சாக்கு தைக்கும் கோணி ஊசியை வைத்து இந்த பக்கம் குத்தி அந்தப் பக்கம் இழுப்பது போன்ற ஒரு வித தையல் வேலைதான் எழுத்து. முழு மூச்சாக மனம் குவித்து எதையாவது எழுத வேண்டும் என்று கணிணியில் அமர்ந்த அந்த நொடிக்குப் பின்னரே முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொள்கிறது. எழுதுதலை ஒரு பெண்ணோடு சல்லாபித்துக் கூடுவதற்கு சமம் என்று கூறலாமா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் அப்படித்தான் கூறுவேன். உச்சத்தில் துடி, துடித்து தன்னை மறக்கும் பொழுது அது சில மணித் துளிகள்தான் என்றாலும் அதற்கு ஈடான ஒரு அனுபத்தை ஒரு கட்டுரையோ அல்லது கதையோ எழுதி முடிக்கும் வரை நான் அனுபவிக்கிறேன். மிகச் சிறந்த ஆக்கங்களை தருவிக்கும் ஒருவனுக்குத்தான் இப்படியான உணர்வு வரும் என்று சொல்வதற்கில்லை. உள்ளுக்குள் இருக்கும் வலியை இறக்கி வைக்கும் எவனொருவனுக்கும் இது சுகம்தான்...! ஆமாம் கூடலின் உச்சத்தை ஒத்த சுகம். உள்ளுக்குள் படிந்து கிடக்கும் கறைகளையும், சமுதாயத்தால் ஏற்பட்ட வடுக்களையும், குற்றம் என்று அறிந்தே செய்த செயல்களுக

இசையோடு இசையாக..தொகுப்பு 3 !

புத்துணர்ச்சி வீசும் புதிய நாளை சூரியனின் வருகைக்கு முன்னாலேயே எழுந்து ஆழ சுவாசித்து ஆரத்தழுவி அந்த அற்புத பொழுதின் குளுமையை உடலுக்குள் வாங்கி...புத்தியின் சூடு தணிய இரவு உறக்கத்தில் அயர்ச்சியில் கிடந்த மூளை தன்னை உலுக்கிக் கொண்டு அன்று பிறந்த குழந்தையைப் போல அதிகாலையை ஆச்சரியாமாய் நோக்கும் தருணம் சுகமானது.... நகரத்து வாழ்க்கையில் மறுக்கப்பட்டுப் போய்விடும் பல அற்புதங்களை கிராமத்துக் காலைக்கு பிரபஞ்சம் ஆசிர்வாதம் செய்து கொடுத்திருக்கும்.... ஆடு, மாடு, நாய் போன்ற் மனித வாழ்க்கையோடு ஒன்றிப் போன விலங்குகளும், சேவல், கோழி, காகம், கிளி,குருவி, காடை,கவுதாரி, கொக்கு, மடையான், நாரை, சிட்டுக்குருவி, மரங்கொத்தி, குயில் போன்ற பறவைகளும் பிரபஞ்ச ஓட்டத்தில் விடியலை ருசிக்க எழுந்து கடவுளின் சாயலை தரிசித்துதான் விடுகின்றன. மெல்ல நகர்ந்து வயல் வெளிக்குள் நுழையும் பொழுதில் இரவு முழுதும் புற்களோடு சல்லாபித்த பனித்துளிகள் இன்னும் சற்று நேரத்தில் சூரியனின் வருகைக்குப் பின் கிளம்ப இருக்கிறோம் என்ற தகவலை சிரித்துக் கொண்டே சொல்ல... குளிர்வான இரு ஊதக்காற்று உடல் தடவி நாடி நரம்புகளின் அயற்

மெளனமாய் ஒரு காதல்...!

மீட்டெடுக்க முடியாத மெளனத்திற்குள் தள்ளி எனக்குள் ஊற்றெடுக்கிறது ஒரு காதல்...! சப்தமில்லா அதிர்வுகளை காற்றில் பரவ விட்டு கரைந்து போன கனவுகளை அவ்வப்போது உரசி செல்லும் நினைவுகளை பரிசளித்து விட்டு காணாமலேயே போனாள்... என் காதலி...! மறந்து விட்டேன் என்றிருக்கையில் கனவுகளில் வந்து கண் சிமிட்டுகிறாள், காதலென்ற உணர்வு ஊற்றி நெஞ்சு நிறைக்கிறாள், விழித்துக் கொண்டே... நான் காணும் கனவுகளில் எப்போதும் என் விழித்திரையில் காட்சியாய் விரிகிறாள்! இறுக்கமான நிசப்தங்களில் காதோரம் வந்து பெயர் சொல்லி கிசுகிசுக்கிறாள், பதறி நான் தேடுகையில் புத்திக்குள் கை கொட்டி சிரிக்கிறாள்...; சொல்லாமல் கொள்ளாமல் போனாலும் முழுதும் இல்லாமலேயே ஆனாலும் இருக்கத்தான் செய்கிறது மீட்டெடுக்க முடியாத மெளனத்திற்குள் தள்ளி விடும் ஒரு காதல்! தேவா.  S

இசையோடு இசையாக..தொகுப்பு 2 !

பிறப்பு மனித வாழ்வின் முதல் முடிச்சு. தாய் அந்த முதல் முடிச்சை சுமக்கும் ஜீவன். படைக்கும் சக்தியைக் கொண்டிருப்பவன் யாரென்ற விவாதத்தை தள்ளி வைத்து விட்டு படைப்புக்களை சுமக்கும் வரம் பெற்ற ஜீவன் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட மேன்மையானது, உன்னதமானது, புனிதமானது, நிறைவானது, கருணை நிறைந்தது...இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.... அம்மா... எத்தனை இரும்பு மனம் படைத்தவர்களும் ஒரு முறை உதடு பிரித்து உச்சரித்துப் பார்க்கட்டும் அம்மா என்ற ஒற்றை வார்த்தையை அந்த வார்த்தைக்குப் பின் இருக்கும் கருணை என்னவென்று தெரியும், ப்ரியம் என்னவென்று புரியும், நேசம் என்னவென்று  விளங்கும். பிரதிபலன் பார்க்காமல் ஒவ்வொரு உயிரையும் சுமக்கத் தொடங்கும் தாய்மை எப்போதும் போற்றுதற்குரியது. என் அம்மா எனக்காய் என்னென்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதை வார்த்தைகளாய் நான் அறிந்திருந்தாலும், என் பெரியம்மா மகளான என் அக்காவின் பேறு காலத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன். 7 மாதத்தில் வளைகாப்பு முடிந்து வந்ததிலிருந்து அவளின் அன்றாடங்களை நான் கவனித்து இருந்திருக்கிறேன். நடக்க முடியாது, ஒருபக்கம் ஒருக்களித்துதான் படுக்க முடிய

எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...!

ஒரு மாதிரியான தற்பெருமைகள் நிறைந்த புகழ்ச்சிகளை விரும்பும் ஒரு உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்த போது எனக்கு ஏற்பட்ட கூச்சத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியவில்லை. எழுத்து என்பது வரம், எழுத்து என்பது தவம், கல்வி என்பது மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டிய அறிவு அல்லது புரிதல். படைப்பவன் ஒரு பிரம்மா, அந்த படைப்பால் வழி காட்டுதலால் வாழ்க்கை ஒளிர வேண்டும் என்றெல்லாம் நினைத்து அப்படியே இங்கே உலாவும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை காலம் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டு விட்டது. இங்கே தன்னைத் தானே உலக மகா எழுத்தாளர்கள் என்று புகழ்ந்து கொள்ளும்  மனிதர்கள் முதல், சமூக அக்கறை என்ற லேபிளை நேரே நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டு மனித தெளிவின்மைகளைப் பகடைக்காய் ஆடும் மனிதர்கள், மற்றும் நீலப்பட ரேஞ்சுக்கு எழுத்துக்களில் விரசத்தை தூண்டி விட்டு லேகியம் விற்று சம்பாரிக்கும் வியாபாரிகளென்று நீண்டு கொண்டே இருக்கும் பட்டியல் மிகப்பெரியது. அலங்காரங்களால், மனித மனம் வசீகரம் கொள்ளும் விடயங்களை எழுத்தில் நிரப்புதல் தவறல்ல, ஆனால் அதன் விளைவுகள் என்ன மாதிரியாய் இருக்கும் என்ற ஒரு பொறு

மெளன விரதம்....!

இன்று எதுவும் பேசக் கூடாது, என்று சங்கற்பம் எடுத்திருக்கிறேன். பேசக் கூடாது என்று தீர்மானித்த உடனேயே....மனம் விசுவரூபமெடுத்து வார்த்தைகளை மூளைக்குள் உடனே அலைய விட்டது. மெல்ல, மெல்ல அலைந்த வார்த்தைகள் எல்லாம் அதிர்வுகளாகவே வெகு நேரம் உள்ளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தன. சப்தங்களாய் தொண்டையிலிருந்து வெளி வந்து விடவேண்டும் என்று அவை கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது மட்டும் என்னால் தெளிவாக உணர முடிந்தது. மெளனம் என்று வெளியில் சப்தம் செய்யாமையை சங்கல்பம் செய்யும் பலரால் உள் சப்தத்தை நிறுத்த முடிவதில்லை.  ஏதோ ஒன்றை இப்போதே நீ பேசியே ஆகவேண்டும் என்று கட்டளையிட்ட புத்தியை நான் உற்று நோக்கினேன்... புத்திக்குள் நினைவுகளாய் தேங்கிக் கிடந்த மனம்தான் எல்லா வேலையையும் செய்து கொண்டிருந்தது புரிந்தது.  மற்ற புலன்கள் இயங்கிக் கொண்டிருக்கையில் சடாரென ஒரு புலனின் இயக்கத்தை நிறுத்தியது மனதுக்கு புதிதாய் பட்டிருக்க வேண்டும். இந்த மனம் எப்போதும் புது விடயங்களை ஆதரிப்பது இல்லை. மனதிற்கு வசதியான விடயம் பழக்கப்பட்ட சூழல்களில் சுற்றிக் கொண்டிருப்பதுதான். புதிதாய் எது செய்தாலும் அல்லது மாற்றினாலும் மனம் அவ்வளவு

கவிதைக்கு அவள் என்று பெயர்...!

ஒரு மழை பெய்யவும் பெய்யாமலிருக்கவும் சாத்தியமாயிருந்த விடுமுறை நாளின் மதிய மூன்றரை மணிக்கு புரண்டு படுக்கையில் கம்பளிக்குள் இருந்து அரைத் தூக்கத்தில் பார்த்த போது கையில் தேனீரை வைத்துக் கொண்டு  "ஆவி பறக்கும் டீ......" என்று அவள் பயமுறுத்த தொடங்கி இருந்தாள்... ச்ச்ச்சிம்னி அப்டித்தான்....எப்போதும்!  விளையாட்டாய் என்னை காதலித்து விளையாட்டாய் கைப் பிடித்து விளையாட்டாகவே வாழ்ந்து கொண்டிருப்பவள்...! என்னாச்சு...இப்பவே டீ...போட்டுக் கொண்டு வந்துட்ட என்று நான் சோம்பல் முறித்து எழ எத்தனிக்கையில் டீயை பக்கத்து மேசையில் வைத்து விட்டு சரியாய் என் மேல் வந்து சாய்ந்தவளை ஓ......எழுந்திரு ச்ச்ச்சிம்னி என்று தடுக்க முயன்றதை பார்த்து விட்டு... என்ன...? என் வெயிட் தாங்க முடியலையா......உதடு சுளித்து பொய்யான கோபத்தை கண்களில் கொண்டு வந்து என் முகவாயை தூக்கி முத்தமிட நெருங்கி வந்தவள் சட்டென்று ரூட்டை மாற்றி முன் நெற்றியில் முத்தமிட்டு கேசம் கலைத்து....பப்பு கண்ணா....வீ நீட் டூ கோ ஃபார் எ வாக்....அதுவும் வெளில மழை வர மாதிரி இருக்கு தூறல் போட ஆரம்பிக்கப் போகுது... வீ கோ........நவ் நவ்வ்.....நவ்

மரம்...!

யாருமற்ற ஒரு பொழுதில் அந்த மரத்தடியில் நான் நின்று கொண்டிருந்தேன். என்ன மரம் என்று மனம் ஆராயவில்லை. மரத்தின் வேர்களில் பார்வையை ஊன்றி அதன் பிடிப்புகளுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி வெகு ஆழத்தில் சென்று அதன் மையவேரினை மனம் பற்றி முடிச்சிட்டுக் கொண்ட சற்று நேரத்தில் நான் மரமாகிப் போனேன். முதல் முறையாய் மனமற்ற ஒரு உணர்வு நிலையில் மண்ணின் ஆழத்தில் இருந்த ஈரப்பதத்தை சுகமாய் உறிஞ்சி உறிஞ்சி என் உடலின் பாகங்களுக்கெல்லாம் பரவ விட்டுக் கொண்டிருந்தேன். சலனமில்லாமல் ஒற்றைக் காலில் நிற்பது ஒரு சுகானுபவம். சுகத்தை உடலுக்குள் தேக்கிக் கொண்டு என் நீட்சிகளை மெல்ல மெல்ல உணர்தலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். விழிகள் இல்லை ஆனால் பார்வை இருந்தது. மண்ணுக்கடியில் எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. ஒவ்வொன்று குறு குறுப்பாய் அங்கும் இங்கும் ஒரு ஓட்டத்தில் இருப்பதை தெளிவாக உணர முடிந்தது. அவைகளுக்கெல்லாம் நினைவுகள் பல மையப்புள்ளிகளளில் இருக்கவில்லை. ஒரே புள்ளியில் அவற்றின் மனம் குவிந்து கிடப்பதை அதிர்வுகளாய் அறிய முடிந்தது. அந்த ஒற்றைப் புள்ளியில் உயிர் வாழும் ஆசை தேங்கிக் கிடப்பதும், அந்த ஆசையின் இர

இசையோடு இசையாக..தொகுப்பு I !

' எல்லாம் தான் பெண்ணே செய்தேன்..! எதார்த்த உலகத்தில் உன்னிடம் ஏகாந்தக் கனவுகளைப் பரப்பினேன்..! சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன். ஒரு நாள் உன் கண்ணில் தூசு விழுந்த பொழுதில் கண் கலங்கி நின்றாய் அதை கண்களில் இருந்து எடுத்து அந்த சிறு தூசியை ஒரு அரக்கனை எரிப்பது போல எரித்துப் போட்டேன்...!!! அன்றாட தினசரி காலண்டரை கிழித்து அதை தூக்கியெறியாமல் நித்தம் உனக்கொரு கவிதை எழுதி கொடுத்தேன். என் சுட்டு விரல் உன் மேல் பட்டால் கூட எதன் பொருட்டோ என் காதல் வந்ததென்று நீ எண்ணி விடக் கூடாது என்று எப்போதும் என் காமத்தை தூரங்களில் விலக்கியே வைத்துதான் உன்னோடு நடப்பேன். ஒரு சந்தோசமென்றால் கூட நீ நன்றாக சிரித்த பின்புதான் நான் சிரித்தேன். நீ சிரித்து முடிக்கும் முன்னால் நான் சிரிப்பை நிறுத்தி விடுவேன். நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன். உன் அனுமதிகளோடேதானே பெண்ணே எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தது.. இன்று எட்ட முடியா தூரமாய் நீ நகர்ந்து போனது ஏனோ? நீர் வேண்டாம் என்று... பூமி சொன்னால்... எங்கேதா

மாடு புடிக்க வாரியளா....?!

ஏறு தழுவுதல்னுதானே சல்லிக்கட்டை அப்பவே நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் சொல்லி வச்சிருக்காய்ங்க...இன்னிக்கு புதுசா வந்து மிருக வதை லொட்டு லொசுக்குன்னு கோர்ட்ல கேச போட்டுகிட்டு...என்னாப்பு நீங்க...? ஆயிரத்தெட்டு ரூல்ஸ் ரெகுலேசன் எல்லாம் வச்சிகிட்டு, காலங்காலமா நாங்க வெளையாடிக்கிட்டு இருந்த விசயதை இம்புட்டு சீரியசா ஆக்கிபுட்டியளே.... சல்லிகட்டுல மாடு குத்திதேன் மனுசங்க செத்துப் போயிருப்பாய்ங்கன்னு பேப்பர்ல படிச்சி இருப்பீக...? எங்கனயாச்சும் மாடுக செத்துப் போச்சுன்னு படிச்சு இருக்கீகளா? இருக்காதே....சல்லிக்கட்டுனா என்ன மாட்ட தும்புறுத்துறதா....? அங்க அங்க சில பேரு அத்து மீறி இருப்பாய்ங்க...அது கழுத எல்லா பொழப்புலயும்தானே அத்து மீறிப் போற ஆளுக இருக்கு.... சல்லிகட்டு எங்களுக்கு வீர வெளையாட்டுப்பா...?என்னாண்டு நினைச்சீய..? இதுல என்னப்பு வீரம் இருக்குன்னு கேக்கிறியளா...? மாட்டை புடிச்சு அடக்கி கீழ தள்ளி மேல ஏறி நிக்கிறதுதான் சல்லிக்கட்டுன்னு யாரு சொன்னது....அப்டி  எல்லாம் செய்றது இல்லப்பு சல்லிக்கட்டுனா... மாட்ட வெரசா வெரட்டிகிட்டு போயி அதோடு திமிலிசங்கைய புடிச்சி கட்டிப் புட

ஈழம் என்னும் கனவு...!

மீண்டும் சில காணொளிகளை இரத்தக் கறைகளை விழிகளில் தேக்கியபடி காண நேரிட்டது.. ஈழத்தில் நடை பெற்றது போர் என்று உலக நாடுகளோடு சேர்ந்து அரக்கன் ராஜபக்சே வேண்டுமானால் கூறலாம் ஆனால் ஈழத்தில் நடந்தது போர் அல்ல.. அது திட்டமிடப்பட்ட பெரும் இன அழிப்பு... தனியொரு படையாக இலங்கையின் பேரினவாத அரச படைகள் எம்மவரை நோக்கிச் சென்றிருக்குமெனில் காலம் இந்நேரம் அவர்களைச் செரித்துப் போட்ட இடத்தில் தமிழீழக் கொடி பட்டொளி வீசி பறந்து இருக்கும். ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை இலங்கை இராணுவத்தை அழித்தொழிக்கும் வல்லமையை தமீழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் வார்த்தைகளைக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமே இல்லை. உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சண்டையிட்டால்தான் வெல்ல முடியும் என்ற ரீதில் எங்கும் நகர்தல் சாத்தியமில்லாமல் விடுதலை புலிகளின் கைகளும் தொடர்புகளும் கட்டப்பட்டுதான் போர் எனப்படும் மிருக வெறியாட்டம் ஈழத்தில் நடந்தேறியது. இப்போது சொல்லுங்கள் எப்பேர் பட்ட இராணுவத்தை அண்ணன் பிரபாகரன் கட்டியெழுப்பி இருப்பார் என்று...? அதன் வல்லமை என்னவென்று சற்றே கண் மூடி யோசித்துப் பாருங்கள் உலகத்

தீமைகளை கொளுத்துவோம்.....!

கிளர்ச்சிகளை ஊட்டும் திட்டங்களையும், மன முதிர்ச்சிகளை காட்டும் எழுத்துக்களையும், விளம்பரப் பலகைகளில் பெயர் கோர்க்கும் திட்டங்களையும் கோஷங்கள் இட்டு மனிதர்களை குவிக்கும் வழிமுறைகளையும், வியாபார யுத்திகள் கொண்ட புத்திகளையும் கடந்து செல்ல முற்படுகையில் சரசாரியான எம்மைப் போன்ற மானுடர்களின் விழுப்புணர்வு தன்மை என்பது மங்கித்தான் போய்விடுகிறது. சுயமாய் சிந்திக்கவும், சுயமாய் திட்டமிடவும், விரும்பிய திசையில் நகரவும் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் பொதுப் புத்தி என்னும் வலைப்பின்னல் நம்மை விடுவதே இல்லை. காலம் காலமாக மானுட இனத்திற்கு நன்மை செய்கிறேன் என்ற போர்வையில், தம்மையும் தம்மைச் சுற்றி இருக்கும் சுய நல மூளைகளையும் முன்னிறுத்தியே பெரும்பாலான மக்கள் போராட்டங்களும், மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களும், சமூக இயக்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளும், சமூக நல் இயக்கங்களும் போதும் போதுமென்ற அளவிற்கு தங்கள் பெயர்ப்பலகைகளை இந்திய தேசம் முழுமைக்கும் மாட்டி வைத்திருக்கின்றன. தனி மனித வாழ்வின் உயரம் இன்னும் மாற்றப்படவே இல்லை அல்லது மாறவே இல்லை.

விவேகானந்தர் என்னும் பெருஞ்சக்தி...!

நரேந்திரன் ஒரு விழிப்புணர்வு பெற்ற இளைஞனாக இருந்ததால்தான் தன்னைக் கடந்து மானுடநலம் சார்ந்து அவனால் சிந்திக்க முடிந்தது. வாழ்வியல் பிரச்சினைகளின் தீர்வுகளை கையில் சுமந்து கொண்டிருந்த பட்டங்களையும், வாசித்த புத்தகங்களையும் கடந்தும் அவன் தேடியதன் விளைவாகத்தான் அவனுக்குள் ஞானம் குடிகொண்டது. நரேந்திர தத்தா என்னும் சராசரி மனிதன் விவேகாந்தர் ஆனார். வாழ்வியல் தேடலின் பிரதிபலிப்பாய் ஆன்மீகம் இருப்பதை அறிந்திருக்கும் உலகத்தீர், ஆன்மீகம் என்பதற்கு யார் யாரோ பின்பற்றும் மூடநம்பிக்கைகளை மட்டும் உதாரணமாகக் காண்பித்து விட்டு தங்களை அறிவு ஜீவிகள் என்ற உறைக்குள் புதைத்துக் கொண்டு ஆன்மீகம் சார்ந்த தேடல் உடையவர்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றனர். கடவுளை நம்புவனுக்கும் கடவுளைத் தேடுபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கடவுளைத் நம்புபவன் யாரோ ஒருவரிடம் கோரிக்கைகளை வைத்து விட்டு ஆட்டு மந்தையைப் போல எதையையோ பின்பற்றுகிறான், ஆனால் கடவுளைத் தேடுபவன், படைப்பின் அற்புதத்தை ருசித்து விட்டு இதன் மூலமும் எப்படி வந்து இருக்கும் என்ற ஆர்வ மிகுதியால் வாழ்க்கை என்னும் அற்புதத்திற்கு பின்னாலிருக்கும் அதிசயத்தை தேடி அலைக

ஹாய்....10.01.2012!

அயற்சி வருவதற்கு காரணம் தொடர் வேலைகள் மற்றும் திரும்ப திரும்ப செய்யும் ஒரே மாதிரியான வேலைகள். எழுதுவதற்கு காரணமாய் புறத்தாக்கமோ அல்லது அகத்தாக்கமோ இல்லாமல் போய் விட்டால் எழுத்து நீர்த்துதான் போய் விடுகிறது. அனுபவத்தை, லயிப்பின் சுகத்தை அல்லது வலியை எழுதும் போது அதன் சுவாரஸ்யம் எப்போதுமே அலாதியானதுதான்... ஆனால், பதிவுகள், அல்லது பதிவுலகம் என்ற ஒரு வட்டத்திற்குள் வந்து ஒரு வாரம் அல்லது மாததிற்கு இத்தனை பதிவுகள் இடவேண்டும் என்ற ஒரு மாயா இலக்குக்குள் சிக்கி அதை நோக்கி ஓடும் போது ஒரு படைப்பாளி மரித்துதான் போய் விடுகிறான். இதற்கு மாறாக இன்னொரு விசயம் ஒன்றும் இருக்கிறது, எழுதுவது தனது ஆத்ம திருப்திக்காக என்ற ஒரு வரையறை தாண்டி வாசகர்கள் பொழுது போக்கும் விதமாக எழுதுவதுதான் அது.... கமர்சியல் ரைட்டிங் எனப்படும் வெகுஜன ரசனையை மையப்படுத்தி வார்த்தைகளை நகர்த்துவது ஒரு தனித்திறமை. எனக்குத் தெரிந்து இந்த பதிவுலகில் மிகச்சிலரே அதைச் செய்து வருகின்றனர். இன்றைய தேதிக்கு வாசகனின் தேவை என்ன என்று யோசித்து தனது படைப்பாற்றலை கொண்டு பளீச் என்று சொல்வதும் ஒரு திறமை. இலக்கியவாதிகள் என்ற வட்டம் தாண்டிய பாமரனை ஒ