நான் அந்த நதிக்கரையின் ஓரமாய் நடந்து கொண்டிருந்த மாலைப் பொழுதில்....காற்றில் பறந்து வந்த சருகு ஒன்று தோள் தொட்டு தொடர்ந்து கொண்டிருந்தது அதன் பயணத்தை....! வளைந்து சாய்ந்திருந்த நாணல்களின் தொடலில் சிணுங்கிக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தது நதி. நதியோரத்தில் வரிசையாயிருந்த மரங்களின் அழகில் வசீகரமாய் இருந்த அந்த மாலையின் ரம்யத்தை கூட்டவே ஒரு ஊதல் காற்று ஊடுருவி பரவிக் கொண்டே இருந்தது. பொதுவாக மாலை வேளையில் அந்த நதிக்கரை ஓரம் மனிதர்கள் வருவதில்லை..என்பது எனக்கு மிக சாதகமாய் போய்விட்டது. என்னை மறந்து சில மணிகள் நான் நடக்கும் நேரங்களில் கலர்கலாய் கனவுகள் பூக்கும். சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து நடக்கும் தருணத்தில் ஏதோ ஒன்று உற்சாகமாய் உடல் விட்டு வெளியே பறந்து இன்னிசையாய் ஒரு கீதமிசைக்கும். என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது. எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....